முந்தைய பகுதிகள்:
1: பாட்டாளி வர்க்கத்தின் தேசியமும் சர்வதேசியமும்
2. தமிழ்த் தேச மக்களின் முன்னணி மீதான விமர்சனக் குறிப்புகள்
3. புதிய போராளி இதழ் முன்வைத்த நமது குறிப்பான திட்டம் (வரைவு) அறிக்கையின் மீதான விமர்சனக் குறிப்புகள்
சங்பரிவாரக் கும்பலின் அரசியல் பிரிவான பி.ஜே.பி. மோடி கும்பலின் பாசிச ஆட்சிக்கு எதிராகவும், இந்திய மார்க்சிய-லெனினிய இயக்கத்தினரிடையே குறிப்பான திட்டம் வகுப்பதில் நிலவும் இடது, வலது திரிபுகளுக்கு எதிராகவும் பாட்டாளி வர்க்க சமரன் அணி, “மோடி கும்பலின் இந்துத்துவ கார்பரேட் பாசிசத்திற்கு எதிரான தேசிய ஜனநாயகத் திட்டம்!” என்ற குறிப்பான வரைவுத் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. “குறிப்பான திட்டமே விரிவானதாக அமைந்து விட்டது” என்று அறிக்கை குறிப்பிடுவதை கணக்கில் கொண்டு அறிக்கையின் அனைத்து நிலைபாடுகளையும் ஆராயாமல் “குறிப்பான திட்டம், ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பில் மா-லெ அமைப்புகளில் தோன்றியுள்ள திரிபுவாதம்” என்ற இரண்டைப் பற்றி மட்டும் ஆராய்கிறோம்.
1. பாட்டாளி வர்க்க சமரன் அணி அறிக்கை பாட்டாளி வர்க்கத்தின் தேசிய - சர்வ தேசியக் கண்ணோட்டத்தில் மார்க்சியத்தைக் கைவிட்டு இந்தியாவை தேசம் என அழைக்கிறது. இது இந்திய ஆளும் வகுப்பு கண்ணோட்டமாகும். பாட்டாளி வர்க்கத்தின் தேசிய, சர்வதேசிய கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும் என எங்கள் அறிக்கையின் தொடர்-1 இல் தெளிவுபடுத்தியுள்ளோம்.
2. தேச உருவாக்கத்திற்கும் ஜனநாயகப் புரட்சிக்குமான உறவு குறித்து எங்கள் விமர்சனக் குறிப்பு தொடர்-1ல் தெளிவுபடுத்தியுள்ளோம். மாறாக ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, இந்திய ஜனநாயகப் புரட்சி என்று சமரன் அறிக்கை கூறுவது தவறானதாகும். இதுவரையிலான அனைத்து ஜனநாயகப் புரட்சிகளும் மொழி அடிப்படையிலேயே நடந்துள்ளன. இந்திய அளவில் ஜனநாயகப் புரட்சி என்பது சமூக அறிவியல் விதிகளுக்கு மாறானது.
3. அதிகபட்ச திட்டம், குறைந்தபட்ச திட்டம், குறிப்பான திட்டம் ஆகியன குறித்தும், அவைகளை வகுப்பதில் பங்காற்றும் அடிப்படை, முதன்மை முரண்பாடுகளை தமிழ்த் தேசியத்தில் தீர்மானிப்பதா? அல்லது பல்தேசிய இந்திய தேசியத்தில் தீர்மானிப்பதா? என்பன குறித்தும் எங்கள் அறிக்கை தொடர்-2 மற்றும் தொடர் -3 இல் தெளிவுபடுத்தியுள்ளோம். பாட்டாளி வர்க்க சமரன் அணியின் நிலைபாடுகள் பற்றிய எங்களது விமர்சனங்களும் இவையே.
