ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுக் குரல்கள் வலுப்பெற்று வரும் சூழலில் இக்கவனத்தை திசை மாற்றியது, சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. அதற்கு மறுநாள், தமிழக சட்டமன்றம் களை கட்டியது. அதற்கு முன்னரே, இந்நிகழ்வை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக, உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள காவல் நிலைய அனைத்து மட்ட காவலர்களும் தற்காலிகப் பணி நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகரக் காவல் துறைக்குப் புதிய ஆணையரும் நியமிக்கப்பட்டார். சட்டக்கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தமிழக முதல்வர் பதவி விலக வேண்டுமென ஜெயலலிதாவும், வைகோவும் 356 ஆவது முறையாக, புளித்துப் போன பல்லவியையே மீண்டும் பாடினர்.
தரங்கெட்ட திரைப்படங்களின் வரன்முறையற்ற வன்முறைக் காட்சிகளையும் ஆபாச பிம்பங்களையும், ‘சேனல்'களின் கூத்தடிப்புகளையும் தொலைக்காட்சிகளில் அள்ளிப்பருகிக் கிடந்த தமிழ்ச் சமூகத்தை-ஒப்பனையோ, ஒத்திகையோ இல்லாமல், ஆனால் ஒட்டி வெட்டப்பட்ட சில நிமிட காட்சித் துண்டுகள்-துணுக்குறவோ, திடுக்கிடவோ செய்து விட்டன. ‘ஜெயா' மற்றும் ‘சன்' தொலைக்காட்சிகள் மட்டும் மார்கழி மாதத்து ‘பஜனை' போல, இக்காட்சிகளை தமிழ்ச் சமூகத்தின் ஆபாச நுகர்வுக் கலாச்சாரம் துய்க்கத் துய்க்க தீனியாக்கி வந்தன. “ஈவு இரக்கமற்ற கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ளது. மாணவர்கள் தேர்தலில் கூட, ஜாதி மற்றும் கட்சி வாரியாக மோதல்கள் நடக்கின்றன. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை இனி வேறு எங்குமே கல்வி பயில முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும்'' என ஆவேசமாகப் பேசினார், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்.
வட மாவட்டங்களில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தலித் மக்கள் மீது வன்னியப் பெருமக்கள் ஈவு இரக்கமற்ற கொலைவெறித் தாக்குதல் நடத்தியதும்-நடத்தி வருவதும் ‘சில நிமிட' நேரம் அல்ல; பல்லாயிரக்கணக்கான மணி நேர ஆவணங்களாக, காட்சிகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உதிரத்துள் உறைந்துள்ளதை அவர் அறிவாரா? ஜாதி சங்கத்தையே அரசியல் கட்சியாக நடத்தி வரும் உங்கள் கிராமங்களிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்குப் பயில வரும் மாணவர்கள் சிலேட்டு, புத்தகங்களுடன் சாதியத்தையும் சுமந்துதானே வருகிறார்கள்!
தலித்துகள் மீதான சாதி இந்துக்களின் வன்மத்தையாவது புரிந்து கொள்ளலாம். ஆனால் இதே அவையில், “இந்த மாணவர்கள் பயின்று வெளியில் வந்தால் நீதியின் நிலை என்னவாகும் என்ற கவலை நமக்கு ஏற்படுகிறது. இந்த மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில அரசு அனுமதிக்கக் கூடாது. இவர்களால் நாட்டுக்குக் கேடாகத்தான் அமையும்'' ("தினத்தந்தி', 14.11.2008) என, விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினரும், நாடறிந்த தலித் அறிவுஜீவியுமான ரவிக்குமார் எங்ஙனம் பேசத் தளைப்பட்டார் என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. நீதியின் நிலை, நாட்டிற்கு விளையும் கேடு ஆகியன பற்றி அவருக்குத்தான் எவ்வளவு கவலை! காங்கிரஸ்காரர்கள் தோற்றார்கள் போங்கள்! மேலும் அவர் தனது உரையில், “சாதியத் தலைவர்களின் பிறந்த நாள் போன்ற விழாக்களை கல்லூரிகளில் கொண்டாடத் தடை விதிக்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். சாதித் தலைவர்களின் பிறந்த நாட்களைக் கல்லூரிகளில் கொண்டாடத் தடை விதிக்கச் சொல்லும் ரவிக்குமார், நெல்லை மண்ணுரிமை மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள்- ‘தேவர்' பிறந்த நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து- ‘அரிஜன ஆலயப் பிரவேச நாளாகவும் அனுஷ்டிக்கும்படி' அரசுக்குத் தீர்மானம் நிறைவேற்றி, முதல்வரிடம் நேரிலேயே நகல் வழங்கியதை மறந்து விட்டாரா?
