செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியார் 146 பிறந்த நாளன்று அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி தீர்ப்பை வரவேற்று முற்போக்கு கூட்டங்களின் கூட்டமைப்பு கோவை மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் திரு. கு. இராமகிருஷ்ணன் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் திரு. ஜி. இராமகிருஷ்ணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் திரு. இ. ஆர். கொங்கு ஈஸ்வரன் M.L.A, மனிதநேய மக்கள் கட்சியின் திரு. சுல்தான், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் திரு. சி. வெண்மணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் திரு. க. சு. நாகராசன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் தலைவர் திரு. இரா. அதியமான் அவர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் திரு. ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் பேசியதாவது...
மாமேதை கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், சமூக நீதி காவலர் தந்தை பெரியார் ஆகியோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சாதியற்ற சமுதாயம் படைக்கவும், சமத்துக்காவும் பாடுபட்டனர். தந்தை பெரியார் பிறந்த நாளில் சமூக நீதியை பாதுகாக்க இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர்களை பாராட்டி வாய்ப்புக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.கலைஞர் அவர்கள் அருந்ததியர் மக்களின் பல ஆண்டுகால போராட்ட கோரிக்கையான அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை மிகுந்த ஆய்வுக்கு பிறகு, சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான கோட்டையை நோக்கி பேரணிக்கு பிறகு எங்களை அழைத்து பேசினார். அதன் பிறகு அணைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, ஜனார்த்தனன் கமிஷன் அமைத்து அந்த கமிஷன் அளித்த அறிக்கை பெற்ற பின்னர் அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இந்த சட்டம் அறிவிக்கப்பட்ட பிறகுதான் அருந்ததியர் மாணவர்கள் 70 பேர் மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றனர், அதேபோல் 1050 பேர் பொறியியல் கல்லூரியில் இடப்பெற்றனர், குரூப் 1 சர்வீஸில் ஆண்டொன்றுக்கு 60 பேர் சேர்ந்திருக்கிறார்கள். ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற சட்டம் அறிவிக்கப்பட்ட போதும் அமலாக்கப் படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இச்சட்டம் கடந்த 15 வருடங்களாக அமலில் உள்ளது என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், நீதிபதிகள் பல்வேறு ஆதாரங்களை அதற்கு எடுத்துக் காட்டியுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இப்போது சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். உச்சநீதிமன்ற வழக்கில் ஒரு பார்ட்டியாக 15 ஆண்டுகளாக வாதாடிய நானும், திரு. பி. சம்பத் அவர்களும், இத் தீர்ப்புக்கு எதிராக யார் வழக்கு போட்டாலும் எத்தனை எதிர்ப்பு வந்தாலும், இந்த தீர்ப்பை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கடுமையாக போராடுவோம் என்பதை இங்கே தெரிவிக்கின்றேன். இந்த உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது அரசியல் சட்ட ரீதியான தீர்ப்பு மட்டுமல்ல, அறிவியல் பூர்வமான தீர்ப்பு.
தீர்ப்பின் தொடர்பாக பேசப்படும் கிரீமி லேயர் என்பது தீர்ப்பின் அம்சம் அல்ல, அது நீதிபதிகள் போகிற போக்கில் கூறிய விடயம். பல்வேறு தீர்ப்புகளில் நீதிபதிகள் போகிற போக்கில் அவர்களுடைய கருத்துக்களை கூறுவது வழக்கம் தான். கிரீமி லேயர் வேண்டும் என்று யாரும் கேட்கவும் இல்லை, அது பற்றி தீர்ப்பிலும் இல்லை, அது அமலுக்கு வராது. ஆனால் இதுதான் பிரச்சனையாக விவாதத்துக்கு வந்துள்ளது.
உள் ஒதுக்கீடு விவகாரம் முக்கியம் என்பதால் ஐந்து நீதிபதி அமர்வில் இருந்து ஏழு நீதிபதி அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. சந்திரசூட் தலைமையிலான இந்த ஏழு நீதிபதிகள் அமர்வு ஆய்வு செய்த முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று வழக்கு போட்ட ஆந்திரா, பஞ்சாப், தமிழ்நாடு போன்றவர்கள் வாதம் என்னவென்றால், பட்டியல் சாதிகள் என்பது ஒற்றை தன்மையுடையது, அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென்றால் ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்துக்கும் தான் அந்த அதிகாரம் இருக்கிறது என்பதுதான். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் வாதம் என்பது பட்டியல் சாதிகளில் ஒரு சாதியை சேர்க்க வேண்டும் என்றாலோ, நீக்க வேண்டும் என்றால் தான் ஜனாதிபதி ஒப்புதல் பாராளுமன்ற ஒப்புதல் வேண்டும், ஆனால் உள் இட ஒதுக்கீடு என்பது எந்த சாதியையும் இணைக்கும் நீக்கும் பிரச்சனை அல்ல. பட்டியல் சாதிக்குள்ளாகவே மிகவும் பின்தங்கியிருக்கும், வேலை வாய்ப்பில்லாத, கல்வி கிடைக்காத அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்று வாதிட்டோம்.
