சந்தைப் பொருளா தார இயக்கம்
எந்திரத் துணையொடு வேலைப் பளுவைக்
குறைக்கும் முறையைத் தேடா துலகில்
முறைசார் வினைஞர் பணியை இழக்கவும்
மற்றவர் சந்தையின் இருளில் இடறவும்
கற்றோர் கல்லார் யாரையும் வாட்டும்.
நெருக்கடி தோன்றிச் செருக்குடன் இருக்கும்
பெருமுத லாளியின் நிம்மதி கெடுக்கும்.
சந்தையை ஒழித்துச் சமதர்மம் ஏற்பீர்
இந்நில வுலகில் அச்சமும் மறந்துத்
துன்பமும் இன்றி நிம்மதி யுடனே
என்றும் வாழும் வழியது தானே.

(இவ்வுலகில் முறைசார்ந்த தொழிலில் இருக்கும் பணியாளர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வேலையை இழக்க நேரிடும் அபாயமும், மற்றவர்கள் (குருட்டுச்) சந்தையின் இருளில் (என்ன செய்வது என்று தெரியாமல்) இடறி விழுவதுமாக, சந்தைப் பொருளாதாரத்தின் இயக்கம், இயந்திரங்களின் துணை கொண்டு (மக்களின்) வேலைப் பளுவைக் குறைத்திடாமல், கற்றவர், கல்லாதவர் ஆகிய அனைத்து மக்களையும் வாட்டும். (தாங்கள் தான் சமூகத்தை ஆட்டிப் படைக்கிறோம் என்று) செருக்குடன் இருக்கும் முதலாளிகளையும், பொருளாதார நெருக்கடி தோன்றி (அவர்களுடைய) நிம்மதியைக் கெடுக்கும். (ஆகவே) சந்தைப் பொருளாதார முறையை ஒழித்து, சோஷலிசப் பொருளாதார முறையை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த நிலவுலகில் (அனைவரும் அச்சத்தை மறந்தும் துன்பம் இல்லாமலும் நிம்மதியுடன் வாழ்வதற்கு அதுமட்டுமே வழியாகும்.)

- இராமியா

Pin It