தொடர்புடைய படைப்புகள்

ஜாதி மதம் கடந்து காதலிக்க மணம் முடிக்க “வேண்டும் ஜனநாயகம்” என்கிற முழக்கத்தோடு, தங்களை புரட்சிகர கம்யுனிஸ்டாக சொல்லிக் கொள்ளும் மக்கள் அதிகார கழகத்தினர் உங்களைத் தேடி வருவார்கள், ஏமாற வேண்டாம்.

காதல் திருமணம்:

காதல் என்கிற உணர்வு மனித உயிரினத்தின் சிறப்பான இயற்கை உணர்வு. தன்னுடைய வாழ்நாள் இணையர் மீது ஏற்படும் அன்பு. அதை நாம் தவறு என்று சொல்லவில்லை. நாம் காதலுக்கு எதிரானவர்களும் இல்லை.

மாடு பிடிப்பது போல பெண்ணை வரண்பார்க்கும் திருமணங்கள் முடிவுக்கு வந்து, தங்களின் வாழ்க்கை துணையை பழகி புரிந்துகொண்டு தேர்ந்தெடுக்கும் மேம்பட்ட ஜனநாயக உரிமை ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டும் என்பதே நம் நோக்கம்.

ஆனால்; அதற்கான சமூக சூழலும் புரிதலையும் வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது முன் நிபந்தனையாக உள்ளது.

இன்று பெரும்பாலும்; டீன் ஏஜில் முதல்முறையாக ஹார்மோன் உற்பத்தி ஆகும் போது ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பை தான் “காதல்” என்று சினிமா, சீரியல், சோசியல் மீடியாக்கள் கருத்து திணிக்கின்றனர். அதை சந்தையாக பயன்படுத்தி வர்த்தகம் செய்கின்றனர்.

பிறக்கும் போது நடக்க கூட தெரியாமல் பிறந்து வாழ்க்கை முழுவதும் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டும் பயிற்சி எடுத்தும் தான் வளர்கிறோம்.. டீன்ஏஜில் ஹார்மோன் உணர்வுகளை எதிர்பாலின ஈர்ப்பை எப்படி கையால்வது, எப்படி கட்டுப்படுத்துவது என்கிற பயிற்சியை இந்த தலைமுறை மாணவர்கள் அனைவருக்கும் பல்வேறு வழிகளில் ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை கற்றுக் கொடுக்க வேண்டும் ‌. ஒருசில இடங்களில் அதற்கான சில முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

காதல் என்பது என்ன:

தன் வாழ்நாள் முழுவதும் இணையாக, தனக்கு உற்ற நண்பராக, நம் இன்ப துன்பங்களில் ஒத்துப்போகும் கேரக்டரா என புரிந்து.. இருவருக்கும் அந்த புரிதல் ஒற்றுமை ஏற்பட்டால் வருவது தானே காதல். பெரும்பாலும் காதல் அப்படி வருவது இல்லை.

பருவ ஈர்ப்பில் பார்த்த உடனே, கொஞ்சநாள் பழகிய உடனே, ஏதோ சில விசயங்கள் பிடித்துப் போவதால் ஒத்துப் போவதால் வருவதா? காதல், அப்படிப்பட்ட காதல்கள் நிலைப்பதும் இல்லை நீடிப்பதும் இல்லை‌….

வாழ்ககையில் செட்டில் ஆகாமல், தனியாக குடும்பம் நடத்தும் தகுதி, இணையரை மதிக்கும் பண்பு, வாழும் சமூகம் பற்றிய விழிப்புணர்வு, மனிதர்கள் எப்படி பட்டவர்கள் என்கிற அடிப்படை புரிதலை வளர்த்துக் கொள்ளாமல் ஒரு சரியான நபரை துணையாக தேர்ந்தெடுக்க முடியுமா? முடியாது என்பதை தான் லட்சக்கணக்கான மணமுறிவு வழக்குகள் காட்டுகின்றன. காதலிக்கும் போது இருக்கும் கற்பனை உலகத்திற்கும் எதிர்பார்பும் திருமணத்திற்கு பிறகு கானும் எதார்த்த வாழ்க்கைக்கும் உள்ள முரண்பாட்டில் காதல் தொலைந்து போகிறது; தேர்ந்தெடுத்து தெரியவில்லை என்பது அப்போது தான் புரிகிறது.

