விடுதலை வேண்டும் உழைப்பவர் போரை
ஒடுக்கிட முதலியின் கையில் கருவியாய்ச்
சிந்தை யின்றி இயங்கும் அறிஞரே!
சந்தையால் உயரும் புவிவெப்பம் தன்னில்
உலகே அழிந்தால் உன்நிலை யாதோ?
நலமில அழிவு மூளும் முன்னே
அருமருந் தன்ன சமதர்ம அரசை
நிறுவிட முயலும் உழைப்பவர் தமக்குச்
சேம அச்சு போல் இருப்பதே நன்று

(அனைத்து மக்களுக்கும்) சுதந்திரம் வேண்டும் என்று உழைக்கும் வர்க்கம் முன்னெடுக்கும் போரை ஒடுக்குவதற்கு, எவ்வித முன்யோசனையும் இன்றி முதலாளிகளின் கைகளில் கருவியாகச் செயல்படும் அறிவு ஜீவிகளே! (முதலாளித்துவத்தின் அடிப்படையான) சந்தை விதிகளால் (அதாவது இலாபம் வருகிறது என்பதற்காக, புவி வெப்பத்தை உயர்த்தும் பொருட்களையே உற்பத்தி செய்வதும், நஷ்டம் வருகிறது என்பதற்காக புவி வெப்ப உயர்வைக் குறைக்கும் மர வளர்ப்பையும் விவசாயத்தையும் செய்ய மறுப்பதும் ஆகிய செயல்களால்) புவி வெப்பம் உயர்ந்து, உலகமே அழிந்து விட்டால் உங்கள் நிலை என்னவாகும்? (நீங்களும் தானே அழிந்து போவீர்கள்?) (ஆகவே) இப்பேரழிவு மூள்வதற்கு முன்னேயே (இப்பேரழிவைத் தடுக்கும் பொருளாதார முறையைத் தத்துவ அடிப்படையாகக் கொண்ட) சோஷலிச அரசை அமைக்க முயலும் உழைக்கும் வர்க்கத்திற்கு, சேம அச்சு போல இருப்பதே (உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்லாது அறிவு ஜீவிகளுக்கும்) நல்லது.)

Pin It