(04.10.2025) காலை 6.20 க்கு அடிவாரத்தில் நிற்கிறோம்.

போன முறை சென்ற பாலமலை வழி இல்லை. இது சின்னத்தடாகம் வழியாக நெட்டுக்குத்தலாக மேல்முடிக்கான பயணம். கடந்த இரண்டு முறையும் பாலமலை வழியில் சென்றதும்... திரும்பி வருகையில் பெரும் சவால்களை சந்தித்ததும்.. அதுவும் கடந்த வருடம் அக்ட்- 5 மழையில் மாட்டிக் கொண்டு வந்து சேர்வோமா இல்லையா என்று தெரியாமல் இரவு 10 மணிக்கு கீழே இறங்கியதும் படபடப்போடு மனதில் ஒருமுறை படபடவென வந்து போனது.

அதிகாலை நேரமும் மனதுக்குள் இருந்த ஆர்வமும் ஆவென திறந்து கிடக்கும் மலையைக் காண காண கண்களில் கருணை வார்த்தேன். நெற்றியில் மூச்சு பிடிக்க கற்க செய்த மன திடம் இந்த முறை எந்தச் சிக்கலிலும் சிக்கிக் கொள்ள கூடாது என்று தீர்க்கமாக முடிவெடுத்திருந்தது.

நடக்க ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே ஆபத்து நிறைந்த கரடு முரடான பாதை ஆரம்பித்து விட்டது. எனக்கு முன்னே சென்ற இருவரில் ஒருவர் கீழே விழுந்து அடுத்தடுத்து சரிந்து செல்ல... ஒருவழியாக இழுத்து தாவி பிடித்து நிறுத்தி விட்டோம். விழுந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. மலங்க விழிக்கிறார். அதற்குள் பின்னால் வந்தவர்கள் அடுத்தடுத்து சூழ்ந்து சமாதானப்படுத்தி மீண்டும் நடை தொடர்ந்தது.

கணம் ஒன்றில் கவனம் சிதறினாலும்... கனம் கூடும் உடல் மொழி. பிறகு சரிவுக்கு பஞ்சமில்லை. சமநிலை முக்கியம்.

அனுவாவியில் இருந்து பார்த்தால் தெரியும்... சரிந்து நிற்கும் ஓவியம் போல இருக்கும் மலையா இது. சடசடவென உள்ளே புகுந்து சூழ்ந்து கொண்ட மரங்களின் அடியே எந்த மலையில் நிற்கிறோம் என்பதே மறைந்து விட்டது. வானமும் தெரியவில்லை. திரும்பினால் வந்த வழியில் இருக்கும் அடிவார பூமியும் தெரியவில்லை. குண்டும் குழியுமாக ஒற்றையடியில் முழுக்க கற்களும் பாறைத் துண்டுகளும். எந்த இடத்தில் குழி கீழ் இறங்குகிறது என்றே தெரியாது. ஓரிடத்தில்கூட சமதளம் இல்லை. ஓவிய தாள் உள் நுழைய நுழைய அடுத்தடுத்த அடுக்கில் மரம் மரமாய் வரைந்தவன் யார். சரிவில் சரம் சரமாய் இலைகளை உதிர்த்தவன் யார். சரிந்து கொண்டே நிகழும் நிலப்பரப்பின் நித்தியம் மலையெனும் மௌனம் சுமப்பது எப்படி.

ஏறினால் ஏறிக் கொண்டே இருக்க வேண்டிய வழி. வழி நெடுக பக்கவாட்டில் சரிந்து நிற்கும் நிலத்தில் மரங்கள் மட்டும் எப்படி நேராக நிற்கின்றன... போன்ற ஏதேதோ யோசனைகள். நேரத்திலேயே நடக்கத் தொடங்கி விட்டதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. அதிகாலை குளிர் என்று எதையும் உணர முடியாத உடலில் உஷ்ணம் உள்ளூர குதித்துக் கொண்டே இருந்தது.

