திருச்செந்தூர் - கிருட்டிணகிரியில் கழகக் கூட்டமும், ‘குடிஅரசு’ நூல் அறிமுகமும் சிறப்புடன் நடந்தன. சாதி அடையாளமற்ற அமைப்பாக பெரியார் திராவிடர் கழகம் திகழ்கிறது என்று ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பழ.நீலவேந்தன் திருச்செந்தூர் கூட்டத்தில் புகழாரம் சூட்டினார்.
திருச்செந்தூரில் 2.9.2010 வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, திருச்செந்தூர் வ.உ.சி. திடலில், ‘குடிஅரசு’ நூல் அறிமுக விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டம், தூத்துக்குடி நகர செயலாளர் பால் அறிவழகன், ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியோடு துவங்கியது. மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, ஆதித் தமிழர் பேரவையின் நிதிக் குழுப் பொறுப்பாளர் சு.க. சங்கர், மாவட்ட தலைவர் சி. அம்புரோசு, வழக் குரைஞர் பிரிட்டோ, தலைமை செயற்குழு உறுப்பினர் பால். பிரபாகரன், ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பழ. நீலவேந்தன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரை யாற்றினர். கழகத் தலைவர் “குடி அரசு” தொகுப்பை வெளியிட, ஆதித் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் கண்ணன் பெற்றுக் கொண்டார்.
நெல்லை மாவட்ட காசிராஜன்-கோமதி ஆகியோரின் பெண் குழந்தைக்கு மாலதி என கழகத் தலைவர் பெயர் சூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஆதித் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் நீலவேந்தன் ஆற்றிய உரையிலிருந்து சில செய்திகள்:
பெரியார் திராவிடர் கழக மேடைகளில் ஆதித் தமிழர் பேரவை உரிமையோடு கலந்து கொள்வதற்கு கழகத்தின் மீது ஒரு அளப்பரிய மரியாதை வைத் திருக்கிறோம். ஒருவருடைய சாதியை தெரிந்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள், முன்பெல் லாம் பெயரை கேட்டு, அப்பாவின் பெயரை கேட்டு, ஊரின் பெயர், தெருப் பெயர் கேட்டுத் தெரிந்துக் கொள்வார்கள். ஆனால், இப்பொழுது ஒருவர் எந்த இயக்கத்தில் இருக்கிறார் என்று கேட்டாலே, அவரின் சாதி தெளிவாக தெரிந்து விடுகிற நிலைதான் தமிழ்நாட்டில் இருக்கின்றது. எனினும் பெரியார் திராவிடர் கழகம் என்று சொல்கிறபோது, என்ன சாதியென தெரிந்து கொள்ள முடியாது. சாதி அடையாளத்தை ஒழிப்பதையே கொள்கை அடையாளமாக வைத்திருக்கிற விடுதலை இயக்கம்தான் பெரியார் திராவிடர் கழகம்.
உயர்நீதிமன்றம், பெரியார் சொத்துக்களை வைத்திருக்கின்ற வீரமணி போன்ற தலைவர்கள், கலைஞரின் மறைமுக ஆதரவு என இப்படி பல்வேறு தடைகளை கடந்து, ‘குடிஅரசு’ வெளி வந்திருக்கிறது. பெரியார் கருத்தை வெளியிடக் கூடாது எனச் சொல்லி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வீரமணிக்கும், வெளியிட்டே தீருவது என போராடிய பெரியார் திராவிடர் கழகத்திற்கும் நடந்தது, சொத்துப் போராட்டம் அல்ல. ஆரிய திராவிடர் போராட்டம். அறிவை முடக்க நினைப்பது ஆரியம். அதை தகர்க்க வல்லதே பெரியாரியம். அறிவை முடக்க நினைத்த ஆரிய கூட்டத்திற்கு எதிராக கிளம்பிய பெரியாரின் நூல்களை முடக்க நினைக்கிற வீரமணிக்கு இருப்பதும் ஆரிய சிந்தனையே. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களை கோவில் கருவறைக்குள் விட மறுக்கும் பூணூலில் மட்டும்தான் பார்ப்பனியம் உள்ளது என சொல்ல முடியாது.
சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக் கழகம் வருகிறபோது தங்கள் தலைவர் பெயரையும் கூட நீக்கி விடுவார்கள். ஒரு தாழ்த்தப்பட்டவர் பெயர் உள்ள பயணச் சீட்டை என் சட்டைப் பையில் வைக்க மாட்டேன் என்று மீசை முறுக்குகிற பிற்படுத்தப்பட்டவர்களிடம் இருப்பதும் பார்ப்பனியம் தான். பறையர், பள்ளர் என்பவர்கள், தங்களைவிட கீழான சாதியாக கருதி சக்கிலியரை வீட்டில்விட மறுக்கும் தாழ்த்தப்பட்டவர்களிடம் இருப்பதும் பார்ப்பனியம்தான். இந்தப் பார்ப்பனியம் எப்படி பார்ப்பனர்களையும் தாண்டி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களிடம் மண்டிக் கிடக் கிறதோ, அதுபோல பெரியாரின் பணி முடிக்க வந்ததாக சொல்லுகின்ற வீரமணியிடமும், ஆரிய சிந்தனை புகுந்திருந்ததனாலேதான் அறிவை முடக்க நினைத்தார்.
