சித்திரை என்றாலே வெயில் வாட்டி வதைக்கும் என்றாலும், சிறார்களுக்கு அதுதான் குளிர்ச்சியான மாதம். எவ்வளவு வெயில் அடித்தாலும் வீட்டிலே தங்க மாட்டோம். முழுப்பரீட்சை முடிந்து ஒன்றிரண்டு நாள் உள்ளூர் வயக்காடு, ஆறு, குளம் என்று சுற்றி வந்தாலும் மூன்றாம் நாள் தாத்தா, அம்மாச்சியின் வருகைக்குக் காத்துக் கிடப்போம். சித்திரை மாதம்தான் திருமணம் ஆனப் பெண்களும், தங்களது பிறந்தகத்திற்கு மீண்டும் குழந்தையாய் செல்லும் மாதம். பள்ளிக்குச் செல்வது எவ்வளவு பிடிக்காமல், அதை வெறுத்து தாத்தா பாட்டி வீட்டிற்குச் செல்வோமோ அவ்வளவுக்கவ்வளவு அம்மாவும் மிகுந்த சந்தோசத்தோடு எங்களுடன் அவள் ஊருக்குப் புறப்படுவாள்.

காலைத் தூக்கத்தைக் கெடுத்து, வாசல் தெளித்து,கோலம் போட்டு, காபி போடுவதில் தொடங்கி, காலை டிபன், மதியம் உணவு என எட்டரை மணிக்குள்ளாக, எனக்கும், தங்கைக்கும், தந்தைக்கும் அவள் செய்து வரும் பணிவிடைகளுக்கு அறிவிக்கப்படாத விடுமுறை. என் அம்மாவின் புறம், அகம் என எல்லாச் சுமைகளும் அந்த ஒரு மாதத்திற்கு "அம்மாச்சி"யின் தலையில் ஏற்றிவைக்கப்படும். அம்மாவிற்கு அந்த மாதம் முழுதுமே முழு ஓய்வுதான்.

அம்மாச்சி ஊரின் அருகிலே நட‌க்கும் வீரபாண்டித் திருவிழாவின் ஏழு நாட்களும் மாலை ஆறு மணிக்கு கிராமத்து வயக்காட்டு வரப்பின் வழியே நடந்து வீரபாண்டி வந்தடைவோம். தாத்தாவிடம் பத்து ரூபாயும், அம்மாச்சியிடம் பத்து ரூபாயும், அம்மாவிடம் ஐந்து ரூபாயும் தினமும் கிடைக்கும். அந்த இருபத்தைந்து ரூபாயில் சர்க்கஸ், இராட்டினம், பஞ்சு மிட்டாய், பயில்வான் பீமன் அல்வா என வீரபாண்டியின் பாதிப்பொருட்களை விலைக்கு வாங்கிவிடலாம். தேனி மாவட்டத்தின் அனைத்து ஊரினரும் திரளாய் வருவார்கள். அந்த ஏழு நாட்களும் இரவு பகல் தொலைத்து ஒரு சந்தைக் காடாக வீரபாண்டி விளங்கும்.

பலூன் முதல் பூரிக்கட்டை வரை, வளையல் முதல் தோசைச் சட்டி வரை, இராக்கடி ரிப்பன் வாங்குவது முதல் அரிவாள்மனை வாங்குவது வரையென‌, அந்த ஏழு நாட்களைக் கொண்டாடுபவர்களாக, பெரும் நுகர்வோர்க‌ளாக சிறார்களும் பெண்களும் மட்டுமே ஆக்கிரமித்திருப்பார்கள். வளையல் கடைதான் பெண்கள் குவிந்திருக்கும் பெரும் கடைகளாக விரிந்திருக்கும். பெண்களை இடிக்க நினைப்பவர்கள், உரசக் காத்திருப்பவர்கள், பெண்களின் கடைக்கண் பார்வைக்கு தவம் கிடப்பவர்கள், பெண்ணின் அழகை ரசிக்க வேண்டுமென நினைப்பவர்கள் என அந்தப் பகுதி முழுதும் இளைஞர்களைச் சுமந்து கொண்டு திணறிக்கொண்டிருக்கும். வயசுப் பெண்கள் கிராமத்தில் மறைத்திருந்த தங்கள் அழகைத் தாவணியிலேச் சுமந்து கொண்டு வந்து விற்பார்கள். ஏற்கனவே கள் வெறி பிடித்து அழையும் இளைஞர்கள் மேலும் பைத்தியமாய் அலைவார்கள்.

