ஒரு புகார்தாரரை, சட்டத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் அமைப்பாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. காவல் துறையைப் பொறுத்தவரை, பொய் வழக்குப் போடுவது எவ்வளவு எளிதானதோ, அதைவிட எளிதானது, உண்மைப் புகாரை பொய்ப் புகார் எனத் தள்ளுபடி செய்வதுமாகும். அதன் ஒரு கொடூரமான வெளிப்பாடுதான், குற்ற நிகழ்வு குறித்து கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என காவல் துறையினர் தள்ளுபடி செய்வது. இது, சட்ட மொழியில் "பொருண்மைப் பிழை' (Mistake of Fact) என்று கூறப்படுகிறது.
ஒரு குற்ற நிகழ்வு குறித்த புகார் குற்ற நிகழ்விடத்தின் மீது ஆளுகை உள்ள காவல் நிலையத்தில் செய்யப்படு மானால், அப்புகாரின் மீது எந்தெந்த சட்ட நடைமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; அவ்வாறான சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத சூழல்களில் எந்தெந்த வகைகளில் தீர்வு பெறலாம் என்பதை இத்தொடரின் முந்தைய கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம். அவற்றின் அடுத்த கட்டமாக, குற்ற நிகழ்வு தொடர்பான புகாரை "பொய்யானதென' காவல் துறையினர் தள்ளுபடி செய்வதையும், அப்புகார் உண்மைதான் எனில், அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய சட்ட நடைமுறைகளையும் இப்போது பார்க்கலாம். இவை பொதுவான புகார்களுக்கும் பொருந்தும். எனினும், இத்தொடரின் கருப்பொருளான வன்கொடுமை வழக்குகளின் பின்னணியிலேயே இங்கு விளக்கப்படுகிறது. இந்த "பொருண்மைப் பிழை' என்பதை காவல் துறையினர் இரண்டு வகையில் பயன்படுத்தி, வன்கொடுமைப் புகார்களை / வழக்குகளை வீணடிக்கின்றனர்.
1. ஒரு வன்கொடுமைப் புகாரை முற்றாக பொய்ப் புகார் என்று கூறி மேல் நடவடிக்கையைக் கைவிடுவது. இது, பெரும்பாலும் வன்கொடுமை நிகழ்விற்கு மிகக் குறைந்த சாட்சியங்களே உள்ள புகார்களின்போது கையாளப்படும் சட்ட எதிர் அணுகுமுறையாகும். எடுத்துக்காட்டாக, ஒரு பட்டியல் சாதியினரோ, பழங்குடியினரோ மற்றவர்களால் சாதிய அடிப்படையில், பொதுப் பார்வையில் இவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் புரியும் குற்றமான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3(1)(X) இன் கீழான புகார், வன்கொடுமை குறித்த குற்றச்சாட்டை-வெறும் நடத்தை, நடவடிக்கை, அந்நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட அவதூறுச் சொற்கள் ஆகியவற்றைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். இத்தகைய சூழல்களில் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த பிறகு, தாம் புலன் விசாரணை செய்தபோது இப்புகாரில் உண்மையில்லை என்று புகாரைத் தள்ளுபடி செய்ய பெரும்பாலும் வாய்ப்புள்ளது.
2. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகள் தவிர மற்ற இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் கொண்ட வன்கொடுமைப் புகார், இத்தகைய புகார்களில் வழக்கமான குற்றங்களுக்கான சாட்சியங்கள் (கொலை, கொடுங்காயம், காயம், வன்புணர்ச்சி போன்றவை) மறைக்க முடியாத வகையில் அமைந்திருக்கும்போது, வழக்கமான சட்டப் பிரிவுகளுக்கு மட்டும் (இந்திய தண்டனைச் சட்டம் போன்றவை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகளை கைவிடுவது என்ற தந்திரம் காவல் துறையால் கையாளப்படுகிறது.
