அடிவாரத்தில் நின்ற போது ஆழ் மனதில் ஓட்டம் தொடங்கியது. அதற்கு முன்.... சாலையில் இருந்து பிரிந்து செம்மண் சாலையில் பயணிக்கையிலேயே உள்ளே சடுகுடு தொடங்கி விட்டது. அங்கிருந்தே தெரிந்த மலை...தோகை விரித்திருப்பது கண்கள் மின்னும் காட்சி. ஒரு மயில் தோகை விரிந்திருப்பது போன்ற காட்சிக் கலை. காற்றினில் கடவுளின் கை கூப்பியது போல. கண்கள் விரிந்தோம். நெற்றியில் புதுக் கோடு.

இதுவரை சென்ற மலைகளின் அடிவாரம் போல இல்லை. இங்கே ஆள் அரவம் இல்லை. தனித்து விடப்பட்ட தீவாக தெரிந்த இந்த தோகைமலை ஒரு யாக மலை போல தான் மௌனித்து கிடந்தது.

(காரமடையில் இருந்து இடது பக்கமாக வெள்ளியங்காடு சாலையில் பயணிக்க... தோலம் பாளையம் தோள் தொட்டு ஈர்த்துக் கொள்ளும் இந்தத் தோகைமலை)

மலைக்கச் செய்யும் மலை தத்துவம் உணர்கையில் உள்ளே எரியும் மலையேறும் வேட்கை விரிந்த றெக்கையை மெல்ல குறுக்கிக் கொண்டது. மலை உச்சி தெரியவில்லை. சோலைவனம் போல முதல் படியில் இருந்தே சூழ்ந்த பகல் இருளைக் கண்டு படபடத்த மனம்... ஏறுவதா திரும்புவதா என யோசனை பூண்டது.

இதுவரை மலை ஏற்றத்தில் இல்லாத அச்சத்துக்கு காரணம் முன் பின் ஒரு மனிதன் இல்லை. மனிதர்களின் வாசனை அற்ற பச்சையத்தை உணர்ந்த போது பயம் மெல்ல தலை மேல் சுழன்றது. தன்னிலை அற்ற தவமும் அற்ற இடைவெளி அங்கே நம்மை அசைத்தது.

சரி கொஞ்ச தூரம் போலாம்... முடியலன்னா திரும்பிடலாம் என்ற எண்ணத்தோடு நடந்தோம். நன்றாகவே நிழல் சூழ்ந்த வழி அது. ஒற்றையடிக்கும் சற்று அகன்ற கற்கள் அடி. கருங்கல்லைப் பதுக்கி பதுக்கி பாதையிட்ட மனிதர்கள்... பெரியவர்கள். நுட்பத்தோடு ஒரு மலைப்பாதையை நிகழ்த்தி இருக்கிறார்கள். வளைந்து வளைந்து நிமிரும் பாதையின் தத்ரூபம்.. பாதங்களை ரகசியமாக்கும். கால்களின் தவிப்பை பிடித்திழுக்கும் பாதைகளின் அணைப்பு... மென் பயங்கரம். கொஞ்ச தூரத்திலேயே காட்டுக் கோழிகளைக் காண முடிந்தது. புதிய உயிர்களின் அணுக்கம் அவைகளை அசந்து பார்க்க வைத்திருக்க வேண்டும். ஒதுங்கி கொண்டன. சிறு சிறு குறுக்கு ஓட்டம்.... கீழ் கிடக்கும் சருகுகளை களைத்துப் போனது. ஓவியம் பேசியது போல ஒரு சில நொடி சித்திரம் நமக்கு.

தோலம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெரியவர் சொன்ன.... 'மிருகங்கள் இல்லை. பயமில்லாம போகலாம்...' என்ற அந்த சொற்களை கட்டி தாவி பிடித்தபடி தான் இந்த நடை. ஆனாலும்.. கோழி கண்ட கண்களில் காட்டுப் பன்றிகள் விழவும் வாய்ப்பிருக்குமோ என்ற பதற்றம் தொற்றியது. நின்று விட்ட உடலில் மூச்சிரைப்பு இருந்தது. திரும்பி விடு என்ற உந்துதல் உள்ளிருந்து தள்ள... இதுவரை வந்து விட்டு உச்சி முகராமல் திரும்புவது காலத்துக்கும் உறுத்துமே. மலை ஏறிட்டு வந்துட்டோம் என்று மற்றவர்களுக்கு சொல்லி விடலாம். மனதுக்கு எப்படி சொல்ல. எத்தனை தூரம் மேலே வந்திருக்கிறோம் என்று மறந்து போனது. இன்னும் எத்தனை தூரம் மேலே செல்ல வேண்டும் என்றும் தெரியவில்லை. பக்கவாட்டில் விரிந்து கிடக்கும் காட்டின் மண்சரிவுகள்... ஒரு பயங்கர திகில் கதையின் பி ஜி எம் போல அதிர்ந்து கொண்டிருந்தது. மரங்களின் அடர்த்தி அடுத்தடுத்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் மௌன இரைச்சல் தாங்கொணா ஒன்று. அடுக்கடுக்காய் நெருக்கத்தில் வளர்ந்து நிற்கும் மரங்களின் நெடுக்கு குறுக்கு... இதயத்தில் தட தட குறுகுறு செய்தது. ஆழமாய் மூச்சிழுக்க அனிச்சை பழகி இருந்தது. வளர்ந்து சரிந்து வளைந்து மூடி என வனத்தின் தோற்றமே வித்தியாசமாக இருந்தது.

