இந்து மதத்திலிருந்துப் பிரிக்க முடியாத - இந்து மதத்தின் அடிப்படையான பேராபத்து ‘ஜாதி முறை’ ஆகும். இந்து மதத்தில் உள்ள அனைவரையும் அது தாக்கும். இந்து மதம் உள்ளவரை அனைவரையும் தாக்கும் என்பதற்கு மீண்டும் ஒரு சான்று தான் சந்தையூர் தீண்டாமைச்சுவர். தீண்டாமைச்சுவரே இடிக்கப் பட்டாலும், அங்கு தீராதசிக்கலாக இருப்பது ‘ஜாதிமுறை’. தீண்டாமைச் சுவர் என்பது அங்கு நடைமுறையில் உள்ள பல தீண்டாமைக் கொடுமைகளில் ஒரு அடையாளம் மட்டுமே.
சந்தையூருக்கு யார் நேரில் சென்றாலும், அங்கு பறையர்கள் கட்டியிருப்பது தீண்டாமைச் சுவர் தான் என்று மிகத் தெளிவாகத் தெரியும். அது இடிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில் உண்மை யாகவே ஜாதி ஒழிப்பை இலக்காகக் கொண்டிருக்கும் எவருக்கும் மாற்றுக்கருத்து எழவே முடியாது.
தோழர் பெரியார் காலத்திலேயே திருச்சியிலும், இலால்குடியிலும் கிறிஸ்தவர்களின் தேவாலயத்திற்கு உள்ளேயே, வழிபாடு நடக்கும் அரங்கத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், பறையர்களுக்கும் இடையே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பெரியாரின் போராட்டத்தால் தான் பறையர்களுக்கு எதிரான தடுப்புகள் தகர்க்கப்பட்டன.
2010 ஆம் ஆண்டு, திருச்சி மேலப்புதூர் கிறிஸ்தவர் சுடுகாட்டில், கிறிஸ்தவப் பிள்ளைமார்களால், பறையர்களுக்கு எதிராகக் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவருக்கு எதிராகக் களம் கண்டது ‘பெரியார் திராவிடர் கழகம்’. அன்று பறையர்களுக்கு ஆதரவாக, பிள்ளைமார் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு எதிராகச் சுடுகாட்டுச்சுவரை இடிக்கக் கிளம்பியவர்கள்தான், இன்று சந்தையூரில், பறையர்கள் கட்டியுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றுங்கள் என பறையர்களிடம் கேட்கிறோம்.
தொண்டு நிறுவனங்களின் நிலையும் பெரியாரின் நிலையும்
தீண்டாமை ஒழிப்பு என்ற களத்தில்கூட மேலே கூறப்பட்ட கருவறைத் தீண்டாமையையோ, கிறிஸ்தவச் சுடுகாட்டுத் தீண்டாமையையோ, பறையர்கள் நடத்தும் தீண்டாமையையோ கண்டுகொள்ளாத பல தீண்டாமை ஒழிப்பு அமைப்புகள் இயங்குகின்றன. குறிப்பாக, ‘எவிடன்ஸ்’ தொண்டு நிறுவனம்.
ஆணவக்கொலைகளுக்கும், பலவகையான தீண்டாமைக் கொடுமைகளுக்கும் எதிராக எவருக்கும் அஞ்சாமல் களத்தில் நிற்பது எவிடன்ஸ் நிறுவனம். மிருகபலம் கொண்ட அரசாங்கங்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிமன்றங்கள் என எந்த ஆதிக்கத்திற்கும் பணியாத நிறுவனம். ஆனால், சந்தையூரில் சக்கிலியர்களை ஒடுக்கும் பறையர்களுக்கு ஆதரவாகப் பணிந்து விட்டது என்பது வருத்தமளிக்கிறது.