திருமணம் செய்ய அரசு 18 வயது சொல்கிறது, முற்போக்காளர்கள் அதை 21 வயதாக மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால், 24 வயதில் தான் இளைஞர்கள் மூளைத் திறன் முழுமை அடைகிறது, சமூகத்தில் உள்ள போட்டி போராமை வஞ்சம் சூழ்ச்சி நடிப்பு சமூக சூழல் எதார்த்தத்தை புரிந்து கொள்கிறார்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்..

ஒவ்வொரு தாய் தகப்பனும், ஆசிரியர்களும். பள்ளி கல்லூரிகளுக்கு பயிற்சியாளர்களாக வருபவர்களும் சொல்வது என்ன?

“மாணவ பருவத்தில்” தமக்கென்று கனவு இலக்கு வைப்பதும், நல்லா படித்து அதை அடைவதும் தானே அனைவரும் சொல்வது..

ஆனால் இந்த பண்பாட்டு பெருவிழா அழைப்பிதழை ஒவ்வொரு கல்லூரியாக கொண்டு தந்து இவர்கள் சொல்வது என்ன, நாம் படிக்காமல் இலக்கை தொலைத்து பருவ ஈர்ப்பை காதல் என்று நம்பி ஒவ்வொரு மாணவனும் மாணவியும் வாழ்க்கை தொலைக்க சொல்கிறார்களா?

அவர்களின் பெற்றோர்களிடம் சென்று “காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம் “ என்று தனிப்பட்ட முறையில் சொல்வதற்கு இவர்கள் தைரியம் உண்டா?

இந்த அமைப்பில் உள்ள நிர்வாகிகளும் அணிகளும் கல்லூரியில் படிக்கும் தங்கள் சொந்த பிள்ளைகளிடம் காதலிக்க அனுமதி கொடுப்பார்களா?

கஞ்சா மதுபோதை ஒழுக்க சீர்கேடுகள் என சமூகம் போய்கொட்டிருக்கும் சூழலில், ஒவ்வொரு பெண் பிள்ளையை பெற்ற தாய்தகப்பனும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்…

பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் காதலிக்க சொல்லும் ஒரு இயக்கம் பெண் வாழ்க்கையை சீரழிவுக்கு உள்ளாக்குமே தவிர ஜனநாயகத்தை உருவாக்க முடியாது.

கல்லூரிகளை சுற்றி வருவது போல தலித் குடியிருப்புகளையே சுற்றி சுற்றி நோட்டீஸ் ஒட்டுகிறார்கள். அப்படி என்றால் இவர்களின் நோக்கம் தான் என்ன?

நோட்டீஸில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் படத்தை போட்டுள்ளனர்.

தலித் இளைஞர்களை பாதுகாக்க போகிறோம் என்று சொல்வார்கள்.. அது உண்மையா? வேஷமா ? அல்லது தலித் இளைஞர்களின் பிணத்தை காட்டி ஆள்பிடிக்கும் வேலையா? என்பதை அவர்களின் தத்துவார்த்த அறிவையும், கடந்த கால செயல்களையும் பார்த்தாலே தெரிந்துவிடும்.

ஜாதி ஒழிப்பு:-

இவர்கள் மாணவர்களை காதலிக்க சொல்லவில்லை, நல்ல சமூக புரிதலும் திருமணத்திற்கு தயாராக உள்ள இளைஞர்களை தான் சொல்கிறார்கள் என்று சொன்னால்..

தமிழ் சமூகம் காதலுக்கு தடை சொல்கிறதா?

இப்போது இருப்பது ஜாதி பிரச்சனையா?

