குட்டிப் பாப்பாவுக்கு பொம்மைங்கன்னா
கொள்ளை ஆசை
பீடிகட்டை இரண்டை கொறைச்சாவது
பொம்மை ஒன்னு வாங்கிடுவேன் பாப்பாக்கு

பாப்பா தட்ற தட்டுல... தஞ்சாவூர் ராஜா
கால்ல.. கால்ல.. விழுந்து கும்பிடும்
கைக் கொட்டி கெக்கலிச்சு சிரிக்கும் பாப்பா

ஊதி பெருத்து கொழுத்த பலூன்கள்
கலர் கலராய் 'யானையில' தொங்கும்
பாப்பா கூர்நகங்கள் வெடித்து சிதறடிக்கும்
அதிர்ச்சியில் கண்களை விரிக்கும் பாப்பா

திருவிழா தெருக்களில் பொம்மை கடைகள்
சுற்றி சுற்றி உற்சாகமாய் காண்பித்தேன்
கிளுகிளுப்பை, பீப்பீ, பந்து. சொப்பு…
பொம்மைங்கன்னா மகிழ்ச்சி. மகிழ்ச்சின்னா பாப்பா

பாப்பாவுக்கு என்னா பொம்மை வேணும்
காந்தி குரங்குகளை நோக்கி நீட்டியது பாப்பா

நாலு தலைமுறைகளை காயடித்து
நாட்டை கெடுத்து குட்டிச் சுவராக்கிய
நீதி...அறம்... போதிக்கிற அரசியல் பொம்மை

பொட்டை கண்ணாய் போயிடு
செவிட்டு முண்டமாய் கிட
ஊமக் கோட்டானாய் இரு
பொம்மைச் சபித்தது பாப்பாவை 

ஆயாவிடம் விளக்கி சொன்னதற்கு
கட்டையில் போறவன் நாசமாய் போக
சத்திய ஆவேசம் வந்து கத்தினாள்
பொக்கவாயில் அர்த்தமுடன் சிரித்தது
அப்புகுட்டிப் பாப்பா!

Pin It