"நாடாரும், மார்வாடியும் காவிக்கும்பலுக்கு ஆதரவாகவும், இஸ்லாமியருக்கு எதிராகவும் இணைவது ஏன்?" என்ற எனது கட்டுரைக்கு எதிர்வினையாக "நாடார்கள் மீதான அவதூறு பரப்பும் கட்டுரைக்கு எதிர்வினை" என்ற தலைப்பில் தோழர் இராஜரெத்தினம் எழுதியுள்ளார்..

அந்தக் கட்டுரையில் ஒட்டுமொத்த நாடார்களும் பாஜகவிற்கு பொருளுதவி செய்யவில்லை என நிறுவுகிறார். மேலும், நாடார்களின் நற்குணங்களைப் பட்டியலிடுகிறார். கட்டுரையாளரின் இந்தப் பார்வை என்பது, நான் ஒட்டு மொத்த நாடார்களையும் கூறுவதாக எண்ணிக் கொண்டு இந்த எதிர்வினையை ஆற்றியுள்ளார்.

இதில் என் தவறும் உண்டு. ஒரு சாராரின் தவறை சுட்டிக்காட்டும் போது, அதற்குள் விதிவிலக்காக இருக்கும் மக்களைப் பற்றி குறிப்பிட்டு இருக்க வேண்டும். அதை ஒரு வரியில் "பல நாடார்கள்" என எனது கட்டுரையில் பதிந்திருந்தால், அவரின் இந்த எதிர்வினைக்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், காவிகளுக்கு இங்கே நாடார்கள் மட்டும் தான் பின்புலமாக இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அந்தக் கட்டுரை என்பது காவிகளின் பொருளாதாரப் பின்னணி பற்றியதை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. பொதுவாக காவிகளுக்கான பின்னணி என எடுத்துக் கொண்டால் பட்டியல் நீளும். கொங்கு பகுதிகளில் கவுண்டர்கள் பின்புலம், தென் மாவட்டங்களில் தேவர்கள் பின்புலம் என இப்படி பலர் இருக்கின்றனர். அதனால் தங்கள் சாதியை மட்டும் குறிவைத்து எழுதப்பட்டது என எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

மேலும் அவரது இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி நாடார்களின் உழைக்கும் நற்குணங்களைப் பற்றியும், நாணயத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அதில் எமக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் என்னவோ நாடார்கள் தீயவர்கள் என்ற கண்ணோட்டத்தில் உள்ளது போல அவரின் இந்த வாதங்கள் அமைகின்றன. அவரின் இந்த எதிர்வினைக்கும் நான் "சில, பல" நாடார்கள் எனக் குறிப்பிடாமல், வெறுமனே நாடார்கள் எனக் குறிப்பிட்டதுதான் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்கும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், கட்டுரையாளர் நாடார்களில் இருந்து யாருமே காவிக் கும்பலுக்கு பொருளுதவி செய்வதில்லை என்ற இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. வணிக நலம் என்ற பெயரில், இவர்கள் காவிக் கும்பலுக்கு பண உதவி செய்வதும், அதை காவிக் கும்பல் சாதகமாக பேசிப் பெற்றுக் கொள்வதும் பரவலாக நடக்கிறது. ஆனால் அப்படி ஒரு சம்பவமோ, நடைமுறையோ முற்றிலுமாக இல்லை என கட்டுரையாளர் மறைப்பது தவறானது. அவர்களிடம் இருந்து கணிசமான தொகையைக் கறக்க முடியும் எனவும், அந்த சமூகத்தையே நமக்கு சாதகமான பின்புலமாக மாற்ற முடியும் என்ற யோசனையில் தான், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்ற ஆடுகளை காவிகள் வளர்க்கிறார்கள் என்பதை கட்டுரையாளர் உணர்வாரா எனத் தெரியவில்லை.

இவற்றிற்கான அச்சாரமாக 30 வருடங்களுக்கு முன்பாகவே தாணுலிங்க நாடார் வழியாக காவிக் கும்பல் முன் பதிவு செய்து வைத்துக் கொண்டதை எண்ணிப் பார்ப்பாரா??

இவை எதையும் கணக்கில் கொள்ளாமல், நாடார் சமூகத்தை காவிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை இவர் ஏன் எண்ணிப் பார்க்கக் கூட தயாராக இல்லை எனத் தெரியவில்லை. வெறுமனே புனிதமாக்கும் நோக்கில் எழுதப்பட்டதால் இவற்றை சுயவிமர்சனத்தோடு சுட்டிக்காட்ட அவருக்கு வாய்ப்பு அமையவில்லை என நினைக்கிறேன்.

என்னுடைய கட்டுரை என்பது தவறான போக்கில் பயணிக்கும் நாடார்களுக்கான எச்சரிக்கை மணியாகவே எழுத்தப்பட்டதே தவிர, குறிப்பிட்ட சாதியைக் குறை கூறவோ, குற்றவாளிகள் ஆக்கவோ அல்ல என்பதை மறுபடியும் தெளிவுபடுத்துகிறேன்.

ஆக காவிகளால் பலிகடா ஆக்கப்படும் "பல நாடார்" மக்களை தீய கூடாரத்தில் இருந்து மீட்டு எடுக்கும் பொறுப்பு, எம்மோடு சேர்த்து, கட்டுரையாளருக்கும், எனது கட்டுரையில் பின்னூட்டம் இடும் அனைத்துத் தோழமைகளுக்கும் உண்டு என்பதை கருத்தில் கொண்டு ஒருசேர பயணிப்போம் எனக் கூறிக்கொள்கிறேன்.

- மனோஜ் குமார்

Pin It