தூக்கு மேடையை நோக்கி
நடந்து செல்பவன்
ஒரு போதும்
தன் கால்களால்
நடந்து சென்றிருக்க முடியாது..!

அதிகாரத்தின் கால்களால்
இழுத்து செல்லப் பட்டிருப்பான்..!

தேதித் தாள்கள்
கிழிக்கப் படும் போதெல்லாம்

தன் உயிர்ப்பறவையின்
சிறகில் இருந்து...
இறகு ஒன்று உதிர்வதை
அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்..!

மரண தண்டனையை எதிர்நோக்கி
காத்திருப்பவனின் கண்களை

சட்டத்தின் கண்களைத் தவிர
வேறு யாராலும்..
எதிர்கொள்ள முடியாது..!

குரல்வளையை
நெரித்துப் போடும் ஓசையை
கேட்கும் திறன்
நீதியின் செவிகளுக்கு
எப்போதும் கிடையாது..!

கால்கள் துடித்தடங்கும்
துயரத்தை..
அவன் பாதைகளை
மறித்துப் போட்டவர்கள்
பார்த்ததேயில்லை..!

இயற்கையால்
ஆசிர்வதிக்கப் படாத மரணத்தை
மனிதன்
தன் கைகளால்
உண்டாக்குகிற வரைக்கும்

எந்த வழிபாட்டு ஆலயத்திலும்..
இறைவனை நாம்
சந்திக்கப் போவதில்லை..!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.