நமது நடை நுட்பம்... ஏறுகையில் 15 நிமிடம் தொடர்ந்து ஏறுவதும்... 2 நிமிடங்கள் அப்படியே பாறையில் சாய்ந்து நின்றோ அமர்ந்தோ ஓய்வெடுப்பதும் என ஒரு சீரான நடை வேகத்துக்குக்கானது. உடல் கொண்டு செய்யும் எந்த ஓர் வேலையிலும் இன்னொருவரை ஒப்பிட்டுப் பார்த்து நானும் அவரைப் போலவே செய்கிறேன் என்ற விதண்டாவாத குளறுபடிகள் கூடவே கூடாது. நமது உடல் நமது உள்ளம் நமது திறன் நமது பலம் என நமக்கு எதுவரை முடியுமோ அது கொண்டு தான் அதை நிகழ்த்த வேண்டும். சில இளவட்டங்கள் ஓட கூட செய்தார்கள். ஆனால் ஏன் ஓடுகிறார்கள் என்று புரியவில்லை. இலக்கல்ல நோக்கம். இலக்கை நோக்கிய பயணமே நோக்கம்... புத்தன் சொன்னதுதான் எப்போதும் நமக்கு. காடுகளின் அதிர்வுகளை உள்வாங்க.. மரங்களின் மூச்சிடம் மௌன மொழியில் உரையாட... பாறைகளில் யானைகள் கண்டெடுக்க... சரிவுகளில் அழகோவியம் கொண்டிருக்க... என நமது பயணம் மெல்லிய என்னோடை.

வேகமாய் ஓடி வேகமாய் இறங்கி அங்கு பெறுவது தான் என்ன. மலை ஏறி முதலில் வருவோருக்கு பரிசு என்று ஏதும் அறிவிக்கவில்லையே. அதே போல பல கண்களில் உச்சிக்கு போவது மட்டுமே சிமிட்டிக் கொண்டிருந்தன. அக்கம் பக்கம் பார்க்கவோ நின்று நிதானிக்கவோ ம்ஹும். மூச்சு அப்படி வாங்குதுனு தெரியுது. அதுல வட்டிக்கணக்கு... வீட்டுல தம்பிகூட சண்டைனு மூச்சுக்கு மூச்சுக்கு இடையில் முசுமுசுவென பேசிக்கொண்டு வந்த ஆட்களையும் கண்டோம். ஏறிக்கொண்டிருக்கும் மலை பற்றிய தவறான புள்ளி விவரங்களை... செய்திகளை... உடன் வந்த ஆட்களிடம் சொல்லிக்கொண்டிருந்த ஆட்களையும் கண்டோம். எல்லாமே திகைப்புக்கு உண்டான ஆட்களையும் கண்டோம். எதுவுமே இல்லாமல் தனியாக எவரையும் கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டே இருந்த ஆட்களையும் கண்டோம். எத்தனை விதமான மனிதர்கள் ஒற்றை மலையில். ஆளுக்கொரு வனம் என்றான இந்நாளை மலை எப்படி எடுத்துக்கொள்ளும்.

இதில் எனக்கு ஒவ்வாமையாகப் பட்டது... பாதிக்கு பாதி ஆண்கள் சட்டையை கழற்றி விட்டு வெற்றுடம்போடு கர்ண கொடூரமாக காட்சி அளித்தது. வியர்வை தான். உப்புசம் தான். சூடு தான். ஆண் பெண் குழந்தைகள் என வந்த கூட்டத்தில் என்னவோ இவர்களுக்கு மட்டும் தான் வியர்வை... உப்புசம் போல. ஆணாதிக்க அடிப்படை இன்பில்ட்- ன் வெளிப்பாடு குரூரமானது.

மலையேற்றத்தில் ஒன்று எப்போதுமே நடக்கும். ஏற ஆரம்பிக்கையில் முன்ன பின்ன வரும் ஆட்கள்தான் மேலே செல்லும் வரைக்கும் கூடவோ முன்னோ பின்னோ வந்து கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் சிறு புன்னகை சிறு பேச்சு என்று நிகழ்வது இயல்பு. அப்படி ஒரு தனி மனிதன் என்னிடம் புகைப்படம் எடுத்துத் தர சொல்லி கேட்டு.. பிறகு இடையிடையே காணாமல் போனாலும் உச்சியில் சந்தித்துக் கொண்டு.. பிறகு கீழே இறங்குகையில் அடிவாரத்தில் மீண்டும் சந்தித்துக் கொண்டு... இப்படி தொடர்பற்ற தொடர்பு நிகழ்ந்தபடியே இருந்தது.