555 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில் தலைமை நீதிபதி செய்திருக்கும் ஆய்வு என்பது, பட்டியல் சாதிகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் சாதிகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடியுமா? அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதுதான். தீர்ப்பில் நீதிபதிகள் கூறுகிறார்கள் பட்டியல் சாதிகள் என்பது "not homogeneous" ஒற்றைத் தன்மை கொண்டவர்கள் கிடையாது, "heterogeneous" பன்முகத் தன்மை கொண்டவர்கள். இதை எப்படி அணுக வேண்டும்? என்ற கேள்விக்கு அன்றைக்கே அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தீர்வு கொடுத்துள்ளார் என்பதை மிகுந்த பெருமையுடன், மகிழ்ச்சியுடன் பாராட்டும் முறையில் கூறுகிறேன். இப்பிரச்சனையை எவ்வாறு அணுக வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார் என்றால் " A uniform criteria to identify depressed classes could be inappropriate". அதாவது "ஒடுக்கப்பட்ட மக்களை அடையாளம் காண ஒரே மாதிரியான அளவுகோலை வைப்பது சரியானதல்ல" என்று அண்ணல் அம்பேத்கர் ஆண்ட்ரே கூறியிருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அம்பேத்கர் இக்கூற்றை மேற்கோள் காட்டி "பட்டியல் சாதியினர் அனைவரும் ஒற்றைத்தன்மை கொண்டவர்களாக இல்லை, uniform இல்லை, ஒரே மாதிரி இல்லை எனவே அச்சாதிகளுக்குள் ஏழ்மையில் இருக்கிறார்களா, கல்வியற்று இருக்கிறார்களா, வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறார்களா, அவர்களை எப்படி பகுப்பாய்வு செய்வது, எப்படி பிரிப்பது, எப்படி sub classify செய்வது என்று ஆய்வு நோக்கில் நீதிபதிகள் இவ்வழக்கை அணுகினர்.
மேலும் நீதிபதிகள், சட்டங்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் தலித் மக்களின் வாழ்க்கை நிலை என்ன, வாழ்வாதாரம் என்ன, சொத்து இருக்கிறதா, நிலம் இருக்கிறதா, உரிமை இருக்கிறதா, அவர்களுக்கு தீண்டாமை இருக்கிறதா என்பது போன்ற ஏராளமான ஆதாரங்களை நீதிபதிகள் முன்வைக்கின்றனர். அந்த தீர்ப்பில் ஒரு மேற்கோள் வருகிறது, குஜராத் மாநிலங்களில் 79% தலித் கோவில்களில், தலித் மக்களிலேயே கீழாக இருக்கிற தலித்துகள், தலித் கோவில்களுக்குள்ளாகவே நுழைய முடியாத நிலை இருக்கிறது. எனவே இப்பேற்பட்ட அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டையான தலித் மக்களுக்கு உள் ஒதுக்கீடு தேவைப்படுகிறது. எனவே நீதிபதிகள் கூறுகிறார்கள் "There should be a reasonable classification" என்று. அதாவது "பகுத்தறிவுக்கு ஒத்த வகைப்படுத்துதல்".
எனவே நீதிபதிகள் பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எத்தனை பட்டியல் சாதிகள் இருக்கின்றன, அவர்களின் வருமானம் என்ன? வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது போன்ற அறிக்கைகளை பெற்று, அந்த அறிக்கைகளின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு பற்றி பரிசீலிப்போம் என்று சொன்னார்கள். 2008 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கலைஞர் அமைத்த ஜனார்த்தனன் குழு 8 மாத காலம் ஆய்வு செய்த அறிக்கையின்படி, 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த பட்டியல் சாதியினர் மக்கள் தொகை - 95,35,539. அதில் அருந்ததியர் மக்கள் தொகை 18,61,459 - 11% .எனவே இந்த மக்கள் தொகை அடிப்படையில் 18% பட்டியல் சாதி இட ஒதுக்கீட்டில் (1% பழங்குடியினர் போக) அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது (ஆறில் ஒரு பங்கு). பட்டியல் சாதி இட ஒதுக்கீட்டில் உண்மையில் அருந்ததியருக்கு அதுவரை கிடைத்து வந்த பங்கு என்ன என்ற விவரம் மிகவும் துயரமானது.
நீதிபதி ஜனார்த்தனன் அவர்கள் IAS அதிகாரிக்கு கடிதம் எழுதுகிறார். நான் அறிக்கை கொடுக்க வேண்டும். எனவே அருந்ததியர் எத்தனை பேர் IAS, IPS அதிகாரிகள் இருக்கிறார்கள் என்ற தகவல் வேண்டும் என்று கேட்டதற்கு, இது வரை அப்படி தனியாக பிரித்து கணக்கில்லை. மொத்தமாக தலித் என்றுதான் பட்டியல் வைத்திருக்கிறோம் என்று கூறினாராம். பின்பு கலைஞர் தலையிட்டு அந்த பட்டியல் கொடுக்கப்படுகிறது. 22.10.2008 அன்று வழங்கப்பட்ட லிஸ்ட் படி, பட்டியல் சாதியினர் 32 பேர் IPS அதிகாரிகள் அதில் ஒருவர் கூட அருந்ததியர் இல்லை, 32 பேர் IAS அதிகாரிகள் ஒரே ஒருவர் மட்டும் அருந்ததியர், மருத்துவ கல்லூரிகளில் 0.75%, Group A சேவையில் (DRO) - 0.5%, Group B (RDO, Tahsildar) - 0.6%, Group C (clerk, junior assistant) - 0.7%, Group D - 5% (தூய்மை பணியாளர், office assistant, watchman).
