vel yathiraiவேல் வேல்!

”தமிழகத்தில் தாமரை மலர்ந்திட வெற்றிவேல் யாத்திரை” நடத்தப் போகிறதாம் பாரதிய சனதா கட்சி. நவம்பர் 6ஆம் நாள் திருத்தணி முருகன் கோயிலிலிருந்து யாத்திரை புறப்படுகிறதாம். ரத யாத்திரை தொடங்கி பாசக நடத்தும் யாத்திரை ஒவ்வொன்றும் வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் வகையிலேயே அமைந்திருப்பதைக் காரணங்காட்டி வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விசிக சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் எழுப்பியுள்ளன.

அரசியல், குடியியல் உரிமைகள் என்ற நோக்கில் இந்தத் தடைக் கோரிக்கையை ஆதரிக்க இயலாது என்றே நினைக்கிறேன். மாறாக பாசக பாசிச மத வெறி அரசியலுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதில்தான் கவனம் செலுத்த வேண்டும். நேர் எதிரான பகைவர்களைக் கூட அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி ஒடுக்குவதில் நமக்கு உடன்பாடில்லை. அரசியலை அரசியலால் சந்திப்பதுதான் நெடுங்கால நோக்கில் பயனுள்ளதாக இருக்கும்.

நிற்க, வேல் யாத்திரை செல்வோர் வழியெல்லாம் வேலவனை வேண்டிப் பாடுவதற்கு ஒரு பாடலைப் பரிந்துரைக்கலாம் என நினைக்கிறேன். இது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல். 30-12-80ல் திருச்சி வானொலி நிலைய ஒலிபரப்பில் இசைமணி சீர்காழி கோவிந்தராசன் இதனைப் பாடினார்.

”வேலய்யா – வடி                                               
வேலய்யா – உன்னை
வேண்டி வந்தேன் – ஒரு
வேலையா(ய்)

கோலத் திணைப்புனத்தில்
ஆலோலம் பாடிய
கோதை வள்ளிக் காதலா
சாதித் தடை கடந்த (வேலய்யா)

ஆறுமுகத்தோடும்
ஈராறு கரத்தோடும்
ஆடும் மயிலோடும்
அணி வெல்லும் வேலோடும்

மாறாதுணை வந்து
வணங்கும் மனிதர் – சொந்த
வாழ்வில் மட்டும் சாதி மயக்கம்
வந்ததேனையா?”

சரிதானா முருகா? (இந்த முருகன் வேறு முருகன்!)

                                                                      ***

செம்மைக்கு வெற்றி! பெண்மைக்கு வெற்றி!

அண்மையில் உலகெங்கும் முற்போக்காளர்களுக்கு உவகையும் ஊக்கமும் தந்திருப்பது பொலிவியத் தேர்தலில் குமுகியர்கள் (சோசலிஸ்டுகள்) அடைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி. குமுகியம் நோக்கிய இயக்கம் (Movement Towards Socialism) 52.4 விழுக்காடு வாக்குகள் பெற்று வலதுசாரி இடைக்கால ஆட்சியைத் தோற்கடித்தது. வெற்றி பெற்ற வேட்பாளர் லூயி ஆர்ஸ். அமெரிக்க ஆதரவோடு ஆட்சிக் கவிழ்ப்பு செய்யப்பட்ட ஈவா மொரேல்ஸ் இப்போது நாடு திரும்புகிறார். முதலியம் புவிக்கு அழிவு தரும், குமுகியம் வாழ்வு தரும் என்று அவர் முழங்கியுள்ளார். அமெரிக்க சி ஐ ஏ ஓநாயிடம் எச்சரிக்கையாக இருங்கள் பொலிவியர்களே!

பொலிவிய வெற்றியில் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி: நாடாளுமன்றத்துக்கு வெற்றி பெற்றிருப்பவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள்! பெண்மை வெல்கென்று கூத்திடுவாயா பாரதி?  

                                                                      ***

மனுநீதியை வைத்துத் தோலுரிப்போம்!

கடந்த செப்டம்பர் 27ஆம் நாள் பெரியார் குறித்த வலையரங்கு ஒன்றில் உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் மனுநீதி நூலில் பெண்கள் அனைவரையும் பிறப்பு அடிப்படையில் இழிவுபடுத்திய ஒரு பகுதியை படித்துக் காட்டியுள்ளார். இந்தக் காணொலியை எடுத்துப் போட்டு, திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக பார்ப்பனிய மண்டூகங்கள் கூச்சலிட்டு வருகின்றன.

மனுஸ்மிருத்தி குறித்து விவாதிப்பதை வரவேற்கலாம். திருமாவளவனின் குற்றாய்வு சரியானது என்றே கருதுகிறோம். கருத்தைக் கருத்தால் சந்திக்க எவர் வேண்டுமானாலும் முன்வரட்டும். அதே போது வழக்குப் பூச்சாண்டி காட்டுவதெல்லாம் எடுபடாது. எச். ராஜா விரல் நீட்டிய பக்கமெல்லாம் காவல் துறையை ஏவுவது தமிழக அரசுக்கு நல்லதில்லை.

மறுபுறம் மனுஸ்மிருத்தியைத் தடை செய்! என்பதை ஒருவகை எதிர்ப்பின் அடையாளமாக் கொள்ளலாமே தவிர, குடியாட்சிய நோக்கிலும் அறிவியல் நோக்கிலும் பொருள் பொதிந்த கோரிக்கையாக்க் கருத முடியாது. இதைத் தடை செய்! அதைத் தடை செய்! இவரைக் கைது செய்! அவரைக் கைது செய்! என்று ஏட்டிக்குப் போட்டியாகக் கோரிக்கை எழுப்புவதைப் பழக்கமாக்குவது நலம்சூழ் அரசியலுக்குக் கேடுதான்!

- செங்காட்டான்