1. இலக்கிய மானிடவியல்  Literary Anthropology

மனிதனோடு தொடர்புடைய அனைத்துத் துறை களையும் உள்ளடக்கிய துறையாக மானிடவியல் விளங்குகிறது. இலக்கிய மானிடவியல் என்பது மானிட வியலில் தற்போது வளர்ந்து வரும் ஒரு புதுத் துறை யாகும். இவ்வகையான ஆய்வுகள் மேலைநாடுகளில் சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டாலும், தமிழில் மிகச்சில ஆண்டுகளாக இவ்வகையான ஆய்வுப் போக்கு வளர்ந்துவருகிறது. குறிப்பாக பக்தவத்சலபாரதியின் பாணர் இனவரைவியலைக் குறிப்பிடலாம். மானிட வியல் ஆய்வுகளைச் சங்க இலக்கியங்களுக்குச் செய்ய வேண்டும் என நகர்த்தியவர் பேராசிரியர் இரா.கோதண்ட ராமன் அவர்கள். இதனை பக்தவத்சலபாரதி தன்னுடைய மானிடவியல் கோட்பாடுகள் என்னும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். (ப. xiii) இலக்கிய மானிடவியல் என்னும் பயில்துறையை ஆழமாகவும் விரிவாகவும் வளர்த்தெடுக்க வேண்டும் (ப. xiii)) என்றும் அம்முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கியத்தின் வழி மானிடவியல், மானிடவியல் வழி இலக்கியம் என்னும் இருவழிப் போக்கை அடிப் படையாகக் கொண்டு இலக்கியத்தைப் புரிந்து கொள்ளவும் இலக்கியத்திற்கும் சமூகம், பண்பாடு ஆகியவற்றிற்கிடையிலான உறவுகளை விளக்கவும் பல்புலம் சார்ந்த அறிவு இன்றியமையாதது. இதற்கு மானிடவியல் மிகவும் துணை புரியக்கூடியது. இலக்கியத்தின் வழி பண்பாட்டை அறிந்துகொள்ள இயலும் என்பது அண்மைக்காலக் கருத்தியலாகும். இலக்கியங்கள் தொல்லியல்சார் மானிடவியல் (வரலாற்று மானிடவியல்) தரவுகளாகக் கருதப் படுகின்றன. இந்தப் பின்புலத்தில் இலக்கிய மானிடவியல் என்னும் தனித்துறை தற்போது வளர்ந்து வருகிறது. தொல் சமூகப்பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய இத்துறை பயன்படுகிறது.

2. திணைச்சமூகம் / திணைப்பண்பாடுகள்

சங்ககாலச் சமூக அமைப்பு நிலப்பாகுபாட்டின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதனைத்  ‘திணைச் சமூகம்’ என்னும் சொல்லாடல் மூலம் குறிக்கிறோம். ஒரு குறிப்பிட்ட நிலவரையறைக்கு உட்பட்ட பகுதியில் வாழும் மக்களைத் திணைச் சமூகம் என்றும் அம்மக்களின் வழக்கங்களைத் திணைப் பண்பாடு என்றும் அழைக்கிறோம். இதற்கு இலக்கியத் தரவே அடிப்படையாக அமைகிறது. இவை தவிர பிற சான்றுகளும் உள்ளன. நடுகற்கள், காசுகள் போன்ற சான்றுகள் இலக்கியத்திலும் கிடைக்கின்றன. இன்று வரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் திணைச் சமூகத்தின் பண்பாடுகளை ஓரளவு மீட்டுருவாக்கலாம்.

3. முல்லைத் திணை தொடர்பான ஆய்வுகள்

முல்லைத்திணை தொடர்பான ஆய்வுகளில், இரு வகையான ஆய்வுகளைக் குறிப்பிடலாம். மு.வரதராசன் அவர்களுடைய முல்லைத்திணை என்னும் இலக்கியக் கோட்பாட்டு அடிப்படையில் அமைந்த ஆய்வும், கா.சிவத்தம்பியின் முல்லைத்திணையின் பொருளாதார நடவடிக்கை குறித்த ஆய்வும் மிக இன்றியமையாதவை.

4. முல்லைச் சூழல்களும் திணைக்குடியும்

முல்லைக் காடுகளை ஒட்டியமைந்த மேய்ச்சல் நிலம் (pastoral land). பிடவம் முள்புதர் (முல்லைக்கலி 1) செங்காந்தள்பூ, காயாம்பூ கோங்கின் முதிரா இளமுகை (முல்.கலி 17), கொன்றை, காயா, வெட்சி, பிடவம், முல்லை, கஞ்சாங்குல்லை, குறுந்தம், கோடல், பாங்கர், பல மலர்களை மாலையாகச் (ஆண் / பெண்) சூடுகின்றனர். கதிர் அறுக்கும் போது குறும்பூழ்ப் பறவை கடம்பின் மலர் போன்று இருந்து தன் குஞ்சுகளைத் தழுவி எடுத்துக் கொண்டு காட்டில் சென்று தங்கும் முல்லை நிலம்.

மானிடவியல் வலியுறுத்தும் மனிதவாழ்வின் படிநிலைகள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்டுவிட்டன. (

Ramachandra Ditshidar, 1936:176). உலகில் மனிதன் தோன்றிய நாள்தொட்டு தென்னிந்தியா இருந்து வந்துள்ளது. மனிதன் ஒரு நிலப்பகுதியிலிருந்து மற்றொரு நிலப்பகுதிக்கு ஒன்றன்பின் ஒன்றாக இடம் பெயர்ந்து மற்றொரு இடத்திற்குச் சென்று அவ்வவற்றிற்குரிய பண்பாட்டுப் படிநிலைக் கட்டங்களைக் கடந்தனர்.   (Sirinivasa Iyankar   1925: 72). தென்னிந்திய மக்கள் தொடக்ககாலத்தில் மலைகளிலிருந்து, அடத்தியான வனங்களுக்கும் அதன்பின், வளமிக்க சமவெளிகளை நோக்கியும், கடல்சார் பகுதிகளை நோக்கியும் சென்ற வரலாற்றுப் புலப்பெயர்வுகளை (human migration) நானிலப் பிரிவு வகைகள் வெளிப்படுத்துகின்றன எனக் கமில் சுவலபில் குறிப்பிடுகிறார். மேலும் புதிய கற்கால வேடுவனாகத் தொடங்கி இடைப்பட்ட காலத்தில் கால்நடை பராமரிப்போனாக வாழ்ந்து நிலைத்த குடி யிருப்புடைய குடியானவனாகவும் செம்படவனாகவும் மாறிய வளர்ச்சி இதைப் பிரதிபலிக்கிறது (Tamil Poetry 2000 year ago, Tamil Culture, Vol. 10, No.1 1960 by சிவத்தம்பி. 2003:161) எனக் கமில் சுவலபில் குறிப்பிடு வதை சிவத்தம்பி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வகையான வரலாற்று இடப்பெயர்வு பற்றிய கோட்பாடு, சமூகப் படிநிலை வளர்ச்சி பற்றிய கருத்தாக்கங்களுடன் ஒருங்கிணைத்துப் பார்க்கப் பட்டதினால் ஏற்பட்ட குழப்பமாகும். 1750களில் டுர்காட்