இத்தகைய அறிக்கைகளை, முக்கியமாக ஜனார்த்தனன் கமிசன் அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், பட்டியல் சாதியினர் homogeneous அல்ல என்றும் heterogeneous தான், பட்டியல் சாதிகளில் ஒரு பகுதி முன்னேறியிருக்கிறது, ஒரு பகுதி சரிந்து கீழே இருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறது. இவற்றை வைத்து நீதிபதிகள் கூறுகின்றனர் "Dalits need justice among dalits" என்று. அதாவது தலித் மக்களுக்கு உள்ளாகவே ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதி தேவை என்பதை சுட்டிக்காட்டுகின்றனர். எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்கிறது, "இனி தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்கள் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இதுபோல பாதிப்பு அடைந்தவர்கள் அனைவருக்குமே சட்டம் இயற்றி சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உரிமை உள்ளது" என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு சரியில்லை என்று நீதிமன்றம் செல்பவர்கள், அது திருமாவளவனாக இருந்தாலும், கிருஷ்ணசாமியாக இருந்தாலும், சே.கு. தமிழரசனாக இருந்தாலும், இவர்கள் கூறுவது "அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்துவிட்டால் தலித் ஒற்றுமை பாதிக்கும்" என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மை நேர்மாறானது. அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்காவிட்டால் தான் தலித் ஒற்றுமை பாதிக்குமே தவிர கொடுத்தால் பாதிக்காது. இதை விளக்க வேண்டுமானால், ஒரு விவரத்தை கூற வேண்டும். 1915 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை 650 தான். இதில் பார்ப்பனரல்லாதோர் எண்ணிக்கை வெறும் 124 தான் (19%). அதேபோல் டிஸ்ட்ரிக்ட் முன்சீப் மொத்த எண்ணிக்கை 128, இதில் பார்ப்பனரல்லாதார் வெறும் 25 (22%), அரசாங்க பணியாளர்கள் மொத்த எண்ணிக்கை 100 இதில் பார்ப்பனரல்லாதார் வெறும் 29%. இப்படிப்பட்ட அநீதியை ஏற்றுக் கொள்ள முடியாததால் தான், இப்படிப்பட்ட பாதகத்தை தடுப்பதற்காகத்தான் 1929 ஆம் வருடம் நீதிக்கட்சி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது. "Unity of unequals is not possible" என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். சமமாக இல்லாமல், சமத்துவம் இல்லாமல், மலைக்கும் மடுவுக்குமான பொருளாதார ஏற்றத்தாழ்வு வேறுபாடு இருந்தால் ஒற்றுமையை உருவாக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அந்த உழைப்பாளி மக்களை ஒன்று சேர்க்க தான் இட ஒதுக்கீடு கொள்கையே உருவானது. அதேபோல அருந்ததியர் மக்கள் மிகவும் கீழே இருக்கிறார்கள் அவர்கள் IAS ஆக வரமுடியவில்லை IPS ஆக வரமுடியவில்லை RTO ஆக வரமுடியவில்லை அரசு பணிகளில் வரமுடியவில்லை என்றால், அவர்களை தூக்கி விடாமல் தலித் ஒற்றுமை சாத்தியப்படுத்த முடியுமா? ஒதுக்கீடு வழங்காவிட்டால் தான் தலித் ஒற்றுமை பாதிக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இங்கே அழுத்தமாக சுட்டிக்காட்ட கடமை பட்டுள்ளேன்.
யார் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு போட்டாலும் அந்த வழக்கில் பார்டியாக இருக்கக்கூடிய எனக்கோ, தீண்டாமை ஒழிப்பு முன்னணி திரு. பி. சம்பத் அவர்களுக்கோ நோட்டீஸ் அனுப்பாமல், எங்களுடைய வாரியத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. நாங்க பாத்துக்குறோம். மத்திய அரசு இனி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும்பொழுது, social, educational நிலையை மட்டுமல்லாமல் அவன் தீண்டாமைக்கு உள்ளாகியிருக்கிறானா மற்றும் economical status உம் சேர்த்து கணக்கெடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.
உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராடுவதுடன் நம்முடைய போராட்டம் முடிந்துவிடவில்லை. சாதி ஒழிப்புக்காக, தீண்டாமைக்கு எதிராக, ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தீவிரமாக போராட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆணவ கொலைகளுக்கு எதிராக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றேன்.
இவ்வாறு திரு. ஜி. ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
எழுத்து வடிவம்: தேன்மொழி