ஜாதி என்பது குலத்தொழில் செய்பவர்கள் தங்களுக்குள் மட்டுமே திருமணம் (அகமணமுறை) செய்வதில் தான் நிலைத்திருக்கிறது… .

உற்பத்தி முறை, தொழில் உறவுகள் அனைத்தும் விவசாய சமூகத்தில் உள்ள நிலையில் இருந்து இன்று மாநகரங்கள் கார்ப்பரேட் நகரங்கள் வரை மாறி விட்டன. ஜாதியின் வேர் அடையாளம் இன்னும் தொடர்ந்தாலும், ஜாதியின் பண்பாட்டு வடிவங்கள் பல மாறிவிட்டது.

ஜாதி முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று சொல்லவில்லை.

ஆனால், பழைய விவசாய சமூகத்தில் இருந்தது போல புறமணமுறை மீது ஒவ்வாமையும் தடையும் தற்போது பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது இல்லை.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதெல்லாம் தற்போது இல்லை.

பல ஆண்டுகளாக நடக்கும் “கல்யாண மாலை“ நிகழ்ச்சியிலேயே இயல்பாக மாற்று ஜாதியில் வரன் பார்ப்பதும்..

மேட்ரிமோனியில் “ஜாதி தடை இல்லை “ என்று குறிப்பிடுவதும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் உள்ளது. காதலித்தால் மணமுடித்து வைப்பது 50 ஆண்டுகளுக்கு முன்னரே பல ஜாதிகளில் ஆரம்பித்துவிட்டது.

ஒரே ஜாதியாக இருந்தாலும் காதலித்தால் பொருளாதாரத்தில் தங்களை விட குறைவானவர்களா சமமானவர்களா என்றே பார்க்கப்படுகிறது..

நீயா? நானா? நிகழ்ச்சியிலேயே தமிழ்ச் சமூகம் பொதுவெளியில் பதிவு செய்தது, காதலித்தால் ஒத்துக் கொள்வோம் தலித்தாக மட்டும் இருக்க கூடாது என்று… தமிழ் சமூகம் எப்பவோ காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டது. இன்று 40 வயதை கடந்த பல பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள் தான்.

இந்த நிலையில் தான் இவர்கள் சொல்கிறார்கள், “காதலிக்க, மணமுடிக்க” வேண்டும் ஜனநாயகம் என்று சொல்கிறார்கள்.

உங்கள் நோக்கம் ஜாதியை ஒழிப்பதா? படுகொலை செய்யப்படும் இளைஞர்களை, இளம்பெண்களை தலித்துகளை பாதுகாப்பதா? எதுவுமே இல்லை.

ஜாதியை ஒழிப்பதற்கு

இந்தியர்கள் அனைவரும் முன்னெடுக்க வேண்டிய மிக முக்கியமான சரியான வழியை “ஜாதியை அழித்தொழிக்கும் வழி” எனும் ஆய்வின் மூலம் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் இந்திய சமூகத்திற்கு வழிகாட்டியுள்ளார்.

“சமபந்தி போஜனங்களும் கலப்புமணங்களும் நடத்துவதோ ஜாதியை ஒழிக்கும் நோக்கம் நிறைவேற உதவாது. சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை ஒழிப்பதே இதற்கு சரியான வழியாகும் “

“சமபந்தி போஜனங்களும் கலப்புமணங்களும் நடத்தப்பட வேண்டும் என்று கிளர்ச்சிகள் செய்வதும், அவற்றை நடத்துவதும் செயற்கையான முறையில் கட்டாயமாக உணவை திணிப்பது போன்றது. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சாஸ்திரத்தின் அடிமைதளையை அறுத்து விடுதலைபெற செய்யுங்கள். சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு அவர்கள் மனதில் படிந்து போயிருக்கும் நச்சு கருத்துக்களை துடைத்தெறியுங்கள். இதை செய்தால் நீங்கள் சொல்லாமலே அவர்கள் சமபந்தி போஜனம் செய்வார்கள், கலப்புமணம் புரிவார்கள்.” - பாபாசாகேப் அம்பேத்கர்.

