Stop Asian Hateபொதுவாக அமெரிக்கா முழுவதும் ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே வகையான உணவு முறை இருப்பதாக ஒரு பொதுவானக் கருத்து உலக முழுவதும் காணப்படும். இதேபோல் அமெரிக்காவில் கருப்பின - வெள்ளை நிறவெறி வேறுபாடுகள் மட்டுமே அங்கு தலைதூக்கி (Racial problem) இருக்கிறது என்ற சிந்தனைகள் பல மக்களிடத்தில் இருப்பதையும் நாம் அறியமுடியும்.

ஆனால், கருப்பு வெள்ளை நிறவெறி வேறுபாடுகள் தவிர்த்து ஆசியர்கள் மீதான இனவெறியும் பல காலமாகவே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அது பரவலாக உலகிற்கு தெரியாமல் கடந்து சென்று விடுகிறது.

உலகில் பல்வேறு நாடுகளை சார்ந்த மக்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கிடையே பலதரப்பட்ட மொழிகள் வெவ்வேறு கலாச்சாரங்கள் வெவ்வேறு உணவு முறைகள் காணப்படுகின்றன.

இவ்வாறு பல்வேறு கலாச்சாரங்களை ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட நாட்டு மக்கள் மீது வெறுப்புப் பிரச்சாரம் செய்வது அல்லது அவர்கள் மீது தனிநபர் தாக்குதல் நடத்துவது கடந்த ஓராண்டு காலமாக அதிகரித்து வருகிறது.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மக்களை வெறுப்பதற்கு ஆங்கிலத்தில் xenophobia என்று அழைக்கப்படுகிறது (Dislike of people from other countries). அதுவும் குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்க ஆசியர்கள் (Asian American) மீது இந்த இனவெறித் தாக்குதல் குறி வைத்து நிகழ்த்தப்படுகிறது.

அமெரிக்க ஆசியர்கள் என்று எடுத்துக்கொண்டால் சீனா, தென் கொரியா, ஜப்பான், தெற்காசிய நாடுகளில் தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டு மக்கள் இதற்கு ஆளாகின்றனர்.

இதுவும் ஒருவகை தவறான கருத்துக்கள் வெளிவந்ததன் மூலமாக அதிகம் பேசப்பட்டது. கொரோனா தொற்று சீனாவால் ஏற்ப்படுத்தப்பட்டு உலக முழுவதும் பரவ காரணமாக அமைந்தது என்ற உண்மைக்கு மாறான செய்திகள் பரவியதே காரணம்.

அதுவும் அதிகாரத்தில் உச்ச வரம்பில் இருப்பவர் கூறினால் எப்படி இருக்கும்? முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது நேரடியாக இதை "சீன வைரஸ், வூஹான் வைரஸ்" என்றே குறிப்பிட்டார்.

இப்படி கொரோனா வைரஸ் அமெரிக்காவுக்கு வரக் காரணம் சீனர்கள் தான் என்ற ஒரு மனநிலை பல மக்களிடத்தில் இருந்தது. கடந்த ஓராண்டில் மட்டும் கிட்டத்தட்ட 3,800 குற்ற சம்பவங்கள் ஆசிய அமெரிக்க மக்களுக்கு எதிராக நடந்திருக்கிறது என்கிறது Stop AAPI (American and pacific islander in USA) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம். பல ஆசிய அமெரக்க மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்குப் பயமாக இருக்கிறது என்கிறார்கள். அவர்கள் நடத்திவரும் உணவகங்களுக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.

மார்ச் 2020 -ல் தான் இத் தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் பதிவுசெய்த முதல் சம்பவம் ஒரு ஆசியக் குழந்தைக்கு எதிராக நிகழ்ந்த வெறுப்பு பேச்சு ஆகும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில் அமெரிக்க ஆசியக் குழந்தையை உடல் ரீதியான தாக்குதலுக்கும் மனரீதியான தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளது. "நீ கொரோனா வைரஸை பரப்புகிறாய்.

நீ சீனாவுக்கு திரும்பிப் போ" என்று பிற குழந்தைகள் பேசியிருக்கிறார்கள். உண்மையில் அந்த குழந்தை சீனாவை சார்ந்தவர் இல்லை. 2020 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற அந்த சமயத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவுதல் ஆரம்பிக்கவில்லை.