அதன் இயக்குநர் தோழர் கதிர், சந்தையூரில் கட்டப்பட்டது, ‘வெறும் சுற்றுச்சுவர் தான்’ என உறுதிப்படுத்த முகநூலில் பல அறிக்கைகளை வெளியிட்டார். அவை தான் அவரைப் புரிந்து கொள்ள உதவின. தோழர் கதிர் மட்டுமல்ல; தீண்டாமை ஒழிப்பு எனும் களத்தில் சமரசமின்றிப் போராடிய பல தோழர்களின் முகத்தையும் நாம் அறிய முடிந்தது.
அது சுற்றுச்சுவரோ, தடுப்புச்சுவரோ, பாது காப்புச் சுவரோ, வெறும் சுவரோ எதுவாக இருந்தாலும் - அந்தச் சுவரைத் தாண்டியுள்ள பொது இடத்தில் சக்கிலியர்கள் நுழையக்கூடாது என்று சந்தையூர்ப் பறையர்கள் அறிவித்துள்ளதால் இது தீண்டாமைச் சுவர்தான் என்பது நேரடியாக உறுதி யாகிறது. நேரடிச் சான்று மட்டுமல்லாமல், தோழர் பெரியாரின் வரிகளிலிருந்தும் இந்தச் சுவர் ஒரு தீண்டாமைச்சுவரே என்பதை உறுதிப்படுத்தலாம்.
“ஆதி திராவிடர்களுக்கு என்று தனியாக கிணறு, கோவில், பள்ளிக் கூடம் முதலியவைகள் ஏற்படுத்து வது புண்ணியம் என்று சிலர் கருதுகி றார்கள். நான் அதை ஒப்புக் கொள்ள முடியாததோடு வெறுக்க வேண்டியவனாகவும் இருக்கிறேன். சென்ற வருடம் இதே ஊருக்கு வந்திருந்த சமயம் காந்தி கிணறு என்ற ஒரு கிணற்றை ஆதி திராவிடர்களுக்கு மாத்திரம் என்று வெட்டி அதைத் திறந்து வைக்கும்படி கேட்டு கொண்டபோது நான் இதே அபிப் பிராயத்தை தான் தெரிவித்தேன். இம்மாதிரி ஒரு வகுப்பாருக்குத் தனி செளகரியம் ஏற்படுத்திக் கொடுத்து நம்மோடு கலந்து வாழும்படி செய்யாததின் பயனாய் நிரந்தரமாய் இவர்கள் இழிந்தவர்கள் என்பதை நிலைநிறுத்தி அவர்களை மீளவிடாமல் செய்தவர்களாகின்றோம்.
... தாழ்த்தப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கும் சமத்துவம் அடையச்செய்வதற்கும் பாடுபடும் பெரியோர்கள் அந்த சமூகத்திற்கென்று தனியாகக் கிணறும், கோவிலும் பள்ளிக்கூடமும், வெட்டவும், கட்டவும் ஏற்படுத்தவும் நினைப்பதானது அச்சமூகத்தாரை நிரந்தரமாய் இழிவுபடுத்தி வைப்ப தற்கு ஆதாரங்களையும், அவசியங்களையும், கற்சிலை களையும், சிலாசாசனங்களையும் உண்டாக்கி வைத்த வர்களே ஆவார்கள்”
20.7.27 இல் சிறாவயல் காந்தி ஆசிரமத்தாரும், ஆதிதிராவிடர் சமூகத்தார்களும் அளித்த வரவேற்பில் தோழர் பெரியார் உரை. குடி அரசு - 31.07.1927
...”நீங்கள் எவ்வளவு பக்தியுடையவராக வேஷம் போட்டாலும் உங்களை பறைச்சாமியார் என்றுதான் சொல்லுகிறார்கள். வெட்கமில்லாமல் உங்களுக்கு என்று வேறு கோயில் கட்டிக்கொள்கிறீர்கள். இதனால் நீங்கள் கீழ்ஜாதி என்பதை ஒப்புக்கொண்டவர்களா இல்லையா? அந்த சாமி உள்ளவரை அதாவது அந்த “பறையர் கோவில்” உள்ளவரை உங்கள் பறைத் தன்மையை நிலை நிறுத்தினவர்களாகிறீர்களா இல்லையா? இதற்கு ஆகவே மேல்ஜாதிகாரர்கள் உங்களுக்குப் பணம் கொடுத்து உங்கள் பறைத் தன்மையை நிலை நிறுத்தக் கோவில் கட்டச் செய்கிறார்கள்.