இச்சூழலில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபரின் வழக்கை மீண்டும் தடத்தில் செலுத்தி, வழக்கைத் தொய்வின்றி நடத்துதல் என்பது, மிகப்பெரும் சவாலாக ஒவ்வொரு சமூக செயல்பாட்டாளருக்கும் அமைகிறது. இது குறித்த
சட்ட விதிகள், நீதிமன்றத் தீர்ப்புகளில் வகுத்துரைக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் ஆகியவற்றை விரிவாகப் பார்ப்பதற்கு முன், ஒரு பெண் துணைக் காவல் கண்காணிப்பாளர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளைப் புறக்கணித்த வழக்கு ஒன்றை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.
சங்கர்-திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ள தேவராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயி. பட்டியல் சாதியைச் சார்ந்தவர். அவரது சொந்த ஊரில் 25 தலித் குடும்பங்கள் உள்ளன. அவ்வூரில் உள்ள நிலவுடைமையாளர்களான வன்னியர்கள், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். வன்னியர்களின் நிலங்களில் தலித்துகள் விவசாயக் கூலிகளாக உழைத்து வருகின்றனர். தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், பொருளாதார சமூகச் சூழ்நிலைகள் போன்ற காரணங்களின் அடிப்படையில் பெரும்பாலும் புகார் வடிவம் பெறுவதில்லை. அவ்வாறான புகார்களுக்கு பெரிய அளவில் பலனேதும் இருப்பதில்லை என்ற நடைமுறையும், வன்கொடுமைப் புகார்களுக்குத் தடையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் 20.1.2003 அன்று மாலை 6 மணியளவில் சங்கர் தனது வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்க, தன்னுடைய தம்பி உளியனுடன் டி.வி.எஸ்.– 50 இரு சக்கர வாகனத்தில் காந்தபாளையம் என்ற இடத்தை நோக்கிச் சென்றிருக்கிறார். அவ்வாறு அவர்கள் போகும்போது, குறுகலான பாதை ஒன்றில் அமைந்துள்ள கடை ஒன்றின் முன் நின்று கொண்டிருந்த கும்பலை கடந்து செல்லும்போது, சங்கருக்கு பின்புறம் அமர்ந்திருந்த அவர் தம்பி உளியனின் கால், அங்கு நின்று கொண்டிருந்த ஏழுமலை என்ற வன்னியர் மீது தவறுதலாகப் பட்டு விட்டிருக்கிறது. இயல்பாக மன்னிப்பு கேட்ட பின்பும் ஆத்திரமடைந்த ஏழுமலை, சங்கரின் வண்டியை மறித்து, “சக்கிலியப் பயல்களுக்கு திமிராப் போச்சு'' என்று சத்தம் போட்டு, அவர்கள் இருவரையும் தாக்க முயன்றிருக்கிறார். பிரச்சினையை அறிந்து வந்த இருதரப்பு ஆட்களும் விலக்கிவிட்டு இருவரையும் அனுப்பி வைத்தனர்.
நகரத்துக்குச் சென்று மீண்டும் இரவு 8.30 மணியளவில் சங்கரும் அவர் தம்பியும் திரும்பும்போது, ஊர் எல்லையில் சங்கரின் தந்தை கண்ணனும், இன்னொரு தம்பியான சகாதேவனும் அவர்களுக்காக காத்திருக்கின்றனர்.விசாரித்தால், மாலையில் நடந்த பிரச்சினையை ஒட்டி ஏழுமலையுடன் மீண்டும் பிரச்சினை ஏற்படாமல் இவர்கள் இருவரையும் பாதுகாப்பாக வேறு பாதையில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகவே அவர்கள் அங்கு வந்து காத்திருப்பதாகச் சொல்கின்றனர். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஏழுமலையின் தலைமையில் 9 பேர் கொண்ட கும்பல் இவர்களை நோக்கி ஓடிவந்து வழிமறித்து, “சக்கிலிய தேவடியா பசங்களா, சாயங்காலம் எப்படி ஏழுமலையை அடித்தீர்கள்'' என்று சாதிப் பெயரைக் கூறி இழிவாகத் திட்டியதுடன் தம்மிடம் வைத்திருந்த கத்தி, இரும்புக் கம்பி, கம்பு போன்ற ஆயுதங்களால் நால்வரையும் கடுமையாகத் தாக்கினர். சிறிது நேரத்தில் ஊர் மக்கள் சிலர் வரவே, அக்கும்பல் ஓடி விடுகிறது.