சித்திரை மாதத்தின் இறுதியில், எனது தந்தை அம்மாவின் கிராமத்திற்கு வந்து எங்களை மதுரை அத்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வார். மதுரைக்கு அத்தை வீட்டிற்குப் போன பின்னால் எல்லோரும் பொருட்காட்சிக்குச் செல்வதற்குத் தயாராவோம். பெரும் போராட்டத்திற்குப் பிறகு பொருட்காட்சி மைதானம் வந்தடைந்தால், வீரபாண்டியில் பார்த்த அதே திருவிழாக்கடைகள், முக்கியமாய் வளையல்கடை வரிசை, எங்கள் ஊரை விட அழகாய் இருக்கும் இளவட்ட அக்காள்மார்கள், அங்கங்கே சுடிதார் போட்டுக் காணக் கிடைக்கும் நவயுக அழகுப்பெண்கள், இவர்களை இடிப்பதற்கென்றெ காத்துக் கிடக்கும் அதே கள் வெறி கொண்ட இளைஞர்கள் என தமுக்கம் மைதானம் நிரம்பி வழியும்.

சென்ற ஞாயிறுக்கு முந்திய ஞாயிறு, மதுரை சென்றிருந்தேன். என் வருகைக்காகவே காத்திருந்த என் தங்கை மகள் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு தன்னைத் தூக்கச் சொன்னாள். தூக்கிய மாத்திரத்தில், பைக் சாவி தொங்கிக் கொண்டிருக்கும் அலமாரி அருகே அழைத்துச் சென்று சாவியை என்னிடம் எடுத்துக் கொடுத்து "வா போவோம்" என்றாள். எங்கே என்றேன். "விசா..விசா" என்று ஏதோ சொன்னாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் தங்கையிடம் என்னவென்று கேட்டேன்? "விசால் மால்"க்கு அவளை அழைத்துப் போகச் சொல்வதாய் சொன்னாள்.

"இன்னும் மாமா கைகால் கழுவவில்லை, சாப்பாடு சாப்பிடவில்லை, இன்னும் சிறிது நேரம் கழித்துச் செல்லலாம்" என ஏமாற்றி விடலாம் என உத்தேசித்துத் தோற்றுப் போனேன். அவள் ஒரு மணி நேரம் என் வருகைக்காகவே கையில் பைக் சாவியோடு வீட்டிற்கு வெளியே காத்திருந்தாள். வீட்டிற்கு உள்ளே அழைத்தால், உள்ளே வரவும் மறுக்கிறாள். இரண்டரை வயது குழந்தை ஏன் இப்படி வீம்பு பிடிக்கிறாள். யார் பழக்கப்படுத்தியது அவளை "விசால் மாலுக்கு" அழைத்துச் சென்று என என் தங்கையை கடிந்து கொண்டேன். "கிண்டர்ஸ் கார்டன்" பள்ளியில் இருந்து அவளை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

என் தங்கையின் வீட்டிற்கு அருகிலேயே மால் இருப்பதால், வேறு வழியில்லாமல் என் தங்கை மகளை அழைத்துச் சென்றேன். மேல் மாடிக்கு அழைத்துச் சென்றதும் குஷியாட்டம் போட்டாள். ஒரு இருநூரு ரூபாய்க்கு கார்டு வாங்கி அவளை இராட்டினம், பேஸ்கட் பால், கார் ஓட்டுதல் என அமர்த்தி அழைத்து வந்தேன்.

கடந்த ஞாயிறு கோவை ப்ரூக்ஸ் மாலிற்கு நான் என் அண்ணன் குடும்பத்தினரோடு சென்றிருந்தேன். சரியான கூட்டம். என் அண்ணனின் மகளுக்கு ஐந்து வயது என்பதால், அவளுக்குத் துணை என்று யாரும் தேவையில்லை. "டாட்..த்ரீ ஹண்ட்ரட் ப்ளீஸ்" என தேவையானதை வாங்கிக் கொண்டு, ப்லே கார்டு கவுண்டரை நோக்கி நடந்தாள். நானும் என் அண்ணனும் எங்களது ஊரைப் பற்றிய பேச்சிலே மூழ்கி நான்காம் தளத்தின் ஓரத்தில் நின்று கொண்டு கீழே பார்த்தோம். பைக் ஒன்றை விளம்பரப்படுத்த மூன்று பெண்கள் அரை குறை ஆடைகளோடு பாட்டுப் பாடி இளைஞர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