ஜாதி என்பது பிராமண வேதங்கள் சாஸ்திரங்களை மக்களின் மூளையில் வேர் கருத்தாக உள்ளது. அந்த சாஸ்திர மனுதர்ம வேத அதிகாரத்தை சமூகத்தில் இருந்து மக்களின் மனதில் இருந்து அகற்றுவது தான் ஜாதி ஒழிப்பு, ஜாதி மறுப்பு திருமணம் நடப்பதற்கான வழி என்கிறார். அதற்கு புரோகிதர் தொழிலை வழக்கறிஞர் மருத்துவர் ஆசிரியர் தொழில் போல பாடத்திட்ட முறைகளுக்குள் கொண்டு, அனைத்து ஜாதியினரும் இத்தொழிலை செய்வதற்கு ஏதுவாக அரசு தேர்வுகள் மூலமாக மட்டுமே புரோகித தொழிலை நடப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்கிறார் தேசத்தந்தை அம்பேத்கர்.

அதே வழியில் தந்தை பெரியார் தன் வாழ்நாள் பணியாக முன்னெடுத்தார்.

அப்படியிருக்க, ஜாதியை ஒழிக்க இவர்கள் வைக்கும் முழக்கம் என்ன “காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்பது எவ்வளவு பொருத்தமற்றது மோசடியானது.

வெளியிட்ட நோட்டீஸில் அம்பேத்கர் பெரியார் படம் இல்லாமல் முதலில் வெளியிட்டு… தமிழ் சமூகத்திடம் இருந்து எதிர்ப்பு வந்த பிறகு அம்பேத்கர் பெரியார் படம் போட்டு மீண்டும் நோட்டீஸ் அடித்துள்ளனர்… .

இதிலிருந்தே புரியவில்லையா இவர்கள் நோக்கம் ஜாதி ஒழிப்பு இல்லை, ஜாதி ஒழிப்பு குறித்து இவர்களுக்கு புரிதலும் இல்லை. இது முழுக்க முழுக்க இளைஞர்களை இளம்பெண்களை ஏமாற்றும் வேலை திட்டம் என்று.

ஜாதியின் இன்றைய நிலையும் ஆணவபடுகொலைகளின் உண்மை தன்மையும் புரியாத அல்லது புரிந்துகொள்ள விரும்பாத இவர்களா ஆணவபடுகொலை செய்யப்படும் இளைஞர்களை இளம்பெண்களை பாதுகாக்க போகிறார்கள்.

தீண்டாமை படுகொலை:-

தலித் இளைஞர்கள் கொல்லப்படுவது ஏன்?

கல்யாண மாலையில் மாற்று ஜாதியில் வரண் பார்ப்பது மேட்ரிமோனியில் ஜாதி தடை இல்லை என்று வரன் தேடுவது.

நீயா? நானா? வில் தலித் இளைஞர்களை காதலிக்க மாட்டோம் என இளம்பெண்கள் சொன்னது, தலித்தாக இருந்தால் கட்டிகொடுக்க மாட்டோம் மற்ற ஜாதியாக இருந்தால் ok என ஒட்டுமொத்த தமிழ் சமூகமும்… வேறு ஜாதியை ஏற்றுக் கொண்டாலும் தலித்துகளை புறக்கணிப்பது அப்பட்டமாக வரலாறு பதிவாகியுள்ளது…

ஏன் இந்த முரண்பாடு..

ஜாதி-தீண்டாமை என்று பொதுவாக சொல்லுவோம் எது ஜாதி? எது தீண்டாமை?

வேறு வேறு குலத்தொழில் செய்யும் தலித் அல்லாத பிரிவினர்களுக்கு இடையே உள்ள பாகுபாடு தான் ஜாதி பாகுபாடு..