இச்சம்பவத்தில் சங்கருக்கு வலது மேல்வரிசைப் பல் ஒன்று உடைந்துள்ளது. சகாதேவனுக்கு மூக்கிலும், உளியனுக்கு காலிலும், அவர்கள் தந்தை கண்ணனுக்கு உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் நேரடியாக போளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் செல்ல, நால்வரும் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர். மறுநாள் (21.1.2003) நண்பகல் 2 மணியளவில் கடலாடி காவல் நிலையத்திலிருந்து ஒரு தலைமைக் காவலர் மருத்துவமனைக்கு வந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய சங்கரிடம் வாக்குமூலம் பெறுகிறார். இருப்பினும், புகார் வாக்குமூலத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகல் அவருக்கு வழங்கப்படவில்லை. சம்பவம் நடந்த ஏழாம் நாள் (26.1.2003) இவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகின்றனர். அதற்கும் இரண்டு நாள் கழித்தே (28.1.2003) அவர்கள் போளூர் துணைக் கண்காணிப்பாளரால் முதன் முறையாக விசாரிக்கப்படுகின்றனர்.
சங்கரின் வாக்குமூலப் புகார் மீது கடலாடி காவல் நிலையத்தில் ஏழுமலை மற்றும் 8 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 148, 341, 323, 324 மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டப்பிரிவு 3(1)(X) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை குற்ற எண்.36/2003 ஆகப்பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. அதனினும் அதிர்ச்சி தரும் விதமாக ஏழுமலையை சம்பவம் நடந்த அன்று 6.30 மணியளவில் (ஏழுமலை மீது சங்கரின் தம்பி உளியனின் கால் தவறுதலாகப்பட்டது தொடர்பாக) சங்கரும் மற்றவர்களும் ஏழுமலையைத் தாக்கியதாகவும், ஏழுமலை பெருந்தன்மையாக அவர்களை விட்டு விட்டதாகவும் ஏழுமலையிடம் ஒரு பொய்ப்புகார் பெறப்பட்டு, கடலாடி காவல் நிலையத்தில் சங்கர் மற்றும் பிறர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 147, 148, 323, 324 மற்றும் 506(2) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உண்மையில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் புகாரை இரண்டாவதாகவும் பொய்ப் புகாரை முதலாவதாகவும் பதிவு செய்து, காவல் துறை தனது சாதியத்தைப் பாதுகாக்கும் கடமையைச் செவ்வனே செய்துள்ளது. இப்பொய் வழக்கு விபரங்களை அறிந்த சங்கரும் மற்றவர்களும் திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றத்தை அணுகி முன் பிணை பெற்றுத் தப்பித்துள்ளனர். சங்கர் கொடுத்த புகார் வாக்குமூலத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், கட்டணமற்ற நகலும் சட்டப்படி அவருக்கு வழங்கப்படவில்லை. அதே சமயம், அப்புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த ஏழுமலை மற்றும் 8 நபர்களையும் கடலாடி காவல் துறையினர் எவ்வித கைது நடவடிக்கைக்கும் உட்படுத்தவில்லை.