உங்களில் பலர் முட்டாள்தனத்தாலும், அதிலிருந்து சிறிது பொருள் கொள்ளை கொள்ளலாம் என்றும் அந்த வேலையை ஜீவனோபாயமாகக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் நீங்கள் ஏமாறக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறேன்”.
07.03.1936 ஆம் நாள் திருச்செங்கோடு தாலூகா சமுத்திரத்தில் நடைபெற்ற திருச்செங்கோடு தாலூக்கா 5 வது ஆதிதிராவிடர் மாநாட்டில் தலைமை வகித்து, தோழர் பெரியார் உரை. - குடி அரசு - 15.03.1936
தனியாகக் கோவில் கட்டுவதோ, பள்ளிக்கூடம் கட்டுவதோ எதுவாக இருந்தாலும் அது தீண்டா மையைத் திணிக்கும் காரியங்கள் என்கிறார் பெரியார். தொண்டு நிறுவனத் தோழர்களோ, அந்தத் தனிக்கோவில்களுக்கு-அந்தத் தனிமைப்படுத்தலுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் கட்டப்பட்ட சுவர்களைப் பாதுகாக்கப் போராடுகிறார்கள்.
சந்தையூர் இராஜகாளியம்மன் கோவில் சுவர் என்பது சக்கிலியர்கள் மீது தீண்டாமையை ஏவுவதோடு மட்டும் நிற்கவில்லை. சுவரைக் கட்டிய பறையர்களும் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளவும், இழிவுபடுத்திக்கொள்ளவும் காரணமாக இருக்கிறது.
இந்தச் சுவரும், இரண்டு தனித்தனி கோவில்களும் நீடித்து இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் அனைவருமே அறிந்தோ - அறியாமலோ பறையர், சக்கிலியர் ஆகிய இரண்டு ஜாதிகளையும் தீண்டத்தகாத மக்களாகவே நீடிக்க வைக்கவே பாடுபடுகிறார்கள். இந்தத் தனிமைப்படுத்தலை, ஒதுக்கலை நியாயப்படுத்தத் தொண்டு நிறுவனங்களும், சில தீண்டாமை ஒழிப்புப் போராளிகளும் சில வாதங்களை முன்வைத்துள்ளனர். அவை பற்றிப் பார்ப்போம்.
தீண்டாமை ஒழிப்பில் பெரியாரிஸ்ட்டுகளின் அணுகுமுறை
“எஸ்.சி - பி.சி மோதலையும், எஸ்.சி பிரிவுக்கு உள்ளேயே நடக்கும், பறையர் - சக்கிலியர் மோதலையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. ஒரே வகையாக அணுகமுடியாது. ஒடுக்கப்படும் ஜாதிகளுக்குள் நடக்கும் மோதலைக் கவனமாகத்தான் கையாள வேண்டும்”
என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இரண்டு வகை மோதல்களுக்கும் வெவ்வேறான அணுகுமுறை வேண்டும் என்பது மிகவும் தவறானது. இரண்டு வகையான முரண்களுக்கும் அடிப்படையானவை ஜாதியும், இந்து மதமும் தான். நோய் ஒன்றுதான். இரு தரப்பினரும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான். நோயை உருவாக்குபவை இந்து மதமும், சாஸ்திரங்களும், வேதங்களும், அவை உருவாக்கி வைத்துள்ள பண்பாடு, பழக்க வழக்கங்களும் தான்.