4. பக்கம்-269 குறிப்பான செயல்திட்டம் பற்றி:
(அ) சமரன் அறிக்கை பாசிசத்திற்கு எதிராக இந்திய நாடாளுமன்ற, சட்ட மன்ற ஆட்சிமுறையைப் பாதுகாக்க வேண்டும் என்கிறது. மறுபுறம் நிர்வாகத் துறையை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவும், திருப்பி அழைக்கவும் வேண்டும் என்கிறது. அதாவது சட்டம் இயற்றும் அமைப்பும் அதனை நடைமுறைப்படுத்தும் அமைப்பும் தேர்ந்தெடுக்கப்படவும், திருப்பி அழைக்கப்படவும் வேண்டும் என்கிறது. இது முரண்பாடானது. நாடாளுமன்ற, சட்டமன்ற ஆட்சிமுறை முதலாளியத்திற்கானது. இந்திய நாடாளுமன்ற, சட்ட மன்றங்களும் இந்திய ஆளும் வர்க்கம் மக்களுக்கு அதிகாரம் இருப்பது போன்ற தோற்றத்தை தருவதற்காக உருவாக்கப்பட்ட அதிகார வர்க்க இரட்டை ஆட்சிமுறையாகும். பாட்டாளி வர்க்கம் இந்த அதிகார வர்க்க ஆட்சிமுறையை ஏற்றுக் கொள்வது இல்லை. அதற்கு மாற்றாக பெரும்பாலான மக்களுக்கு அதிகாரம் வழங்கும் சோவியத் வடிவிலான ஆட்சி முறையைத்தான் ஏற்றுக் கொள்கிறது. சோவியத் ஆட்சி முறைதான் சட்டம் போடும் அமைப்பும், அதனை நடைமுறைப்படுத்தும் அமைப்பும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும், திருப்பி அழைக்கப்படவும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கக் கூடியதாகும். ஆனால் சமரன் அறிக்கை இரண்டையும் சேர்த்து குழப்புகிறது. பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பான திட்டத்தில் தனது அரசு எவ்வாறு இருக்க வேண்டும் என தெளிவுப்படுத்த வேண்டுமே தவிர முதலாளிய அரசு முறையும், பாட்டாளிய அரசு முறையும் கலந்து முன்வைப்பது தவறானதும், ஆளும் வர்க்கங்களுக்கு அடிபணிவதும் ஆகும்.
ஆ) புதிய ஜனநாயகப் பொருளாதாரத்திற்கு மாற்றாக குறிப்பான பாசிச சூழலில் ஒரு இடைக்கால பொருளியல், அரசியல் திட்டத்தை முன்வைப்பது அவசியம் என்கிறது (பக்கம் 269) சமரன் அறிக்கை. இது சரியானதே. அதே நேரத்தில் இது ஒரு இடைக்கால பொருளியல் திட்டம் எனக் குறிப்பிட்டாலும் சமரன் அணி புதிய ஜனநாயகப் பொருளாதாரத் திட்டத்தையே முன் வைத்துள்ளது. குறைந்தபட்ச திட்டத்தில் ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் ஒழித்துக் கட்டுவதாக இருக்கும். குறிப்பான திட்டத்திலோ அவற்றினைக் கட்டுப்படுத்துவதாக இருக்கும். அதாவது ஏகாதிபத்திய சுரண்டலை, மூலதனங்களை கட்டுப்படுத்துவதாகவும், நிலவுடமைக்கு வரம்பு கட்டுவதாகவும் இருக்கும். ஆனால் அறிக்கையோ ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் ஒழித்துக் கட்டுவதாக கூறுகிறது. (எகா.) பக்கம் 275இல் “3.2 நிலப்பிரபுகளின் நிலங்களைப் பறிமுதல் செய்து அவர்களது அதிகாரத்தை ஒழித்து, அரசாங்க ஆதரவுடன் கூட்டுப் பண்ணை விவசாயத்தை உருவாக்குதல். நிலவுடைமை இல்லாத பகுதிகளில் விவசாயிகளின் நிலங்களை கூட்டுப் பண்ணை முறையில் அரசு ஆதரவுடன் விவசாயத்தை மேற்கொள்வது. அங்கு பாசிச எதிர்ப்பு விவசாயிகள் சங்கங்களின் அதிகாரத்தை நிறுவுதல்” என்றும்,
பக்கம் 272இல் “அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலதனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து அரசுடமை ஆக்குவோம்” என்றும் கூறுகிறது. இவ்வாறாக குறைந்தபட்ச திட்டத்தின் கோரிக்கைகளை குறிப்பான திட்டத்தின் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
(இ) “கீன்சிய மற்றும் சமூக நல அரசு திட்டமானது ஏகாதிபத்திய சீர்திருத்த நோக்கத்திலிருந்து உருவாக்கப்பட்டதே ஆகும். அது சோசலிசத்திலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக கொண்டு வரப்பட்ட கொள்கைகளே ஆகும்.” (பக்கம் 269) என்றும், “இவற்றை வர்க்கப் போராட்டத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு அத்தகையத் திட்டங்களைப் பரீசலிப்பது இன்றைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்” (பக்கம் 270) என்றும் சமரன் அறிக்கை கூறுகிறது. இது நமது நாட்டிற்கு ஏற்ப தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்ட வேண்டும் என்பதிலிருந்து நம்மைத் தடுக்கிறது. அரசியல் பொருளாதார அரங்கில் என்ன செய்ய வேண்டும்? என்பதை எங்கள் அறிக்கையில் தெளிவுபடுத்த இருக்கிறோம்.
5. ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பில் மா-லெ அமைப்புகளில் இடது வலது திரிபு பற்றி :
மார்க்சிய –லெனினிய இயக்கத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டி எழுப்புவதற்கு இடது, வலது திரிபு தடையாக உள்ளதாக அறிக்கை பக்கம் 219இல் கூறுகிறது. இது தவறானது. ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி அல்ல, பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியே கட்ட இருக்கிறோம்.
தமிழ்த் தேசியம் பேசும் பல மா-லெ குழுக்கள் வலது சந்தர்பவாதத்தைக் கொண்டிருப்பதாகவும், இன்றைய உலக சூழலில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி பொருந்தாது, புதிய ஜனநாயகப் புரட்சித் திட்டத்தையே அமுல்படுத்த வேண்டும் எனக் கூறும் ம.ஜ.இ.க இடது சந்தர்ப்பவாதத்தைக் கொண்டிருப்பதாகவும் அறிக்கை பக்கம் 219,220 இல் கூறுகிறது.
சமரன் அணி கண்ணோட்டத்திலான விமர்சனம் சாராம்சமாக இரண்டு தவறுகளைக் கொண்டு இருக்கிறது. ஒன்று. தானே குறைந்தபட்ச திட்டத்திற்கும், குறிப்பான திட்டத்திற்கும் வேறுபாடு தெரியாமல் குழப்புகிறது. இரண்டு. தமிழ்த் தேசிய அமைப்புகள் ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கைவிடுவதாக குற்றம் சுமத்துகிறது. சமரன் அணி “இந்தியாவில் பாசிசத்தை எதிர்ப்பது என்றாலே அது இயல்பாகவே ஏகாதிபத்தியத்தையும் நில உடமை முறையையும் எதிர்த்த போராகவே உள்ளது”, (2021, 16வது தமிழக சட்டமன்றத் தேர்தல் வெளியீடு பக்கம் 106), என்றும், மேலும் “பிற ஏகாதிபத்திய மற்றும் பெரும் தரகு முதலாளித்துவ வர்க்கங்களை கட்டுப்படுத்துவதையும் நாட்டின் இறையாண்மையையும், ஜனநாயகத்தையும் உருவாக்கக்கூடிய ஏகாதிபத்திய எதிர்ப்பில் நமது பொதுத் திட்டத்தில் விட்டுக் கொடுப்பதன் மூலம் குறைந்த பட்ச திட்டத்தை குறிப்பான திட்டமாக முன்வைத்து பிரதான எதிரிக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்.” (மேற்படி தேர்தல் வெளியீடு பக்கம் 107) என்றும் கூறுகிறது.
நமது பொதுத் திட்டத்தில் விட்டுக் கொடுப்பதன் மூலம் என்பதற்கு பொருள் என்ன? இது குறித்து அறிக்கை தெளிவுப்படுத்தவில்லை. அதனால் தான் “குறைந்த பட்சத் திட்டத்தை குறிப்பான திட்டமாக முன்வைத்து” என எழுதுகிறது. பொதுத் திட்டத்தில் விட்டுக் கொடுப்பதைப் பற்றி அறிக்கை கூறுகிறதே தவிர எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. அதனால் தான் குறிப்பான திட்டத்திலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், நிலபிரபுத்துவத்தையும் வீழ்த்துவதாக சூளுரைக்கிறது. இது குறைந்த பட்ச திட்டத்தின் கோரிக்கை என்பது கூட அதற்குத் தெரியவில்லை. குறைந்த பட்ச திட்டத்திலும் குறிப்பான திட்டத்திலும் ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் எப்படி கையாள வேண்டும் என்பற்கான வேறுபாட்டை எங்கள் விமர்சனக் குறிப்பு 4 (ஆ) வில் தெளிவுபடுத்தியுள்ளோம். இவ்வாறான தவறு குறிப்பான திட்டத்தில் அணி திரட்ட வேண்டியது பாசிச எதிர்ப்பு ஆளும் வர்க்கப் பிரிவுகளை பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்குள் வருவதை தடுத்து, பாசிச முகாமிற்கு தள்ளி விடவே பயன்படும். அதேபோல் ஏகாதிபத்தியங்களிடையிலான முரண்பாடுகளை பயன்படுத்திக் கொள்வதில் தடைகளை ஏற்படுத்தும்.
