கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தங்களின் குலதெய்வமான சாம்பான் பற்றிய கதையைக் கூறுங்கள்

ஒட்டுமொத்தப் பறையர்களின் குலதெய்வம் சாம்பான். எங்களுடைய குலத்தின் பெயர் சாம்பான் குலம். அதனால் சாமியின் பெயரும் சாம்பான். நான்கு, ஐந்து தலைமுறைக்கு முன்பு இருந்து இக்கோவில் இங்கு உள்ளது. சாம்பான் எங்கள் முதாதையர் என்று மட்டும்தான் தெரியும். வரலாறு தெரியாது. (ஓலைச்சுவடிகள்  இருந்தது பராமரிப்பில்லாமல் செல்லரித்து விட்டன. வீரப்பூரில் இருந்து திருவிழாவிற்கு வரும் பெண்கள் சாம்பான் பற்றிக் கதைப் பாடலைப் பாடுவார்கள்.) அவர் நினைவாக, கற்களை அடுக்கிக் கும்பிட்டு வந்தோம். சிலை மொழுக்கென்று உருவமில்லாமல் இருக்கும். நாங்கள்தான் கோயில் கட்டியிருக்கிறோம்.

சாம்பான் என்ற உங்கள் மூதாதையரை எந்த அடிப்படையில் லிங்கமாக மாற்றினீர்கள்?

கோவில் கட்ட முடிவெடுத்தவுடன் சிவன் கோவில் ஐயரிடம் சென்று “ஆடை அலங்காரம் பண்ணுவதற்கு வசதியில்லாமல் சிலை மொழுக்கென்று (கல்) இருக்கிறது” என்று சொன்னோம். அவர் வந்து பார்த்துவிட்டு, இது சாம்பவமூர்த்தியோட சேர்ந்த சிலை, அதனால் ஏற்கனவே இருக்கும் சிலையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு, அதன் மேலேயே சிவலிங்கம் செய்து வைத்துவிடலாம் என்று கூறினார். சரி, இவர் இப்படிச் சொல்கிறார். நாம் வேறு ஐயரைப் பார்க்கலாம் என்று மற்றொரு ஐயரிடம் விசாரித்தோம்.

அவர் “முன்பு சிலை செய்கிற அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லாத்தால் இப்படி வைத்திருக்கிறார்கள். இப்ப நாகரீகமான காலத்தில் சிற்பங்களைச் செதுக்கி அழகு அழகா வைக்கிறார்கள். அதனால் சிலையை லிங்கமாக வடித்து வைத்தால் கோவில் பிரகாசமாக இருக்கும். ஜாதி நல்லா விருத்தியாகும்” என்று சொன்னார். சாம்பானும், சாம்பசிவ மூர்த்தியும் வேறு வேறு இல்லை, இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னார். அதற்குப் பிறகு தான் சிவலிங்கம் செய்து நிலைநாட்டி இருக்கிறோம்.

கும்பாபிஷேகம் நடந்துள்ளதா? நடத்தியவர்கள் பார்ப்பனர்களா? இல்லை உங்கள் ஜாதியினரா?

கும்பாபிஷேகம் நடந்து பத்து மாதம்தான் ஆகிறது. ஐயரை அழைத்து யாகசாலை கட்டி, ஓமகுண்டம் வளர்த்து ஓர் இரவு முழுவதும் தங்கி, பரிகாரம் பண்ணிவிட்டுப் போனார்கள். 48 நாள் விளக்குப் போட்டோம். ஆறு, ஏழு ஐயர்கள் வந்திருந்தனர். அரிசி, பணம், தேங்காய் பழம், துணி அனைத்தையும் தட்டில் வைத்துக் கொடுத்தோம். எங்கள் இனத்தைச் சார்ந்த வெளியூரில் வேலை செய்பவர்கள் ஐயருக்கு பட்டு வேட்டி, துண்டு காணிக்கை கொடுத்து வழியனுப்பினார்கள். கும்பாபிஷேகம் எங்கள் இனத்தவர் நடத்தவில்லை.

எத்தனை வருடத்திற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்துவீர்கள்?

கும்பாபிஷேகம் முடிந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. மூன்று வருடங்கள் தொடர்ந்து கும்பாபிஷேகம் பண்ண வேண்டும் என்று ஐயர் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகுதான் திருவிழா நடத்தவேண்டும்னு சொல்லியிருக்காங்க.