அது வர்ண இந்துக்களுக்குள் உள்ள பிரச்சினை. இதை தான் ஜாதிய பிரச்சினை என்கிறோம்.

ஊருக்கும் சேரிக்கும் இடையே உள்ள முரண்பாடு,

வர்ண இந்துவுக்கும் பூர்வீக அவர்ணர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு,

ஜாதி இந்துக்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான பாகுபாடு தாக்குதலை தான் தீண்டாமை பிரச்சனை என்கிறோம்.

இது சாதாரணமாக அலட்சிப்படுத்துவது, புறக்கணிப்பது, உரிமை மறுப்பது தொடங்கி கொலை வரைக்கும் போகிறது. குடி போதையில் இருப்பவன் கூட மற்ற ஜாதியாக இருந்தால் சண்டை போட்டு கலைந்து விடுகிறான். தலித் ஜாதியாக இருந்தால் கொலை செய்கிறான். இதெல்லாம் ஆணவகொலையில் சேர்க்க மாட்டார்கள்,

இருவர் காதலித்தால் மற்ற ஜாதிகளை ஏற்பவர்கள் தலித்துகளை மட்டும் ஆணவகொலை செய்கிறார்கள். (அரிதிலும் அரிதாக விதிலிலக்காக சில சம்பவங்கள் இதை தாண்டி நடைபெறுகிறது). இதை ஜாதி பிரச்சினை என்று சொல்வது குறிப்பிட்ட தலித் முரண்பாட்டை பொதுமை படுத்துவது ஆகும். இது நீர்த்துப்போக செய்யுமே தவிர தெளிவான தீர்வை புரிந்துகொள்ள முடியாது. … .

இந்த படுகொலை என்பது தனிப்பட்ட நபர்களின் பகையில் நடப்பது இல்லை,

சவர்ண ஜாதி இந்துவுக்குள் (Non-SC) மேல் வர்ணத்தில் உள்ளவர் கீழேயுள்ள வர்ணத்தை சார்ந்தவர்களை (FC - BC- MBC) திருமணம் செய்தால் அவர்களை ஊரைவிட்டு விலக்கி வைக்க வேண்டும் என்றும்.

சவர்ண ஜாதிஇந்து (non-sc) Vs அவர்ண இந்துஅல்லாத தீண்டத்தகாதவர்களை (SC) திருமணம் செய்தால் அந்த பெண்ணையும் ஆணையும் கொலை செய்ய வேண்டும் என்று பிராமணிய மனுதர்ம சட்டம் சொல்கிறது.. அதை பின்பற்றி தான் இன்றுவரை தீண்டாமை படுகொலைகள் நடக்கிறது. பெண்களை கொன்று கன்னிச் சாமியாக வழிபடும் பழக்கமும் அதிலிருந்தே உருவானது.

தலித் பிரச்சனையின் குறிப்பான தன்மையை “தீண்டாமை” பிரச்சனை என்று வகைப்படுத்தி புரிந்துகொண்டால் தான்… அதற்கான சரியான தீர்வையும் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர். 100 ஆண்டுகள் ஆன பிறகும் அம்பேத்கர் சொன்னதை புறக்கணித்து விட்டு தலித் மக்கள் பிரச்சனையை ஜாதி பிரச்சனை என்று பொதுமை படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்..

தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்படும் போது அது ‘ தீண்டாமை படுகொலை என்று பதிவு செய்ய கூட யாருக்கும் புரிதல் இல்லை என்று சொல்வதா? நேர்மை இல்லை என்று சொல்வதா?

நான் சொல்கிறேன் நோக்கம் இல்லை!

