உடற்பிணி யோடு பசிப்பிணி வதைக்கையில்
உடன்வேண் டுவது மருந்தும் உணவும்
சிறாஅரும் அறியும் தீர்வு தன்னைக்
கறாராய் மறுப்பது சந்தை முறையே
சமதர்ம முறையை ஏற்றிடுங் காலை
மமதைப் போரிலை பழங்குடி வாழ்வுடன்
மருத்துவ மனையும் செருக்கரைப் புகலாய்
நெருங்க விடாது நோயையே ஆற்றும்
பார்ப்பரும் பணமும் பெற்றிடுங் கல்வி
சேர்ந்திடும் அனைத்து மக்கள் தமக்கே
உழைப்போர் நலனும் ஏய்ப்போர் கெடலும்
இழைத்திடும் சமதர்ம முறையை யானும்
ஏதிலி நண்பன் எனவோ ஒடுங்கிய
சாதியின் துணையெனச் சொல்லவோ அல்லது
மங்காது மருத்துவம் காத்தான் எனவோ
எங்ஙனம் மொழிவேன் சமதர்ம முறையை

((இவ்வுலக மக்களில் பெரும் பகுதியினரை) நோயும் பசியும் வதைத்துக் கொண்டு இருக்கும் பொழுது மருந்தையும் உணவையும் உற்பத்தி செய்வதில் தான் மூலதனத்தையும் இயற்கை வளங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்று சிறு குழந்தைகள் கூட அறியும். ஆனால் இவ்வளவு எளிதாகத் தோன்றும் தீர்வு தன்னைக் கண்டிப்புடன் வேண்டாம் என்று மறுப்பது சந்தைப் பொருளாதார முறை தான். (மக்களின் தேவைகளைக் கணக்கில் கொள்ளாத சந்தை முறையை ஒழித்துக் கட்டி விட்டு) சோஷலிச முறையை நாம் ஏற்றுக் கொண்டால், பழங்குடி மக்களின் வாழ்வைப் பாழாக்கிக் கொண்டு இருக்கும் ஆணவமான போர்கள் தேவையாய் இராது. (பிரச்சினை வந்தால் மருத்தவ மனைகளில் பதுங்கிக் கொள்ளும்) திமிர் பிடித்தவர்களுக்குப் புகலிடமாய் இராமல், உண்மையான நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் இடங்களாக மருத்துவ மனைகள் இருக்கும். பார்ப்பனர்களும் பணம் படைத்தவர்களும் மட்டுமே பெற முடிகின்ற கல்வியை அனைத்து மக்களும் பெற முடியும். உழைக்கும் மக்களுக்கு நன்மையையும் ஏய்ப்பவர்களுக்கு அழிவையும் ஏற்படுத்தும் சோஷலிச முறையை, ஆதரவு இல்லாத (பழங்குடி) மக்களின் நண்பன் என்று சொல்வேனோ? ஒடுக்கப்பட்ட சாதியினரின் துணை என்று கூறுவேனோ? அல்லது மருத்துவத் தொழில், தன் புனிதத் தன்மையை இழக்காமல் காத்த வீரம் என்று தான் சொல்வேனோ? இந்த சோஷலிச முறையை நான் என்னவென்று தான் புகழ்வேன்?)

- இராமியா

Pin It