சாம்பானைக் கும்பிடும் மக்கள் தொகை எவ்வளவு? வேறு எந்த ஜாதியைச் சார்ந்தவர்கள் கும்பிடுவார்கள்? அல்லது பறையர்களுக்கு மட்டுமான கடவுளா?

சாம்பான் கும்பிடுபவர்கள் சுமார் ஆயிரம் தலைக்கட்டு குடும்பங்கள் கணியூரில் இருக்கிறார்கள். எங்கள் பங்காளிகள் கோயம்புத்தூர், வேட்டைக்காரன்புதூர், பழநி, மானூர், தாராபுரம் கொளிஞ்சவாடி, சுண்டப்பாளையம், மதுரை, சென்னை, திருச்சி என பல ஊர்களில் வசிக்கிறார்கள். பறையர்களிலேயே மற்றவர்கள் எங்களையும் சேர்த்தே குறிப்பார்கள். ஆதியில் இருந்தே நாங்கள் தான் சாம்பான் குலம். ஆனால் எங்களைப் பள்ளு, பறையரோடு சேர்த்துக் கொள்கிறார்கள். எஸ்.சி என்று சொல்லி எல்லோரையும் ஒன்றாக்க் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களைவிட மேம்பட்டவர்கள். எங்களுடைய முறைபாடு வேறு, அவர்களுடைய முறைபாடு வேறு. ஒட்டுமொத்தப் பறையர்களின் குல தெய்வம் சாம்பான்தான்.

பறையர் ஜாதியில் எந்த உட்பிரிவு சாம்பானைக் கும்பிடுவார்கள்? மற்ற உட்பிரிவுக்கும், மற்ற ஜாதியினருக்கும் இக்கோவிலில் எந்த அளவுக்கு உரிமை உள்ளது?

கிழக்கத்து குலம், தாசர் குலம், விருமன் குலம், கருத்தான்குலம், அழகநான் குலம் என இருபதுக்கும் மேற்பட்ட குலங்கள் இருக்கின்றன. அனைவருக்குமே சாம்பான் பொது தெய்வம். மற்ற ஜாதியினர் இக்கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுச் செல்லலாம். எந்த உரிமையும் இல்லை.

நீங்கள் எந்த உட்பிரிவுடன் மண உறவுகளை வைக்கிறீர்கள்? அவர்கள் எந்த சாமியைக் கும்பிடுவார்கள்? அதனுடைய பெயர் கதை என்ன?

தாசர் குலத்தைச் சார்ந்தவர்கள் கிழக்கத்த குலம் மற்றும் கருத்தான் குலத்துடன் மண உறவு வைத்துக் கொள்வோம். அவர்களுடன் பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துக்குவோம். இவ்வாறே விருமன் குலத்துக்காரர்கள், சின்னக்காவை கும்பிடும் இராமர் குலத்துக்காரர்களோடு மணஉறவு வைத்துக் கொள்வோம்.

ஆதியில் கணியூரில் வீரமாத்தியைக் கும்பிடும் விருமன் கூட்டத்தில் திருமண வயதில் பெண்கள் நிறைய இருந்ததாகவும், ஆண்கள் குறைவாக இருந்ததாகவும் - அதனால் கீரனூர் பெரியஆண்டவர் கோவில் சப்பாணியைக் குலதெய்வமாகக் கொண்ட அழகநான் குலத்துக்காரர் களுக்குப் பெண்ணும் கொடுத்து, மண்ணும் கொடுத்து கணியூரில் இருக்க வைத்ததன் நினைவாக விருமன் குலத்து வீரமாத்தி கோவிலில் அழகநான் கூட்டத்துடைய சப்பாணி சிலையை வைத்திருப்பதாகவும் முன்னோர்கள் சொன்னார்கள். அதனால் இந்த இரண்டு குலமும் ஒருத்தர் இல்லாமல் ஒருத்தர் சாமி செய்ய முடியாது.

80, 90 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மண் எடுத்துக் கொண்டு வந்து சிலை செய்திருக்கிறார்கள். வீரமாத்தியின் பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்று எங்கள் தாத்தா கூறியிருக்கிறார். தற்போது கோவில் மாற்றம் அடைந்துவிட்டது. வீரமாத்தியோடு வீரப்பனையும் வைத்துக் கும்பிடுகிறார்கள். அதனால் நாங்கள் அங்கிருந்து மண் எடுத்துவந்து வீரப்பன், வீரமாத்தி என்று இரண்டு சிலைகளை வைத்து கும்பிடுகிறோம்.

