கடந்த 08.01.2022 சனிக்கிழமை அன்று காலை சுமார் 10.02 மணியளவில் சென்னை சிபிஐ (பொருளாதார குற்றப்பிரிவு) டிஎஸ்பி தலைமையில் பத்து அதிகாரிகள் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தை சோதனையிட்டனர். மதுரை முதன்மை குற்றவியல் நடுவர் (Chief Judicial Magistrate) நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 07.01.2022 தேதியிட்ட “சோதனையிடல் உத்தரவை” (Search Warrant) காண்பித்தனர். அதனடிப்படையில் 2008 முதல் 2012 வரையிலான மக்கள் கண்காணிப்பகத்தின் வெளிநாட்டு நிதி வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பார்வையிட்டனர். (06.01.2022 அன்று சிபிஐ மக்கள் கண்காணிப்பகத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது என்பது பின்னர் தெரிய வந்தது.) முதல் தகவல் அறிக்கையில் 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட நிதி, பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120 (B), 420, மற்றும் FCRA சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1982 ஆம் ஆண்டு முதல் மனித உரிமையை பாதுகாத்து வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் ‘’சமுக சிந்தனை வளர்ச்சி மையம்” (Centre for Promotion of Social Concern) என்ற அரசு சாரா அமைப்பு தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. பின்னர் 1993 ம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் ‘வியன்னா’வில் நடைபெற்ற அகில உலக மனித உரிமை மாநாட்டின் தாக்கத்தால், 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு திட்டத்தின் பெயர்தான் மக்கள் கண்காணிப்பகம் ஆகும். இந்த திட்டம் சமூக சிந்தனை வளர்ச்சி மையம் (CPSC) என்ற பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது. எனவே சமூக சிந்தனை வளர்ச்சி மையம் (CPSC) என்ற அறக்கட்டளையின் பெயரில்தான் வங்கிக் கணக்கும் உள்ளது. இந்த அறக்கட்டளையும், மக்கள் கண்காணிப்பகமும் எவ்வித லாப நோக்கம் ஏதுமின்றி மனித உரிமைத் தளத்தில் செயல்பட்டு வருகின்றன.

மக்கள் கண்காணிப்பகத்தின் நோக்கம்

  • மனித உரிமை மீறல்களைக் கண்காணித்தல், தலையீடு செய்தல், மனித உரிமைக்கான மக்கள் போராட்டங்களில் தோழமை கொள்ளுதல்.
  • கல்வி மற்றும் விழிப்புணர்வு செயற்பாட்டு வழி பரந்துபட்ட சமூகத்தில் மனித உரிமைகளைக் கலாச்சாரமாய் வளர்த்தெடுத்தல்.

நமது சமுகத்தில் நடந்துவரும் மனித உரிமை மீறல்களில் தலையீடு செய்து, உண்மைகளை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி மூலம் நீதி மன்றங்கள் மற்றும் மாநில,தேசிய,மனித உரிமை நிறுவனங்களில் தலையீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் பெற்றுத்தரும் பிரதானப் பணியை மக்கள் கண்காணிப்பகம் கடந்த 30 ஆண்டுகளாக செய்துவருகிறது. மேலும் சமுக சிந்தனை வளர்ச்சி மையதின் (CPSC) பல்வேறு திட்டங்களில் ஒன்றான, “மனித உரிமைக் கல்வி நிறுவனம்’’ மூலம் மனித உரிமைக் கல்வியை ஒரு பாடமாக 6,7,8 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு கல்வித்துறை அனுமதியுடன் தமிழ் நாட்டில் ஆரம்பித்து இந்தியாவில் இருபது மாநிலங்களில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளிகளில் 15 ஆண்டுகளாக கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அறங்காவலர்கள்

சமுக சிந்தனை வளர்ச்சி மையத்தின் (CPSC) அறங்காவலர்களாக தற்போது திரு. கிறிஸ்துதாஸ் காந்தி IAS (ஓய்வு), பேராசிரியர் தேவசகாயம், மூத்த வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, MUTA அமைப்பில் முக்கிய பங்காற்றிய பேரா.கிருஷ்ணமூர்த்தி, காந்தியவாதி திரு. பி.வி. இராஜகோபால், ஐநாவின் சிறப்பு பிரதிநிதி திரு. மிலூன் கோத்தாரி, காவல் வன்முறையால் கொலை செய்யப்பட்ட திரு. குருவையாவின் மனைவி திருமதி. அங்கம்மாள் ஆகியோர் உள்ளனர். இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் விபிசிங் அவர்களிடம் நேர்முக உதவியாளராக இருந்த திரு.வேணுகோபால் அவர்களும் அறங்காவலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக சிந்தனை வளர்ச்சி மையத்தின் தணிக்கை அறிக்கை