The Historical progress of Human mind என்னும் நூலில் சுட்டிக்காட்டியுள்ளபடி உலகம் முழுவதும் மனித படிநிலை வளர்ச்சிகள் மூன்று நிலைகளில் பரிணமித்தன.

மனித வாழ்க்கைப் பொருளாதாரம் (Subsistence Economy)  

1. வேட்டை வாழ்க்கை

2.ஆயர் வாழ்க்கை

3. வேளாண் வாழ்க்கை  

வேட்டைச் சமூகம், மேய்ச்சல் சமூகமாக மாற்றம் பெற்றது. மேய்ச்சல் புலப்பெயர்வுகளின் மூலம் வேளாண் மையில் ஈடுபட்டனர். இவ்வகையில் வேளாண் சமுதாயம் வளர்ந்தது என்று குறிப்பிடுவது பொருந்தும்படி இல்லை. எவ்வகை நிலமாக இருந்தாலும் அதில் வாழ்ந்த மனிதன் தொடக்கத்தில் வேட்டையும் அதன்பின் காலப் பரிமாணத்தில் நிலம்சார் சூழல்களையும் பருவகால அறிவையும் பெற்று அந்நிலத்தில் உள்ள மிகுதியான பொருள்களைக் கொண்டே தன்னுடைய (

Subsistence Economy) பொருளாதார நடவடிக்கைகளை வளர்த்துக் கொண்டனர். நிலையான இடத்தில் வாழ்ந்து வேளாண்மை செய்து பின் நெய்தலுக்குப் பெயர்ந்தார்கள் என்றால் பொருளாதாரத்தில் நெய்தல் எவ்வகையில் உயர்ந்திருந்தது என்பது கேள்விக்குறியாகிறது. சங்கப் பாடல்களில் நெய்தல்பகுதி வாழ்குடிகள் உப்பினையும் மீனையும் கொடுத்துப் பண்டமாற்றாக நெல்லை வாங்கிச் சென்றுள்ளனர். உப்பினை எடுத்துக்கொண்டு, விற்று அதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டு உள்ளனர். (பல் எருத்து உமணர் பதிபோகும் நெடு நெறி. பெரும்.65). நெய்தலைப் பொறுத்தவரை மீன் உணவினைவிட உப்பின் பயன்பாட்டால் உலகம் உயர்ந்த பொருளாகப் பார்க்கும் வழக்கம் இருந்திருக்கலாம். ஆனால் மலையிலிருந்து காட்டிற்கும், காட்டிலிருந்து சமவெளிக்கும், சமவெளியிலிருந்து கடலுக்கும் என்ற படிநிலை மனித இடப்பெயர்வு அடிப்படை உண்மைக்கு எதிராக அமைந்துள்ளதை உணரலாம். ஒவ்வொரு திணையிலும் உயர்ந்த பொருள்களை மக்கள் கண்டறிந் துள்ளனர். கடல்விளை உப்பு மேட்டு நிலம் நோக்கி நகர்ந்துள்ளது. இந்த பொருளியல் நடவடிக்கை சமூகப் பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும்.

4.1.பொருளாதார வளர்ச்சி

மலை            தேன், கிழங்கு, தினை, மூங்கில் நெல், உணவு      

காடு  பால், தயிர், மோர், வெண்ணெய், தீமூட்டல்           

மருதம்          மீன்-பயன்பாடு, நெல் உற்பத்தி         

நெய்தல்       மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

இயற்கைப் பொருளிலிருந்து செயற்கையான புதிய பொருளினை உருவாக்கியதன் மூலம் அக்குழு பிற சமூக குழுக்களிலிருந்தும் மற்ற பகுதி குழுக்களிடமிருந்தும் மேன்மை அடைந்துள்ளனர். அதன் காரணமாகவே இப்பொருள்களின் இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. அநேகமாய் எல்லா பத்துப்பாட்டுப் பாடல்களிதும் முல்லை நிலம் குறித்துக் கருத்துகள் பதிவாகியுள்ளன. முல்லைப்பாட்டு ஒரு இறுக்கமான இலக்கிய மரபிற்கு உட்பட்டு எழுதப்பட்டுள்ளது.  (சிவத்தம்பி.2003:161)

பத்துப்பாட்டில் குறிப்பாகப் பெரும்பாணாற்றுப் படை முல்லை நிலத்து ஆயர்களை, பிற வகைப்பட்ட பல மக்களோடு வாழ்ந்து மோர் போன்ற பால்படுபொருள் விற்று வாழ்க்கை நடத்தி வந்த குழுவினராகச் சித்திரிக்கிறது. பால் தரும் எருமை, நல்ல பசு, கரிய எருமைக்கன்று ஆகியவற்றை நெய்க்கு ஒப்பாகச் சொல்லி வாங்கும் குடி (பெரும்.164, 165) முல்லை நிலமும் மருதநிலமும் சங்கமிக்கும் இடம் காட்டப்பட்டுள்ளது. நெடுநல்வாடையில் ஆயர்களின் பருவகால வாழ்க்கை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கைச் சீற்றத்தினால் இடப்பெயர்வு நடந்துள்ளது. இது பெரும் இடப்பெயர்வு அன்று. மிகச் சிறிய இடப்பெயர்வே. அதுவும் மேட்டு நிலத்தை நோக்கி நடந்துள்ளனர். ஆனால் அப்பாடலில் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி (நெடு.4) எனச் சுட்டப்பட்டுள்ளது.