6. அடிப்படை, முதன்மை முரண்பாடுகளைக் கணிப்பது பற்றி தொடர் -3ல் புதிய போராளிக்கான விமர்சனக் குறிப்பில் விளக்கி இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். அடிப்படை முரண்பாடு உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்குமான முரண்பாடுகளில் இருந்து தீர்மானிக்கப்படுகிறது. முதன்மை முரண்பாடு அரசியல் அதிகாரத்தில் ஏற்படும் மாற்றங்களில் வர்க்க அணி சேர்க்கையில் இருந்து தீர்மானிக்கப்படுகிறது. அப்படிதான் இன்றைய முதன்மை முரண்பாடாக பாசிச எதிர்ப்பு முன்னணி முன் வைக்கப்படுகிறது. இப்படியான தெளிவு சமரன் அறிக்கையில் இல்லை. சமரன் அறிக்கையானது பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்ட வேண்டும் எனக் கூறிக் கொண்டே “உலகமயம், தனியார்மயம் அமுல்படுத்திய பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், நாட்டிற்கும் உள்ள முரண்பாடே முதன்மை முரண்பாடாக மாறியுள்ள சூழலில் அமெரிக்க கார்பரேட்டுகள் மற்றும் பெரும் அதிகார வர்க்க சூறையாடும் தரகு முதலாளியத்தால் வழி நடத்தப்படும் பாசிசத்தை எதிர்த்த போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் பேராட்டமே. அதற்கு உட்பட்டே ஜனநாயகத்திற்கான போராட்டத்தை திட்டமிட வேண்டி உள்ளது”. (16வது தமிழக சட்டமன்றத் தேர்தல் வெளியீடு பக்கம் -106) என்றும் எழுதுகிறது. இவ்வாறு தானும் குழம்பிப் போய் பிறரையும் குழப்புவதாக இருக்கிறது என்பதற்கு இதைவிட எடுப்பான சான்று வேறு தேவையில்லை.
எனவே ம.ஜ.இ.க-விற்கும் பாட்டாளி வர்க்க சமரன் அணிக்குமான வேறுபாடு என்பது: இன்றைய உலக சூழலில் குறிப்பான திட்டம் தேவை இல்லை, குறைந்த பட்ச திட்டமே போதும் என்பது ம.ஜ.இ.க-வின் நிலையாகவும், பாசிச எதிர்ப்பு முன்னணி கட்டப்படுவதும், அதற்குரிய குறிப்பான திட்டம் ஒன்று தேவை என்பதும் பாட்டாளி வர்க்க சமரன் அணியின் நிலையாகவும் இருக்கிறது. ஆனால் பாட்டாளி வர்க்க சமரன் அணியின் குறிப்பான திட்ட வரையறுக்களை பரிசீலிக்கும் போது அவைகள் அனைத்தும் குறைந்தபட்ச திட்டத்திற்கான தன்மைகளைக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. குறிப்பான திட்டத்திற்கான பண்புக் கூறுகளுடன் இவைகள் இல்லை.