இந்நிலையில், ஏழுமலையும் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் சங்கரையும் மற்றவர்களையும், “எங்களை ஒண்ணும் கிழிக்க முடியாது. நீங்க தான் கோர்ட்டுக்கு போயிட்டு வந்துக்கிட்டு இருக்கணும்'' என்று சாதிப்பெயரைச் சொல்லி மேலும் இழிவுபடுத்தியிருக்கின்றனர். இது தொடர்பாக சங்கர் 10.6.2003 அன்று காவல் துறையின் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்த புகாருக்கும் எவ்விதப் பலனுமில்லை.
2003 நவம்பர் மாதத்தில் தன் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தெரிந்து கொள்ள சங்கர் போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். அவரது புகார் மீதான வழக்கில் காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்புடைய ஆவணங்களின் நகலுக்கு விண்ணப்பித்து நகல்களைப் பெற்றவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
சங்கர் கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு நீக்கப்பட்டு, வெறும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழான குற்றங்களுக்காக மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதிலும், சங்கரின் பல் ஒன்று தாக்குதல் காரணமாக உடைந்து போனதால், அக்குற்ற நிகழ்விற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 326 (பயங்கரமான ஆயுதத்தாலோ, வழியினாலோ கொடுங்காயம் விளைவித்தல்) கூட சேர்க்கப்படவில்லை. மேலும் 20.1.2003 நடைபெற்ற சம்பவத்திற்கு 24.1.2003 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு என்பதால், வழக்கின் புலன் விசாரணை போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளரால் மேற்கொள்ளபட்ட முதல் தகவல் அறிக்கையுடன் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினமே போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சட்டப்பிரிவு மாற்ற அறிக்கை ஒன்றை, போலிஸ் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், சம்பவத்தில் காயமுற்ற சங்கரையும் மற்றவர்களையும் மருத்துவமனையிலும், மற்ற 5 சாட்சிகளை சம்பவ இடத்திலும் வைத்து தான் விசாரணை செய்ததாகவும், விசாரணையில் சங்கரைத் தவிர மற்ற சாட்சிகள் எவரும் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தை "சக்கிலிய தேவடியா பசங்களே' என சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக வாக்குமூலத்தில் கூறவில்லை என்பது விசாரணையில் தெரிந்ததாகவும், எனவே சங்கர் எதிரிகளைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகைப்படுத்தி, சாதிப்பெயரைச் சொல்லி திட்டி அடித்ததாக வாக்குமூலம் கொடுத்ததால், வன்கொடுமைத் தடுப்புப் பிரிவு 3(1)(X) பொருந்தாது எனவும், எனவே அப்பிரிவை மாற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின்படி வழக்கை மாற்றம் செய்வதாகவும் கூறப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், வழக்கின் புலன் விசாரணை காவல் ஆய்வாளரால் மேற்கொள்ளப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சங்கர் அறிந்து கொண்டார். சங்கர் தனக்குத் தெரிந்த வழக்குரைஞர் ஒருவர் மூலம் இக்கட்டுரையாளருடன் தொடர்பு கொண்டார். வன்கொடுமை வழக்குகளின் சமூக-சட்ட முக்கியத்துவம் கருதி அவற்றை துணைக் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத அளவிலான காவல் அதிகாரிதான் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதியை முற்றிலும் புறக்கணிக்கும் விதமாகவும், நீர்த்துப்போகும் விதமாகவும் போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் செயல்பட்ட விதம், இவ்வழக்கில் ஆவணங்களுடன் தெளிவுபட அமைந்திருந்ததால், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சங்கர் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு குற்றவியல் அசல் மனு, மார்ச் 2004 இல் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மேற்சொன்ன சூழலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை, உண்மைக்குப் புறம்பாகவும் சட்டவிதிமுறைகளைப் புறக்கணித்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் வழக்கை கூடுதல் புலன் விசாரணை செய்து முறையான வகையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும், அப்புலன் விசாரணை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளில் கண்டுள்ளபடி துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த வன்கொடுமைக் குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி தீருதவித் தொகை வழங்கிட உத்தரவிட வேண்டுமென்றும்'' கோரப்பட்டது.
