வேறு எங்குமே பார்க்க முடியாது, இப்படிப்பட்ட திணவெடுத்த மூளைகளை. ஹிந்தியத் திரைத்துறையினர் ஒரு தனி உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உலகம் இது அல்ல. அவர்கள் இந்திய சூழ்நிலையில் வாழவில்லை. அவர்களுக்கு இங்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றே புரியவில்லை. கடைசியில் அவர்கள் தங்கள் முட்டாள்தனத்தை, அறிவுகெட்டத்தனத்தை நிறைவேற்றியே விட்டார்கள். 

தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி, இலங்கையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியத் திரைத்துறையினர் கலந்து கொண்டார்கள் என்பது இரண்டாம் பட்சம். அவர்கள் தங்கள் சொந்த மான உணர்வை எங்கு கொண்டு போய் அடகு வைத்தார்கள்? தன் நாட்டு மக்களைக் கொன்றவன் நாட்டில், தன் நாட்டுப் பெண்களை கற்பழித்தவன் வீட்டில் விருந்துண்ணும் மடத்தனம் வேறு எந்த நாட்டிலும் நடக்காது. அவர்கள் அனைவரிடமும் சில கேள்விகள் நிச்சயமாக கேட்கப்பட வேண்டும். 

1.     20 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக சில வாரங்களில் கொல்லப்பட்ட விஷயம் தெரியுமா? தெரியாதா?

2.     தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட விஷயத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்.

3.     போர்க்கைதிகளை நிர்வாணமாக்கி தலையில் சுட்டுக் கொன்ற காட்சிகள் கிராபிக்ஸ் காட்சிகள் என்று நினைக்கிறார்களா?

4.     தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது என்பதையும், தமிழர்கள் இந்தியர்கள் தான் என்பதையும் ஒத்துக் கொள்கிறார்களா?

5.     இங்கு நடக்கும் விஷயங்களை எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்?

6.     உன் சகோதரனைக் கொன்றவன் நாட்டில், உன் சகோதரியை மானபங்கப்படுத்தியவன் நாட்டில் வெட்கமேயில்லாமல், தடித்தோல் எருமை மாட்டுத்தனமாக விருந்துண்டு களிப்பதில் சற்றேனும் வெட்க உணர்வு இருக்கிறதா? 

அவர்கள் பதில் சொல்லப் போவதில்லை. தின்கிற உணவில் உப்பை சிறிதேனும் கலந்து சாப்பிட்டு இருப்பார்களேயானால் மான உணர்வு என்பது சிறிதாவது இருக்கும். எவன் அழைத்தாலும் கூத்தாடிகளைப் போல் சென்று கூத்தடித்துவிட்டு வரும் கேவலமான தன்மையை எங்கு போய் கற்றார்களோ? தன்நாட்டு மக்களின் உயிரிழப்புக்குக் காரணமான புஷ் மீது செருப்பை விட்டெறிந்த ஈராக் நாட்டு பத்திரிக்கைகாரன் மூத்திரத்தை வாங்கிக் குடித்தாலும் இவர்களுக்கு சொரணை வரப் போவதில்லை. 

பாகிஸ்தானிலிருந்து 10 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து சுமார் 200 பேரை சுட்டுக் கொன்ற செயலுக்கும், 20 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் எப்படி வித்தியாசம் பிரித்துப் பார்க்கிறார்கள் இந்த நாடோடிகள்? நாளை பாகிஸ்தானில் ஒரு சர்வதேச திரைப்பட விழா நடைபெறுமானால் அங்கு செல்வார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஏனெனில் மும்பையில் ‘சாம்னா’வில் ஒருவர் எச்சரிக்கை விடுவார். பாகிஸ்தான் செல்பவர்கள் அங்கேயே இருந்துவிடுங்கள் என்று. இவர்களுக்கெல்லாம் சொல்பவர்கள் சொல்ல வேண்டும் இல்லையென்றால் எங்கு வேண்டுமானாலும் சென்று தின்று களித்து பின் கழித்து விட்டு வர சற்றும் தயங்க மாட்டார்கள். 