7. 16வது தமிழக சட்டமன்றத் தேர்தல் வெளியீடு பக்கம் 109 இல் “ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலவுடைமை எதிர்ப்பு, புதிய ஜனநாயகப் புரட்சியானது” எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஏகாதிபத்தியத்தையும், நிலவுடைமையையும் எதிர்த்து ஜனநாயகப் புரட்சி நடைபெறுவதாக அறிக்கையின் விளக்கம் அமைகிறது. ஆனால் ஜனநாயகப் புரட்சி என்பது ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்து மொழி தேசிய அடிப்படையில் தேச உருவாக்கமாகவும் நடைபெறுகிறது. இதனை எங்கள் அறிக்கையின் தொடர்-1 இல் லெனின், ஸ்டாலின் கருத்துக்களைக் கொண்டு உறுதிபடுத்தியுள்ளோம். எனவே தமிழ்த் தேசிய மா-லெ அமைப்புகள், குறைந்தபட்ச மற்றும் குறிப்பான திட்டங்களை தமிழக அளவில் கொண்டிருப்பது அவசியமானது. தமிழ்த் தேசிய மா-லெ அமைப்புகள் தங்களது சரியான அரசியல் வழியை செயல்படுத்துவதில் வேண்டுமானால் இடது, வலது தவறுகள் இழைக்க வாய்ப்பு இருக்கலாம். தமிழ்த் தேசிய மா-லெ அமைப்புகளின் இத்தகைய விலகல்களை பாசிச எதிர்ப்பு முன்னணிக்கான அவர்களின் குறிப்பான திட்டங்களை, வேலைமுறைகளை தனித்தனியாக ஆராய்ந்தே முடிவு செய்ய முடியும். எனவே, ஏகாதிபத்தியங்களை கட்டுப்படுத்துவது (ஒழித்து கட்டுவது அல்ல) என்பதுடன் இணைந்து பாசிச எதிர்ப்பு முன்னணி ஒன்றைக் கட்டுவதும் அதற்கான போராட்டத்தை முதன்மைப்படுத்துவதும் அவசியமாகிறது. எனவே, சமரன் அறிக்கை தமிழ்த் தேசிய மா-லெ அமைப்புகளே பொதுவாக வலது திரிபு கொண்டது எனக் கூறுவது தவறானதும், அடிப்படை ஆதாரமற்றதும் ஆகும்
8. இந்தியாவை ஏகாதிபத்தியம் என்பது குறித்து:
தமிழ்த் தேசிய மா-லெ அமைப்புகள் பெரும்பாலும் இந்தியாவை ஏகாதிபத்தியமாகவே வரையறுத்துள்ளன. காரணம் இந்திய அரசு பல்வேறு தேசிய இனங்களின் அரசுரிமையை மறுக்கும் ஏகாதிபத்திய பண்பைக் கொண்டிருப்பதே. இது அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்றாகும். இறையாண்மை மற்றும் அரசுரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் இந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலமாகத்தான் தங்களது ஜனநாயகப் புரட்சிக் கடமைகளை நிறைவு செய்ய இயலும். இந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தங்களது ஜனநாயகப் புரட்சித் திட்டத்தை தேசியப் புரட்சி என்ற வடிவத்தில் முன்னெடுப்பதால் உலக ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை, மூலதனங்களை ஏற்றுக் கொள்வதாக சமரன் விளக்கப்படுத்துவது தவறானது.
இந்திய அரசு தேசிய அரசுரிமைகளை மறுத்து விரிவாதிக்கப் பண்பு கொண்டிருப்பதால் இந்தியாவை ஒரு துணை ஏகாதிபத்தியம் என அழைக்கலாம் (பக்கம்-231) என்றும்; (16வது தமிழக சட்டமன்ற தேர்தல் வெளியீடு பக்கம்-16) 'புதிய காலனிய ஆதிக்கத்திற்கான புதிய வகை இராணுவக் கட்டமைப்பை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கியுள்ளனர். அமெரிக்க ஐரோப்பிய அட்லாண்டிக் கூட்டணியின் புதிய ஏகாதிபத்தியம் என்பது பொருளதாரத் தடைகள் விதிப்பது அல்லது குண்டு மழை பொழிந்து செய்தாலும், தேசிய அரசுகளை அவர்களின் புனிதமான இறையாண்மையை அகற்றும் புதிய ஏகாதிபத்திய வடிவமாகும்" என்றும் சமரன் அணி கூறுகிறது. 'துணை ஏகாதிபத்தியம்' என்பதிலும் 'புதிய ஏகாதிபத்திய வடிவம்' என்பதிலும் சாராம்சமாக தேசிய அரசுரிமையை மறுக்கும் பண்பு பிரதிபலிப்பதைக் காணலாம். சமரன் அறிக்கை உட்பட பெரும்பாலான இந்திய மா-லெ அமைப்புகளின் நிலைபாடு அண்டை நாடுகளின் அரசுரிமையை மறுக்கும் இப்பண்பினால் இந்தியாவை துணை ஏகாதிபத்தியம் என்றே அழைக்கின்றன. தமிழ்த் தேசிய மா-லெ குழுக்கள் வரையறை செய்வதற்கும், இந்திய மா-லெ அமைப்புகள் இந்தியாவை துணை ஏகாதிபத்தியம் என வரையறை செய்வதற்கும் அரசுரிமையை மறுப்பது என்ற வகையில் எந்த வேறுபாடும் இல்லை.
