கேள்வியுராத கிராமப் பெயரை
சுமந்து கொண்டு அலைகிறது
அவனுக்கான வேலை தேடும்
விண்ணப்பங்கள் நகரச்சாலைகளில்.
அரசுப்பள்ளி பூர்வீகத்தை
மறைக்கும் அவனது யுக்திகள்
தொடர்ந்து தோற்பதில்
அவனுக்கான நகர மரியாதை
வீழ்ந்து கிடக்கிறது.
கிராமத்து ஏழ்மை
குடும்பத்தினர் கடன்
தங்கை திருமணமென
தூக்கங்களைத் துரத்தும்
கேள்விகள் அவனது இரவின்
நிலா முற்ற ரசனைக்கு
ஏதுவாயில்லை.
சம்பளம் மீறிய தனிநபர் கடனில்
தங்கையின் திருமணம் முடித்து
விழிக்கிறது அவனுக்கான
இணை தேடும் பருவம்.
நுனி நாக்கு ஆங்கிலம்
அக்குள் மறைக்காத உடை
போதைக் கண்களின் சிரிப்பென
அவனைக் கடந்து போகும்
நவயுகப் பெண்களின்
பார்வைக்காகப் பற்ற வைத்த
பஸ் ஸ்டாப் சிகரெட்டுகள்
நுரையீரலைத் தின்கின்றன.
நவீன வாழ்வை நுகரும்
வேடமணிய அவன் இணைந்து
கொண்ட பணக்காரக்
கணவான்களின் சிநேகத்திற்கு
வீசும் சாமரங்கள் அவனது
தென்றலைக் களவாடுகின்றன.
பெண்ணியக் குற்றச்சாட்டு
கணவர் பற்றிய நவயுகப்
பெண்களின் எதிர்பார்ப்பு மிகுதி
வயதுக்கு மீறிய குடும்பப்பாரமென
நரைமுடிகளோடு நெஞ்சு
கனத்து அலைகிறான்
தோழிகளின் தோள்களைத் தேடி.
-சோமா
முதிர் கண்ணன்கள்
More articles by சோமா
- சுதந்திர தின ஆஃபர் - ஷாப்பிங் மால்கள் (15 ஆக 2012)
- எழுதப்படாத கவிதை (27 ஜூலை 2012)
- எதையும் மிஞ்சவிடாது உலகமயமாக்கல் (23 ஜூலை 2012)
- ஒரு புத்தன் ஜனிக்கட்டும் (05 மே 2012)
- நேற்றைய குண்டுகள் (24 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.