இம்மனுவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை, தவறான குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் வழக்கு விசாரணையை போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நடத்தக்கூடாது எனவும் தடை உத்தரவு கோரப்பட்டது. இம்னுவை 13.3.2004 அன்று முதலில் விசாரித்த நீதிபதி எஸ். அசோக்குமார், இறுதி விசாரணைக்கு மனுவை ஏற்றுக் கொண்டதுடன், மனுதாரர் கோரியபடி இடைக்காலத் தடையையும் வழங்கி உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குற்றம் சாட்டப்பட்டவர்களான ஏழுமலையும் மற்ற 8 நபர்களும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கும் உயர் நீதிமன்றம் அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்டு கிடைக்கப் பெற்றது. தொடக்கக் கட்டத்தில் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவர்கள், மனுவின் இறுதி விசாரணை மேற்கொள்ளப்படவிருந்த பிந்தைய காலகட்டத்தில் சற்று கலக்கமடைந்ததாகவே தெரிகிறது.
2008 சூன் மாதத்தில் ஒரு நாள் மனுதாரரான சங்கரை அழைத்துக் கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட ஏழுமலையும் ஒரு சிலரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சிலருடன் இக்கட்டுரையாளரை சந்தித்து, “சம்பவம் தெரியாமல் நடந்து விட்டதாகவும் ஆகையால் அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்; சமாதானமாகப்போய்விடலாம்'' என்றும் கூறினார். "முதலில் நடைபெற்ற சம்பவத்தோடு பிரச்சினை முடிந்திருந்தால் இந்த அளவிற்கு வந்திருக்காது. இரண்டாவது சம்பவம் (சங்கர், அவர் தந்தை மற்றும் தம்பிகள் தாக்கப்பட்டது) என்பது எதிர்பாராதது அல்ல' என்றும், அது தவிர சாதிய வன்கொடுமை வழக்குகளை சமரசம் செய்யும் போக்கு, வன்கொடுமைக்குத் துணை போகும் கொடிய செயலாகும் என்றும் அவர்களிடம் விளக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தால் சங்கரின் மனு தள்ளுபடி செய்யப்படும் நிலை வந்தால் கூட, மனுவை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர்களிடம் கூறப்பட்டது. பாராட்டப்பட வேண்டிய விதமாக சங்கரும் இதே கருத்தில் உறுதியாக இருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் வந்திருந்த வழக்குரைஞர்கள் பல்வேறு வகையில் வலியுறுத்திய போதும், வன்கொடுமை வழக்கில் சமரசம் என்பது இயலாது, கூடாது என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. 10.11.2008 அன்று சங்கரின் மனு நீதிபதி எஸ். தமிழ்வாணன் அவர்களின் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சங்கர் அளித்த புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட அன்றே, வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சாட்சியான சங்கர், தன்னை ஏழுமலையும் மற்றவர்களுக்கும் தாக்கிய போது, தன்னையும் தன் குடும்பத்தையும் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகத் திட்டியதாகக் கூறியிருந்தபோது, மற்ற சாட்சிகள் எவரும் அவ்வாறு கூறவில்லை என்ற காரணம் காட்டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் கொண்டு வந்தது தவறு என்றும்; ஒரு குற்றச்சாட்டு வாக்குமூலத்தில் உள்ளபோது, புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றமாகத் தன்னைக் கருதிக் கொண்டு செயல்பட்டது தவறு என்றும்; அவ்வாறு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை செல்லத்தக்கதல்லவென அறிவித்தும், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி மீண்டும் புலன் விசாரணை செய்ய வேண்டுமென்றும்; வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீருதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
-காயங்கள் தொடரும்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும்-9
- விவரங்கள்
- சு.சத்தியச்சந்திரன்
- பிரிவு: தலித் முரசு - நவம்பர் 2008