அதே போல புன்னகை மூச்சு வாங்க... நான் கண்ட இடத்தையெல்லாம் பார்க்க தொடங்கிய பெண்ணொருத்தி இந்த மொத்த பயணத்தில் காட்டுப் பூவாக தெரிந்தாள். அவளோடு வந்த குழு அவளை விட்டு விட்டு முன்னே நகர்ந்தபடியே இருக்க.. கூட வந்தவர்களை விட்டு வேகமாய் முன்னேறிச் சென்று என்ன செய்ய போகின்றன வெற்றுக்கால்கள் என்று தோன்றியது. மலையேற்றத்தில் சக உணர்வு அதீதமாக ஆட்கொள்வதை உணர முடியும். யாருக்கும் யாரும் துணை. கண்ணில் படும் முகமெல்லாம் மீண்டும் மீண்டும் கண்ணில் பட்டுக் கொண்டே இருப்பதில் தானாகவே ஒரு கூட்டமைப்பு அமைந்து விடும். என்னவோ அவள் என்னோடு வந்தவள் போல என்னோடே வந்து கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் பேசிக் கொள்ளாமலே நாங்கள் குழுவாக ஆகி இருந்தோம். யாருடன் யார் செல்கிறோம் என்றில்லை. அப்படி அப்படியே ஒன்றாக செல்கிறோம் என்றிருந்தது. கூட வருவதை அவள் விரும்பினாள். மானசீக பலமாக எங்களை கருதி இருக்க வேண்டும். வேர்த்து பூத்த அந்தக் கண்கள் பேசியது.

யானைப்பையன் நடமாட்டத்தின் அறிகுறிகளை ஆங்காங்கே காண முடிந்தது. மலை உச்சிலலாம் யானை வராது என்ற வழக்கமான உளறல்களையும் கேட்க முடிந்தது.

இடையே இரண்டு பள்ளங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. அதாவது மழை வந்தால் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போக முடியாது. வழியை அடைத்து விடும் குறுக்கே ஓடும் தண்ணீர். சில இடங்களில் தண்ணீர் வரும் வழி தான் நமக்கு நடைபாதை. கூட வந்த ஒருவர் போன வாரம் இரண்டு மணி நேரம் மழையில் மாட்டிக் கொண்டு மரத்தைப் பற்றியபடி அமர்ந்திருந்ததை திகிலோடு சொன்னார். மழை நிற்கும் வரை நீர் வடியும் வரை அப்படியே மரத்தடியில் அமர்ந்து விட்டோம் என்பதை சொல்கையில் நமக்கு பதைபதைப்பு கூடியது. நான் அனிச்சையாக வானம் பார்த்துக் கொண்டேன். கடந்த முறை மழையில் மாட்டிய வழி நம்மை என்ன பாடு படுத்தியது என்று அறிவோம். அதுவும் இந்த வழியில் மழையில் மாட்டினால் நகரவே முடியாது என்பது கண்கூடு.

ஏறுகையிலும் இறங்குகையிலும் பற்றிக்கொள்ள... வேகத்தைக் குறைத்து சமநிலைப்படுத்த வழியெங்கும் இருந்த மரங்களே உதவின. காவல் கால்கள் அவைகள். ஏறுகையில் சிறு தடுமாற்றம் ஆகின்... தாவிப் பிடிக்க மரக் கிளையே மௌனமாய் கை கொடுத்தது. கீழே இறங்குகையில் முன்னோக்கி சரித்து செல்லும் உடலை அப்படியே ப்ரேக்கடித்து நிறுத்த உள்ளங்கையை உள்வாங்கும் மர முதுகு... மாயக் காலில் நிற்கிறது.

வானம் தெரிய தெரிய உணரப்பட்டது... பெருமாள் கோயில் வந்து விட்டோம் என்பது. நேரம் பார்த்தால் 8.45. மூன்று மணி நேரத்துக்குள் வந்து விட்டதை மனம் வாவ் மொமெண்ட்டில் கொண்டாடியது. கடந்த இரண்டு முறையும் 4.30 மணி நேரம் எடுத்துக் கொண்ட பயணத்தை இந்த முறை இத்தனை நேர்த்தியாக நிறைவேற்றியது ஹா சரியான செய் நேர்த்தி.