9. பாராளுமன்ற ஜனநாயக அரசு வடிவம் பற்றிய பாட்டாளி வர்க்க அணுகுமுறை:
பாராளுமன்ற ஆட்சி முறை இரசியப் புரட்சிக்குப் பிறகு வரலாற்று வழியில் ஒழிக்கப்பட்டாலும், அரசியல் வழியில் நீடித்தே வருகிறது. அதனை அரசியல் வழியில் ஒழித்துக் கட்டுவதற்கும் பாராளுமன்ற ஆட்சிமுறை மீதான் மக்களின் நம்பிக்கையை களைவதற்கும், அதன் இரட்டைத் தனத்தை, மக்கள் விரோத ஆளும் வர்க்க சார்பு தன்மைகளை தேர்தலில் பங்கேற்பதன் மூலம் அம்பலப்படுத்தலாம் என லெனின் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு வழிகாட்டினார். மேலும் பாராளுமன்ற ஆட்சி முறைக்கு மாற்றாக சோவியத் ஆட்சி முறையை முன் வைத்தார். ஆனால் பாட்டாளி வர்க்க சமரன் அணியோ எந்த ஒரு பாட்டாளி வர்க்க அரசியல் முறை பற்றிய மாற்றும் இல்லாமல் முதலாளிய கண்ணோட்டத்திலிருந்து தேர்தலில் பங்கேற்பதை முன்வைத்துள்ளது. இக்கண்ணோட்டமானது பாட்டாளி வர்க்க இயக்கத்தை பாராளுமன்ற திரிபுவாதக் கட்சியாக மாற்றுவதில் மட்டுமே கொண்டு போய் நிறுத்தும். இப்படித்தான் CPI, CPI(M), CPI(ML) லிபரேசன், CPI(ML) ரெட் ஸ்டார் போன்ற கட்சிகள் பாராளுமன்ற திரிபுவாதத்தில் வீழ்ந்தன.
தமிழ்த் தேச இறையாண்மையைப் பொறுத்த அளவில் மா-லெ அமைப்புகள் தமிழ்த் தேசிய மா-லெ அமைப்புகளா? அல்லது இந்திய தேசிய மா-லெ அமைப்புகளா? என்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஏனெனில் தமிழ்த் தேசிய விடுதலைப் புரட்சிக் கட்டத்தில் பாசிசம் என்பது இடைமறிப்பதால் இடைக்காலப் புரட்சி அரசு ஒன்றை அமைப்பதன் மூலமே இவ்விடைக் கட்டத்தை கடந்து செல்ல முடியும். இவ்விடைக்கால பாசிச எதிர்ப்பு தமிழ்த் தேசிய அரசு இந்திய தேசியக் கண்ணோட்டம் கொண்டவர்களையும், தமிழ்த் தேசியக் கண்ணோட்டம் கொண்டவர்களையும் கொண்ட ஜனநாயக அரசாகவே இருக்கும். எனவே பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பான திட்டம் இடது, வலது திரிபுகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதிலேயே முழுகவனமும் செலுத்துவது அவசியமாகிறது. இதுதான் தேசிய, சர்வதேசிய அளவில் நட்பு, பகை மற்றும் நடுநிலை சக்திகளைக் கண்டறியவும். அவற்றிற்கிடையிலான நலன்களை சரியாக அடையாளம் காணவும், உடனடி எதிரிகளை வீழ்த்தி பிற அனைத்து பாசிச எதிர்ப்பு வர்க்கங்களை ஒரே குடையின் கீழ் அணிதிரட்டவும் வழி வகுக்கும்.