அடுத்து, ஜெயக்குமார் (அ.தி.மு.க.) மகேந்திரன் (மார்க்சிஸ்ட்), சிவபுண்ணியம் (இ. கம்யூனிஸ்ட்), ராமக்கிருஷ்ணன் (ம.தி.மு.க), ஞானசேகரன் (காங்கிரஸ்) ஆகியோரும் சட்டமன்றத்தில் தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பினர். அனைத்துக் கட்சிகளின் ‘சாதி இந்து ஒற்றுமை'யைக் குறிப்பிட மறந்து விடக் கூடாதல்லவா? அது மட்டுமா? தலித்துகள் நாள்தோறும் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் போதும், பாமரர்கள் கை பிசைந்து நிற்கும் போதும்-சவத்தைப் போல உறங்கும் மாநில மனித உரிமை ஆணையம், பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில், தன்னிச்சையாக இந்நிகழ்வை வழக்காக எடுத்துக் கொண்டு, நீதிபதி ஏ.எஸ். வெங்கடாச்சலமூர்த்தி தலைமையிலான "முழு பெஞ்ச்' விசாரணையை மேற்கொண்டுள்ளது. இப்பிரச்சனையின் முழு விவரங்களையும் மாநில காவல் துறைத் தலைவர் இரண்டு வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி, ஆணையத்தின் முன் தனது அறிக்கையை அளிக்க வேண்டுமென அவருக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களை, தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோர் சென்று நலம் விசாரித்தனர். காயமடைந்த தலித் மாணவர் சித்திரைச் செல்வனை இவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதைப் பற்றி சட்டமன்ற விவாதத்தின்போது அமைச்சர் துரைமுருகன், “புகார் தரவில்லை என்பதற்காக காவல் துறை வேடிக்கை பார்த்தது குற்றம்தான். ஆனால் யாரும் புகார் தராமலேயே கடந்த ஜெயலலிதா ஆட்சியில் இரு முறை சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்து (தலித்) மாணவர்களைக் காட்டுமிராண்டித் தனமாகக் காவல் துறை தாக்கியது'' என நினைவுபடுத்தியபோது, ஜெ-சசிகலா கும்பலின் தேவர் சாதி சார்பு அ.தி.மு.க.வும், அதன் வாலாகிப் போன ம.தி.மு.க.வும் கூச்சலிட்டு "அவை' வெளிநடப்பு செய்தன.
“இக்கொடூரக் காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சியுற்றேன். இது போன்ற வன்முறைக் காட்சிகள், மக்களின் மனநிலையை மேலும் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையம், ஒரு கண்துடைப்பு நாடகம். ஏற்கனவே இந்த அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் எந்தக் கதியை அடைந்தனவோ, அதே கதியைத் தான் இதுவும் அடையப் போகிறது'' என அறிக்கை ("தினத்தந்தி' 14.11.08) விடுத்துள்ளார் ஜெயலலிதா. மக்களின் மனநிலை பாதிக்க வேண்டும்-சாதி வன்மம் தலை தூக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தனது தொலைக்காட்சியில் தொடர்ந்து இக்காட்சிகளை ஒளிபரப்பச் சொல்லி விட்டு, தனது அறிக்கையில் நீலிக் கண்ணீர் வடிக்கிறது இப்பாசிச பூதம்.
