கேவலமான பழக்கங்களையும் அர்த்தமற்ற திருவிழாக்களையும் பொருத்தமற்ற சடங்குகளையும் விட்டொழித்தால்தான், நாம் உண்மையிலேயே முன்னேறமுடியும். ஆகவேதான் சீர்திருத்த திருமணங்கள் நடப்பதின் மூலம் அறிவுப்பணி நன்கு வேரூன்றி நிலைத்துப் பரவ வழியிருக்கிறதென்று குறிப்பிடுகிறோம். சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவி கிடக்கும் மூடக் கொள்கைகளை தாமாகவே நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவிக் கிடக்கும் மூடக் கொள்கைகளை தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே... இந்தத் திருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா? ஒரு திருவாசகமாவது பாடக்கூடாதா? என்று சிலர் கேட்டதாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள். இப்படிப்பட்ட திருமணங்களிலே அப்படிப்பட்ட பாடல்களைப் பாடத்தான் மாட்டோம்; பாடவும் கூடாது என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துவிடுகிறேன். அந்தக் காலத்தில் ஊசி முனையில் நின்றும் ஒற்றைக் காலில் நின்றும் பற்பல விதமாக அகோரத் தவம் செய்த முனிவர்கள் அனைவரும் ஆண்டவனைப் பார்த்து எதைக் கேட்டார்கள்? மற்ற ஆழ்வார்களும் சரி, நாயன்மார்களும் சரி கடவுளிடம் எதை கோரினார்கள்.
மக்கள் வாழவேண்டும், உலகம் உருப்படவேண்டும், வறுமை ஒழியவேண்டும், உலகத்தில் உண்மை தழைக்க வேண்டும் என எந்த முனிவராவது எந்த பக்தனாவது, எந்த நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா? இல்லையே! பொது நன்மைக்காகக் கடவுளை வரம்கேட்ட பக்தர்களை யாராவது காட்ட முடியுமா? ஒருவரும் கிடைக்கமாட்டார்கள்.
... வைகுந்த பதவியும், சிவலோக வாசத்தையும் தங்களுக்காகக் கேட்ட அந்த முனிவர்களையும் அவர்கள் பாடிய பாடல்களையும், இந்தத் திருமணத்தில் அழைப்பதும், பாடுவதும் பொருத்தமற்றது.
.... இராமர் காலத்தில் இரயில் கிடையாது, ஆகவே ரயில் கூடாது என்று இந்த நாளில் தள்ளிவிட முடியுமா? அல்லது இராமரே ஏறாத ரயிலில் நாம் ஏறுவதா? என்று ரயிலில் ஏறாமல் எத்தனை இராம பக்தர்கள் இருக்கிறார்கள். இருக்க முடியும்! இராமர் காலத்தில் இல்லாத இரயிலில் ஏறித்தானே இராமேசுவரம் போகிறார்கள். அதைப் போலவே அரிச்சந்திரன் காலத்தில் ஆகாய விமானம் இல்லையென்று ஆகாய விமானம் ஏறாமலா இருக்கிறார்கள். தர்மராசா காலத்தில் தபால்கார்டு இல்லை, தந்தி கிடையாது என்றா தள்ளிவிடுகிறார்கள், கிடையாதே!
எனவே அந்தக் காலம், அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக்காலப் பழக்கங்கள் என்று கூறி அவைகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று பிடி வாதம் செய்வதும், பொருத்தமற்றவைகள் என்பது நன்கு விளங்குகிறது.
எந்தக் காலத்துப் பழக்கமானாலும் சரி, அது இந்தக் காலத்துக்குப் பொருந்துகிறதா? வாழ்க்கைக்குத் தேவையானதுதானா? அறிவுக்கு ஏற்றதா? என்றுதான் நாம் பார்த்துப் பின்பற்றவேண்டுமே தவிர, அந்தக் காலப் பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக் கொண்டு எதையும் அர்த்தமற்று பொருத்தமில்லாமலும் பின்பற்றக்கூடாது.
(பொழிவு – சுயமரியாதை திருமணம் ஏன்?)
சிங்களத் தீவில் தமிழர்களின் பிணங்கள்
“தம்பி! தமிழரின் பிணங்கள், கடலலையில் மோதப்பட்டு மோதப்பட்டு, சிங்களத் தீவின் கரையிலே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆமடா, தம்பி, ஆம் எந்தச் சிங்களம் சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ, எந்தச் சிங்களவர் போரில் தோற்றதால், அக்கால முறைப்படி அடிமைகளாக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டு, காவிரிக்கு கரை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களோ அந்த சிங்களவர் காண, தமிழர்களின் பிணங்கள், சுறா தின்றது போக, சுழல் அரித்தது போக, மிச்சம் இருந்த பிணங்கள் சிங்களத்தீவின் கரை ஓரம் கிடந்தன. தமிழரின் பிணங்கள் சிங்களத் தீவின் கரையிலே கிடக்கின்றன.
- அறிஞர் அண்ணா, ‘திராவிட நாடு' 04.09.1960