இந்நேரத்தில் பாரீஸ் கம்யூன் படிப்பினைகள் குறித்து லெனின் தொகுத்துக் கூறியது பயனுள்ளதாக இருக்கிறது. 'புரட்சிகரமான கம்யூனைப்' பற்றி ஒரு தொழிலாளி கேட்டால் மாநாட்டுக்காரர் என்ன பதில் அளிப்பார்? (மாநாட்டுகாரர் என்பது மென்சுவிக்குகளைக் குறிக்கும் - நாம்) வரலாறு கண்ட ஒரு குறிப்பிட்ட தொழிலாளர் அரசாங்கத்தின் பெயர் இது, இந்த அரசாங்கம் ஜனநாயகப் புரட்சியின் அம்சங்களையும் சோசலிசப் புரட்சியின் அம்சங்களையும் வேறுபடுத்திப் பார்க்க திறனற்றிருந்தது, அக்காலத்தில் இவ்வாறு பார்த்திருக்கவும் முடியாது. அந்த அரசாங்கம் குடியரசுக்காகப் போராடும் பணிகளை சோசலிசத்துக்காகப் போராடும் பணிகளோடு போட்டுக் குழப்பிக் கொண்டது, அது வெர்சேயை எதிர்த்து வலுவான இராணுவத் தாக்குதலைத் தொடங்கச் சக்தியற்றிருந்தது, பிரெஞ்சு தேசிய வங்கியைக் கைப்பற்றிக் கொள்ளாமல் விட்டதில் தவறு செய்தது - முதலியவற்றைத்தான் அவர் அந்தத் தொழிலாளிக்குக் கூறியிருக்க முடியும். சுருங்கச் சொன்னால். உங்கள் விடையில் பாரீஸ் கம்யூனைக் குறிப்பிட்டாலும் சரி, வேறெந்த கம்யூனைக் குறிப்பிட்டாலும் சரி, உங்கள் விடை இப்படித்தான் இருக்கும்: நம் அரசாங்கம் போன்ற ஒன்று இருக்கக் கூடாத மாதிரியில் அமைந்த ஓர் அரசாங்கம், என்று. அருமையான பதில், உண்மைதான்! ஒரு தீர்மானம் கட்சியின் நடைமுறை வேலைத் திட்டத்தைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் பொருத்தமின்றி வரலாற்றிலிருந்து பாடங்களை கொடுக்கத் தொடங்கும்போது இது புரட்சியாளரின் ஏட்டுப் புலமையைச் சார்ந்த உபதேசம் செய்யும் போக்கையும் செயல் திறமின்மையையும் காட்டவில்லையா? நம்மீது வெற்றியின்றி சுமத்திய அதே தவற்றை - அதாவது “கம்யூன்கள்” எவையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாமற்போன ஜனநாயகப் புரட்சியையும் சோசலிசப் புரட்சியையும் போட்டுக் குழப்பிக் கொள்வதை - இது வெளிப்படுத்த வில்லையா? (ஜனநாயகப் புரட்சியில் சமூக – ஜனநாயக வாதத்தின் இரண்டு போர்த் தந்திரங்கள் - தேர்வு நூல்கள் தொகுதி -3 பக்கம் 120 – 121 மாஸ்கோ வெளியீடு).
எனவே, குறைந்தபட்ச திட்டத்திற்கும், குறிப்பான திட்டத்திற்குமான அரசியல், பொருளாதார, அயலுறவு மற்றும் பிற பண்பாட்டு மேல் கட்டுமான அம்சங்களைக் கொண்ட திட்டம் வகுப்பதில் உள்ள வேறுபாடுகளைக் கற்றறிவது முக்கியமானது என்பதற்காகவே லெனினது மேற்கோளை காட்டியுள்ளோம். அதுதான் அணி சேர்க்க வேண்டியவர்களையும், அணி சேர்க்கக் கூடாதவர்களையும் பிரித்தறிந்து செயல்படுவதற்கு வழிகாட்டுகிறது.
நமக்கான ஒற்றுமை என்பது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி மோடி கும்பலின் பாசிசத்தை எதிர்த்த போராட்ட ஒற்றுமையே ஆகும். பாசிசத்தை வீழ்த்துவதற்கான குறிப்பான திட்டம் ஒன்றை வகுப்பதற்கும், முன்னெடுப்பதற்குமாகவே ஒன்றுபடுகிறோம். எனவே குறிப்பான திட்டத்தில் இடது, வலது தவறுகளைத் தவிர்ப்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மற்ற வேறுபாடுகள் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் போக்கிலே களைந்து கொள்ள இயலும். ஏனெனில் நடைமுறை என்பது நமது புரிதலில் ஏதேனும் போதாமை இருப்பின் அது பற்றி உணர்வதற்கு அனைத்து வாய்ப்புகளும் கொண்டதாகும்.
(தொடரும்...)
- ச.பாரி, தமிழ்த் தேச இறையாண்மை