சட்டப்பூர்வ நியாயங்களுக்காக நாம் விசாரணை ஆணையங்களை ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும், நீதி விசாரணை தொடங்கப்படும் முன்பாகவே, இந்தப் பிரச்சனைக்காக நியமிக்கப்பட்ட நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையத்தை ஜெயலலிதா நிராகரித்து விட்டதை, நாம் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இந்த விசாரணை ஆணையம் அரசுத் தரப்பையோ, காவல் துறையையோ காப்பாற்ற முயலலாம். ஆனால் கலவரத்தில் ஈடுபட்டு குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் தலித் மாணவர்களுக்கு ஆதரவாக அது ஒருபோதும் அறிக்கை தரப்போவதில்லை. இருந்தும் இந்த ஆணையத்தை ஜெயலலிதா நிராகரிக்க வேண்டிய நோக்கம் என்ன?
இக்கலவரத்தில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாணவர்களை இயக்கி வரும் "தேவர்' சாதி பின்புலமும், அதற்கு ஊக்கமளித்து வரும் ஜெ–சசிகலா ஆதிக்க சாதி வெறிக் கும்பலின் அரசியலும் அம்பலத்திற்கு வந்து விடுமோ என்ற பதற்றமே. ஆனாலும், இது ஊரறிந்த ரகசியம் தானே? இந்த அரசின் விசாரணை ஆணையங்களின் மீது நம்பிக்கை இல்லாத அவர், மதுரை மாவட்டம் எழுமலையில் நடந்த மறியலின்போது இ. கோட்டைப்பட்டி தலித் மக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையத்தை நிராகரிக்க மாட்டார். காரணம் வெளிப்படையானது. இப்பிரச்சனை காவல் துறை (அரசு)க்கும் தலித் மக்களுக்கும் இடையிலானது. விசாரணை அறிக்கை யாரைக் குற்றம் சாட்டினாலும் அரசியல் லாபம், வஞ்சக இன்பம் என ஜெயலலிதாவுக்குக் கிடைப்பதோ இரட்டைக் கனிகள்.
“தாழ்த்தப்பட்ட மக்களையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும், உள்நோக்கம் கொண்ட வகுப்பவாத பிற்போக்கு சக்திகளின் பின்னணி மற்றும் சதி முயற்சி பற்றியும் தமிழக அரசு விசாரித்து அறிவிக்க வேண்டும்'' என, கடந்த காலத்தில் "கை' சின்னத்தில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகிய தா. பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) அறிக்கை விடுத்தார். மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தலித் மக்கள் மீது தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் பிள்ளை சாதியினருக்குப் பின்னிருந்து வன்முறைகளை ஏவியும், சாதிக் கலவரத்தைத் தூண்டியும் வருகிற தா. பாண்டியனின் உறவுக்கார உசிலம்பட்டி கள்ளர்களின் பிற்போக்கு நடவடிக்கைகள், சதி முயற்சிகள் பற்றியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அவர் அறிக்கை தருவாரா? இவரது கட்சியைச் சேர்ந்த சிவ புண்ணியமும் சட்ட மன்றத்தில், “திட்டமிட்டு நடந்த சம்பவமோ என்ற அச்சம் ஏற்படுகிறது'' என பயம் கொள்கிறார். வர்ணாசிரம தத்துவமும், பார்ப்பனிய அரசியலும், ஆதிக்க சாதி மனநிலையும் அன்றி, இதில் பின்னணி-சதித்திட்டம் பற்றி ஆராய என்ன "எழவு' இருக்கிறது?
‘ஓட்டுப் பொறுக்கி'களுக்குத் ‘தேவை'யிருக்கலாம். ஆனால் உலக ‘வியாக்யானம்' செய்கிற அறிவுஜீவிகளும் தங்களுக்கிடையிலான மாச்சரியங்களை விடுத்து கைகோத்து வருகின்றனர். ‘குமுதம்' ‘ஓ' பக்கங்கள் ஞாநியும், பா.ஜ.க.வின் எச். ராஜாவும் இன்னொரு அ.தி.மு.க. பிரமுகரும் உடனிருக்க, ஜெயா தொலைக்காட்சியில் "உலக அறிவாளி' ரபி பெர்னார்ட் உடன் இப்பிரச்சனைக்காக உரையாடி மகிழ்ந்தனர். காவல் துறையின் நம்பகத் தன்மை-மேலாண்மை-புனிதத்துவம் என இவர்கள் பேசப்பேச புல்லரித்துத்தான் போனது. “காவல் துறையை தன்னாட்சிப் பெற்ற அதிகார அமைப்பாக மாற்றி அமைக்க வேண்டும்'' என ஞானி, அரசுக்கு ஆலோசனை சொன்னார். பெரியாரிய முகமூடி இட்டுக் கொண்ட நாத்திகப் பார்ப்பனர் ஞாநியும், பெரியாரை ‘ராமசாமி நாயக்கர்' என்றே மேடைகளில் எப்பொழுதும் விளிக்கும் ஆத்திகப் பார்ப்பனர் எச். ராஜாவும்-ஒருவரையொருவர் கட்டித் தழுவாத குறையாக, இப்பிரச்சனை குறித்தான "ஜெயா' (16.11.08) விவாதத்தில் கூடிக் குலவினர்.
ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம் ஏறத்தாழ காவல் துறை தன்னாட்சிப் பெற்ற அதிகார அமைப்பாகவே இயங்கும். அதையே சட்டப்பூர்வமாக்கச் சொல்கிறார் ஞாநி. காலனிய ஆதிக்கத்திற்குப் பிந்øதய காலங்களில் நிகழ்த்தப்பட்ட சரிபாதியளவு அரசு வன்கொடுமைகளுக்கு கருவியாகச் செயல்பட்டதும் இதே காவல் துறைதான். எம்.ஜி.ஆர். காலத்திய அரசியலும், அப்போது காவலர் தேர்வுத் துறையில் அய்.ஜி.யாகப் பணியாற்றி பின்னாளில் ‘தேவர் பேரவை'யை நிறுவியவருமான பொன். பரமகுரு, தன் பதவிக் காலத்தில் தன் சாதியினரைப் பெருமளவில் காவல் துறைக்குள் நுழைத்தார். அதன் பிறகே சாதி இந்துக்களின் வன்மத் துறையாக அது உருமாறி-தலித்துகளையும், முஸ்லிம்களையும் வேட்டையாடி வருகிறது. இத்தகைய காவல் துறையை, தன்னாட்சிப் பெற்ற அதிகார அமைப்பாக நிலை நிறுத்தினாலும், பார்ப்பனர்களுக்கு ஒரு கேடும் இல்லை.
தலித் விரோதி என்றோ, சாதி இந்து ஆதரவாளர் என்றோ ஞாநியைக் குற்றம் சுமத்த இயலாது. ஆனால் அவரது ‘நடுநிலை' வழுவாமை கேள்விக்கிடமற்றது அல்ல. ‘ரத்தம் ஒரே நிறம்' என்ற தலைப்பில் ("குமுதம்' 26.11.2008) அவரால் நிரப்பப்பட்டுள்ள "ஓ' பக்கங்களிலிருந்து சில கேள்விகள். "பல தலைமுறைகளாக கிராமங்களில் தாய்ப் பாலோடு சேர்த்து ஊட்டப்பட்டு வரும் சாதி உணர்ச்சி' என்று அவர் எழுதுகிறார், அது கிராமங்களில் மட்டும் தானா? கும்பகோணம், மயிலாப்பூர், நங்கநல்லூர் போன்ற மாநகரங்களில் ஊட்டப்படுவதெல்லாம் ஆட்டுப்பாலா-"ஆ'வின் பாலா? ஏன் நியூஜெர்சியில் இருக்கும் அம்பிகள் பிறக்கும் போதே பெப்சி-கோக் தானா?
“ஜாதி அமைப்புகளில் இன்று ஒரு நல்லக்கண்ணு, ஒரு கே.ஆர்.நாராயணன் போன்ற மாமனிதர்களை உருவாக்கும் தலைமைகள் இல்லை'' என்கிறீர்கள். ஜாதி அமைப்புகள் எப்போதும் மாமனிதர்களை உருவாக்க முடியாது. ஆனால் சமூகங்கள் தான் மனிதர்களை உருவாக்குகின்றன. மனிதர்களாக மட்டுமே எடுத்துக் கொண்டால், நல்லக்கண்ணுவை உருவாக்கியது, அவரது சாதி அல்ல; கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் கே.ஆர். நாராயணனை உருவாக்கியது அவர் பிறந்த சமூகம். சாதி வெறியர்கள் மனிதர்களாக உருவாக்கப்படுவதற்கு அச்சாதிகளில் இடமில்லை.