இனவெறி உளவியல்:

இனவெறி தாக்குதல்கள் அமெரிக்காவுக்குப் புதிதல்ல. அதுவும் ஒரு குறிப்பிட்ட நோய் பரவுதல் காரணமாகச் சில நாட்டு மக்களுடன் தொடர்பு இருப்பதாக பல ஆண்டுகளாக ஒரு மனப்பான்மை நிலவுகிறது என்பதே உண்மை. MARS, SARS போன்ற வைரஸ் பரவிய போது சீனர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறினர்.

எபோலா வைரஸ் பரவிய போது ஆப்பிரிக்க மக்களுக்குத் தொடர்பு இருப்பதாக கூறினர். Hemochromatosis celtic disease பரவிய போது அதை ஐரிஷ் மக்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறினர். இஸ்ரேல், இத்தாலி, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் மக்கள் Tuberculosis (TB) நோயைப் பரப்புவதாக கூறினர்.

இப்படி பல்வேறு நோய் பரவலுக்கு அமெரிக்காவுக்குக் குடியேறிய மக்களே காரணம் என்ற ஒரு பொதுப்புத்தி நிலவுகிறது. இந்த வகையில் தான் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதற்குக் காரணம் சீனர்கள் இருக்கக் கூடும் என்ற மூட நம்பிக்கைகள் அமெரிக்காவில் இருக்கிறது, அதுமட்டுமல்ல உலகெங்கும் இந்த சூழல்தான் நிலவுகிறது என்பதே உண்மை.

வரலாற்று ஆய்வாளர் Erica lee அவர்கள் Short wave என்ற வானொலி நிகழ்ச்சியில் கூறியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கக் காலகட்டத்தில் சீனாவிலிருந்து பல மக்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள மாகாணத்தில் அதிகம் குடியேறத் தொடங்கினார்கள்.

அப்போது மிகக் குறைந்தச் சம்பளத்தில் ரயில் இருப்புப்பாதை அமைப்பதிலும், சுரங்கப் பணியில் வேலை செய்பவர்களாக இவர்கள் இருந்தார்கள். இதே காலகட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்துக் குடியேறிய மக்களும் சீனர்களுடன் இணைந்து வேலை செய்யும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அப்போதே சிறு சிறு மோதல்கள் அவர்களுக்குள் நிகழ்ந்திருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்த சைனா டவுன் பகுதியில் இருந்து பிளேக் நோய் பரவியதாகப் புரளி கிளம்பியிருக்கிறது. உடனடியாக சான் பிரான்சிஸ்கோ நகர உள்ளூர் அரசு சைனா டவுன் பகுதியில் உள்ள மக்களை தனிமைப் படுத்தி இருக்கிறது.

அதோடு சைனா டவுன் அருகில் இருந்த வெள்ளையர்களை அங்கிருந்து வெளியேற்றி இருக்கிறது சான் பிரான்சிஸ்கோ மாநகர நிர்வாகம். அவர்கள் மீது ஒரு சந்தேக மனப்பான்மை பிற அமெரிக்க மக்கள் மத்தியில் நிலவியது.

பொதுவாக சீனர்கள் என்றாலே அவர்கள் நாய், எலி, பாம்பு போன்ற விலங்குகளின் உணவை விரும்பி உண்ணும் பழக்கம் கொண்டவர்கள், இதனாலயே குடியேறிய சீனர்கள் நோயினை சீனாவில் இருந்து கொண்டு வர வாய்ப்புள்ளது என்ற உளவியல் அமெரிக்காவில் போலியாகக் காணப்படுகிறது.

நன்றி: (https://www.npr.org/2020/03/09/813700167/as-coronavirus-spreads-racism-and-xenophobia-are-too)

அமெரிக்க வாழ் ஆசியர்களுக்கு மன ரீதியான துன்புறுத்தல் ஒருபுறம் நிகழ்ந்துக் கொண்டிருக்க இந்த மாதம் (மார்ச் 19,2021) ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் உள்ளே புகுந்த வெள்ளை நிறவெறி நபர் அங்கு பணியாற்றிய ஆறு பெண்களை சுட்டுப் பொசுக்கினான்.

பலியான ஆறு பெண்களும் ஆசிய நாடுகளை சார்ந்தவர்கள் ஆவர். இதற்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்ததால் இந்த சம்பவம் நேரடியாக அதிபரின் கவனத்திற்கு வந்தது. 'அமெரிக்காவில் Xenophobia அதிகரித்து வருகிறது. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.

