அரக்க கரும் நிழலொன்று
தன் காலணி அணியா வெறுங்காலால்
மணலை இழைத்துக் கொண்டு வருவது போல
மரணத்தின் மாயத்திற்குள்ளிருந்து விடுபட்டு
கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பி
வந்தான் அவன்!

ஓவியனின் முடிவுறாத ஓவியத்தை
மெல்லிய கண்ணாடி வழியாகப்
பார்ப்பது போலிருந்தது - அவனின்
முகமும் உடலும்!

நெற்றியிலும் புருவங்களிலும்
வேடிக்கையானதொரு கோடு
பூமியதிர்வின் சாம்பலழிந்துப் போன
கோட்டைகளில் பூசப்பட்டிருப்பது போலவும்
கண்களுக்கு கீழும் கன்னக்குழிகளிலும்
மண்ணின் நீலம் பாரித்திருந்தது.

அவனது சொற்கள் தன் வலியையும்
இன்பத்தையும் தாகத்தையும் பசியையும்
சொல்லி வெளிப்படுத்தும் விலங்கொன்றின்
ஒலிகளை ஒத்திருந்தது.

மரண இருட்டைப் பூசிய அவனது முக்காட்டை
யாரோ ஒருவன் விலக்கியதும்
நிகழ்வின் முழு அழகும் அமைதி குலைந்து
உண்மை திரை விலகி அம்மணமாய் நிற்க
உயிர்த்தெழுந்தவன் மர்மப் பார்வையில்
சூரியனைப் பார்த்து உரக்கச் சிரித்தான்.

மரணத்திற்கும் வாழ்விற்குமிடையே
பாலமாய் வந்த அவனின் அசட்டை
அலறல்களைக் கண்ட மனிதர்களின் முகம்
கல்லறைக் குழிகளின் அழுகலைத் தின்ன
வேர்களை அனுப்பி விட்டு கல்லறைகளின்
மேல் குவிந்து நிற்கும் சைப்ரஸ் மரங்கள்
அமைதியான அந்தியில் தங்களது
ஊசிமுனை உச்சியினால் வானத்தைத்
தொடுவதற்கு வீணாக முயல்வது போல்
சோகம் கப்பி இருண்டு போனது.

அவனோ..கல்லறையில் தான் அனுபவித்த
காதலின் வலியிலிருந்தும் நெடும் பிரிவிலிருந்தும்
மீளச்செய்ய இப்புவியில் போதியளவு
அன்பு இல்லையென உணர்ந்து மீண்டும்
கல்லறை நோக்கி ஓடத் துவங்கினான்.

அவன் சென்ற சாலைகள் எங்கும்
இதயங்கள் சிதறிக் கிடந்தன..
காதல் பீறிடும் இரத்தத்தின் சத்தத்திற்கு
பாலைவனம் தந்த எதிரொலி மட்டும்
அழுதுக் கொண்டேயிருக்கிறது.

- மணவை அமீன்

Pin It