ஏன் தோகை மலை என்று பெயர் என அப்போது புரிந்தது.

நமக்கு தான் கற்பனை வறட்சியே இல்லையே. ஒருவேளை சிறுத்தை அப்டி பதுங்கி கிடந்தால்... ஒருவேளை காட்டு நாய் கவிதை பேசிக்கொண்டு வந்தால்... ஒரு வேலை பாம்புகளின் படையெடுப்பு நிகழ்ந்தால்... ஒருவேளை விஷ வண்டுகளின் பற்களை காண நேரிட்டால்... நெற்றியில் ஸ்க்ரோல் ஓட ஓட... வழியை சூழ்ந்து கவிழ்ந்து கிடக்கும் செடிகளின் வனப்பை ஒதுக்கி ஒதுக்கி நடந்தோம். பறந்தோமோ என்று கூட தோன்றியது. கடந்த வார மழையின் மிச்சம் காட்டில் ஈரப்பதமாக சிதறிக் கிடப்பதை உணர முடிந்தது. நீர் இல்லா ஒரு சிறு குழி கண்டோம். ஒருவேளை நீருக்கு தானா. எட்டிப்பார்க்கையில் குழியின் இருள் குதூகலித்தது. மண்ணின் ஈரப்பசை வாசம் மனதுக்குள் மண்புழுவாய் நெளிந்தது. தூரத்தில் போகும் வாகன சத்தம் திடுமென வந்து மோதுவதை இரண்டு மூன்று முறைக்கு பிறகு இயல்பாக்கினோம்.

கால்வாசி மலையில் ஆஞ்சநேயர் சிலையை பார்த்தோம். கடவுள் நம்பிக்கையற்ற நமக்கு மூச்சுக் காற்றில் பலம் கூடியது.

சில பறவைகளின் படபட கதகதப்பு... சற்று நேரத்தில் அடங்கி விட்டது. வனத்தின் வாக்கியம் அமைதிக்கு ஊடாக சுழன்று கொண்டே இருப்பதை உணர உணர நடையின் வேகம் சூடு பிடித்தது. நின்று நின்று மூச்சு வாங்கும் போதெல்லாம் சரி இதோடு திரும்பிடலாம். இது ஆகாது என்ற பின்னிழுப்பு கொக்கி மாட்டிக்கொண்டே இருந்தது. முழுதாக நனைந்த பின் முக்காடு எதற்கு. பாதி மலை ஏறிய பிறகு இனி செய்ய என்ன இருக்கிறது. நடப்பது நடக்கும். தடுப்பது தடுக்கும். எதிர்கொள்ள முடிந்த ஒன்றை தான் உள்ளம் தேர்ந்தெடுக்கும். மனோதத்துவம் மண்டை மேல் அமர்ந்து மனமோட்டியது.

ஒரு கட்டத்தில் எனது வலது கால் ஷூ பிய்ந்து விட்டது. வெள்ளியங்கிரி மலை ஏறுகையில் பேண்ட் கிழிந்த நினைப்பு வர... சிரிப்புதான் வந்தது. செருப்புக்கும் நமக்கும் இருக்கும் ஏழாம் பொருத்தத்தை நினைக்கையில் ஒரு சகஜ நிலை உடலில் இழையோடியது. ஆனாலும் இந்த ஷூவை வைத்துக் கொண்டு எப்படி நடப்பது. ஆனாலும் வெறும் காலில் நடப்பது பற்றிய எந்த பதற்றமும் இல்லை. சமாளிக்கிற வரை சமாளிப்போம் என்று யோசித்தாலும்...ஒருவேளை ஓட நேர்ந்தால்... என்னாவது...என்ற கேள்வி சாக்ஸில் சாக்ஸபோன் வாசித்தது. பேசாமல் கழற்றி கையில் பிடித்துக் கொள்ளலாமா என்று தோன்ற தோன்றவே அடுத்த ஷூவும் அவுட். ரெண்டு ஷூக்களின் அடிப்பாகத்தையும் கையில் பிடித்துக் கொண்டு நடப்பது... மலை ஏறி வந்து செருப்பால அடிப்பேன் என்று சொல்வது போலவே இருந்தது. தார் ரோடு போடுபவர்கள் கால்களில் சுற்றி இருக்கும் துணிக்கற்றைப் போல மாறி இருந்த ஷூ... பார்த்து பார்த்து நடக்க ஓகே தான். ஓடும் நிலை ஏற்பட்டால்... முடிந்தது கதை.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாண்டி விட்டது. மேலே வானமும் தெரியவில்லை. கீழே வந்த வழியும் தெரியவில்லை. மானுட வாசம் துளியும் இல்லை. மேலே யாரும் போயிருக்க வாய்ப்பில்லை என்று உணர முடிந்தது. முடிவெடுக்க முடியாத முன் பின்னற்ற மனதில் ஏதேதோ சத்தங்கள். கால்களில் தவிப்பை கைகள் தண்ணீர் கேன் பிடித்து அடக்கியது.