கூட்டம் சேர தொடங்கியிருந்த நேரம்.

மலை உச்சிக்கே உண்டான குளுமையும்... நம்மைச் சுற்றி சுத்துப் போட்டுக் கொண்டே இருக்கும் மேகமும்... மனதுக்குள் மயக்க நிலையை தருவித்தன. நினைவோ ஒரு பறவை என அங்கே புது நினைவுகளுக்கு சிறகு பொருத்தின அரூப மன பறவைகள். வரும் வழியெங்கும் ஒரு பறவைகூட கண்ணில் விழவில்லை. சில குரங்குகளைக் கண்டோம். அழகிய சாம்பல் வண்ண சம்பந்திகள் போல நேருக்கு நேர் பார்க்கும் கலையில் அவைகளே ஆதிகள்.

ஓய்வெடுக்க வேண்டாம். இதே தம்மில் மேல்முடி ஏறி விடலாம் என்று முடிவெடுத்து நடக்கத் தொடங்கினோம். இதுவரை வந்த வழியை விட விழி பிதுங்கும் வழி இது. கடுமையான பாதை. கரடுமுரடு உயரம். அதே போல நீர் பெருக்கெடுத்து பாயும் வழியில் கொண்ட தூரம். பெரும் பெரும் பாறைகளை வீசி எறிந்த விளையாட்டு வீரன் எவனோ. குண்டு குழி பாதையில் நீர் இல்லாத தருணத்தில் நடக்க கருணை காட்டும் காட்டு வழி. எங்கிருந்து எதுவும் வரலாம் போன்ற பகல் இருளின் பாயும் மாயம். ஆளுயரத்துக்கு மேலே நிற்கும் கோரைப் புற்கள் வளைந்து நிற்க... வழியில் சரசரவென ஏற வேண்டிய சூழல். மேகம் நமக்கு கீழே மதி மயங்கி அலைந்து கொண்டிருப்பதைக் காண காண உள்ளே குதூகலம். ஆனாலும் மூச்சு வாங்கும் மிக சிக்கலான குறுகிய... மேல் நோக்கிய ஒற்றையடியில் இன்னும் நெட்டுக்குத்தல். நெஞ்சில் திக்.

வழுக்கலும் நிறைய. பார்த்து பார்த்து கால் வைக்க பழகிய அனிச்சைக்கு சிறு நடுக்கம் இயல்பாய் ஒவ்வொரு காலிலும் துருதுருத்தது.

பெரும் பாறைகளும் அதனூடாக பள்ளங்களும்... சமதளமற்ற கரடு முரடான பாதையில் இருள் வெளிர் சூழ நடந்தால்... இம்முறை பூச்சிகளின் சப்தங்களைக் காணவில்லை. இது வேறு மாதிரி ஹ்ம்ம்..... ஒரு கால் மேலே இருக்க மறு கால் சடாரென சற்று உள்வாங்கி கீழே போகும். சடக்கென்று முட்டியை மடக்கி விட்டால் முடிந்தது கதை. கெண்டங்காலில் பிரேக் கொண்டு... உடலைக் குறுக்கி பிதாமகன் சித்தன் உடல்மொழியில் உடலை இலகுவாக்கி நடக்க வேண்டியதாகி இருந்தது. கால் சரித்தால்... உடனே அப்படியே குத்த வைத்து அமர்ந்துவிட தோதுவான வாகு அது. அது நன்றாக உதவியது.

10.45 க்கு மேல் முடியை அடைந்து விட்டோம். கோரைப்புற்களினூடாக நடப்பதே ஒரு வித கறக் முறுக் தான். அங்கிருந்து பார்க்க... சுற்றிலும் இருக்கும் மலைகள்... இதுதான் இது என்ற அடையாளம் அழிந்து புது மலைகள் போல காட்சி மயக்கம் நம்மை ஆட்கொண்டது. தோற்றப்பிழையோ என்றுகூட தோன்றியது. கீழிருந்து பார்க்க... தெரியும் வடிவம் அப்படியே மாறி மேலொரு வடிவத்தில் தானொரு இயக்கம் என நம்மைக் காண்பது என்ன வகை சித்தோ.