4.2.பழக்கவழக்கம்

முல்லைத் திணைக்குடிகள் இல்லத்தின் அருகில் கள்ளினை உண்டு மயங்கிக் கிடக்கும் வழக்கம் உடைய வர்கள் (நற்.59). ஆட்டினை மேய்க்கும் போது சீழ்க்கை ஒலி எழுப்புவர். இது ஆட்டினை மேய்க்க ஒழுங்கு படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மடிவாய் கோவலர் (பெரு.166) வீளை எனப்படுகிற அழைத்த லாகிய குறிப்பொலியை அறிந்து சிறிய தலையை உடைய ஆட்டின் தொகுதி பிற புலம் புகாது நிற்கும்.  தண்டுகால் வைத்த ஒடுங்குநிலைமடி விளி, சிறுதலைத் தொழுதி ஏமார்ந்து அல்கும். (நற்.142.6-7). நெலிகோல் என்னும் நெருப்பை உருவாக்கும் தீக்கடைக்கோல் (பெரு.178, நற்.142.3, அகம்.169.5, புறம் 315.4.) கொண்டு நெருப்பினை உண்டாக்கும் திறன் பெற்றிருந்தனர். இதில் ஆண்கள் பயன்படுத்தியதாகவே குறிப்புகளில் காணப்படுகின்றன.

4.3.உணவு

முல்லைத் திணைக்குடிகளின் உணவாக வரகும் பால் சோறும் காணப்படுகின்றன. தீக்கடைக் கோல்கலப்பை (தீ உண்டாக்கும் கருவிகள்) சிறிய தோல்பையில் இடையர்கள் வைத்திருந்தனர் (நற்.142). பிற திணைக்குடியான உமணர்கள் யானை ஊனினை உண்ணப்பட்டுள்ளனர்.  ஒலிதிரைக் கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர் நெலிகோல் சிறு தீ மாட்டி (வதக்கி), சோற்று உலையில் புலியால் கொல்லப்பட்ட யானையின் மீதம் உள்ள ஊனினைக் கூட்டி ஆக்கி உண்டுள்ளனர் (அகம்.169),  உமணர்களும் நெருப்பினை உண்டாக்கும் நெலிகோல் பயன்படுத்தி யுள்ளனர்.

மோரின் மூலமாகப் பெற்ற பொருளைத் தன் சுற்றத்துடன் உண்ணும் முறை இருந்துள்ளது. (கிளை உடன் அருந்தி. (பெரும்.160-163) “மடிவாய் கோவலர் குடிவயின் சேப்பின், இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன, பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்” (பெரும்.166-168). (மூரல் -சோறு), நண்டுகளின் சிறிய குஞ்சினைப் போன்ற சோற்றினை பாலுடன் பெறலாம். உணவு ஆக்குவதற்கு அமைந்த நல்ல உணவு சமைக்கும் சமையல் பாத்திரங்கள் வைத்திருந்தனர். (அடிசில் ஆக்குதற்கு அமைந்த நற்கலங்கள் சிலம்பு.13.20). எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற தரவுகளில் பதிவாகாத உணவு பற்றிய விரிவான குறிப்பும் வளர்ச்சியும் சிலப்பதிகார கால முல்லைத்திணைக் குடிகளிடம் காணப்படுகின்றன. (ஆய்ச்சியர் வாழும் பகுதியில் கிடைக்கும் உணவிற்குப் பயன்பட்ட பொருள்கள் பலாக்காய், வெள்ளரிக்காய், கொம்மட்டி, மாதுளை, மாங்கனி, வாழைக்கனி சாலிஅரிசி, பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்) காய்கறிகளை அரிய அரிவாள்மனை பயன்படுத்தியுள்ளனர்.

ஆடு மேய்க்கும் இடையர்கள் நெருப்பினை உண்டாக்கும் திறம் பெற்றிருந்தது போலவே, உணவு ஆக்குவதற்கு ஆயர்குடிப் பெண்கள் வைக்கோலால் நெருப்பினை உண்டாக்கத் தெரிந்திருந்தனர். இது சிலப்பதிகார காலத்தில் பதிவாகியுள்ளது. உணவு உண்ண அமர்வதற்குப் பனை ஓலையால் ஆன தடுக்கு பயன்படுத்தியுள்ளனர். அது கலைநயத்துடன் பின்னப் பட்டு இருந்தது. அதனை நேர்த்தியாகச் செய்வதற்கு ஆயர்குலப் பெண்கள் இருந்துள்ளனர். கைகழுவுவதற்குச் சுட்டமண்ணால் செய்த தட்டினையும், உணவு வாழை இலையில் உண்ணும் பழக்கமும், உணவு உண்ட பின் வெற்றிலைப்பாக்கு போட்டுக் கொள்ளும் பழக்கமும் அவர்களிடம் இருந்துள்ளன.

4.4. திருமணம்

திருமணத்தின் போது வீட்டை அழகுபடுத்துவர். புதுமணல் பரப்பி, செம்மண்ணால் பூசியுள்ளனர் (கலி.114).  பிற திணைகளில் காணப்படாத சில தனிப் பழக்க வழக்கங்கள் முல்லைத்திணையில் காணப் படுகின்றன. ஏறு தழுவினார்க்கு கொடுத்தற்கு நல்ல பெண்கள் திரண்டனர். ‘மகட்கொடை’ என அழைக்கப்படுகிறது. (கலி.101) குறிப்பாக முல்லைக் கலியில்

எல்லா இஃதொன்று கூறிகுறும்பிவர்

புல்லினத்தார்க்கும் குடஞ்சுட்டவர்க்கு மெங்

கொல்லேறு கோடல் குறையெனக் கோவினத்தார்

பல்லேறு பெய்தார் தொழூஉ (கலி.107)