சரி. இந்த ஒரு வளைவு. இதை பார்ப்போம். உச்சி தெரியவில்லை என்றால் திரும்பி விடலாம். இதற்கிடையே ஒரு கெட்ட செய்தி வேறு அலைபேசியில் அழைப்பாய் வந்து அதிர செய்திருந்தது. நாம் சகுனம் பார்க்கும் ஆட்கள் இல்லை. இதெல்லாம் நம் போக்கை தடுத்து நிறுத்தி விட முடியாது... கூடாது என்ற தீர்க்கம் உள்ளே எழுந்தது. அடுத்த வளைவில் அச்சம் பொங்க நகர்ந்த போது... அற்புத வானம் குனிந்து நம்மை பார்த்தபடி இருந்தது. அச்ச வனம் அற்புத வனமாக ஆகும் நொடியில் வண்ணம் சூழ்ந்ந்தேன்.

உற்சாக துள்ளலோடு இன்னும் வேகம் கூட்டி நடக்க நடக்க உச்சி மலைக் காற்றின் உள்ளாளா... சும்மா துள்ளிக்கொண்டு வரவேற்றது. நுரையீரல் நிறைக்கும் ஈரக்காற்று. மனம் நிறைந்து கண்கள் திரும்பி அங்கும் இங்கும் சுழன்றது. சுற்றிலும் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் தத்ரூபம்.....இந்தா... இப்ப தான் வரைஞ்சு முடிஞ்சிருக்கு... இல்ல இல்ல... வரைய வரைய தான் பார்த்துட்டுருக்க... என்பதாக ஏறி இறங்கி கிறங்கி உறங்கி அப்படியே வளைந்து நெளிந்து போய்க்கொண்டே இருக்கிறது. சுற்றி சுற்றி ஒரு சிறுபிள்ளை கூட்டமானேன். பட்டாம் பூச்சி... காதுகளில் படபடக்க... கண்களில் காற்று பூச்சியின் கதகளி. வெயில் அது பாட்டுக்கு ஆடிக்கொண்டிருக்க... காற்றுக்கு அசையும் உச்சி மரங்கள் இந்தக் கவிதைக்கு விசிறி வீசியது.

பசி கொண்ட யானையின் பரபரப்பான கண்களைக் கொண்டேன். ஓடி ஓடி பார்த்தேன். உயரம் என்பதில் தான் எத்தனை உற்சவம். உச்சியில் இருக்கும் சிறு கோயிலை சுற்றி சுற்றி நிகழ்ந்தேன். நிழலுக்கும் மூச்சு இருக்கிறது என்று உணர்ந்தேன். எதிரே தெரிந்த எங்கள் குருடி மலை.... என்ன மயிலு... இந்த முறை எதுத்தாப்ல ஏறிட்ட... என்று குசலம் விசாரித்தது. கண்களின் குறுகுறுப்பில் கட்டி அணைத்தேன். மேல்முடி சென்ற வழியை இங்கிருந்து காண முடிந்தது. கண்ணுக்குள் மலைத் தேன். அப்படியே மாங்கரை மலை தெரிய... உள்ளத்துள் மலைத்தேன். அப்படியே கோவிலுக்கு பின்புறம் செல்ல... காற்றின் வேகம் கூடியது. பில்லூர் டேம்.... கீழ் குந்தா... ஊட்டி... பவானி டேம் என சுற்றிய மலைகள்... இது இது இது என்று தெரியாவிட்டாலும்... அது அது அதுவென்ற புரிதல்களை கொடுத்தது.