இரண்டு ரெட்டை மண்டையனுங்களையும் கண்டடைந்து ஹாய் சொல்ல சொல்லவே பனிமூட்டம் சூழ்ந்து மேகத்துக்கு மேலே மெல்லிய புல்வெளியில்... ஆம்.. நாம் சாதித்து விட்டோம் என்ற பலத்த நம்பிக்கையை உணரச் செய்தது. 5300 அடி உயரத்தில் நிற்பது... மனதுக்குள் மிதவை. அங்கிருந்து தெரியும் சுற்றுவட்டார கீழ்த்தளங்கள் மாயத்தில் நீந்துவதாகப் பட்டது. இத்தனை உயரத்தில் நிற்கையில்... கீழிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் ஒன்றுமில்லை என்று தோன்றியது. பிறகு கீழே வந்து திரும்பி பார்க்கையில்... பெரிய விஷயங்கள் இருந்து விட்டு போகட்டும் என்ற சம நிலையையும் உணர முடிந்தது.

மக்கள் சாமி கும்பிட... நாமோ சுற்றிலும் இருக்கும் மலைகளைக் கும்பிட்டோம். அமைதியாக அமர்ந்து விட நினைத்தும் கூட்டத்தின் சத்தம் சற்று சங்கடம் தரத்தான் செய்தது. கீழே ஒருவருக்கு போட்டோ எடுத்து குடுத்தோமே அவர் என் அருகே ஒரு அரூப புன்னகையில் வந்து நின்று பிறகு நகர்ந்தார். மஞ்சள் வேட்டியில் பஞ்சுமிட்டாய் சட்டையில்.. றெக்கையற்ற மனிதன் போன்ற தோற்றம்.

நேரம் பார்த்துக் கொண்டே இருந்தேன். போன முறை செய்த நேரப் பிழையை இந்த முறை செய்து விடவே கூடாது.

சரியாக 10.45 க்கு கீழே இறங்கத் தொடங்கினோம்.

அய்யோ மேல் நோக்கி ஈசல் கூட்டமாக மக்கள் வெள்ளம். ஒரே ஒற்றையடியில் மேலும் கீழும் மனிதர்கள் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொள்வது பயங்கரமாக இருந்தது. மேலே வருகிறவர்களுக்கு முடிந்தளவு வழி விட்டு கீழே இறங்கினோம். கீழே இறங்குகையில் ஈர்ப்பு வேகமாய் இருக்க.. பிரேக் கொண்ட கெண்டை கால்களே துணை. ஆதலால் வலி அப்போதே ஆரம்பித்து விட்டது. அதே கரடு முரடு பாதை இன்னும் அதி வேகமாய் தன்னை மெருகேற்றிக் கொண்டு ஆவென ஒற்றை வாயைத் திறந்து ஒரு வயிறு கிழிந்த பாம்பென கீழே நெளிந்து கொண்டே போவதை உணர்ந்தேன்.

அந்த தனித்த பெண்... இப்போது தான் ஏறிக் கொண்டிருந்தாள். கண நேரம் சந்திப்பு. முகம் விரிய டாடா என்று ஒரே நேரத்தில் இருவருமே சொல்லிக் கொண்டோம். அதே போல ஒரே நேரத்தில் திரும்பி பார்த்துக் கொண்டோம். சட்டென மனதுள் ஒரு குளிர் சித்திரம் பொங்கியது.

மழை மட்டும் வந்து விடவே கூடாது. வானம் பார்த்தேன். வானமும் நம்மை பார்த்தது. வாக்குறுதி கொடுக்கவில்லை. ஆனாலும் உள்ளுணர்வு வராது என்று நம்பியது. பெருமாள் சாமியிடம் வருகையில்.. மணி 11.30. சாப்பிட நினைத்தால்... அதற்கும் கூட்டம் கும்மியடித்தது. சோறே வேண்டாம் என்ற முடிவுக்கு வர.. நண்பர் சாப்பிட்டால் தான் வருவேன் என்று அடம்புடிக்க... சரி போய் நிப்போம் என்று நின்றோம். அப்படி இப்படி என்று சோறு கிடைத்தது. கை கழுவாமல் சாப்பிட வேண்டியதாகி விட்டது. தட்டு கழுவினார்களா என்ற சந்தேகம் நமக்கு. சோறு சுவையாக இருந்தது. போன வருடம் நின்ற அதே இடத்தில் நின்றுதான் உண்டேன். உள்ளே இனம் புரியாத திக் திக். இந்தக் காடு மழையைக் கொண்டு வந்து விட்டால்.. பிறகு மற்றவை நம் கையில் இல்லை என்ற நினைப்பு சூடாய் சோறுடன் இறங்கியது.