உங்களது தினசரி வாழ்க்கையில் குலதெய்வத்திற்கும், பூசாரிக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

பூசாரிக்கு அனைத்து உரிமைகளும் இருக்கு. கோவில் நிர்வாகத்தில் இருந்து வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வு வரை அனைத்திலும் குலதெய்வத்துக்கும், பூசாரிக்கும் பங்கு இருக்கிறது. குழந்தைகளுக்கு முதல் முடி இறக்குவது, காது குத்துவது, கல்யாணம் போன்றவற்றைக் குலதெய்வக் கோவிலில் பண்ணுவோம். தற்போது பெண் பார்க்கும் நிகழ்ச்சியைக் கூட குலதெய்வக் கோவிலில் வைக்கிறார்கள்.

பூசாரி ஒரே குடும்பத்தினர்தான் பரம்பரையாக பரம்பரையாக வந்துள்ளார்களா? வேறு பிரிவிலிருந்து நியமிப்பிர்களா?

ஒரே குடும்பத்தைச் சார்ந்த பங்காளிகளுக்குள் தான் பரம்பரை, பரம்பரையாகப் பூசாரியை நியமிப்போம். இது முன்னோர் காலத்திலிருந்து நடைமுறையில் இருக்கிறது. வேறு பிரிவில் நியமிக்க மாட்டோம்.

குல தெய்வ கோவில் உள்ள ஊர் அல்லது இடம் எது? கோவிலாக இருந்தால் கட்டிட அமைப்பு எப்படி உள்ளது? பஸ் வசதி உண்டா?

பறையர் குல தெய்வமான சாம்பான் கோவில் ஊருக்குள் சுற்றுச்சுவர் கட்டி, கோபுரத்துடன் காட்சியளிக்கிறது. இக்கோவில் தரை மொசைக் போடப்பட்டுள்ளது. கோபுரத்தில் பார்வதி, துர்க்கை, முருகன், தட்சிணாமூர்த்தி லிங்கேஸ்வரன் சிலைகளும் கோவிலுக்கு உள்ளே சிவலிங்கமும் வைத்து இருக்கிறார்கள். இக்கோவிலைக் கட்டுவதற்கு அரசாங்கப் பதவியில் உள்ள எங்கள் ஆட்கள் ஒவ்வொருவரும் நன்கொடையாக பத்தாயிரம், இருபதாயிரம் என்கிற ரீதியில் கொடுத்து உதவினார்கள்.

இராமர் குல தெய்வமான சின்னக்கா நடுத்தெருவிலும், மற்றொரு குலதெய்வமான வீரமாத்தி ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஆற்றோரத்தில் இருக்கிறது. சுற்றுச்சுவர் இருக்கிறது. காண்கிரிட் போட்டிருக்கிறோம், கோபுரம் கிடையாது. சிலை வைத்திருக்கிறோம். கடத்தூரில் இருந்து பஸ் இருக்கிறது. வாய்க்கால் பஸ் ஸ்டாப். அதற்கும் அருகில் கோவில் உள்ளது. இராமர் குலத்து தெய்வமான சின்னக்கா சிறிய அளவில் தான் இருக்கிறது. அந்தக் காலத்தில் கட்டியது. மிகவும் பழுதடைந்து விட்டது. அக்கோவிலைக் கட்ட தற்போது ஒரு குடும்பத்திற்கு ஐயாயிரம் (5000) வீதம் வசூலித்துக் கொண்டிருக்கிறோம். இராமர் குலத்துக்காரர்களிடம் மட்டுமே பணம் வசூலிக்கப்படும்.

கோவிலுக்கு என்ன என்ன காணிக்கைகள் செலுத்துவார்கள்? திருவிழாவிற்கு எவ்வளவு செலவாகும்? அந்த செலவை எப்படி சமாளிப்பீர்கள்?

காணிக்கை பெரிசா ஒண்ணும் கிடையாதுங்க. பூசாரியின் தட்டிலும், உண்டியலிலும் காசு, பணம் போடுவார்கள். அவ்வளவு தான். திருவிழா நடத்துவதற்கு ஒரு இலட்ச ரூபாய்க்கு மேல் ஆகும். மொத்தச் செலவையும் கணக்கிட்டு மாங்கல்ய வரி (தலக்கட்டு வரி) என்ற பெயரில் ஒரு குடும்பத்திற்கு ஐந்நூறு, ஆயிரம் என்று போடுவோம். சென்ற வருடம் நாங்கள் விதித்த வரி ஒரு குடும்பத்திற்கு 1200 ரூபாய். இது இல்லாமல் ஊருக்குள் இருக்கும் மற்ற ஜாதியினர் கொடுப்பதையும் ஏற்றுக் கொள்வோம்.

