ஒருவர் படைப்பை அவருக்குத் தெரியாமல் எடுத்து தலைப்பை மாற்றி தன் பெயரைப் போட்டு பதிவு செய்வது மிகவும் கீழ்த்தரமான செயல்.. என்று ஏற்கனவே நிறைய முறை பேசியாயிற்று. விவாதம் சண்டை என்று கூட செய்தாயிற்று. ஆனாலும்... ஆனாலும் சில அதிரூபர்கள்.... தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ புரிந்தோ புரியாமலோ... அந்த செயலில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பதை எப்படித் தான் சரி செய்வது.
இதயத்தை உயிரோடு இருக்கும் போதே அழுக்கு நகம் கொண்ட முரட்டு கையை விட்டு கொத்தோடு பிடுங்குவது போன்றது... இந்த கலைத்திருட்டு.
காசு திருட்டு போனால் சம்பாதித்துக் கொள்ளலாம். ஒரு கலைப் படைப்பு திருட்டு போனால்... அதே ஒன்றை அந்த கலைஞனால் கூட கண்டுபிடிக்க இயலாது. அது தான் கலையின் வடிவம். ஒரே தலைப்பில் ஒவ்வொரு முறையும் வேறு ஒன்று தான் வரும். அதே வார்த்தை அதே உணர்வு அதே தருணம் இன்னொரு முறை நிகழாது. ஆக... ஒவ்வொரு படைப்பும் அதை படைத்தவருக்கு உன்னதம். அதை நோகாமல் நோம்பி கும்பிட எப்படி மனசாட்சி இடம் கொடுக்கிறது.
நேற்று கூட எங்கூர்காரர் ஒருவர் அட்டகாசமாய் என் படைப்பை எடுத்து அவர் பேரில் பதிவிட்டு கொண்டார். அட கருமமே... அதில் என் வீட்டை பற்றி... நான் அலைந்த காட்டை பற்றி.... என் அத்தையை காட்டு மாடு முட்டியது பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன். அதை கூட.... எடிட் செய்து விட்டு பதிய வேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லையே என்று தான் ஆச்சரியமாக இருந்தது.
பொதுவான ஒரு பதிவை காப்பி அடித்தோ அல்லது திருடியோ போடுகிறோம் என்றால் கூட ஒரே சிந்தனை இன்னொருவருக்கு வராத என்று வாய் கிழிய எதிர் கேள்வி கேட்கலாம். இது ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை எழுதி இருக்கையில்... அதை எடுத்து தன் பதிவாக பதிந்து கொண்டு... எப்படி அந்த முகத்தை தன் பிள்ளைகளிடம் காட்டிக் கொள்ள முடிகிறது. வயித்துக்கு திருடுறவனை மன்னிச்சிடலாம். தன் வசதிக்கு திருடுறவனை எப்படி மன்னிக்க. ஒவ்வொரு படைப்பும் ஒரு அதி தீவிரமான உழைப்பில் இருந்து... நினைப்பில் இருந்து தான் உருவாகிறது. அதை போகிற போக்கில் எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டு அலைவது ஆபத்து. ஒரு படைப்பாளனின் சாபம் தலைமுறை தலைமுறைக்கு கழுத்தை சுற்றிய பாம்பு தான். கவனம். கன்டென்ட் திருட்டு... கவிதை திருட்டு... கதை திருட்டு.... கட்டுரை திருட்டு ஏன் என் பெயர் திருட்டு கூட நடந்ததை கண்டிருக்கிறேன். இந்த முறை நடந்தது... தன்னையே என்னை என்று நினைத்துக் கொண்டு செயலில் இறங்கி இருக்கும் ஒரு செயல் வீரரின் வெற்று கெத்து.
ஒரே நாளில் தன் சுற்றத்தில் பேர் புகழ் வாங்கி மூஞ்சியை உப்ப வைத்துக் கொண்டு கண்களில் பெருமையோடு அலைய வேண்டும்... இல்லையா. மானக்கேடு.
ஒரு கவிதை எழுதினால் அதிகபட்சம் அடுத்த மூன்று நிமிடங்களில் அதே போல கசகசவென நிதானம் இழந்து படபடப்போடு பிதற்றி கொட்டி வைக்கும் கவிஞர் பெருமக்களையும் அறிவேன். ஆனாலும் நேற்றைய ஆள் பலே கில்லாடி. கொஞ்சம் கூட வெட்கமோ சுயமோ இல்லாமல்... நினைக்கும் போதே வாமிட் தான் வருகிறது.
நாகரீகம் கருதி பெயரை இங்கே மறைக்கிறேன்.
கூடயே இருந்த முகநூல் நண்பர் ஒருவர் ஒரு முறை என் முழு கட்டுரை ஒன்றை எடுத்து தன் பதிவாகப் போட்டு விட்டு ஜாலியாக லைக் வாங்கிக் கொண்டும் சூடு சொரணையே இல்லாமல்... கமெண்ட் வாங்கி கொண்டும் இருந்தார்.
"என்னங்க இப்பிடி பண்ணிடீங்க....!?" என்றேன்.
"ஐயோ தோழர்... உங்க பேரைப் போட மறந்துட்டேன்" என்றார்.
"ரெண்டு பக்கம் இருக்கற கட்டுரையப் போட மறக்கல... மூணு எழுத்து இருக்கற என் பேரைப் போட மறந்துட்ட... இல்ல... அடிங்... செருப்பால அடிப்பண்டா... தூக்குடா அதை" என்றேன். தூக்கி விட்டார். நட்பில் இருந்து நானும் அவரைத் தூக்கி விட்டேன்.
சரி திருட்டு சாருகள் தான் தில்லாங்காடி என்றால் உடனே ஓடி வந்து ஆஹா ஓஹோன்னு கண்ணு மண்ணு தெரியாம பாராட்டும்... என்ன ஏதுன்னு ஒன்னும் படிக்காமல்.... விளங்காமல் - ஒருவரை அவருக்கு நெருக்கமான மனிதர்களுக்குமா தெரியாமல் போய் விடும்... டேய் உன் புத்திக்கு இப்பிடி எப்படி எழுத முடியும்னு ஒரு கேள்வி கேட்க மூளை வேலை செய்யாம - மாங்கு மாங்குனு கமெண்ட் போடுவதற்கென்றே பிறந்தவர்களை என்ன சொல்வது...
இனி கலைப் படைப்பை திருடுபவர்கள் ஒரு கணம் உங்கள் பிள்ளைகளை நினைத்துக் கொள்ளுங்கள். எப்படி இப்படி ஒரு வேலையை செய்து விட்டு அவர்கள் முகத்தில் விழிப்பது என்ற ஒரு கேள்வியை உள்ளே உருட்டுங்கள். திருட்டு நடக்காது.
- கவிஜி