பத்தே நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு வியூ பாய்ண்டுக்கு வந்தோம். கீழே தடாக சாலையில் இருந்தும்... அனுவாவியில் இருந்தும் எப்போதும் நான் பார்க்கும் அந்த சுண்ணாம்பு அடித்த பாறை. ஜம்மென்று அமர்ந்திருந்தது. நான் அருகே செல்ல செல்ல அதில் அமர்ந்திருந்த கூட்டம் ஏனோ தானாக வழி விட்டு இறங்கிக் கொண்டது. நின்று புகைப்படம் எடுத்தோம். புகைப்படம் தாண்டி மலை வெளியில் புதையல் எடுத்தேன். பிறகு அப்படியே அந்தப் பாறையில் இந்தா பூவென அமர்ந்து விட்டேன். இந்த மொத்த பயணத்தின் முத்து எடுக்கும் யுத்த புத்த இடம் இது.

அப்படியே ஒரு பக்கமிருந்து கண்களை சுழல விட்டேன். கீழே ஓரிடத்தில்.... பொன்னூத்து மலைக்கும் அடுத்து இருக்கும் சிங்க மலைக்கும் அடுத்து நிற்கும் மலை நன்றாக தெரிந்தது. இப்போது அவ்வளவாக தெரியவில்லை. எதிரே இருந்த ஆனைக்கட்டி மலை... எதிரே அனுவாவி மலை... கீழே தடாகம் வீரபாண்டி என காலையில் நாங்கள் வண்டி பார்க் பண்ணிய இடம்.... தடாகத்தில் இருந்து அடிவாரம் வரும் செம்மண் பாதை என எல்லாமே அழகழகாய் தெரிய.. பார்த்த விழி பார்த்துக் கிடக்க... மனதுக்குள் உச்சிமலை காற்று சிலுசிலுத்தது. வழியில் எங்குமே காற்றில்லை. புழுக்கம் நிறைந்திருந்த மூச்சில் இப்போது புது வாசம்.

மணி 12. இனி தாமதிக்கக் கூடாது என்று கிளம்பினோம். இறங்குகையில் இருக்கும் அதே பிரச்சனை. ஏறுகையில் நம் மீது சுமை. இறங்குகையில் நாமே சுமை. பார்த்து பார்த்து கால் வைத்து... பார்க்க பார்க்க விழி வைத்து நடக்க வேண்டி இருந்தது. வானத்தில் மேகம் மழைக்காக இல்லை. பொறுமையாக நடந்தேன். கீழ் இறங்குகையிலும் ஏன் சில கால்கள் ஓடுகின்றன. தறிகெட்டு ஏன் அத்தனை அழுத்தத்தில் திபு திபுவென ஓட வேண்டும். காட்டு மாடுகள் நினைவுக்கு வந்தன.

நாலைந்து இடத்தில் நின்று நின்று நடந்தேன். அந்த தண்ணி போகும் பாறையில் இப்போது தண்ணீர் இல்லை. அதில் அமர்ந்து ஆசுவாசம் கொள்கையில் இரண்டு வருடங்களாக இருந்த இந்த மலை ஏறிய திருப்தியின்மை இப்போது முழு நிறைவு அடைந்திருந்தது.

மனம் இலகுவாகி இருந்தது. ஏதோ சுமை இறங்கிய இமையை அகத்தில் கண்டேன். வீடு வருகையில் மணி மதியம் 2.45. மனதில் இருந்த காடு அப்போதைக்கு அடங்கி இருந்தது.

வீடு வந்து புகைப்படங்கள் பார்க்கையில்.... அந்தப் பாறையில் அமர்ந்திருந்த போது எடுத்த புகைப்படம் ஒன்றில் ஓர் ஓரத்தில் ஒரு சின்ன சிலை ஏதேட்சையாக விழுந்திருப்பது தெரிய வந்தது.

உற்றுப் பார்த்தேன். அக் கருஞ்சிலையில் காடு திறக்கும் கண்கள்.

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.