இம்மக்கள் எவ்வளவு வரைக்கும் படிக்கிறார்கள்? வேலைவாய்ப்பு எப்படி உள்ளது? முதலில் இருந்ததற்கும் தற்போதைக்கும் என்னவிதமான வேறுபாடு?

நாங்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகள். ஒன்றிரண்டு பேர் விவசாயம் செய்கிறார்கள். ஆனால் எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கிறோம். அன்றைக்கு ஒரு சிலேட்டு பலகை கூட வாங்க முடியாத சூழ்நிலை இருந்ததால் நாங்கள் படிப்பை விட்டோம். அன்று அக்கம் பக்கம் கடன் கேட்டால் கூட கொடுப்பதற்குக் காசு இருக்காது. காசு பழக்கம், நாணயம் மிக குறைவு. (ஓட்டைக்காசு, குதிரைக்காசு, ரவுண்ட்காசு, ஒரணா, ரெண்டனா தான்  இருக்கும்) அனால் இன்று சின்னப் பையனிடம் கூட 100 ரூபாய் நோட்டு புழங்குகிறது. கடன் வாங்கியாவது படிக்க வைக்கின்றோம். அன்று கல்வியறிவு இல்லாததால் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தோம். இன்று கல்வி கற்றதால் பொருளாதாரம் மேம்பட்டிருக்கிறது.

சமூக அந்தஸ்த்து எந்த அளவில் உள்ளது?

முன்னோர் காலத்தைவிட எவ்வளவோ பரவாயில்லை. முன்னோர் காலத்தில் வீட்டுக்குள் விட மாட்டார்கள். பொதுக் கோவிலான மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே விடமாட்டார்கள். முளைப்பாரி, மாவிலக்கு, பூவோடு எடுத்துச் சென்றால் கோவிலுக்கு வெளியே நிறுத்தி அனுப்பி விடுவார்கள்.

1972 ம் ஆண்டு கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வழக்குப் போட்டு வாதாடி ஜெயித்து, கோவிலுக்குள் சென்றோம். தற்போது கோவிலுக்கு உள்ளே சென்று தீர்த்தம் ஊற்றுகிறோம். கர்ப்பக்கிரகத்தைத் தவிர்த்து கோவிலின் அனைத்துப் பகுதிகளுக்கும் போகிறோம். எந்தவிதமான பாகுபாடும் கிடையாது. நாங்கள் உள்ளே நுழைவதை ஆட்சேபித்த பெரியவர்கள் இறந்துவிட்டார்கள். தற்போது உள்ளவர்கள் கொஞ்சம் மாறியிருப்பதால் கோயிலுக்குள் செல்ல எந்த ஆட்சேபணையும் இல்லை. (இவர்கள் குறிப்பிடும் கோவில் சித்திரை மாதம் சாட்டப்படும் ஊர்ப் பொதுக் கோவிலான மாரியம்மன் கோவில்)

கோவில்களில் பெண்களின் உரிமைகள், பங்கு என்ன? பூசாரிகளாக இருக்கிறார்களா?

கோவிலில் பெண்களுக்கு ஒரு உரிமையும் இல்லை. கோவில் நிர்வாகத்தில்  அனைத்து முடிவுகளையும் ஆண்கள் தான் எடுப்போம். பெண்கள் கருத்தைக் கேட்க மாட்டோம். ஏதோ 100க்கு 2 பேர் வந்து வேடிக்கை பார்ப்பார்கள். அவ்வளவுதான். நாங்கள் தடங் காட்டுவதை பெண்கள் செய்வார்கள். முளைப்பாரி எடுக்கிறது, மாவிளக்கு எடுக்கிறது, பால்குடம் கொண்டு வருவது போன்ற சடங்குகளைச் செய்வார்கள். பெண்களைப் பூசாரிகளாக நியமிக்க மாட்டோம். பெண்தெய்வம் இருக்கும் கோவிலுக்கும் ஆண்தான் பூசாரி. பெண்கள் சாமி கும்பிட்டுவிட்டுப் போகலாம்.