தமிழகமே பதற்றத்தில் ஆழ்ந்திருந்த போதும், சென்னை எருக்கஞ்சேரி சிக்னல் அருகே அரசுப் பேருந்து ஒன்றை நவம்பர் 13 அன்று அதிகாலையில் தீ வைத்துக் கொளுத்தியதாக ‘அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம்' என்ற அமைப்பின் மாநில செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பத்து தலித் தோழர்களை காவல் துறை கைது செய்தது. “எங்கள் இன மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தீ வைத்தேன்'' என அவர்களில் ஒருவர் வாக்குமூலம் தந்திருப்பதாக ("தினத்தந்தி' 14.11.08) காவல் துறை வழக்குப் பதிந்தது. தாக்கப்பட்டவர்கள் சாதி இந்துக்கள்; தாக்கியவர்கள் தலித்துகள் என்ற அளவில் மட்டுமே இப்பிரச்சினை அணுகப்படுகிறது. ஆனால் கடந்த ஓராண்டிற்குள் (‘தேவர்' நூற்றாண்டு கொண்டாடப்பட்ட காலம்) மட்டும் இக்கலவரத்தில் படுகாயமுற்ற பாரதி கண்ணன் தலைமையிலான சாதி இந்து மாணவர்கள், தலித் மாணவர்களைத் தாக்க திட்டம் தீட்டி, முயன்று முடியாமல் கடைசி முயற்சியில்தான் இக்கலவரம் வெடித்துள்ளது.
எண்ணிக்கை அளவில் தலித் மாணவர்கள் அதிகமாயிருந்தும் கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களுடன் மோதலுக்குத் தயாராக வந்த சாதி இந்து மாணவர்கள் அப்பாவிகள் அல்ல. திருப்பித் தாக்கியிராவிட்டால் ‘முக்குலத்தோர் மாணவர் பேரவை' என சட்டக் கல்லூரிக்குள் அமைப்பு நடத்தி வந்திருக்கும் பாரதி கண்ணன், தான் வைத்திருந்த கத்தியால் பத்து தலித் மாணவர்களையாவது தாக்கியிருக்க முடியும். அப்படி தாக்குதலுக்கு உள்ளானவர்தான் தலித் மாணவர் சித்திரைச் செல்வன். கல்லூரிக்குள் கத்தியோடு தேர்வு எழுத வந்ததையும், கலவரத்தில் அது பயன்படுத்தப்பட்டிருப்பதையும் சில ஊடகங்கள் மூடி மறைக்கின்றன.
இக்கலவரத்தின் மூல காரணமாக நிலை கொண்டிருப்பதைக் குறிப்பாகச் சொல்வதானால் - பசும்பொன் முத்துராமலிங்கத்தின் "குருபூஜை' கொண்டாட்டங்களே. சாதி வெறிக் கொண்டாட்டமாக, தென் மாவட்டங்களில் தலித் மக்கள் மீது திட்டமிட்ட வன்கொடுமைகளைக் கட்டவிழ்ப்பதற்கென்றே ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் இக்கொண்டாட்டத்தைத் தடை செய்ய அல்லது குறைந்த பட்சம் அரசு எந்திரம் இதில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாதென கடந்த ஆண்டு "ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி' சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, முத்துராமலிங்கம் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக பரமக்குடி வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து முதுகுளத்தூரில் தலித் ஆசிரியர் வின்சென்ட் கொல்லப்பட்டதும் நடந்தது.
தமது மக்களுக்கு சாதி வெறியூட்டவே, அரசியல் ரீதியாக தேவர் சாதித் தலைவர்கள் இவ்விழாவைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.இதன் விளைவை "தேவர் திருமகனாரின்' வளர்ப்புப் புதல்வி செல்வி ஜெயலலிதாவே அனுபவிக்க நேர்ந்தது அவலம்தான். இத்தலைவர்களின் அரசியல்-பொருளியல் பயன்களுக்காகப் பலிகடா ஆக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு பெற வேண்டியவர்கள் அம்மக்களே. தன்னைத் தாக்க வந்தவர்கள் தி.மு.க. வினர் என "புரட்சித் தலைவி' குற்றம் சுமத்தினாலும்-அவர்களும் தேவர் சாதியினரே என்பதை மூடிமறைக்க இயலுமா? என்ன செய்வது, வளர்த்த கடா மார்பிலே பாய்கிறது.
