பெய்கின்ற மழை

சில தருணங்களில்

தனிமை வேண்டுகிறது

மலரிதழ் கொடியிடை

வேர்மனம் தழுவும்

தன் ஊடலை

எவரும் பார்ப்பதை

மழை விரும்புவதில்லை

 

தெரிந்து கொண்டு நான்

கதவடைத்துக் கொள்கிறேன்

மழைக்கும் மலர்கட்குமான

புரிந்துணர்வை

சாவித் துவாரத்தினூடே

கள்ளத் தனமாய்

எட்டிப் பார்க்கிறேன்

 

யாவும் ஓய்ந்துவிட்ட

அம்மாலைப் பொழுதில்

வெறித்துக் கிடக்கும்

வானத்தைக் - குற்ற

உணர்வோடு பார்க்கிறேன்

அடுத்துப் பெய்யும் மழையில்

என் பாவத்தை கழுவ வேண்டும்

 

இவையெதுவும் அறியாத மழை

மறுமுறை என்னைப் பார்த்துச்

சிரிக்கும் பொழுது நான்

மரித்துப் போயிருப்பேன்!

Pin It