ஆட்டிடையர், பால் கொடுக்கும் பசுவினத்தார், கோவினத்தார் (கோவினத்தார் அனைத்தையும் குறிக்கின்ற அதிகாரம் பெற்றோராக இருக்கலாம்) என்னும் முப்பிரிவு உடையவர் மணஉறவுக்கு தடை இல்லை. இது அகமண உறவுநிலை பெற்று இருந் துள்ளது. முன்பழந்தமிழ் பாடல்களில் பிறதிணையி லிருந்து வரும் ஆடவர் களவு மணம் மேற்கொண்ட சான்றுகள் நிறையக் கிடைக்கின்றன. குறுந்தொகைப் பாடலான யாயும் ஞாயும் (குறுந்.40) என்னும் பாடலும், முளிதயிர் பிசைந்த (குறுந்.167) எனத் தொடங்கும் பாடலும் பிற திணையிலிருந்து வேறோர் திணையைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்துள்ளதை அறிய முடிகிறது. இது ஒருவகையில் புறமண உறவைக் குறிக்கிறது. கலித்தொகையில் தன்நிலம் சார்ந்த பழக்க வழக்கம் உடைய, மணமகனை ஒரு சடங்கின் மூலம் அடையாளம் காணுகின்றனர். ஏறுதழுவுதல் ஏதோ ஒரு வீரவிளையாட்டுபோலத் தோன்றினாலும் அது புறமண உறவைத் தடைசெய்யும் வகையில் அமைந் துள்ளன. அதே வேளையில் தகுதி காண் திருமணம் (Probationary Marriage) என்னும் திருமணமுறை இவர்களிடம் காணப்படுகின்றன. சான்றாக;

ஆயர்மகனாயின், ஆய்மகள்நீயாயின்

நின்வெய்ய னாயின், அவன் வெய்யை நீ ஆயின்

அன்னை நோதக்கதோ இல்லைமன் நின் நெஞ்சம்

அன்னை நெஞ்சாகப் பெறின் (கலி.107)

அவனோர் ஆயர்மகன் நீயோர் ஆயர்மகள் அவன் உன்னை விரும்புகிறான் நீயும் அவனை விரும்புகின்றாய்; அன்னை நொந்து கொள்வதற்கு இதில் எதுவும் இல்லை.

ஆயர் எமரானால் ஆய்த்தியேம் யாம் மிகக்

காயாம்பூங் கண்ணிக் கருந்துவர் ஆடையை

மேயும்நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய் ஓர்

ஆயனை அல்லை பிறவோ (முல்லைக்கலி 108)

எங்களவர்கள் ஆயர், நாங்கள் ஆய்த்தியர், இது எங்கள் மரபு, காயாம்பூ கண்ணியும் கருந்துவர் ஆடையும் உடையவனாக மேய்ந்து கொண்டிருக்கும் ஆநிரை முன்னர் கோலூன்றி நிற்கின்றாயே நீயோர் ஆயனன்றி வேறு யாரோ? இடையர்கள் உள்ளும் சமூகப் படி நிலைகள் இருந்துள்ளன என்பதற்குச் சான்றுகள் கிடைக் கின்றன.

முதுகுடி மன்னர் சமுதாயத்தில் மகட்கொடை வழங்கும் உரிமை ஆண்களிடம் இருந்துள்ளது. இக் குடியில் திருமண உறவு ஒரு குறிப்பிட்ட சமுதாயத் துடன் மட்டுமே இருந்துள்ளது. (மாதையன் 2004:67)  பகை அஞ்சாத புல்லினத்து ஆயர் மகனை நீ ஆயின் குடம் சுட்டும் நல்லினத்து ஆயர் எமர் (கலி.113) என்னும் பதிவுகள் ஆடு மேய்ப்பவர்களுக்கும் மாடு மேய்ப்பவர்களுக்கும் இடையிலான வர்க்க வேறு பாட்டைக் காட்டுகிறது. 

காளை மாட்டை அடக்கு பவரையே இப்பெண் மணப்பாள் என்றால் பிற திணைக்குடிகளில் இருந்து வரும் ஆண்கள் இதனை அடக்க இயலாது.  ஆடு மாடுகளுடன் வளர்ந்து வரும் இவர்கள் காளையை அடக்குவதில் பிற திணைக்குடிகளைக் காட்டிலும் திறன்பெற்றவர்களாக இருக்க வாய்ப்புள்ளது.

மருதம், நெய்தல் போன்ற திணைக்குடிகளிடமும் காளை மாடுகள் இருந்துள்ளன. சான்றாக, ‘பல் எருது உமணர்’ என நெய்தல் மக்கள் காட்டப்பட்டுள்ளனர். இது மேலும் ஆய்வுக்கு உரியதாகும்.

பாணன் (திருமணத்திற்குப் பின்னும் கணவன் மனைவி இடையே தூதாகச் செல்ல ஒரு நபர் செயல் பட்டுள்ளார். பாணர் / பாணன் எனச் சங்கப்பாடல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. போருக்குச் சென்றுள்ள கணவனிடம் தூதாக மனைவி சில செய்திகளைச் சொல்லி அனுப்பி யுள்ளாள்) நினக்கு யாம் பாணரும் அல்லேம் (ஐங்.480) என்னும் சான்றுகளால் அறியமுடிகிறது.

முல்லைத் திணையில் காணப்படும் திருமணம் குடும்ப அமைப்பை விரிவாக ஆராயவேண்டியுள்ளது. முல்லைப் பகுதியில் நடக்கும் திருமண அமைப்பினை அகநானூறு பாடல் 394 விவரிக்கிறது. திருமண நாள் அன்று செம்மறி ஆட்டின் பாலில் விளைந்த தயிர், வரகு அரிசி, ஈசல் ஆகியவற்றைச் சமைத்து இனிய புளிப்பையுடைய சூடான சோற்றை பசுவெண்ணெய் மேல் இருந்து உருக உண்டனர்.

மணமகன் உண்பதற்குப் பால்சோறு மணமகள் தொட்டு தொடுப்பது வழக்கம். புதிய உண்கலம் கொண்டு வருதல் மூலம் மணமகன் வீட்டில் சமைக்கும் உரிமை பெறுகிறாள். திருமணச் சடங்கின் மூலம் வீட்டுப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட அறிகுறியாக மணமகனுக்கு உணவு சமைத்துத் தருகின்றாள்.

4.5. மேய்ச்சலும் வேளாண்மையும்

குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் முல்லை

நில மக்களின் விவரணம் அதன்பின் தோன்றிய பத்துப் பாட்டில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. மேய்ச்சல் மற்றும் ஆடுமாடுகளைப் பராமரித்தல் என்னும் நிலையி லிருந்து வேளாண்மைத் தொழிலினை மேற்கொண்டு உள்ளமையை அறியமுடிகிறது. அதன்பின் தோன்றிய கலித்தொகை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன.

காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட குடியேற்றப் பகுதியாகவே முல்லை குறிப்பிடப்படுகின்றது (நற்.59), வன்புலக் காட்டுநாடு ஏரிடம் படுத்த இருமறுப் பூழிப் / புறமாறு பெற்ற பூவல் ஈரத்து (அகம்.194), ஏரால் உழப்பட்ட பெரிய வடுவினையுடைய கீழ்மேலாகப் புரண்ட புழுதியை உடைய செம்மண் நிலம் (அகம்.194), “முல்லையில் குறிப்பிடப்படும் வேளாண்மை, வெட்டி எறிந்து பின் பயிரிடும் வேளாண்மையே ஆயினும் சில குறிப்புகள் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் பயிரிடப்பட்ட மையைச் சுட்டுகின்றன.

நற். 121 பாடலில் வரும் விதையர் மற்றும் முதையல் என்ற சொற்கள் மேய்ச்சல் காரர்களே உழவர்களாக விளங்கினார்கள் என்பதையும், முன்னரே பயிரிட்ட நிலங்களில் பயிரிட்டனர் என் பதையும் தெரிவிக்கின்றன (சிவத்தம்பி 2003: 165). உரைப்பகுதியும் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

விதைவிதைக்கும் ஆயர் பலபடியாக உழுது புரட்டிய பழங்கொல்லைப் புழுதியில் நிறைவுற முறையே விதைக்கப்பட்டுள்ள ஈரிய இலை நிரம்பிய வரகின், முதையல் - பழங்கொல்லை.

எனப் பின்னத்தூர் நாராயண சாமி ஐயர் (1915) உரையும், விதைகளை உடைய வராகிய முல்லைநிலத்தவர் பன்முறையும் உழுதுவைத்த பழமையான புழுதியில் விதைத்தற்கெனப் பக்குவப் படுத்தி வித்திய விதையிடத்துத் தோன்றிய குளிர்ந்த இலையை உடைய வரகு என ஒளவை துரைசாமிப் பிள்ளை உரையும் (1966: 469) குறிப்பிடுகின்றன. தோட்ட உழவினைக் காக்கும் மேய்ச்சல்காரர்களைக் கொல்லைக் கோவலர் (நற்.266) என அழைத்துள்ளனர்.

1. கருவிகள் நெலிகோல் (-)        உழவுக்கருவி        

2. உணவுகள்           பால்சோறு, தினை, வரகு (-)      வெண்ணெய் எடுக்கும் மத்து

3. தொழில்கள்        ஆடு, மாடு, மேய்ச்சல் (-)            வேளாண்மை        

4. நம்பிக்கைகள்    விரிச்சிக் கேட்டல், நீர் துறையிலும் ஆல மரத்திலும் தெய்வம் உறைவதாக நம்பினர் (-) காளை மாடு முட்டுவது, வெண்ணெய் உருகாமல் இருப்பது, மாடு மணி அறுந்து விழுவது, தீய சமுணம்   

5. சமயவழிபாடு    இயற்கை வழிபாடு, கொற்றவை (-) திருமால் வழிபாடு + தொன்மம்          

இளம்பூரணர், நச்சினார்க்கினியர் தரும் தகவல்கள் கால்நடைப் பராமரிப்பை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தில் வேளாண்மை மிக விரைவாக வளர்ச்சி பெறுகின்றமையைச் சுட்டிக்காட்டுகின்றன. 

“முல்லைப் பொருளாதாரத்தைக் குறித்த சிவத்தம்பியின் கருத்து அது முற்றிலும் மேய்ச்சலைச் சார்ந்து இருக்க வில்லை. தமிழ்நாட்டின் பூகோள அமைப்பு அப்பகுதி மக்களை நாடோடிகளாக ஆக்கும் இயல்புகளைக் கொண்டிருக்கவில்லை. அந்தப் பகுதியில் வேட்டை யாடுவோர் நிலையிலிருந்து நிலைத்த குடியிருப்புடைய குடியானவன் நிலைக்குமரிட குறுகிய காலமே பிடித்திருக்கும்” (சிவத்தம்பி 2003:160) எனச் சிவத்தம்பி குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.

பயிர் செய்கைப் பொருளாதாரத்தைக் காட்டிலும், கால்நடை மேய்ச்சல் பொருளாதாரம் தனது மேம்பட்ட வடிவத்தில் ஒரே இடத்தில் குடியிருக்கும் (நிலைத்த குடி யிருப்பு) மக்கள்வாழ் பகுதிகளின் எல்லைப் புறங்களில்  முல்லை நிலப் பொருளாதார நடவடிக்கை அமைந் திருந்தது. கால்நடைச் சமூகங்களில் வேளாண்மை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேய்ச்சல் வேளாண்மை அல்லது கூட்டு, கலப்பு வேளாண்மை செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே வேளாண்மையில் மிகுதியான பங்களிப்பை மேய்ச்சல் கால்நடைகள்

செய்து வந்துள்ளன. சங்க காலத்தில் வேளாண்மைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டாலும் அதனைத் தொடர்ந்து உழவிற்குத் துணைநின்ற கால்நடைகளுக்குச் சடங்கு களோடு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மருத நிலமும் முல்லை நிலமும் சார்ந்த இடமாக உள்ள எல்லைப் புறத்தில் மேய்ச்சலும் உழவுத்தொழிலும் சேர்ந்து கூட்டுத் தொழிலாக  நிலவியுள்ளது. வீடு முழுவதும் அரிசில் நிறைந்திருக்கும், உழவர்கள் வயலை பலமுறை உழுவது செஞ்சால் என்று வழங்கப்பட்டு உள்ளது. இது வேளாண்மையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் குறிக்கும் சொல்லாகத் திகழ்கிறது.

நன்கு பயின்ற மாடுகளை உழவுக்குப் பயன்படுத்தியுள்ளனர். (புறவு என்பது முல்லை நிலத்தையும்,  புதவில் பூட்டி என்பது ஏரின் நுகத்தடியைக் குறிக்கிறது.) பெண்யானையின் வாய் போல் அமைந்த கலப்பையையும்,  அதில் உடும்பு போன்ற வடிவில் அமைந்த கொழுவையும் பயனபடுத்தியுள்ளனர்.  