தவித் இளைஞர்களை பாதுகாக்க வேண்டும், தலித் மக்களின் உரிமைகள் மீட்க்கபட வேண்டும் என்பது இவர்கள் நோக்கம் இல்லை…

ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் நோக்கம் உள்ளது. எனவே தான் தலித்துகள் பிரச்சனையை குறிப்பிட்டு “தீண்டாமை” பிரச்சனை என்று சொல்வதோ,

தீண்டாமைக்கு குறிப்பான தீர்வை முன்வைப்பதோ யாருடைய நோக்கமும் இல்லை…

 தலித் இளைஞரின் பிணம் விழுந்த உடன் அதை வைத்து அவரவர்கள் வந்து நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்கிறார்கள். பொத்தாம் பொதுவாக ஜாதி ஒழிப்போம் ன்னு பேசிவிட்டு கடந்து விடுகிறார்கள்.

தீண்டாமைக்கு பிரச்சனைக்கு தீர்வாக பாபாசாகிப் அம்பேத்கர் காட்டிய ஒரே வழி இந்துமத வெளியேற்றம் மட்டும் தான்.

தீண்டத்தகாதவர்கள் தலித்துகள் அல்லது SC என்பதே இந்து அல்லாத அவர்ணர்கள் பட்டியல் தான். தந்தை பெரியாரும் அதையே வழிமொழிந்தார்.

ஆனால் 80 ஆண்டுகள் ஆனபிறகு கூட..

இது தீண்டாமைக்கு பிரச்சனை.

தீண்டாமை படுகொலை இதற்கு ஒரே தீர்வு இந்துமத வெளியேற்றம் மட்டும் தான் என்று சொல்லியிருப்பார்களா? இனிமேலாவது சொல்லுவதற்கு தைரியமும் நேர்மையும் இருக்கிறதா? சொல்ல மாட்டார்கள்!

ஏன் சொல்ல மாட்டார்கள் என்றால், யாருக்கும் புரியாமல் இல்லை, ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் நோக்கம் உள்ளது. தலித் இளைஞர்களை தங்களின் அரசியலுக்கு ஆள் பிடித்தால் போதும், தீண்டாமை படுகொலையில் இருந்து பாதுகாப்பது இவர்கள் யாருடைய நோக்கமும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது…

சரி இந்த பண்பாடு பெருவிழா நடத்துபவர்களின் நோக்கம் என்ன?

வேண்டும் ஜனநாயகம்:-

தலைப்பில் “வேண்டும் ஜனநாயகம்” என்று இருப்பதால், இது தான் அவர்கள் அரசியல் நோக்கம் என்று நினைத்துவிட வேண்டாம்…

இந்த வேண்டும் ஜனநாயகம் வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று கேட்டாலே புரிந்துவிடும்; இது அரசியல் அல்ல வெற்று வாய்சவடால் என்று.

பாசிச எதிர்ப்பில் இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து “ஜனநாயகத்தை பாதுகாப்போம்” என்று முழக்கம் வைத்து INDIA கூட்டணியை ஆதரிப்போம் என்று அரசியல் முழக்கம் வைத்தார்கள்…

அதற்கு போட்டியாக எடுக்கப்பட்ட தலைப்பு தான் இந்த “வேண்டும் ஜனநாயகம்” அந்த தத்துவமற்ற சாகசவாத வாய்சவடால் அரசியலுக்குள் நான் போகவில்லை…

இந்த தலைப்பை வைத்து பாசிச பிஜேபிக்கு ஓட்டுபோட கூடாது என்று சொன்னார்கள்,

ஒரு கூட்டணிக்கு ஓட்டுபோட கூடாது என்று சொன்னவர்கள் எந்த கூட்டணிக்கு ஓட்டுபோட வேண்டும் என்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது… யாருக்கும் ஓட்ட கூடாது, அதுதான் “வேண்டும் ஜனநாயகம்” என்றார்கள்…

அந்த முயற்சியில் நிதியும் வரவில்லை, புதிய ஆட்களும் வரவில்லை என்று இவர்கள் அடுத்து கையில் எடுத்த “மாபெரும் ஆயுதம்” தான்…

தலித் இளைஞர்களை உசுப்பேற்றி ஏமாற்றி ஆள் பிடிப்பது, நிதி திரட்டுவது என்கிற நரித்தந்திரம்…