காலனிய ஆட்சியின் முடிவுக்குப் பிறகு, தேவர் சாதியினரின் திட்டமிட்ட வன்முறைகள் - பசும்பொன் முத்துராமலிங்கம் காலத்திலிருந்து, அரை நூற்றாண்டிற்கும் மேலாக, தென் மாவட்டங்களில் காவு வாங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பட்டியலிட்டு மாளா. ஆனாலும் தென் மாவட்ட தலித் மக்கள் மாவீரன் இம்மானுவேல் சேகரன் காலத்திலிருந்து ஒருங்கிணைந்து திருப்பித் தாக்கத் தொடங்கி, இன்று வரையான தேவர் சாதி வெறியர்களின் ‘விழுப்புண்'களை செய்தி ஊடகங்கள் சேகரித்து இருட்டடிப்பு செய்யாமல் வெளியிட்டால் - தேவர் சமூகத்தின் "வீரம்' வீதிக்கு வரும். எல்லா சாதிகளிலும் தனிப்பட்ட குற்றவாளிகள், சமூக விரோதிகள் உருவாகலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதி இந்துக்களின் குற்றங்கள், சமூகமயப்படுத்தப்பட்டுள்ளன.
வரலாறு நெடுக நிகழ்ந்து வரும் தங்களின் விடுதலைக்கானப் போராட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருபோதும் அறம் வழுவி நிற்பதில்லை. ‘நிகரற்ற' கொடுமையாகப் பதிவு செய்யப்பட்டு, தமிழ்ச் சமூகத்தின் பொதுப் புத்தியில் நீங்கா இடம் பெற்று விட்ட சட்டக் கல்லூரி சம்பவத்தில் கூட, எவரும் கொலை செய்யப்படவில்லை-அதற்கான வாய்ப்பிருந்த போதும். எதிர்வினை செய்யும் போதும் "ஒடுக்கப்பட்ட மனம்' கொலை வெறியுடன் செயல்படுவதில்லை. மனிதாபிமானிகளே! இந்தக் கோட்பாடு உங்கள் "மூளை'க்கு உறைக்கிறதா? உயிர்ப் பிறப்பின் இத்தார்மீக நெறியே, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பலமும் பலவீனமும் மட்டுமல்ல; இருப்பும் வீழ்ச்சியும் கூட.
இங்கு வன்முறையை ஒரு "காட்சி இன்பமாக' தமிழ்த் திரைப்படங்கள் கட்டமைத்து வெகுநாட்களாகிவிட்டன. அந்த இன்பத்தில் ஊறித் திளைத்திருக்கும் சாதியத் தமிழ்ச் சமூகத்திற்கு இப்பதற்றம் கூட, சில நாட்களில் அதே வகையான இன்பமாகவும் மாறக்கூடும்.இலங்கை இனப்படுகொலை, பூகம்ப சரிவுகள், சுனாமி பிணங்கள், நாள்தோறும் அரங்கேறும் குண்டு வெடிப்புகள் என வண்ணமயமான, வகைவகையான காட்சிப் படிமங்களில் ஊறித் திளைத்து நுகர்வு வெறி கொண்டலையும் சமூகமல்லவா இது. "ஜாதி' எனும் உணர்வே, பேரின்பமாக ஊறித் ததும்பும் இந்த சமூகத்திற்கு, இக்காட்சிகள் வெறியூட்டுவதற்கு மாறாக, குற்ற உணர்ச்சியையும், ஜாதி (தன்) வரலாற்றின் மீதான மறுபரிசீலனையையும் எழுப்புவதுதான் நியாயமாக இருக்க முடியும்.