விதைக்க வேண்டிய இடத்தில் விதைத்தும் இடைஇடையே களை இருந்தால் அதனை நீக்கியுள்ளனர். முல்லைநிலம் வன்புலம் என வழங்கப் பட்டுள்ளது. நெல் சாகுபடி குறித்த எவ்வித குறிப்பும் கிடைக்கவில்லை (சிவத்தம்பி 2003: 165), முல்லை நிலப்பகுதியில் நெல் சாகுபடி குறித்த குறிப்பு இல்லை எனினும் நெல் வழிபாட்டுத்தளத்தில் முதன்மையாக இத்திணையில் கருதப்படுகிறது.

புன்செய் வேளாண்மை மூலம் கிடைத்த வரகு, தினை, அவரை, கொள் என்பன இந்நில உணவுப் பொருள்கள் (மாதையன் 2004:56).

4.6. வழிபாடும்  பழக்கவழக்கமும்

இலைகள் நீங்கி மரங்களில் வலை போன்ற நிழலில் தங்கினர். காட்டில் உறையும் தெய்வத்தை வழிபட்டுத் தம் கடன்களைச் செலுத்தினர். நீர் துறையிலும் ஆலமரத்தின் கீழும் பழைய வலியினையுடைய மரா மரத்தின் கீழும் உறையும் தெய்வத்தை வணங்கினர் (மாடு அடக்கும் முன் சடங்கும் செய்கின்றனர்)

(முல்லைக் கலி.101). காட்டில் உறைகின்ற தெய்வமாகிய கொற்றவை. மாயோன் மேய காடுறை உலகம் (தொல். பொருள்.) இங்கு முரண்பாடாகத் தோன்றினாலும் இதில் அடிப்படை மனித பரிமாற்றம் பற்றிய கருத்து வெளிப்படுவதாக அமைந்துள்ளது. காவடி எடுக்கும் பழக்கம் முல்லை நிலமக்களிடம் இருந்துள்ளது.

(உறிக்கா - காமரம், காவடி), நெல்லொடு நாழிகொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப (முல்லை.8-11), மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து அவ்இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது.

இவ்வாறு திருமாலினை வழிபட்டாலும் பெண் எருமையின் கொம்பை வீட்டினுள் நட்டு அதனைத் தெய்வமாக வணங்கும் வழக்கம் திருமணத்தின் போது ஆயர்குல வழக்கமாக இருந்துள்ளது. இதனை வளமை வழிபாட்டின் (fertility worship) அடையாளமாகக் கருத வாய்ப்புள்ளது.

தலையில் பால் தேய்க்கும் வழக்கமும் பல் வகை பூக்களைத் தலையில் சூடும் வழக்கமும் இருந்துள்ளது. இளம் பாண்டில் தேர் ஊர (கலி.109) இளம் எருதுகளைப் பூட்டிய கொல்லர் வண்டி பற்றிய குறிப்பும் உள்ளது. கானவர், குன்றகச் சிறுகுடிக் கிளையுடன்  ‘கள்’ குடித்து, மகிழ்ந்து தொண்டகச் சிறுபறை முழக்கி, குரவை ஆடியுள்ளனர். (முருக.194, மலை-318-27), தேறல் அருந்தி, வேங்கை மரநிழலில் குரவையாடினர் (புறம்.129). ஏறுதழுவிய பின் மகளிரும் மைந்தரும் ஆடும் குரவை பழங்குடி மக்களின் சடங்கு எனலாம். சிலப்பதிகாரத்தில் காணும் ஆய்ச்சியக் குரவை சமயத் துடன் தொடர்பு கொண்டு மாறுதல் பெற்றுள்ளது. (சுப்பிரமணியன் 1993:30).

4.7. தொழில், பகிர்வுமுறை

பசுக் கூட்டங்களையும் கன்றுகளையும் காட்டில் மேய்க்கும் வழக்கமும் ஆண்கள் பால் விற்கும் (பால் நொடை இடையன், நற்.142) வழக்கமும் இடையர் களிடம் இருந்துள்ளது. இடையர் குலப்பெண்கள் விடியற் காலை பறவைகளின் ஒலிகேட்டு மத்தால் தயிரைக் கடைதலை மேற்கொள்வார்கள். அப்படி எடுக்கப்பட்ட வெண்ணெய் தனியாகவும் மோர் தனியாகவும் பிரிக்கும் தொழிலை மேற்கொண்டிருந்தனர்.

நாள்மோர் என்னும் புதியதாக உருவாக்கப்பட்ட மோரினைப் பெண்கள் சுமந்து சென்று விற்றுள்ளனர்.  மோர் விற்று வரும் ஆய்ச்சியர் கரிய மேனியைப் பெற்றிருந்தனர். காதில் குழை அணிந்திருந்தனர். பனைத்தோள் எனப்படும் வர்ணிக்கப்படும் உடல் வலிமையாகவும், கூந்தல் நீளமாகவும் அமைந்திருந்தது. ஆயர் மகள் மோரினை விலைக்கு விற்கச் செல்பவர்கள் (அளை விலை உணவின் ஆய்ச்சியர். சிலம்பு.13. 3-4, ஆய்மகள் அளை விலை உணவின் - பெரும்.162-163).

செறி வளை ஆய்ச்சியர் (சிலம்பு.13.7) நெருக்கமாக வளையல் அணிந்திருந்தனர். தலையில் சும்மாடு வைத்திருந்தனர், நெல் வைக்கும் அழகான வட்டி வைத்திருந்தனர், மோர் விற்பதோடு மாங்காய் ஊறுகாயும் வைத்திருந்தனர் (கலி.109). மோரின் மூலமாகப் பெற்ற பொருளைத் தன் சுற்றத்துடன் உண்ணும்முறை இருந்துள்ளது. (கிளை உடன் அருந்தி.பெரும்.) இடையர்கள் வீட்டில் பசுந்தினையோடு பாலும் கிடைக்கும் (பெரும்.166-169).