இந்து மதத்தின்படி பார்ப்பனர் தவிர மற்ற அனைவருமே ஒடுக்கப்பட்டவர்கள் தான். ‘தலித்’ என்ற சொல்லோ, வடநாட்டு ஜாதி ஒழிப்பு அமைப்புகள் பயன்படுத்தும் ‘பகுஜன்’, ‘மூல்நிவாசி’ போன்ற சொற்களோ பட்டியலின மக்களை மட்டும் குறிப்பவை அல்ல. தோழர் பெரியாரின் வரிகளிலேயே இக்கருத்தைக் காணலாம்.
“இந்த நாட்டில் தீண்டப்படாதவர் என்று அழைக்கப் படாத ஜாதி ஒரே ஒரு ஜாதிதான் உண்டு. அதுதான் பார்ப்பன ஜாதி என்பதாகும். அதைத்தவிர மற்றெல்லா ஜாதி வகுப்பு மக்களும் தீண்டப்படாதவர்களாகவே தான் கருதப்படுகிறார்கள். ஐரோப்பியர்களும், முஸ்லிம்களும், இந்திய கிறிஸ்தவர்களும் பார்ப்பனரொழிந்த ஏனைய இந்துக்கள் என்பவர்களும், பார்ப்பனர் களுக்குத் தீண்டப்படாதவர் களேயாவோம். அவர்களுடைய கடவுள்களுக்கும் நாம் எல்லோரும் தீண்டப் படாதவர்களேயாவோம்”.
- 05.03.1938 இல் பெரம்பலூரில் நடைபெற்ற ஆதிதிராவிட மாகாண மாநாட்டில் தோழர் பெரியார் ஆற்றிய உரை. குடி அரசு - 13.03.1938
வரலாற்றில் இதுவரை தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் மோதல் என்றால் பெரியாரிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டோர் பக்கமே நின்றுள்ளனர். களத்தில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு எதிராக நின்றாலும், இரு தரப்புக்கும் பொது எதிரியான பார்ப்பனர்களையும், இந்து மதத்தையும், சாஸ்திரங்களையும் முதன்மைக் குற்றவாளிகளாக அறிவித்து, புரிய வைத்தே வந்துள்ளனர்.
அதே அணுகுமுறையைத் தான் சந்தையூரிலும் பின்பற்றுகிறோம். பாதிக்கப்பட்ட அருந்ததி யினருக்கு ஆதரவாக நிற்கிறோம். அதேசமயம் பறையர்களின் ஆதிக்கச் செயல்பாடுகளுக்குக் காரணம் பறையர்கள் அல்ல; பார்ப்பனர்களும், இந்து மதமும் தான் என்பதைப் புரிய வைத்தே வந்துள்ளோம்.
பிற்படுத்தப்பட்டவர்கள், பறையர்களைப் பார்த்து, “நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறீர்கள், உங்கள் உடலில் நாற்றம் அடிக்கிறது. நீங்கள் நுழைந்தால் தெரு தீட்டாகிவிடும். கோவில் தீட்டாகிவிடும். நீங்கள் வளர்க்கும் நாய் எங்கள் தெருவில் நுழைந்தால் கூட நாங்கள் தீட்டாகி விடுவோம்” என்று கூறுவதற்கும் - இதே வாக்கியங் களை பறையர் இனத்தினர், சக்கிலிய இன மக்கள் மீது பயன்படுத்துவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? எதற்காக இந்த முரண்பாட்டையும், எஸ்.சி - பி.சி முரண்பாட்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும்?
“சாதி வெறும் சுவராகவோ, வேலியாகவோ இருந்தால் அதைத் தகர்த்துவிடலாம். சாதி என்பது ஒரு கண்ணோட்டம் - ஒரு மனநிலை.”
என்கிறார் தோழர் அம்பேத்கர். அந்த ‘மனநிலை’ என்பது, பிற்படுத்தப்பட்டவர்களிடம் இருந்தால் எதிர்ப்போம். பட்டியலின மக்களிடம் இருந்தால் அதை ஆதரிப்போம் என்பது பார்ப்பன ஜாதி, இந்து மத ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும்.