சமூக சிந்தனை வளர்ச்சி மையத்தின் தணிக்கை அறிக்கை (CPSC) எப்போதும் வெளிப்படையானதாக இருந்துள்ளது. அது மக்கள் கண்காணிப்பகத்தின் இணையதளத்தில் வெகுமக்களின் பார்வைக்காக கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்தே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. (காண்க:https://cpsc-fcra.blogspot.com/) வெளிநாட்டு நிதி பெற்று செயல்பட்டது வரை எவ்வித விதி மீறலும் நடைபெற்றதில்லை. இந்திய அரசமைப்பு சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டே மக்கள் கண்காணிப்பகம் செயல்பட்டு வருகிறது என்பது யாவரும் அறிந்த ஒன்று.

தில்லி உயர் நீதிமன்றத் தலையீடு

1995 ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை சமூக சிந்தனை வளர்ச்சி மையத்தின் (CPSC) முறையாக ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2012 மே மாதம் இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் CPSC அறக்கட்டளையின் வெளிநாட்டு நிதி பெறும் வங்கிக் கணக்கை முடக்கியது. 16.07.2012, 18.02.2013, 16.09.2013 ஆகிய நாட்களில் 3 முறை தொடர் தடை விதித்தது. ஒவ்வொரு முறையும் 180 நாட்கள் அந்தத் தடை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் CPSC வழக்கு தொடரப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் தில்லி உயர்நீதிமன்றம் CPSC மீது அப்போது எந்த தடையும் இல்லாததால் அயல்நாடுகளில் இருந்து நிதி பெரும் வங்கிக்கணக்கை பயன்படுத்த அதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. பின்னர் இதே வழக்கில் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒன்றிய அரசின் வழக்குரைஞர் CPSC இன் மீது மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் FCRA சட்டத்தின் கீழ் எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து 2016 வரை CPSC செயற்பட்டது.

வங்கிக் கணக்கு முடக்கம்

FCRA திருத்தச் சட்டம் 2010 இன் கீழ் அயல்நாட்டில் இருந்து நிதி பெரும் அனைத்து அரசு சாரா நிறுவனங்களும் ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். இதன் பொருட்டு CPSC தனது FCRA பதிவினை புதுப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விண்ணப்பித்தது. இவ்விண்ணப்பத்தின் மீது எந்த ஒரு தகவலும் இல்லாத காரணத்தால், 22.10.2016 அன்று இது தொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் CPSC ஒரு மனுவினை தாக்கல் செய்தது. இவ்வழக்கில் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக அளித்த பதிலில் 31.10.2016-க்குள் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது.

ஆனால் 29.10.2016 அன்று CPSC வெளிநாட்டில் இருந்து நிதி பெறும் வங்கிக் கணக்கை புதுப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியை மறுத்தது. கள ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இரண்டே வரியில் காரணம் கூறப்பட்டது. இதனை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டில்லி உயர்நீதிமன்றத்தில் CPSC மனுத் தாக்கல் செய்தது.

இவ்வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் 2016 மே 9 அன்று ஒன்றிய அரசு மீண்டும் வங்கிக் கணக்கை முடக்கம் செய்து ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஏற்கெனவே வங்கிக் கணக்கினை முடக்கிய நிலையில், இந்தத் தடை பொருந்தாது என்று, CPSC சார்பில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒன்றிய அரசு தனது முடக்க உத்தரவை திரும்பப் பெற்றது.

மேலும் FCRA பதிவினை புதுப்பித்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அவ்வழக்கு 24.01.2022 அன்று விசாரணைக்கு வருகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு CPSC-க்கு சாதகமாக முடிந்த வழக்கு, அரசியல் காரணங்களுக்காக தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கூட்டு சதி, ஏமாற்றுதல், வெளிநாட்டு நிதியில் விதி மீறல் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், அவரோடு இன்னும் பல தெரியாத உறுப்பினர்கள் என்றெல்லாம் குற்றம் சுமத்தப்பட்டோர் பட்டியல் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுருள்ளது. மனித உரிமைப் பணிகளில் அரசைப் பொறுப்பாளியாக்கி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு மனித உரிமை அமைப்பின் மீது, திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையே அன்றி, வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்.