பால் விற்கப்பட்டது (நற்.142), மலர்கள் விற்கப்பட்டுள்ளது (நற்.97), மூங்கிலில் தீக்கடைக்கோலால் தீ உண்டாக்கி அம்மூங்கிலில் துளைபோட்டு குழல் ஊதும் வழக்கம் இருந்துள்ளது. ஆயர்கள் குழலின் மூலமாகப் பாலைப் பண்ணும், யாழின் மூலமாகக் குறிஞ்சிப்பண்ணும் இசைக்கத் தெரிந்திருந்தனர்.

4.8. பொருள்கள்

முல்லை நிலத்தில் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிட்டு அவர்களின் பொருள்சார் பண்பாட்டினை (material culture) அறிய முடியும். வீட்டின் குதிரில் வரகு போட்டு வைத்திருப்பர். வரகு கதிரைத் திரிப்பதற்கு யானையின் கால்கள் போன்ற திரிமரங்கள் பயன்படுத்தியுள்ளனர்.

வண்டிச் சக்கரங்களையும் கலப்பையையும் நீண்ட சுவரில் சார்த்தி வைத்திருந்தனர். அந்தப் பகுதியில் சமையல் அறையாகப் பயன்படுத்தி இருந்திருக்கலாம், சுவர் புகைப்படிந்து காணப்படுகின்றது. இதுபோல் சிலப்பதிகாரத்திலும் கரிபுறஅட்டில் (சிலப்பதிகாரம் 16:32) கரிபடிந்த சமையல் அறை காட்டப்பட்டுள்ளது.

எயினர்குடி முல்லை நிலப்பரப்பிற்குள் வாழும் பழங்குடி ஆகும். அக்குடி கூரை போட்ட குடிசைகளில் வாழ்ந் துள்ளனர். ஈந்தின் இலைகள் (முள்இலை) மேலே வேயப் பட்டிருந்தது. எயினர்குடி பெண்கள் குழந்தை பெற்றெடுத்த காலத்தில் மான்தோலினைப் பாய் போல் பயன்படுத்தியுள்ளனர் (பெரும்.88-90).

4.9.அரசு உருவாக்கம்

கால்நடை கவர்ந்து செல்வதற்கும் பரிமாற்றத் திற்கும் எளிமையானது. அதன் காரணமாகவே தொல் காப்பியரின் புறத்திணையில் ஆநிரை கவர்தல்  என்னும் துறை பேசப்பட்டுள்ளது. 

இந்தப் பின்புலத்தில் அணுகினால் வேளாண்மைக்கும் அரசு உருவாக்கத்திற்கும் அடிப்படையாக இம்மேய்ச்சல் நிலம் அமைந்திருத்தலை உணரலாம். பசு கோ என்று அழைக்கப்பட்டது, அந்தப் பசுக் கூட்டத்தின் தலைவன் கோன் என அழைக்கப் பட்டுள்ளான், அவனே குறுநில மன்னனாக மாற்றம் பெறுகின்றான்.

இவ்வகையான முல்லைத்திணைக் குடியிலிருந்தே அரசுருவாக்கம் நிகழ்ந்துள்ளது என்பதற்கான சான்றுகளாக பாண்டியன் அரசனின் முன்னோர்கள் நல்லினத்து ஆயர்குடியில் தோன்றியவன் என்பதை, “தென்னவன், தொல்லிசைநட்டகுடியோடு தோன்றிய நல்லினத்தாயர் (முல்லைக்கலி 104:4-6), வீவில் குடிப்பின் இருங்குடியாயரும் (முல்லைக்கலி 105) ஆகிய உதாரணங்களைக் கொண்டு இராமச்சந்திர தீட்சிதர் சுட்டிக்காட்டியுள்ளார்1.

மேலும் சீறூர் மன்னரின் முல்லைநிலச் சமுதாயம் இனக்குழுச் சமுதாய எச்சங்கள் நிலவிய சமுதாயம் என மாதையன் (2004:56) குறிப் பிடுவது எண்ணத்தக்கது.

4.10. கோவலர்கள் குடியிருப்பு

முல்லைத்திணைக் குடிகளாகிய இடையர்கள் வசிக்கும் ஊர்களில் சிறு, சிறு குடிகள் காணப்பெற்றன. ஆட்டுத்தோலில் படுக்கையில் ஆட்டைப் பாது காப்பவர் படுத்திருந்தனர். பசுக்களைப் பராமரிப்பவர்கள் கோவினத்தார் என்றும் ஆடுகளைப் பராமரிப்பவர்கள் புல்லினத்தார் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். வளைந்த முகமுடைய செம்மறி ஆடுகளுடன், வெள்ளாடுகளும் வளர்க்கப்பட்டுள்ளன. சிறுகுடிகள் சுற்றி முள்வேலி அமைந்திருந்தன.

குடிலைச் சுற்றி ஆடுமாடுகளின் எரு மிகுதியாகச் சேர்க்கப்பட்டிருந்தது. (பெரும்.148-168). சிலப்பதிகார காலகட்டத்தில் வீடுகள் கலை நேர்த்தியோடு வைத்திருந்தனர்.

வீடுகளில் செம்மண்ணால் பூசி மெழுகப்பட்டிருந்தது. (பூவல் ஊட்டிய புனைமாண் பந்தர். சிலம்பு 13.5). முல்லைநில இடையர்கள் காலில் செருப்பு அணிந்திருப்பர். அதனோடு அச்செருப்பு அணிவதால் கால்களில் அடை யாளம் பதிந்திருக்கும். மழு / கோடரி கையில் வைத்திருப்பர்.

5. தொகுப்புரை

இலக்கியப் படைப்பிற்குள் பதிவு செய்யப்பட்ட மனித நடவடிக்கைகள் புனைவியல் சார்ந்தது என்றாலும் அடிப்படை உண்மையில் இருந்தே புனைவுகள் தோன்ற முடியும். கவிதை, குறியீடு போன்ற தன்மைகளை  விடுத்து பொருள்கள் திணைசார்ந்த உண்மையான வாழ்க்கை முறையை இந்த ஆய்வு எடுத்துரைக்க முயல்கிறது.

சான்றாக முல்லைத் திணைப் பாடல்கள் தலைவன், தேரில் வருவதும் தலைவி தலைவனை நினைத்துப் புறச்சூழல்களைக் கண்டு எதிர்பார்த்து வருந்துவது, புனைவியல் சார்ந்த நாடகக்கூறு ஆயினும் இதுவும் மனித நடவடிக்கைகளே.