பட்டியலின மக்களின் ஒற்றுமை
“சந்தையூர், திட்டக்குடி சிக்கல்களைப் போன்ற, தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்கு இடையே நடக்கும் முரண் பாடுகளைப் பேசுவதால், தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமை சீர்குலையும். நாம் அனைவரும் ஓர் இனம். இதைப் ‘பெரிது’ படுத்தவேண்டாம்”.
இந்த ஒற்றுமை எண்ணம் பாராட்டத்தக்கது. ஆனால், இந்த வாக்கியத்தின் பலன்கள் தொடர்ச்சியாக எந்த ஜாதிக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது? எந்த ஜாதியை அடக்கிவைக்கப் பயன்பட்டுள்ளது என்பதைப் பார்த்தால், இதன் நேர்மை விளங்கும்.
“இந்துக்களே ஒன்றுசேருங்கள்” என்று பார்ப்பனர்களும் - “தமிழர்களே ஜாதிகளை மறந்து ஒன்று சேருங்கள்” என்று தமிழ்த்தேசியத் தலைவர்களும் முழங்கும் வசனங்கள் பார்ப்பனர் களுக்கும், வளர்ந்த ஜாதிகளுக்கும் மட்டுமே பயன்படும்.
அதுபோலவே, பட்டியலின மக்களுக்குள் “தலித்துகளே ஒன்று சேருங்கள்” என்பதும் பட்டியலின மக்களுக்குள் ஆதிக்கம் செய்பவர் களுக்கே பயன்படும். முரண்பாடுகளை வெளிப் படையாகப் பேசி, ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழி வகுக்காமல், வெறும் ஒற்றுமை பேசுவது பெரும் பார்ப்பனியம் ஆகும்.
இதே ‘தலித் ஒற்றுமை’ என்ற வாதத்தை முன்வைத்துத்தான் சக்கிலியர்களின் உள்ஒதுக் கீட்டுக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற பலரும் முட்டுக்கட்டை போட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பட்டியலின மக்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் ஓரினமே
ஒரே இனம் என்றால், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருமே ஒரே இனம் தான். சர்வதேச அளவில் நடைபெறும் மரபியல் ஆய்வுகளும், மரபணு ஆய்வுகளும் இதை உறுதிப் படுத்தியுள்ளன. இந்தியப் பகுதியைப் பொறுத்த வரைப் பார்ப்பனர்கள் மட்டுமே அந்நியர்கள். மற்ற அனைவரும் ஒரே இனம் தான். பார்ப்பனர்களுக்கு நாம் அனைவருமே தீண்டாதார் தான்.
தாழ்த்தப்பட்ட ஜாதிகள் அனைத்தும் ஓர் இனம், அதனால் அந்த ஜாதிகளுக்குள் நடக்கும் சண்டைகளைப் ‘பெரிது’ படுத்தக்கூடாது என்றால், பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் இரு தரப்புமே ஓரே இனம்தானே? அந்த வகையான தாக்குதல்களை மட்டும் ஏன் ‘பெரிது’ படுத்தி னோம்?
தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஒரே இனம் தான் என்று காலந்தோறும் பரப்புரை நடத்திக்கொண்டிருக்கும் பெரியார் இயக்கங்கள், ஊர் - சேரி என்ற இரட்டை வாழ்விட எதிர்ப்பு, இரட்டைக்குவளை உடைப்பு, இரட்டைச் சுடுகாடுகள் உடைப்பு என பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் போராடியது ஏன்? ஜாதி ஆதிக்கச்சிந்தனையில் பார்ப்பான் வாழ்ந்தாலும், தேவர், வன்னியர், கவுண்டர் என யார் வாழ்ந்தாலும் அது, தவறு என்றுதான் அவர்களுக்கு எதிராகக் களத்தில் இறங்கின.