சாதி இந்துக்கள் என்ற வகையினத்துள் வரும் அனைத்து சாதிகளும் "மனு' விதிகளின்படி தீண்டாமை விலக்குப் பெறுவதால் கிடைக்கும் சமூக பலத்தை அனுபவித்தே வருகின்றன. இந்த சமூக பலத்தினையும்-இருப்பையும் இழக்காதவரை, எந்தவொரு தனி மனித சாதி இந்துவுக்கும் கூட, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் துயரமும் வலியும்-புரிதலுக்கும் உணர்தலுக்கும் அப்பாற்பட்டதே. ஏனெனில், அது முழுமையாகவும் இறுதியாகவும் அனுபவித்தே பெறப்படுவது. தான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சாதி இந்துவாகப் பிறக்க நேர்வதும், வாழ்வதும் ஒருவருக்கு இந்திய (இந்து) சமூகம் தரும் முதல் தர பாதுகாப்பு வளையம். அதிலும் பார்ப்பனராகப் பிறப்பதோ பெரும் பேறு! ஒடுக்கப்பட்ட மக்கள் பிறப்பிலேயே பாதுகாப்பற்றவர்களாக, சமூக பலம் இழந்தவர்களாக, தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக "வாழ' நிர்பந்திக்கப்படுகிறார்கள். சேரியில் அல்லது வாழப் பொருத்தமற்ற இடங்களில் உழல நேர்ந்தால் மட்டுமே இதை உணர முடியும்.
இறுதியாக, இக்கட்டுரையின் முடிவுரையாகவோ அல்லது தலித் இளைஞர்களுக்கான பின் குறிப்பாகவோ இது இருக்கட்டும். தலித் வரலாற்று மாதங்களைக் காகிதங்களில் பதிவு செய்து, காயம் படாமல் பதவி சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ரவிக்குமார்களின் அறிவுரைகளிலோ, எழுச்சித் தமிழர்களின் "தேசிய இன' அதிர்ச்சிகளிலோ கவனம் செலுத்த வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே. சொந்த மக்களிடமே நாணிக் கோணி, வம்பு வழக்குகளில் "சாதியவாதி'யாகி, விற்று விலை பேச சூழ்ச்சிகள் செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கலாம். பிழைப்புவாதம் வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. ஆளும் வர்க்கம் அள்ளித்தரும்; ஆதிக்க சாதியினர் அரவணைத்துக் கொள்வர் என்ற மாய்மாலங்களில் வீழ்ந்து கிடக்கும் நம் மக்களை, விடுதலைப் பாதைக்கு அழைத்து வர வேண்டியது போராளிகளின் கடமை.
மய்ய நீரோட்ட அரசியலின் "கீழான' அனைத்து உபாயங்களையும் அவர்தம் அரசியல் அணிகள் கற்றுத் தேறுவது, சாதி ஒழிப்புப் போராட்டக் களத்தில் அண்ணல் அம்பேத்கரின் கனவுகளை உருத்தெரியாமல் அழிக்க வகை செய்கிறதே என்ற சமூகப் பதற்றமும் அறச் சினமும் தான் நமக்கிருக்கிறதேயன்றி வேறல்ல. நம் மக்களின் பசி வரலாற்றுப் பசி; நம் தார்மீகக் கோபம் வரலாற்றுக் கோபம்; நம் தலைமுறையின் தாகம்; வரலாற்றுத் தாகம். சமரசமற்ற விடுதலைப் போராட்டமே தலித் மக்களின் முன் நிபந்தனை. அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமைப் பாத்திரம் அரசியல் நிபந்தனை. நமக்குத் தேவை முற்று முழுதான விடுதலை. அதற்கு ஒரு முழு தலைமுறையும் தியாகம் செய்ய வேண்டுமென்றார் அம்பேத்கர். அடிமைகள், விடுதலையைப் பிச்சையாகப் பெற இயலாது என்றும் அறிவுறுத்தினார். நம் மூதாதையரைத் தாக்கி விட்டு, எதிரிகள் விட்டுச் சென்ற ஆயுதங்களை வழியெங்கும் சேகரித்துக் கொண்டு-நமது விடுதலைக்கான களம் நோக்கிப் பயணிப்போம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
வன்முறையின் வேர் எது?
- விவரங்கள்
- இளம்பரிதி
- பிரிவு: தலித் முரசு - நவம்பர் 2008