ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் காட்டுவதாயிருந்தால், தயக்கமில்லாமல் சென்னை சங்கமத்தின் தமிழ்ச்சங்கமம் நிகழ்வைக் குறிப்பிடலாம். அதன் நோக்கம் பாராட்டத்ததக்கதாயிருந்தாலும் நடத்தப்பட்ட விதத்தில் குளறுபடிகளும் சொதப்பல்களுமே மிஞ்சியிருந்தது. இருநூறுபேர் நாள்முழுதும் இருக்கும் ஓர் அரங்கத்தில் குடிதண்ணீர் வைக்கவேண்டும் என்பதுகூட தோன்றாத பொறுப்பின்மையைக் காண முடிந்தது.

தமிழ்ச்சங்கமத்தில் கவிதை வாசிக்க முதல் அழைப்பு வந்தபோது யோசித்து சொல்வதாக தெரிவித்தேன். கடந்த ஆண்டு இவ்வாறு வரவழைக்கப்பட்ட கிராமியக் கலைஞர்களும் படைப்பாளிகளும் முறையாக கவனிக்கப்படாமல், ‘உனக்கெல்லாம் இதில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்ததே பெரிய விசயம்’ என்கிற மனப்பாங்கில் நடத்தப்பட்டதாக கேள்விப்பட்டிருந்த காரணத்தால்தான் உடனடியாய் ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் தொடர்பு கொள்ளப்பட்டபோது வாசிப்புக்கான நேரம், தங்குமிடம், பயணச்செலவு ஆகியவை குறித்து விசாரித்தேன். எல்லாவற்றுக்கும் ஏற்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. வருகிறேன் என ஒப்புக்கொண்டேன்.

ஒப்புக்கொண்ட அனைவருக்கும், பங்கேற்பை உறுதிப்படுத்தி கையொப்பமிட்டு அனுப்புமாறு ஐந்து நிபந்தனைகள் அடங்கிய ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தனர் நிகழ்வின் அமைப்பாளர்கள். அக்கடிதத்தின் மொழியும் தொனியும் படைப்பு சார்ந்த ஒரு நிகழ்வுக்குரியதாக அமைந்திருக்கவில்லை. அது படைப்பாளிகளின் சுயமரியாதையை இழிவுபடுத்தும் தன்மையிலான வாசகங்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக, ‘நிகழ்ச்சி முடிந்த பின்னரே கவிஞர்களுக்கு போக்குவரத்து செலவு வழங்கப்படும்’ என்றிருந்த வரி கடுமையாக எரிச்சலூட்டியது. நான் என் கவிதையை விற்க வரவில்லை. போக்குவரத்துப்படி என்பது என் கவிதைக்கான விலையுமில்லை. ஆகவே களை அலசிவிட்டு வந்தால்தான் கூலி தருவேன் என்கிற பண்ணையாரின் தொனியில் அவ்விசயம் அமைந்திருக்க வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.

சரி, போக்குவரத்துப்படி என்று பொத்தாம்பொதுவாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதால், நான் விமானத்தில் அல்லது ஏ.சி. ரயில்பெட்டியில் வந்து இறங்கினால் கொடுத்துவிடுவார்களா? தெளிவுபடுத்தவேயில்லை. வெளியூரிலிருந்து வரும் கவிஞர்கள், மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில்/ ஐந்து நட்சத்திர விடுதியில் தயாராகி அரங்குக்கு வரவும் என்று ஏதொரு குறிப்புமில்லை. இம்மாதிரியான காரணங்களை முன்னிட்டு நிகழ்வில் பங்கேற்க வேண்டாமென தீர்மானித்து அந்த உறுதிப்படுத்தும் கடிதத்தை நான் அவர்களுக்கு அனுப்பவில்லை. ஆனாலும் அழைப்பிதழில் என்பெயரும் இடம் பெற்றிருந்தது. உறுதிப்படுத்தாத ஒருவரது பெயரை அழைப்பிதழில் சேர்க்கக்கூடாது என்ற குறைந்தபட்ச மரபும் கடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டவும் அந்த சுற்றறிக்கைக்கு கண்டனத்தைத் தெரிவிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது என்பதற்காகவுமே பங்கேற்பதென்று முடிவெடுத்து வந்திருந்தேன். பங்கேற்க வந்திருந்த பலருக்கும் இதே மனநிலை என்பதை அங்கு வந்த பிறகுதான் அறிய முடிந்தது. பலரும் வெளிப்படையாக விமர்சிக்கவும் தொடங்கினர்.

நிகழ்ச்சி தொடங்கும்போதே 11 மணிக்கு மேலாகிவிட்டது. அமைப்பாளர் இளையபாரதி, கவிதைக்கென்று தனித்த வாசகர்கள் இல்லையென்றும், ஒருவரின் கவிதைக்கு மற்ற கவிஞர்கள் மட்டுமே வாசகர்களாய் இருப்பதாகவும் அதிரடியான தீர்ப்புகளை அறிவிக்கத் தொடங்கினார் தன்னுரையில். இப்படியான தீர்ப்புகளுக்கு என்ன ஆதாரம் என்றெல்லாம் அவர் யோசிக்கவேயில்லை. கவிதைக்கான வாசகர்கள் யார் என்ற அவரது இந்த முன்முடிவின் காரணத்தால் அவர் வாசகர்களைத் திரட்டுவதில் அக்கறை காட்டவில்லை. கவிதை வாசிக்க வந்தவர்களையே கடைசிவரை பிடித்து வைப்பதற்காக ‘நிகழ்ச்சி முடிவில்தான் போக்குவரத்து செலவு தரப்படும்’ என்ற தன் தந்திரத்தை நியாயப்படுத்தி பேசிக்கொண்டார்.