இந்த ஜாதி ஆதிக்கச் சிந்தனையாளர்கள் வரிசையில் இன்று பறையர்கள் வந்தாலும், நாளையே சக்கிலியர்கள் வந்தாலும் அனைவரது சிந்தனைகளையும் எதிர்ப்பது தான் ஜாதி ஒழிப்புக்கு வழிவகுக்குமே ஒழிய - “ஜாதிகளை ஒழிப்போம். (என் ஜாதியைத் தவிர)” என்றோ - இன்னொரு ஜாதியினர் ஆதிக்கப் போக்குகளுக்கு இணையாக நாங்களும் ஆதிக்கச் சிந்தனையில் வாழ்வோம் என்பதோ மீண்டும் இந்துமதப் புதைகுழியில் விழுந்து அழியவே பயன்படும்.
இந்த உட்ஜாதி ஒற்றுமை குறித்துத் தோழர் அம்பேத்கர் எழுதியுள்ளவற்றைப் பார்க்கலாம்,
“சாதிய சீர்திருத்தத்தில் தேவையான முதல் நட வடிக்கை, உட்சாதிகளை ஒழிப்பதே என்று ஒரு கண்ணோட்டம் இருந்து வருகிறது. சாதிகளுக்குள் இருப்பதைவிட, உட்சாதிகளுக்குள் நடை உடை பாவனைகளிலும், அந்தஸ்திலும் பெரும்பாலும் ஒத்த தன்மை இருக்கிறது என்ற எண்ணமே இந்தக் கண்ணோட்டத்துக்கு காரணம். ஆனால், இந்தக் கண்ணோட்டம் தவறானது என்றே நான் கருதுகிறேன்....
உட்சாதிகளை ஒழித்து விடுவது என்பதே சாதிகளை ஒழிப்பதற்கு வழி வகுத்துவிடும் என்று எப்படி உறுதியாக நம்ப முடியும்?
இதற்கு மாறாக, சாதி ஒழிப்பு உட்சாதிகளை ஒழிப்பதுடன் நின்றுவிடலாம் அல்லவா? அப்படி யானால், உட் சாதிகளை ஒழிப்பது, சாதிகளை வலுப்படுத்தவே துணை போகும். சாதிகள் முன்பு இருந்ததைவிட வலிமை மிகுந்தவையாகி, முன்பைவிட மிகுந்த விஷமத்தனமாகிவிடும். எனவே, சாதியை ஒழிப்பதற்கு உட்சாதிகளை ஒன்றாக இணைத்து விடுவது என்கிற வழி, நடைமுறைச் சாத்தியமானது மல்ல, பயனுள்ளதும் அல்ல. இது தவறான வழி என்பது எளிதில் நிரூபணமாகும்.” - தோழர் அம்பேத்கர் ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ நூல்.
ஜாதி ஒழிப்பாளர்களின் ஆபத்தான தயக்கம்
தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்டோர் மீது பிற்படுத்தப்பட்டோர் நடத்தும் வன்கொடுமைத் தாக்குதல்களின்போது, ஜாதி ஒழிப்பில் அக்கறை கொண்ட அனைத்து அமைப்புகளும் களமிறங்கு கின்றன. பொதுவுடைமை இயக்கங்கள், தலித் அமைப்புகள், திராவிடர் இயக்கங்கள் என அனைவரும் ஒடுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராகவும், ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகவும் நிற்கின்றனர்.
ஆனால், சந்தையூர், திட்டக்குடி, கரடிச்சித்தூர் போன்ற பறையர் - சக்கிலியர் முரண்பாடுகள், வன் கொடுமைகள் நடக்கும் போது, இதே அமைப்புகள் அமைதியாகி விடுகின்றன. பார்ப்பனர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களே நமக்குப் பிறவி எதிரிகள் அல்ல. அவர்களது ஜாதி ஆதிக்கப் போக்குகளைத் தான் நாம் எதிர்க்கிறோம். அப்படியானால், ஒரு இடத்தில் பள்ளர்களோ, பறையர்களோ, சக்கிலியர்களோ இந்து மத சமுதாய மதிப்பு நிலையில், தங்களுக்குக் கீழான மற்றொரு ஜாதியினரை ஒடுக்கினால், அதையும் எதிர்ப்பது தான் நேர்மை.