கோவையில் இருக்கும் பதினான்கு பல்கலைக்கழகங்களின் மொத்த மாணவர்களும், நவ நாகரீக இளைஞிகள் மொத்தப் பேரும் ஆஜராகி விட்டார்களோ என்றொரு எண்ணம். நிற்பதற்குக் கூட இடம் இல்லாத வகையில் பெரும் கூட்டம். மல்லு, குஜ்ஜீஸ், சௌராஸ்ட்ரா, சேட், மார்வாடி, தமிழ் என இப்பொழுதெல்லாம் ஆண் பெண்களை அவ்வளவு சுலபமாக இனம் பிரித்து அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை. எல்லோரும் ஒரே மாதிரியான, உடலை ஒட்டினாற் போலவோ அல்லது நவயுகம் என்கிற பேரில் அக்குள் காட்டியும் தொப்புள் காட்டியும் மால் முழுதும் நிரம்பித் திரிந்தார்கள்.

என் மனதுள் ஒளிந்து கொண்டிருந்த என் கிராமத்து "கள் வெறி பிடித்த இளைஞர்கள்" என் கண்ணிற்குத் தெரிகிறார்களா எனத் தேடிப் பார்த்தேன். அப்படி யாரையும் காண முடியவில்லை? பெரும்பாலும் ஆணும் பெண்ணும் ஜோடிகளாகவேத் திரிகிறார்கள். தனித்து வந்த ஆண் மகன்களுக்கும் ஒளிந்து பார்ப்பதற்கு என்றோ அல்லது இடித்துப் பார்ப்பதற்கு என்றோ ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் போயிற்று. யாரும் எதையும் மறைக்க விரும்பாதவொரு உலகம்.

நான் கண்ட வீரபாண்டி தாவணிப் பெண்களும், மதுரை சுடிதார் பெண்களும் இன்று இந்தச் சந்தைக்கு ஜீன்ஸ்ம், டாப்ஸ்ம் அணிந்து வந்திருக்கிறார்கள். பவுடர் பூசி பசப்பவதற்கு நிறைய ஆண் மகன்கள் பயிற்சி எடுக்கிறார்கள். வளையல் கடை, ஜவுளிக்கடை இன்று வேறொரு பரிமாணம் எடுத்து ஃபாரின் ப்ராண்டுகளாக வந்திறங்கிக் கல்லாக் கட்டுகிறது.

அரை மணி நேரத்தில் என் அண்ணன் மகள் திரும்பினாள். முந்நூறு ரூபாயை அரை மணி நேரத்தில் தீர்த்து விட்ட பெருமையையும், ஏதோ ஒரு கேமிலே வெற்றி பெற்றதாயும் சொல்லி ஒரு நீளமான பேப்பர் சரத்தை நீட்டினாள். கொண்டு போய் கடைக்காரனிடம் கொடுத்ததிலே சீப்பு, நெயில்பாலிஸ், ஸ்டிக்கர் பொட்டு என நீட்டி வேண்டுமென்பதை எடுத்துக்கொள்ளச் சொன்னான்.

"ஷாப்பர்ஸ் ஸ்டாப்" மால் ஒன்று புதிதாய் என் வீட்டிற்கு (ஹோப் காலேஜ் ஸ்டாப்பிற்கும், பிஎஸ்ஜி ஹாஸ்பிட்டல் ஸ்டாப்பிற்கும் இடையில்) மிக அருகில் நேற்றுதான் திறந்திருக்கிறார்கள். ஏற்கனவே கல்லூரிகள் நிரம்பி வழியும் பகுதி ஆதலால், இளைஞர்களை மட்டும் நுகர்வோர்களாக எதிர்பார்த்துத் திறக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரதினத்தை கொண்டாடும் பொருட்டு நமது அமெரிக்க அண்ணன் "மெக் டொனால்ட்" 150 ரூபாய் லெக் பீஸை 100 ரூபாய்க்கு தருவதாக விளம்பரபடுத்தியிருக்கிறார். லெக் பீஸ் சாப்பிட்ட பின்னாலே, இலவசமா புள்ளைகள இடுச்சுட்டு சாரி சொல்லிட்டு கிளம்பிட்டே இருக்கலாம்.

அன்றைய ஊரகச் சந்தை சிறார்களையும், பெண்களையும் நோக்கி திறக்கப்பட்டது. இன்றைய ஷாப்பிங் மால்கள் தங்களது வலைக்குள்ளே ஆண்களையும் சேர்த்தே விழுங்கி வருவது எங்ஙணம் நம்மைக் கரைச் சேர்க்கும் என்று விளங்கவில்லை.

- சோமா

Pin It