துப்பாக்கி ஏந்திக் கொண்டு அச்சுறுத்தும் கலாச்சாரம் அமெரிக்காவுக்கு புதிதல்ல. இப்படி துப்பாக்கி மூலம் வன்முறைகளை நிகழ்த்தும் நபர்களை விசாரணையின் இறுதியில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் என்பதுதான் சோகமான செய்தி. வெறுப்பு அரசியலின் உச்சம் தான் இதுபோன்ற துப்பாக்கி சுடுதல் சம்பவங்கள்.

கொரோனா வைரஸ் தோற்றம்:

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில் இருந்தே இதனை சீனாவுடன் தொடர்புப் படுத்தி புரளிகள், போலிச் செய்திகள் போன்ற வெறுப்பு அரசியலை பலர் பதிவிடும் போக்கை காண முடிந்தது. இவ்வகையான புரளிகளுக்கு Fact check என்பது மிகவும் அவசியம்.

சீனாவில் பரவத் தொடங்கிய வைரஸ் முதலில் டெஸ்ட் லேப்பில் இருந்து தான் பரவியது என்ற தகவலில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை உலகிற்குக் காட்ட உக்ச் சுகாதார நிறுவனம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியது. அதில் முதற்கட்டமாக கொரோனா வைரஸ் Wuhan நகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட சோதனை நிலையத்தில் இருந்து தான் பரவியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றது.

(A leak from the lab in wuhan was considered to be an extremely unlikely pathway - WHO press release) 'அது Wet market என்றழைக்கப்படும் வன விலங்குகளின் இறைச்சியை நம் கண்முன்னே வெட்டிக் கொடுக்கும் சந்தையிலிருந்து விலங்குகள் மூலமாக மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் (possible) என்ற கருத்தை வெளியிட்டது. எனினும் இது கடைசி முடிவு அல்ல தொடர்ந்து ஆய்வுகள் செய்து வைரஸின் தோற்றத்தைக் கண்டறிந்து முடிவுகளைத் தெரிவிப்போம்' என்றது.

உலக சுகாதார நிறுவனம் அமைப்பின் முடிவுகளை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நோய் பரவுவதற்கு ஒரு குறிப்பிட்ட நாட்டு மக்களேக காரணம் என்று சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த பொதுமக்களுக்கு முறையான உளவியல் சார்ந்த சிந்தனைகளை அந்தந்த நாடுகள் வழங்க வேண்டும்.

ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து செய்திகள் படித்துக் கொண்டிருக்கும்போது இந்தியாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது. 2012 -ல் இந்தியாவின் பெருநகரங்களில் வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக நடைபெற்ற ஒரு சம்பவத்தை நாம் நினைவுபடுத்த வேண்டும். 2012ல் வாட்ஸ் அப் செயலி எதுவும் இல்லை.

ஆனால் MMS என்று அழைக்கப்பட்ட வீடியோக்கள் மூலமாக வெறுப்புப் பிரச்சாரம் நாடு முழுவதும் பரவியது. குறிப்பாக பெங்களூர், கொச்சி, சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் இருந்து வடகிழக்கு மாநில மக்கள் சாரைசாரையாக அவர்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

இன்றளவும் வடகிழக்கு மாநிலத்து மக்களைப் பார்க்கும் போது அவர்களை இந்தியர்களாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பலர் இடத்தில் இல்லாமல் இருப்பது தான் உண்மை.

வெகுஜன மக்கள் குடியேறிய ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட நாட்டு மக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களுக்கு எப்படி xenophobia என்று அழைக்கிறார்களோ, அதேபோல் சொந்த நாட்டுக்குள்ளேயே தன் சொந்த மக்களை வெறுப்புடன் பார்க்கும் மனநிலையை நாம் எவ்வாறு குறிப்பிடுவது என்று தெரியவில்லை?.

இதே வரிசையில் இன்றளவும் இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள், பழங்குடியினர் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதுவும் ஒருவகை வெறுப்பு மனநிலை நோய் என்றே குறிப்பிடலாம்.

(நன்றி: https://www.sciencefriday.com/segments/mental-health-racism/)

- பாண்டி

Pin It