இன்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார். பெரியார், அம்பேத்கர் சிலை தாக்கப்படுவதற்கு காரணம், யாரும் முழுமையாக இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை. இரு தலைவர்களும் கடவுள், மத நம்பிக்கைக்கு எதிராக பேசினாலும், மக்களின் நன்மைக்காகவே பேசினார்கள். அம்பேத்கரை ஏற்றுக் கொண்டவர்களும், படிக்காத காரணத்தால்தான் கோவில் திருவிழாவில் ஒரு பக்கம் கடவுள் படமும் மறுபக்கம் அம்பேத்கர் படமும் போட்டு பதாகை வைப்பதற்கு எந்தக் கூச்ச நாச்சமும் யாருக்கும் இல்லை.
பெரியரியத்தை பின்பற்றுகிற ஒரே இயக்கம் பெரியார் திராவிடர் கழகம் தான். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரை செய்தபோது, பிற்படுத்தப்பட்டவர்களிடம் சென்று பேசினர். சாதியத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் வாழ்த்துரை வழங்கு வதைவிட, அதை கடைபிக்கிற பிற்படுத்தப்பட்ட சங்கங் களின் தலைவர்களை அழைத்துப் பேச வைத்தனர் என்றார்.
கிருட்டிணகிரியில்
29.8.2010 ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு கிருட்டிணகிரி செரீப் மாங்காய் மண்டியில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கிருட்டிணகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் முன்னிலை வகித்தார். சென்னை வழக்கறிஞர் குமாரதேவன், கேசவன், கரு அண்ணாமலை, தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் வேடியப்பன் உள்பட பலர் கலந்து கொண்ட இக் கலந்துரையாடல் கூட்டத்தில், கீழ்க்கண்ட பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கிருட்டிணகிரி மாவட்ட - தலைவர் காவேரி பட்டினம் குமார், செயலாளர் சந்தூர் பிரேம் குமார், அமைப்பாளர் மு. பழனிச்சாமி, மாணவரணி அமைப்பாளர் பாஸ்கரன், இராயக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் பால கிருட்டிணன், பகுத்தறிவாளர் பேரவை வெங்கடேசன்.
மாலை 6 மணிக்கு கிருட்டிணகிரி கார்டு நேசன் திடலில் (ஆனந்த் திரையரங்கம் எதிரில்) கழகம் சார்பாக “பொங்கும் தமிழர் எழுச்சி” என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பாடல் களோடு துவங்கியது. மு. பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். தி.குமார் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் வேடியப்பன், பாலகிருட்டிணன் ஆகியோர் உரைக்குப்பின் வழக்கறிஞர் குமார தேவன், தமிழர்களின் எழுச்சி மங்கிவிட்ட காரணத்தால், தமிழர்களின் எழுச்சிப் பொங்க வேண்டும் என்பதற்காக இந்த தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. தமிழர்களின் எழுச்சி, உணர்ச்சி, பேச்சு, மூச்சு எல்லாமே தந்தை பெரியாரால் கிடைத்தது என்றும், நமக்குச் சட்டத்திலுள்ள உரிமைகள், அதற்கான சட்டப் பிரிவுகள் ஆகியவைகளை விளக்கிப் பேசினார்.
கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், இங்கே பொங்கும் தமிழர் இருந்திருந்தால் ஈழப் போராட்டம் பின்னடைவை சந்தித்திருக்காது. ஈழத்தில் இருப்பவர்கள் தான் பொங்கும் தமிழர்களே தவிர இங்கு இருப்பவர்கள் பொங்கும் தமிழர் அல்ல. தென் மாவட்டங்களை பொருத்தவரை தேவர் என்று சொல்கிற போதும், வட மாவட்டங்களை பொருத்தவரை கொங்கு வேளாளர் என்கிறபோதும், கிருட்டிணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வன்னியர் என்று சொல்லுகிறபோதும் தான், கோபம் வந்து பொங்குகிறார்கள்.
பஞ்சாபில் ஒரு மதவாதி சொந்த பிரச்சினையால் கொல்லப்பட்டதற்கே மிகப் பெரிய கலவரம். பீகாரில் இரயில் நிறுத்தப்படாததால் இரயிலை தீ வைத்து கொளுத்தி பெரிய போராட்டம். அங்கு மம்தா பானர்ஜி நேரில் வந்து போராட்டக்காரர்களிடம் பேசுகிறார். காஷ்மீர் மக்கள் கற்களையே ஆயுதமாக கொண்டு போராடுகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் சாதி உணர்வு மட்டுமே மேலோங்கி நிற்கிறது. நாமெல்லாம் ஒவ்வொருவரும் உயர் சாதியாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பார்ப்பனர்களை தவிர யாரும் கோவிலில் நுழைய முடியாத நிலைதான். எனவே தமிழன் என்ற அடிப்படையில் தமிழர் பிரச்சினைக் காக எல்லோம் ஒன்றிணைய வேண்டும் எனப் பேசினார்.
இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையில், பெரியார் திராவிடர் கழகம் துவக்கப்பட்டதன் நோக்கம், தமிழர்களுக்காக, தந்தை பெரியார், எந்தெந்த உரிமைகள் பெற்றுத் தர போரா டினார் என்பதையும், அந்தப் போராட்டங்கள் எல்லாம் அரசுக்கு எவ்வளவு அழுத்தத்தை தந்தது என்பதைப் பற்றியும் விரிவாகப் பேசினார். மேலும், வடநாட்டில் புரட்சியாளர்களின் பெயருக்கு பின்னால்கூட சாதி பட்டம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் சாதிச் சங்கத் தலைவர்கள்கூட தங்கள் பெயருக்குப் பின்னால் சாதி பட்டம் போடாமல் இருப்பதற்குக் காரணம் பெரியார் கொள்கையின் தாக்கம் என்று பேசினார்.
செய்தி: அ. கோகுலகண்ணன்