பல ஆயிரம் திபெத்தியர்களுக்கு இந்தியாவில் அகதிகள் அந்தஸ்து கொடுத்து அவர்கள் செழிப்பாக வாழ வழிவகை செய்துதரும் இந்திய அரசு, இல்லை ஒரு குறிப்பிட்ட கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு அந்த உரிமையை மறுத்துவிட்டது. தனது சுய வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள நினைக்கும் நரித்தனத்தில் ஊறிய சில அதிகாரமிக்க மடமனிதர்களால், பாதிக்கப்பட்ட, உள்ளம் கொதித்த ஆயிரக்கணக்கானோர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள். 

எந்த ஒரு இனமும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட முடியாது. எந்த ஒரு இனமும் முழுமையாக காயடிக்கப்பட்டுவிட முடியாது. இந்தியா ஒரு முழுமையான நாடா இல்லை பல்வேறு சிறுசிறு குழுக்களாக பிரிந்து கிடக்கும் மூளையற்ற மிருகக் கூட்டமா என்று புரியவில்லை. இக்குறிப்பிட்ட விஷயத்தில் அரசியல் என்பது இரண்டாம் பட்சம். முதலில் சொந்தமாக சொரணையுணர்வு வேண்டாமா? அவர்களுக்கு சொரணை வர ஒரு மும்பை பெண், இலங்கை ராணுவத்தால் மானபங்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமா? வெட்கமில்லாமல் இலங்கையில் சிரித்தபடி சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் அவர்கள் மண்டையில் ஏதாவது ஒரு மூலையில், மூளை என்கிற பகுதி 2 சதவீதமாவது ஒட்டிக்கொண்டிருக்கும் பட்சத்தில், இனப்படுகொலை செய்தவன் வீட்டில் விருந்துண்ணுவது, பன்றியானது மலத்தை தேடிச்சென்று உண்பதற்கு சமசமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 

படவிழாவில் கலந்து கொண்ட நடிகர் சல்மான் கான் கூறியிருக்கிறார், 

‘போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலநிதி திரட்டவே வந்திருக்கிறோம். மக்களை உற்சாகப்படுத்துவது எங்கள் பணி, அந்தப் பணியை இங்கு வந்து செய்கிறோம்” 

நடிகர் சல்மான் கானுக்கு கடைசியில் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது குறித்து மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் திரட்டபட்ட நிதியை, மகனை இழந்த தாயிடம், தந்தையை இழந்த குழந்தைகளிடம், மானத்தை இழந்த அவரது தமிழ் சகோதரியிடம் கொடுக்காமல் இருந்தால் காரி உமிழப்படுவதிலிருந்து தப்பிவிடுவார். ஆனால் ராஜபக்ஷேவிடம் கொடுத்தால் அவர் சிரித்துக் கொண்டே வெட்கமில்லாமல் வாங்கிக் கொள்வார். உங்களுக்கும் பெருமையாக இருக்கும். 

இவர் போரில் பாதிக்கப்பட்ட மக்களை உற்சாகப்படுத்த நினைக்கிறார் என்பதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால், அவர் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சோர்வான மன நிலை குறித்து மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் என்பது. ஒரு மொக்கை, முட்டாள் அரசியல்வாதி கூட இப்படி ஒரு லூசுத்தனமான லாஜிக்குடன் கூடிய ஸ்டேட்மென்டை கூற மாட்டான். ‘ஆளும் வளரணும் அறிவும் வளரணும் என்கிற பாடலை மட்டும் ஹிந்தியில் பாடத் தெரிந்தால் அவர் முன் சத்தம் போட்டு பாட சற்றும் தயங்க மாட்டேன். விவேக் ஓபராயும் ஊடுசால் ஓட்டுவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை . அவர் மீதிருந்த மரியாதையே போய்விட்டது. 

கடைசியில் எல்லா ஆங்கில செய்திச் சேனல்களும் தமிழர்களை ஒரு குறுங்கூட்டமாக ஆக்கிவிட்டது. எவரும் இது தங்கள் நாட்டவர்கள் சார்ந்த பிரச்னை என்று நினைக்கவில்லை. ஏதோ ஒரு கூட்டத்திற்கு நேர்ந்த பிரச்னையாக நினைத்து தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால் உணர்வுகள் என்றுமே மரிப்பதில்லை. கடைசி மனிதனின் கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை அது கொதித்தபடி உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். 

- சூர்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It