இந்தநிலையில்தான் நான் கவிதை வாசிக்க அழைக்கப்பட்டேன். சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ள கட்டுப்பாடுகளுக்கு என் கண்டனத்தை தெரிவித்து, இவ்விசயத்தில் என்னோடு உடன்படுகிறவர்களும் கையுயர்த்தி தமது கண்டனத்தை தெரிவிக்குமாறு வேண்டிக்கொண்டேன். பங்கேற்பாளர்களில் ஒருபகுதியினர் என் கருத்துக்கு ஆதரவாக கையுயர்த்தினர். ஆனால், இதன்மூலம் வெளிப்பட்ட உணர்வைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, இளையபாரதி தன் நிலையை நியாயப்படுத்தி அரங்கத்திலிருந்து வெளியே வரும் எல்லோரிடமும் தனித்தமுறையில் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். இப்போதும் கூட, அவர் பெரிய செ குவேரா என்ற நினைப்பில் அறைகூவல் கொடுத்தார் என்றும் ஒருவரும் கைதூக்கவில்லை என்றும் பேசிவருவதாக நண்பர்கள் கூறுகின்றனர். இளையபாரதியை விமர்சிக்க செ குவேரா எதற்கு?

காலை அமர்வில் 25 பேர் மட்டுமே கவிதை வாசித்திருந்த நிலையில் பிற்பகல் அமர்வில் வாசிக்க 60க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. வெளியூரிலிருந்து குழந்தைகளோடு வந்திருந்த பெண்படைப்பாளிகளும் காத்திருந்தனர். உரிய நேரத்தில் மீண்டும் தொடங்கி நிகழ்ச்சியை முடிக்கவேண்டும் என்ற பொறுப்புணர்வு அமைப்பாளர்களிடம் துளியும் வெளிப்படவில்லை. மதிய உணவுக்குப் பிறகு, கவிதை வாசிப்பைத் தொடராமல் நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகளை நடத்தத் தொடங்கிவிட்டனர். நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு தொடங்கப்பட்ட இரண்டாம் அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இல்லாதபோதும், கலாப்பிரியாவின் நூல் வெளியீட்டு விழா குறுக்கே பாய்ந்தது- கனிமொழியின் வாழ்த்துரையோடும் கவிதையோடும். இப்படியாக கவிதை வாசிப்புக்கான நேரத்தை நினைத்தபடியெல்லாம் வீணடித்துவிட்டு, இரவு 8.30 மணிக்கு மேலும் ஜவ்விழுப்பாக இழுத்துக்கொண்டிருந்தால் யார்தான் காத்திருப்பார்கள்? எரிச்சலடைந்து ஆளாளுக்கு கிளம்பி போனபிறகு, இந்த மாதிரி அரங்கம் காலியாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் போக்குவரத்துப் படியை கடைசியில் தருவதாகச் சொன்னோம் என்று மீண்டும் நியாயப்படுத்திக் கொண்டார் இளையபாரதி.

சரி, இந்த போக்குவரத்துப்படி வழங்குவதில் ஏதேனும் ஒரு ஒழுங்கோ வெளிப்படைத்தன்மையோ கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா என்றால் அதுவுமில்லை. சென்னைக்குள்ளிருந்து பங்கேற்றவர்களுக்கு ரூ.500. வந்தவாசியிலிருந்து வந்து பங்கேற்ற கவித்தம்பதிகளில் ஆணுக்கு 500, பெண்ணுக்கு ரூ.400/- (விவசாய, கட்டுமான வேலைகளில் இப்படித்தான் ஆணைவிட பெண்ணுக்கு குறைவான கூலி வழங்கப்படும்). இதன்றி, உறையைப் பிரித்து பார்க்க சங்கடப்பட்டு ரசீதில் தொகையைக் குறிப்பிடாமல் கையெழுத்திட்டவர்களே அனேகம்பேர். தற்செயலாகக்கூட நடந்திருக்கலாம் என்றாலும் அவ்வாறு கையெழுத்து பெறுவது நல்ல மரபாக இருக்கமுடியாது.

கருணாநிதியோ, கனிமொழியோ அல்லது அவர்களது மதுரைப் பேரரசில் புதிதாக எழுத வந்திருக்கிற கவிதாயினியோ எழுதுவதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் வாசித்தேயாக வேண்டும் என்று எப்படி கட்டாயப்படுத்த முடியாதோ அவ்வாறே தமிழ்ச்சங்கமத்தில் வாசிக்கிற எல்லாக் கவிதைகளையும் ரசிக்க வேண்டும் என்று எவரொருவரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஏனெனில், கவிஞர்களைப் போலவே கவிதையின் வாசகர்களும் தங்களை விற்றுக்கொள்ள வரவில்லை என்பதை இளையபாரதி புரிந்துகொள்ள வேண்டும்.

(ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரையின் முழுவடிவம்)

Pin It