கல்யாணத்திற்குப் பின் தந்தையின் குல தெய்வத்தை வணங்குவார்களா? கணவனின் குலதெய்வத்தை வணங்குவார்களா? தலக்கட்டுவரி எந்தக் குடும்பம் சார்பில் வசூலிக்கப்படும்?

கல்யாணத்திற்குப் பின் கணவரின் குலதெய்வத்தையே வணங்குவார்கள். கணவர் குலதெய்வம் சார்பில் தான் கட்டாயமாக தலக்கட்டுவரி வசூலிக்கப்படும். பிறந்தவீட்டுக் குலதெய்வத்திற்கு அக்குலத்தில் பிறந்த பெண்கள் ஒன்ற சேர்ந்து (பெண் பிறந்த மகள்கள்) பணம் சேர்த்து ஒரு சீட்டு மாதிரி போட்டு கோவில் செலவுகளுக்குப் பணம் கொடுப்பார்கள். அதோடு இல்லாமல் தந்தையின் குலதெய்வத்திற்கு ஆண்களுக்கு 1000 ரூபாய் தலக்கட்டு வரி போட்டால் திருமணமாகிப்போன பெண்ணுக்கு 500 ரூபாய் போடுவோம். அவர்களும் விருப்பப்பட்டுக் கொடுப்பார்கள்.

குலதெய்வக் கோவில்களில் பிற்படுத்தப்பட்ட அல்லது பிற தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரி வாங்கப்படுகிறதா?

சாம்பான் சாமிக்கு ஒட்டுமொத்த பறையர்களிடம் வரி வசூல் செய்வோம். பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரி வசூலிக்க மாட்டோம். நன்கொடையாகக் கொடுத்தால் வாங்கிக் கொள்வோம். சின்னக்கா மற்றும் வீரமாத்தி சாமிக்கு அந்தந்த குலத்துக்காரர்களிடம் மட்டும் வரி வசூல் செய்வோம். மற்றவர்களிடம் வாங்கமாட்டோம்.

குலதெய்வக் கோவில் விழா தொடங்குவது முதல் முடியும் வரை என்னென்ன செய்வீர்கள்?

வருடம் ஒரு தரம் ஆடம்பரமாக, விமரிசையாகக் கொண்டாடுவோம். பறையர் குலத்திற்கு அடிப்படையாக இருக்கும் இராமையாக்கவுண்டன் புதூரில் இருக்கும் அரண்மனைக்குச் சென்று சாமி கும்பிடுவோம். அவர்கள் தீர்த்தம், திருநீறு, பச்சரிசி, கிடாய் அனைத்தும் கொடுப்பார்கள். அதை வாங்கிக்கொண்டு வந்து தீர்த்தம், திருநிறு போட்டுத்தான் சாம்பான் கோவிலே சாமி சாட்டுவோம்.

திருவிழா நடப்பதற்கு ஒரு வாரம் முன்பே விளம்பரம் கொடுத்துவிடுவோம். எட்டு நாள் சாட்டு, அனைவரும் சுத்தபத்தமாக இருந்து விழாவை நடத்திக் கொடுக்கணும்னு கேட்டுக்குவோம். செவ்வாய்க்கிழமை சாட்டு. அனைவரும் வந்து கொடிநட்டு, தண்ணீர் ஊற்றி, சாமி கும்பிடுவோம். முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்துக்கொண்டு வந்து ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் விழாவை நிறைவு செய்வோம். சப்பரத்தில் சாமியை வைத்து எங்கள் குடியிருப்புப் பகுதிகளில் வலம் வந்து நிறுத்தி விடுவோம்.

சின்னக்கா, வீரமாத்தி கோவில்களில் சாட்டெல்லாம் கிடையாது. இக்கோவில்களின் பேழை (பெட்டி) சிவசம்பூகன் கோவிலில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு தரம் ஆடி பதினெட்டு அன்று பேழைகளைக் கொண்டு போய் அதிலிருக்கும் கத்தி, அருவாள் போன்றவற்றை ஆற்றில் கழுவி எடுத்துக்கிட்டு வந்து, இக்கோவிலில் வைப்போம். பறையர் குலத்தில் மட்டும் வீட்டுக்கு 100 ரூபாய் வீதம் வசூலித்து, அன்று அனைவரும் சாப்பாடு செய்து போடுவோம். கிடாய் வெட்டுவார்கள். அன்று ஒரு நாள் மட்டும் விஷேசம் நடைபெறும்.