அதனையும் கடந்து முல்லைத்திணை சார்ந்த பொருளாதார நடவடிக்கை சார்ந்த மனித நடவடிக்கையும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. ஆயர் ஆனிரை மேய்க்கும் இடையர்கள் நெருப்பை மூட்டும் இடையர்கள் போன்றவைகளும் அந்நிலம் சார்ந்த புறச்சூழல்களும் காலச் சூழல்களும் மிக நுணுக்கமாக மானிடவியல் நோக்கில் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

சங்கப்பாடல்கள் பல விதமான அணுகுமுறைகளில் ஆராயப்பட்டுள்ளன. அவ்வாறு அல்லாமல் மனித நடவடிக்கைகளை மானிட வியல் அணுகுமுறைகளில் ஆராய்வது பொருத்தமான தாகும்.

தமிழ் இலக்கியத் தரவுகளைத் தமிழ்ப் புலமை யாளர்களும், அதன்பின் வரலாற்று ஆராய்ச்சியாளர் களும் ஆராய்ந்து வெளிப்படுத்தியதின் வழி மேலும் கூட்டு முயற்சியுடன் மானிடவியல் ஆய்வுகளின் வழி விளக்க முற்படும் போது மேலும் புதிய அடையாளங் களைக் கண்டுகொள்ளலாம் என நம்புவோம்.

நன்றி

மானிடவியல் துறையில் என்னை ஈடுபடவைத்த பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்களுக்கும், தொடர்ந்து எழுதும்படி ஊக்குவிக்கும் பேராசிரியர்கள் கி.இரா.சங்கரன், இரா.அறவேந்தன், பக்தவத்சலபாரதிஆகியோர்களுக்கு, என் நன்றி.

அடிக்குறிப்பு

1. The evolution of the status of the tribal chief to the head of the kingdom is then clearly seen in the regions of the mullai and the marudam. The king is designated among other names by ko or kon meaning a cowherd. To the latter cattle was wealth, and the division of property among the sons was the division of the heads of cattle belonging to the family. We know that one from of wealth in earliest time was cattle. Therefore, by the term kon is meant chief, whose wealth was cattle. Wherein the origin of the dynasty of the pandya kings can probably be traced to the headship of the ayar tribe. The same circumstances favored the evolution of the institution of monarchy in the agricultural region. (Ramachandra Dikshitar, 1930 :178- 179 )

சான்றாதாரங்கள்

கார்த்திகேசுசிவத்தம்பி, 2003, பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி, மக்கள் வெளியீடு

சாமிநாதையர், உ.வே. 1918, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், கமர்ஷியல் அச்சுக்கூடம் சென்னை.

சாமிநாதையர் உ.வே.,1935 (3ஆம்பதிப்பு), புறநானூறு, சென்னை, லாஜர்னல்அச்சுக்கூடம்.

சாமிநாதையர், உ.வே.,1947, குறுந்தொகை மூலமும் உரையும், சென்னை, மூன்றாம் பதிப்பு கபீர் அச்சுக்கூடம்

சுப்பிரமணியஐயர், ஏ.வி. 2008, தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

சுப்பிரமணியன், க. 1993, சங்ககாலச் சமுதாயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை

பக்தவத்சலபாரதி, 2011, பண்பாட்டியல் நோக்கில் பண்டைத் தமிழர் சமய மரபுகள், புதுச்சேரிமொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.

மறைமலையடிகள், 1919(3 பதி.), முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, டி.எம். அச்சுக்கூடம், பல்லாவாரம்.

மாணிக்கம், வ.சுப. 2002, தமிழ்க்காதல், மெய்யப்பன் பதிப்பகம் சிதம்பரம்.

மாதையன், பெ. 2004, சங்க இலக்கியத்தில் வேளாண் சமூகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை

மாதையன், பெ. 2004, சங்ககால இனக்குழு சமூகமும் அரசு உருவாக்கமும், பாவை பப்ளிகேஷன், சென்னை

வேங்கடசாமிநாட்டார் ந.மு., கவியரசுரா. வேங்கடாசலம் பிள்ளை 1943 அகநானூறுகளிற்றியானைநிரை,

(ந.மு.வே., ரா.வேங்கடாசலம் பிள்ளை ஆகியவர்களின் பதவுரை) சென்னை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

வேங்கடசாமி நாட்டார் ந.மு., கவியரசுரா. வேங்கடாசலம் பிள்ளை 1944 அகநானூறு மணிமிடைப் பவளம்,

(ந.மு.வே., ரா.வேங்கடாசலம் பிள்ளை ஆகியவர்களின் பதவுரை) சென்னை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

வேங்கடசாமிநாட்டார் ந.மு., கவியரசுரா. வேங்கடாசலம் பிள்ளை  1944 அகநானூறு நித்திலக் கோவை,

(ந.மு.வே., ரா.வேங்கடாசலம் பிள்ளை ஆகியவர்களின் பதவுரை) சென்னை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

வேங்கடசாமிநாட்டார் ந.மு., 1942, சிலப்பதிகாரம், (ந.மு.வே. உரை) பாகனேரி. தனவைசிய சங்க வெளியீடு, மறுபதிப்பு 1953

காசி விசுவநாதன் செட்டியார், வெ.பெரி.பழ.மு., 1949 கலித்தொகை நச்சினார்க்கினியர் உரை, சென்னை, சைவ சித்தாந்தநூற்பதிப்புக்கழகம்.

Meenakshi Sundaran T.P., 1958, Mullai-p-pattu, Orient Longmans, Madras

Meenakshisundaran, T.P. 1965, History of Tamil Literature, Deccan college, Poona.

Ramachandra Dikshitar, V.R.1930, London Luzac & co. 46 Great Russell street, W.C.1.

Sirinivasa Iyankar P.T. 1925, Environment and culture, Triveni, Vol.1, No.3, P.72

Thaninayagam, X.S. 1997, Landscape and Poetry, Inter-national Institute of Tamil Studies, Chennai.

Thirunavukkarasu, K.D, 1994, Chieftains of the Sangam Age, International Institute of Tamil Studies, Chennai.

Vaiyapuripillai, S. 1956, History of Tamil Language and Literature, N.C.B.H. Madras

Pin It