2010 இல் வெளிநாட்டு நிதி பெறுதல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்பே Committee of Concerned Citizens என்ற குழுவை ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலர், தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் போன்ற ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவை உருவாக்கி அவர்களை நேரிடையாக CPSC இன் தணிக்கை அறிக்கையை பார்வையிடச் செய்து, மக்கள் கண்காணிப்பகத்தின் வெளிப்படைத்தன்மையை வெளியுலகிற்கு எடுத்துரைத்தது வேறு எந்த ஒரு அமைப்பும் முன்னெடுக்காத ஒரு வேலை.

கூட்டுப்பணி

மக்கள் கண்காணிப்பகம் பல்வேறு அமைப்புகள்-தனி நபர்களோடு இணைந்த கூட்டுப் பணியில் உறுதியான நம்பிக்கை கொண்டு உள்ளூர் தொடங்கி மாநில, தேசிய, பன்னாட்டு அளவில் செயல்பட்டு வருகிறது. CPSC வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு 2500க்கும் மேற்பட்ட நாட்களை கடந்துள்ளது.

2016 ஆண்டு வழக்கிற்கான ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட பதிலுரையில், “மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் வெளிநாட்டில் இருந்து நிதி பெற்று ஐய்க்கிய நாட்டவையின் பல சிறப்பு பிரதிநிதிகளிடம் அறிக்கை அளிக்கிறார். மேலும் வெவ்வேறு நாட்டு தூதரகங்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று எழுத்துப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலுரைத்த நீதியரசர் “கணக்குகளை மட்டுமே பாருங்கள், அவர்கள் சமர்ப்பிக்கின்ற அறிக்கைகளைப் பார்க்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியதை இங்கு நினைவூட்டுகிறோம்.

மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு முன்னெடுக்கும் மனித உரிமை பணிகளை முடக்கவேண்டும் என்று, குறிப்பாக பன்னாட்டு அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து செயல்படுவதை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்திலே அதற்க்கு எதிராக ஒன்றிய அரசு திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

28.04.2015 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் CPSC மீது எந்த வித தடையும் இல்லை என்றார். இதனைத் தொடர்ந்து, CPSC தனது வங்கிக் கணக்கை தொடர எந்த ஒரு தடையும் இல்லை அரசு சொல்லி என்று நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் 06.01.2022 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் CPSC 2010 முதல் 2014 வரை பெற்ற வெளிநாட்டு நிதியில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இருப்பின் ஏன் 2015 ஆம் ஆண்டு CPSC அமைப்பின் மீது தடையை நீட்டிக்காமல் வங்கிக் கணக்கினை பயன்படுத்த நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை? 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் முடிவு செய்யப்பட்ட ஒரு வழக்கினை மீண்டும் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்திருப்பது ஒன்றிய அரசின் காழ்ப்புணர்ச்சியையும், திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையையும் காட்டுகிறது.

வெளிப்படையாக வங்கிக் கணக்குகளை வைத்திருந்து, ஒவ்வொரு ஆண்டும் உள்துறை அமைச்சகத்திற்கு முறையாக வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்து வந்த ஒரு மதிப்பு மிக்க மனித உரிமை அமைப்பு மீது, கூட்டுச் சதி, ஏமாற்றுதல், போன்ற குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவதை சனநாயகத்தில் நம்பிக்கைக் கொண்ட எந்த ஒரு நபரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு சனநாயக ரீதியில் பல்வேறு தலையீடுகளை மேற்கொள்ளும் மனித உரிமைப் போராளிகள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவது எந்த வகையில் நியாயமாகும்.

அரசு இயந்திரங்கள் நடத்தும் உரிமை மீறல்களை உலக்குக் உரக்கச் சொல்லும் உரிமை அமைப்புகள் மீது எடுக்கப்படும் பழிவாங்கும் நடவடிக்கையே அன்றி, வேறு என்னவென்று இதனைச் சொல்ல முடியும். இது போன்ற மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மனித உரிமைப் போராளிகள் அஞ்ச மாட்டார்கள் என்று வரலாறு நிரூபித்திருக்கிறது. பழிவாங்கும் நடவடிக்கைகளாக இது போன்று புனையப்படும் பொய் வழக்குகளும், குற்றச் சாட்டுகளும் நீதி மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், ஒரு நாளும் நிற்காது. மனித உரிமைத் தளத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்களும், சிவில் சமூகக் குழுக்களும், மக்கள் கண்காணிப்பகம் பக்கம் நின்று நியாயத்திற்காக குரல் கொடுப்பர். ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கும், அடக்கு முறைகளும் நெடுநாள் நீடிக்காது. உண்மை எப்போதும் வெல்லும்.

- மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு

Pin It