1957 இல் ஜூன் 22 இல் சாதி ஒழிப்புப் படை புறப்பட்ட அதே நாளில்...

குடந்தையில் 1957 ஆம் ஆண்டு இதே ஜூன் 23 ஆம் தேதி சுயமரியாதை வீரர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையில் ஆனைமலை நரசிம்மன் அவர்களை தளபதியாகக் கொண்டு, சாதி ஒழிப்புப் பிரச்சாரப் படை புறப்பட்டு சென்னைக்கு நடந்தே சென்றது. ஜூன் 23 ஆம் தேதி புறப்பட்ட அந்தப் பிரச்சாரப் படை, ஜூலை 30ஆம் தேதி சென்னை வந்தடைந்தபோது கடற்கரையில் மாபெரும் வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சென்னையில் பார்ப்பன ஆதிக்கச் சின்னமான ‘பிராமணாள் காபி ஓட்டல்’ என்ற பெயர் பலகையில் இடம் பெற்ற ‘பிராமணாள்’ பெயரை அகற்றக் கோரி, திராவிடர் கழகம் - சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள‘முரளிஸ் கபே’ என்ற உணவு விடுதி முன் தொடர் மறியல் நடத்தி வந்தது. ஒவவொரு நாளும் தோழர்கள் கைதானார்கள். தொடர் போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கும் பரப்புரை நடைப்பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கும் தேவையான உணவுக்கான அரிசி, பருப்பு போன்ற பொருட்களை பிரச்சாரப் படை வழி நெடுக பொது மக்களிடமிருந்தே திரட்டிச் சென்றது. பிரச்சாரப் படையின் பின் வந்த மாட்டு வண்டி ஒன்றில், அந்த உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு, சென்னை வந்து சேர்ந்தன. சென்னை வந்து சேர்ந்த அடுத்த சில நாட்களிலேயே ஆகஸ்ட் 2 ஆம் தேதி படைத் தலைவர் அ.ஆறுமுகம், தளபதி ஆனைமலை நரசிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 5 வாரம் சிறைத் தண்டனைக்குள்ளானார்கள்.
 
அதே ஆண்டில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வடாற்காடு மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி கருஞ்சட்டைத் தோழர்களின் சாதி ஒழிப்புப் பிரச்சாரப்படை புறப்பட்டது.
 
1954 ஆம் ஆண்டு பார்ப்பன ராஜகோபாலாச்சாரி, குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தபோது, நாகையிலிருந்து குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் பிரச்சாரப் படை ஒன்று, சுயமரியாதை வீரர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம் தலைமையில் புறப்பட்டது. முன்னதாக நாகையில் மார்ச் 27, 28 தேதிகளில் ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடு நடந்தது. மாநாட்டில் அடுத்த நாளே எதிர்ப்புப் பிரச்சாரப் படைப் புறப்படுவது என நாள் குறிக்கப்பட்டது. ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கும் எத்தகைய போராட்டத்துக்கும் தயார் என்று நாடு முழுதுமிருந்தும் ரத்தக் கையெழுத்திட்டு பெரியாருக்கு தோழர்கள் கடிதங்களை அனுப்பினர்.
 
குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை புறப்பட்ட அடுத்த இரு நாட்களிலே மார்ச் 30 ஆம் தேதி ஆச்சாரியாரின் முதல்வர் பதவி ஆட்டம் கண்டது. ஆச்சாரியார் உடல் நலமில்லை என்று கூறி அஞ்சி ஓடினார். காமராசர் முதல்வரானார். குலக் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை வெற்றி பெருமிதத்தோடு சென்னை வந்து சேர்ந்தபோது கடற்கரையில் 14.4.1954 அன்று பெரியார் மிகப் பெரும் வரவேற்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். மேடைகளில் படைவீரர்களை நிறுத்தி,கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்திய பெரியார், “இவர்கள் படையாக வந்து, இங்கு போராடி சிறை செல்ல எண்ணினார்கள். பாவம்! ஏமாந்தார்கள். காமராசர் இவர்களை ஏமாற்றி ஆச்சாரியார் திட்டத்தை ஒழித்துவிட்டார் என்று பெரியார் கூறியபோது, கூட்டமே கரவொலியால் அதிர்ந்தது.
 
பெரியார் பரம்பரையின் தொடர்ச்சியாக பெரியார் திராவிடர் கழகத்தின் இளைய தலைமுறை சாதி-தீண்டாமை ஒழிப்பு எனும் லட்சியச் சுடரை ஏந்தி, கிராமம் கிராமமாக மக்களிடம் பரப்புரை செய்து வருகிறது.
 
ஜூன் 22 ஆம் தேதி சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் நடத்திய இரண்டாவது கட்டப் பரப்புரைப் பயணம் முடிவடைந்த அடுத்த நாளே ஜூன் 23 ஆம் தேதி குடந்தையில் கழகத்தின் மூன்றாவது கட்டப் பரப்புரைப் பயணத்தை கழகத்தின் மற்றொரு அணி தொடங்கியது. குடந்தை - மாமாங்கக் கரை அருகே நடந்த தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திருச்சி புதியவன் உரையாற்றினர். சிற்பிராசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார். மாவட்ட தலைவர் சோலை மாரியப்பன் வரவேற்புரையாற்றினார். பயணத்தில் 12 தோழர்கள் பங்கேற்றுள்ளனர். சூலூர் வீரமணி, திருச்சி புதியவன், கோகுல கண்ணன் ஆகியோர் பரப்புரையாற்றி வருகிறார்கள். நாத்திகன் கழகப் பாடல்களைப் பாடி வருகிறார். பெரம்பலூர், பெருந்துறை,திருப்புர், நாகை பகுதி தோழர்கள் பயணத்தில் பங்கேற்றுள்ளனர். 7ஆவது நாள் பயணக்குழு மயிலாடுதுறையில் வந்து சேர்ந்தது. 3நாள்கள் மயிலாடுதுறை சுற்றுப் பகுதிகளில் பரப்புரை செய்து வருகிறது. (விரிவான செய்திகள் பின்னர்)