அதனடிப்படையில் தான் புரட்சிகர திருமணம் என்று நடத்தினார்கள், ஏன்னா இதுவரை தமிழ் சமூகத்தில் ஜாதி மறுப்புத் திருமணமோ, காதல் திருமணமோ நடக்கவில்லை என்பது போலவும், இவர்கள் தான் தமிழ்சமூகத்திற்கு அறிமுகம் செய்வது போல் பலமாதமாக அதையே பேசினார்கள். (அரசியல் இல்லை என்றால் வேறு என்ன செய்வது) அதை சில அப்பாவி இளைஞர்கள் ஆதரித்திருப்பார்கள் போல அதன் தொடர்ச்சியாக வருவது தான்

இந்த பண்பாட்டு பெருவிழா..

வேறு எந்த மக்கள் பிரச்சனையும் இந்தியாவில் இல்லை என்றா இதை முன்னெடுக்கிறார்கள்,

அரசியல் பிரச்சனையை எடுத்தால் ஆள் புடிக்க முடியாது, காதலை சொன்னால் ஆள் பிடிக்கலாம் தலித் இளைஞர்கள் உடனே ஏமாற்றுவார்கள் என்கிற ஒற்றை நோக்கம் தான்.

இவர்கள் மக்கள் அதிகார கழகம் என்று பெயர் மாற்றியதற்கு பதிலாக “மக்கள் அதிகார மேட்ரிமோனி” என்று பெயர் வைத்திருக்கலாம்.. நல்ல கமிஷன் கிடைத்திருக்கும்.

ஜாதி ஒழிக்க காதலிக்க மணமுடிக்க என்று சொல்லி ஏன் இவர்கள் வேண்டும் ஜனநாயகம் என்று ஆள் பிடிக்கும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.

ஒரு புரட்சிகர அமைப்பு அரசியலற்று கட்டெறும்பாக தேய்ந்து இப்போது நிதி திரட்டவும் ஆள்புடிக்கவும் “காதல் ஆயுதத்தை” தூக்கிக்கொண்டு வருகிறது.

இவர்கள் சொல்கிற ஜனநாயகம் வந்தபிறகு தான் காதலிக்க முடியும், இப்போது யாரும் காதலிக்கவில்லை என்று சொல்கிறார்களா?

தீண்டாமை படுகொலை நடப்பதை தடுக்க தலித் இளைஞர்கள் போராடி உயிர் விட்டு இவர்கள் சொன்ன ஜனநாயகத்தை உருவாக்க சொல்கிறார்களா?

தீர்மானம் என்கிற பெயரில் அரசிடம் கோரிக்கை வைப்பதற்கு ஏன் தலைப்பில் “வேண்டும் ஜனநாயகம்” என்று சொல்ல வேண்டும்.. “வேண்டும் சட்டத்திருத்தம்” என்று சொல்வது தானே சரி.

வேண்டும் ஜனநாயகம் என்பது இவர்கள் அரசியல் அவலத்தின் ஒரு பகுதி.

நிதி திரட்டவும் ஆள்புடிக்கவும் நிகழ்ச்சிகள் நடத்தும் இந்த நபர்களிடம் ஏமாற வேண்டாம்!

அன்பு இளைஞர்களே, உங்களின் பணத்தையும் வாழ்க்கையையும் இழந்து விடாதீர்கள்.

ஏனென்றால் இவர்களின் நோக்கம் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவது இல்லை, இதன்மூலம் நிதி திரட்டுவதும், இதில் உணர்ச்சி வசப்பட்டு வரும் ஒருசில அரசியல் ஆர்வம் உள்ள இளைஞர்களை அவர்களின் அரசியலுக்கு ஆள் பிடிப்பது தான் இவர்களின் நோக்கம்.

போலிகளிடம் ஏமாறாமல் இருக்க அம்பேத்கரையும் மார்க்சிய-லெனினியத்தையும் கற்றுக் கொண்டு அரசியல் விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

- சித்தார்த்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.