"ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கல்வி" என இயங்கும் பாசிச முதலையான பா.ச.க. ஒன்றிய அரசின் சொல்லப்படாத ஒரு பகுதி "ஒரே மருத்துவம்". அதுவும் ஆரிய சமஸ்கிருத மருத்துவமான ஆயுர்வேத மருத்துவம்.

ஒன்றிய அரசின் காவி, கார்ப்பரேட் மயமாக்கல் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவத் துறையிலும் ஊடுருவி விட்ட நிலையில் ஆயுர்வேதத்திற்கு முன்னுரிமை, யோகாவிற்கு தலை மேல் கீரிடம் என உலவ விடுகிறது ஒன்றிய அரசு.

அவர் அவர்கள், தன்னுடைய கொள்கைகளை பாதுகாப்பதும், கடத்துவதும் இயல்பு தானே!

ma subramaianவடக்கு, தெற்கு இந்தியாவின் நிலம் வேறு, பருவநிலை வேறு, மக்கள் வேறு, மொழி வேறு, அரசியல் சூழல் வேறு, மக்களின் மனநிலையும் வேறு. அதிலும் தமிழ் மண் எந்த ஊடுறுவலையும் ஏற்றுக் கொள்ளாத நிலம்.

பல்வேறு படையெடுப்புகளால் சமூக, அரசியல், அறிவியல் துறையில் உள்வாங்கப்பட்ட பலவிடயங்களைக் கொண்டது வடக்கு. சமஸ்கிருத, அரபு மருத்துவக்கூறுகளின் கலவை ஒன்றிய அரசு முன்வைக்கும் இந்திய மருத்துவம்.

அதிலும் ஆயுர்வேதம், யோகம் என்னும் பெயரில் தன் ஆக்டோபஸ் சனாதனக் கரங்களை இந்தியா முழுவதும் விரிவுப்படுத்துகிறது ஒன்றிய அரசு.

தனக்கென தனித்துவமான மரபுகளைக் கொண்ட தமிழ்நிலத்தின் மருத்துவ அறிவியல் சித்த மருத்துவம். அதில், மறுமலர்ச்சியை எந்த அரசியல் இயக்கமும் இன்றுவரை முன்வைக்க வில்லை என்பதுடன் பாராமுகமாக நடந்து கொள்வதும், சமீபகாலமாக காலமாக இழித்துக் கூறப்படுவதும் தொடர்கிறது. 

திராவிட மாடல் ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சி எனில் தருமாம்பாள், மீனாம்பாள் போன்ற சித்த மருத்துவர்களின் அரசியல் பங்களிப்பு மறக்கப்பட்டதா?நீண்ட தமிழ் மரபின் கால்கள் அறிவியல் அற்றது என ஒதுக்கப்படுகிறதா?

ஒன்றிய அரசு முன்னிறுத்தும் மருத்துவ அரசியலை புரிந்து கொண்டதா திராவிட அரசியல்?

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைய மே 2022-ல் ஆளுநருக்கு ஒப்புதல் வேண்டி மசோதா அனுப்பி வைக்கிறது தமிழக அரசு.
சில திருத்தங்களைக் கேட்டு திருப்பி அனுப்புகிறார் ஆளுநர். 

ஆனால், தமிழ்நாட்டின் ஆயுர்வேத மருத்துவர்கள் குழு மருத்துவர் மீரா சுதிர் தலைமையில் 14.11.22 அன்று தமிழ்நாடு அரசை சந்திக்காமல் நேரடியாக ஆளுனரைச் சந்தித்து இரண்டாவது ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கான கோரிக்கையை வைக்கிறது. ஆளுநரின் அரசியலும் ஆயுர்வேத
அரசியலும் ஒரே தளம் தானே! உடனே கோரிக்கை ஏற்கப்படுகிறது.

ஆளுநர் ரவி அந்தக் கோரிக்கையை சுகாதாரத்துறை அமைச்சருக்கு அனுப்புகிறார். தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அதனை ஏற்று திருச்சியில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என 25.11.22 அன்று அறிவிக்கிறார்.

மேட்டிமைத் தன்மை கொண்ட மேற்கின் மருத்துவ அறிவியல் இங்கு கொண்டாடப்படுகிறது.காவித் தன்மை கொண்ட இந்திய மருத்துவம் அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மக்களின் மருத்துவமான தமிழ் மருத்துவ அறிவியல் மட்டும் புறக்கணிக்கப்படுகிறது. இதை ஏற்கிறதா திராவிட அரசியல்?

- கவுதமி தமிழரசன்

Pin It