அதைவிட்டு விட்டு, உட்ஜாதி ஒற்றுமை, அது வெறும் இடப்பிரச்சனை, அதுவெறும் சொத்துப் பிரச்சனை, அது தனிப்பட்ட இரண்டு நபர்களின் பிரச்சனை என்று பூசி மெழுகிக் கொண்டிருந்தால் - இதே போன்ற காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்த இராமதாஸ், அன்புமணி, காடு வெட்டிகுரு, யுவராஜ் போன்றவர்களுக்கும், இந்த ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராளிகளுக்கும் என்ன வேறுபாடு என்று தான் கேட்கத்தான் தூண்டும். இளவரசன், சங்கர், கோகுல்ராஜ் படுகொலைகளை நியாயப்படுத்தும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இந்தத் தீண்டாமை ஒழிப்பாளர் களுக்கும் என்ன வேறுபாடு என்றுதான் கேட்கத் தோன்றும்.
ஊர்ப்பொதுக்கோவில் நுழைவு
சந்தையூரில் பிற்படுத்தப்பட்ட தேவர், முத்தரையர், பிள்ளைமார், நாயக்கர் ஜாதியினரும், பட்டியலினங்களான பறையர், சக்கிலியர் ஜாதி யினரும் வாழ்கின்றனர். அந்தக்கிராமத்தில் பறைய ருக்குத் தனிக் கோவில், சக்கிலியர்களுக்குத் தனிக் கோவில், பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்குத் தனிக் கோவில் அதாவது ஊர்ப்பொதுக்கோவிலாக முத்தாளம்மன் கோவில் என போட்டி போட்டுக் கொண்டு இந்து மதத்திற்குச் சேவை செய்யும் பணியை அனைத்து ஜாதிகளும் செய்கின்றன.
ஊருக்குப் பொதுவாக ஒரு கோவில் இருக்கும் போது, சக்கிலியர்களுக்கும், பறையர்களுக்கும் எதற்காகத் தனித்தனிக் கோவில்கள்? எதற்காக அந்தக் கோவில்களுக்குக் கோட்டைச்சுவர்கள்? எதற்காக அவற்றை வைத்து இத்தனை சண்டைகள்?
ஜாதி ஒழிப்பில் அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஜாதியைப் பற்றியோ ஜாதி ஒழிப்புத் தலைவர்களான பெரியார், அம்பேத்கரின் கருத்துக்களைப் பற்றியோ சிறிதள வாவது தெரிந்திருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்?
முதற்கட்டமாக, பறையர்கள் கட்டியுள்ள தீண்டாமைச்சுவர் தகர்க்கப்படவேண்டும். ஆக்கிர மிக்கப்பட்டுள்ள அரசு நிலம் அதற்குரிய மக்கள் அனைவருக்கும் பொதுவாக வேண்டும்.
இரண்டாம் கட்டமாக, தங்களுக்கென்று தனித்தனியாகக் கட்டப்பட்டுள்ள கோவில்களை இடித்துத் தள்ளிவிட்டு, சந்தையூர் முத்தாளம்மன் கோவிலில் சக்கிலியர்களும், பறையர்களும், தேவர்களும், முத்தரையர்களும், நாயக்கர்களும் இணைந்து விழா எடுக்க முயற்சிக்க வேண்டும். அனைத்து ஜாதியினரிடமும் வரிவசூல் செய்யப்பட வேண்டும். மாலை மரியாதைகள் அனைத்து ஜாதியினருக்கும் ஒன்றாக, பொதுக் கோவிலிலேயே நடைபெற வேண்டும். அந்த நிலைதான், சமத்துவத்தின் தொடக்கம்.