மேற்கு தொடர்ச்சி மலையின் தொடர் தாவல்களை சுற்றி சுற்றி பார்க்க சுற்றும் பூமி மறந்த மனது... வானம் முட்ட பார்த்தது. மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கில் தான் மனிதன் வீடு கட்டியிருக்கிறான்.. விவசாயம் பார்க்கிறான் என்ற தெளிவு கிடைத்தது. அந்த மலை இறங்கி ஊராகி மீண்டும் இந்த மலையில் ஏறுவதை... ஒரு வளைந்த காட்சி இறக்கமாய் பிறகு மெல்ல ஏறுவது கலைகளின் உச்சம்.

ஏறுகையில் மனிதர்கள் இல்லையே என்ற யோசனை இப்போது அப்படியே மாறிவிட்டிருந்தது. நல்லவேளை மனிதர்கள் இல்லை. இது நம் மலை. நாம் மட்டுமே என்ற சிந்தனை... சித்து செய்தது. என்னையவே வரைந்தது போல உணர்கையில்.. கீழே சூழ்ந்திருந்த தோகை மரங்கள் தெரிய... அது பசுமையான தோல் போர்த்திய கான் என புரிந்தது. இதற்கிடையேதான் நடந்து வந்திருக்கிறோம் என்று உணர்கையில் புல்லரித்தது. புன்னகை செரித்தது. ஒரு மலையைத் தொட்டு அடுத்த மலையில் நிற்கிறோம் என்று கூட புரிந்தது. வந்த வழியை மேல் இருந்து பார்க்க இயலாத அடர்த்தி... மரங்களின் தலைகளாய் முட்டி முட்டி நின்றது. மரங்களின் அடர்த்தி ஒரு கட்டத்தில் நின்று விட.... அடுத்த கட்டம்... மலை உச்சி செல்லும் வழித்தடம் கொண்ட சரிவு... நான்கு திசையும் இணையும் வெளியாக இருக்கிறது.

மன உச்சி எட்டி குதி எட்டி குதி என்று சொன்னாலும்... மலை உச்சி நம்மை சிறு பிள்ளை போல பார்த்தது. சறுக்கினால்... கிறுக்கி விட்ட ஓவியம் தான். அப்படி ஒரு உயரம். உயரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று மீண்டும் புரிந்தது. அங்கே ஒரு சிறு கிணறு காண நேர்ந்தது. கைவிடப்பட்ட கிணறு போல. அதன் பாதி நெஞ்சில் இருந்து வளர்ந்து விட்டிருந்த சிறு மரம் சிறுபிள்ளை சிணுங்கலோடு பேசியது. கேட்க கேட்க அது இசையாக மாறுவதை நீங்கள் நானாக இருந்தால் உணர முடியும்.

நேரம் ஓட ஓட நெஞ்சில் ராகம். புகைப்படங்களில் புல்லினம் வரைந்தோம். வானத்தின் வெளிச்சம் மானுட அச்சத்தை போக்கும் புல்லாங்குழல். அது தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்க... கீழிறங்க மனம் இல்லை. அங்கேயே இருந்து விட தோன்றும் இயல்பை கிள்ளி மூளை மடிப்பில் சொருகி விட்டு கீழ் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

போகும் போது தடுமாறிய இடங்களில் திரும்பும் போது நின்று பார்த்தேன். தடுமாற்றம் இல்லை. யோசனைகள் மட்டுமே.

போக வேண்டாம்... திரும்பிடலாம் என்று முடிவெடுத்த பின்னும் முன்னே இழுத்துக் கொண்டது போனது எது. மலையின் ஆன்ம துளிகளில் நின்றாய்ந்திருந்த நான் நானாகவே இல்லை என்பது மனதில் ஓடியது. மனமற்ற தருணத்தை மூளை உணர்ந்ததை... எடையற்ற உடலை நானும் உணர்ந்ததை... யோசிக்கிறேன். நில் நில் என்ற அச்சத்தைத் தாண்டி அது போக்குக்கு சென்று கொண்டே இருந்த அந்த தருணத்தை சொற்களில் வடிக்க முடியாது. ஒரு தியானம் இப்படித் தான் இருக்கும் என்று பிறகு புரிந்து கொண்டேன்.

அடுத்தடுத்து இறங்குகையில் எந்த பதற்றமும் இல்லை. ஒரு நீரோடை போல இருந்தது பயணம். ஒன்றே ஒன்று... நெருடலாய் இருந்தது. கீழே நிறுத்தி வைத்திருக்கும் என் பைக் இருக்குமா...

கீழே இறங்கி கடைசிப் படியைத் தொடுகையில் மனம் பேரமைதியில் நின்றது. பைக் நிறுத்தியபடியே நின்றிருந்தது.

மலை காக்கும் ஒன்றை மனிதன் தொடவே முடியாது.

- கவிஜி

Pin It