கூடுகலைக்கபட்ட பறவை ஒன்று

எப்போது மெதுவாய் மழை ஆரம்பிக்கும்போதும்
மனது லேசாய் ஆட ஆரம்பிக்கிறது
கார்த்திகை தூறல்மழை மாலையில்
முருகன் கோவிலின் கொடிகம்பத்தடியில்
விளக்கு வெளிச்சத்தில் முதலாய் பார்த்தது
இது போன்ற ஒரு மழைநாளில்
பிறிதொருநாள் நடராஜர் மண்டபத்தில்
பூக்கட்டிக்கொண்டிருக்கும்போது
அன்றுதான் முதன்முதலாய் ஊருக்கு வெளியில்
பார்க்கிறேன் நகர்பூங்கா போகும் வண்டியில்…
நேர்த்தியாய் உடுத்தி மிக அழகான பாவத்தோடு…
பிரதோஷ தினத்தன்று
சிரிப்பு வெடிக்க வெடிக்க சிவன் கோவிலில்…
பார்க்க பார்க்க நமக்கும் சிரிப்பு வருமே
அதுபோன்ற சிரிப்போடு…
அப்புறம் வெகுகாலம்போய் ஒருநாள்
உச்சிமலை கோவிலில் தீர்க்கமான முகத்தோடு
கடைசியாய் பார்த்தது அதே உச்சிமலை கோவிலில்…
மாலைமாற்றும்போது தாலிக்கு பதில்
எதோ கருப்புகயிறில் குப்பிமாதிரி இருந்தது
வெளியே மெல்ல மெல்ல மழை வலுக்கிறது
உள்ளே வெடவெடவென குளிரெடுக்கிறது
நேற்று அடித்த சூறாவளியில்
கூடுவேறு பிய்ந்து போய்விட்டது
இழப்பதற்கு எதுவுமில்லை…
பசிக்கிறது எதாவது திண்ணக்கிடைத்தால் பரவாயில்லை
உடன்பிறப்புகளை இனியும் நம்பி கேசமளவேனும் பிரயோஜனமில்லை
உணவிற்கென காடுபோக இப்போது வழி இல்லை
பெரிய இரும்புத்திரைபோல மழைபெய்துகொண்டிருக்கிறது

ஆதிவிழுதில் தொங்கும் பேய்கள்

எந்திரக்கைகள் தோண்டியெடுத்து
எட்டுத்திக்கும் எறிகின்றன
ஏழு தலைமுறைகளின் எலும்புக்கூடுகளை
ஆலவிழுதில் தொங்கிய பேய்கள் எல்லாம்
அழியத் தொடங்குகின்றன
சிறுவர்களின் சாம்பல் செல்களில்
ஊரெல்லை கிணற்றின் ரகசியங்கள்
மூடப்படுகின்றன
ரகசியங்களாகவே
கடைசியாய் மிஞ்சியிருக்கும்
புளியமரத்துவீட்டில்
இழுத்துக்கொண்டு கிடக்கிறது
ஆதிக்கிழவியின் உயிர்
புளியமரமாய் நிற்கிறது
ஆதிக்கிழவனின் உடல்
புதிய சாலையோரம் பூத்திருக்கும்
செம்மண் அப்பிய கனகாம்பர பூவில்
இன்னும் உயிர்வாழ்கிறது உலகம்

- ஜனா.கே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It