இந்து மத வேத, சாஸ்திரச் சுவர்கள்
உத்தபுரத் தீண்டாமைச் சுவரும் சந்தையூரைப் போல வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரியும் சுவர்தான். இவைபோல அல்லாமல், கண்ணுக்குத் தெரியாத இந்துமத வேதங்களின் சுவர், சாஸ்திரங் களின் சுவர் என்று பல சுவர்கள் உள்ளன. இன்று வரை பறையர், பள்ளர், சக்கிலியர், கள்ளர், கவுண்டர், வன்னியர், நாயக்கர், பிள்ளைமார் என அனைத்து ஜாதியினரையும் கோவில் கருவறைக்குள் நுழையவிடாமல், அந்த இந்துமதச்சுவர்கள் தடுத்தே வைத்துள்ளன.
சந்தையூர், உத்தபுரச் சுவர்களோ - இந்து ஆகம விதிகளின்படி நடக்கும் பார்ப்பனக் கோவில் கருவறைச் சுவர்களோ எவையாக இருந்தாலும், சாஸ்திரப்படியும், இந்திய அரசியல் சட்டப்படியும் நாம் அனைவரையும், அனைத்து ஜாதியினரையும், ‘பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள்’ என்று எழுத்தி லேயே குற்றம்சாட்டி ஒதுக்கி வைத்துள்ளன.
இன்று வரை எந்த ஜாதியினரின் சங்கங்களும் நம்மைத் தேவடியாள் மக்களாக அறிவித்து, ஒதுக்கி வைத்துள்ள கண்ணுக்குத் தெரியாத, கருவறைச் சுவர்களைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. அந்தச் சுவர்களை உடைக்க வேண்டும் என இதுவரை எண்ணியதும் இல்லை.
எனவே, சந்தையூரிலுள்ள அனைத்து ஜாதி களும் முதலில் முத்தாளம்மன் கோவில் சமத்து வத்தை நிலைநாட்டிவிட்டு, உடனடியாக, அருகிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமையாக உள்ள கருவறையில் நுழைந்து வழிபடும் போராட்டங் களை முன்னெடுக்க வேண்டும்.
“இந்தப் பொதுக்கோவிலுக்குள் எல்லோருக்கும் செல்ல உரிமை உண்டு” என்று விளம்பரம் செய்ய வேண்டும். யாராவது ஆட்சேபித்தால் அவர்களைச் சிறையிலிட வேண்டும். இதைப் பொது ஜனங்கள் கூட்டம் போட்டுக் கண்டிக்க ஆரம்பித்தார்களானால் உடனே கோவிலை இடித்தெறிந்து விடவேண்டும். - தோழர் பெரியார், குடி அரசு - 09.12.1928
இந்தத் திசையில் வழிகாட்டாத எந்தத் தீண்டாமை ஒழிப்பாளர்களாலும், எந்த ஜாதி ஒழிப்பாளர்களாலும், எந்தக் காலத்திலும் தீண்டாமையோ, அதற்கு அடிப்படையான ஜாதியோ ஒழியவே ஒழியாது.
“இந்துக்கள் மிக ஆழமான மதப்பற்று உள்ளவர்களாக இருப்பதால்தான் சாதியைப் பின்பற்றுகிறார்கள். சாதியைக் கடைப்பிடிப்பதில் மக்களின் தவறு எதுவுமில்லை. சாதி என்கிற கண்ணோட்டத்தை இந்துக்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்து இருக்கிற இந்து மதத்தின் மீதே தவறிருப்பதாக நான் கருதுகிறேன். என்னுடைய இந்தக் கருத்து சரியானதென்றால், நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி - சாதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் அல்ல; சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாஸ்திரங்களே உங்கள் பயங்கர எதிரி”.- தோழர் அம்பேத்கர், ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ நூல்.