கார்ல் மார்க்ஸ§ம் (1818-1883) பிரெடெரிக் எங்கெல்ஸ§ம் (1820-1895) புரட்சிகரச் சிந்தனையிலும் போராட்டங்களிலும் ஈடிணையற்ற சாதனைகள் செய்தவர்கள். அவர்களது எழுத்துகள் இன்றுவரை திரும்பத் திரும்ப வாசிக்கப்படுகின்றன. அதனால்தான் உலகம் முழுவதிலும் அவர்களது நூல்களுக்குப் புதிய பதிப்புகளும், மொழியாக்கங்களும் வந்துகொண்டே உள்ளன.

நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் மார்க்ஸ்-எங்கெல்ஸ் நூல்களைத் தமிழில் வெளியிடுவதிலும் பரப்புவதிலும் தனிப்பெரும் பணி செய்துள்ளது. சோவியத் ஒன்றியப் பதிப்பகங்களுடன் இணைந்தும் தனியாகவும் மார்க்ஸ்-எங்கெல்ஸ் நூல்களை மொழியாக்கம் செய்வதிலும் பரப்புவதிலும் 1951ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முனைப்புடன் செயலாற்றி வருகின்றது. இந்தப் பணியின் தொடச்சியாகவும் புதிய மைல் கல்லாகவும் இப்போது மார்க்ஸ்-எங்கெல்ஸ் தேர்வு நூல்களின் தமிழாக்கத்தை இருபது தொகுதிகளாக வெளியிடுகின்றது.

marx engels

மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுத்துத் தொகை - பதிப்பு வரலாறு

மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுத்துகள் அனைத்தையும் திரட்டுவதற்கு, சோவியத் ஒன்றியம் முதல் முயற்சியை மேற்கொண்டது. இதற்காக, மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆய்வு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் 1927-ல் மூலமொழிகளில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் முழுமையான எழுத்துத் திரட்டை வெளியிடுவதற்கான முயற்சியை மேற்கொண்டது. இவ்வெளியீட்டிற்கு முதலில், டேவிட் ரியஸனோவ் (1870-1930) பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். அவருக்குப் பின் அந்தப் பொறுப்பை மேற்கொண்டவர் விளாத்திமிர் அடோர்த்ஸ்கி (1878-1945) ஆயினும் இம்முதற் முயற்சியில் முழு ஆக்கத் திரட்டு வெளியீடு முடிவுபெறவில்லை. இதற்கு முன்னதாக, 1928 முதல் 1947 வரை ருஷ்ய மொழியில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் ‘முழு ஆக்கத் திரட்டு ’ வெளியிடப் பெற்றது. இதன் இரண்டாம் பதிப்பு, விடுபட்ட நாளிதழ் கட்டுரைகளையும் கையெழுத்துப் படிகளையும் உள்ளடக்கி 1955ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது. இந்த வெளியீடு மொத்தம் 39 தொகுதிகளையும் 4 இணைப்புகளையும் சேர்த்து மொத்தமாக 47 புத்தகங் களைக் கொண்டிருந்தது. இந்தப் பதிப்பைப் பின்பற்றி, 1956 முதல் ஒன்றிணைந்த ஜெர்மன் சோசலிச ஒற்றுமைக் கட்சியின் மார்க்ஸிய-லெனினிய ஆய்வு நிறுவனம், ஜெர்மன் மொழியில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் முழு ஆக்கத் திரட்டை வெளியிட்டது. இது 39 தொகுதிகளையும் 2 இணைப்புகளைச் சேர்த்து 44 புத்தகங்களாக வெளி வந்தது. (சில தொகுதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளிவந்தன).

ஆங்கிலத்தில் ‘மார்க்ஸிய நூலகம்’ என்ற தலைப்பில் தொடர் வரிசையாக அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்த கெர் அண்ட் கம்பெனி மார்க்ஸ்-எங்கெல்ஸ் நூல்களை, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியிட்டது. பின்னர் இதே பெயரில் லண்டனிலுள்ள லாரன்ஸ் & விஷர்ட் நிறுவனமும் நியூயார்க் இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ§ம் சோவியத் அரசு வெளியீட்டகத்தின் உதவியுடன் 1920ஆம் ஆண்டு முதல் மார்க்ஸ்-எங்கெல்ஸ் நூல்களை வெளியிட்டு வந்தன. ஆங்கிலத்தில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் ‘தேர்தெடுக்கப்பட்ட படைப்புகள்’ என்ற பெயரில் சோவியத் ஒன்றியத்தின் அயல்மொழிப் பதிப்பகம் 1940கள் முதல் ஒவ்வொரு முறையும் மாறுபட்ட வகையில் தொகையாக்கம் செய்து வெளியிட்டு வந்தது.

பின்னர் ஆங்கிலத்தில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் முழு ஆக்கத் திரட்டை வெளியிடும் திட்டத்தை சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னேற்றப் பதிப்பகம், இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ், லாரன்ஸ் & விஷார்ட் ஆகிய மூன்று பதிப்பகங்களும் இணைந்து மேற்கொண்டன. இவ் வெளியீட்டுத் திட்டத்திற்கு மாரிஸ் கான்ஃபோர்த், மாரிஸ் டப், எரிக் ஹாப்ஸ்பாம், ஹொவர்ட் ஸெல்ஸாம், ட்ரிக் ஜே ஸ்ட்ருய்க் முதலான தலைசிறந்த ஐரோப்பிய மார்க்ஸிய அறிஞர்கள் பதிப்பு-ஆசிரியர்களாகப் பணியாற்றினர். முன்பு ஆங்கிலத்தில் வெளிவந்த மொழியாக்கங்கள் மேலும் செழுமை செய்யப்பட்டு முழு ஆக்கத் திரட்டில் இடம்பெற்றன.

ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்த மார்க்ஸ்-எங்கெல்ஸ் முழு ஆக்கத் திரட்டு மொத்தம் 50 தொகுதிகளைக் கொண்ட தாகும். இது மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி, மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துகள் காலவரிசைப் படுத்தப்பட்ட வகையில் முதல் 27 தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இரண்டாம் பகுதியில், ‘மூலதனம்’ நூலும் அரசியல் பொருளாதார, தத்துவக் கையெழுத்துப் படிகளும் உள்ளன. இவை 28 முதல் 37 வரையான பத்து தொகுதிகளில் இடம்பெற்று உள்ளன. மூன்றாவது பகுதி மார்க்ஸ்-எங்கெல்ஸ் கடிதங்களாகும். இவை 38 முதல் 50 வரையான 13 தொகுதிகளில் இடம்பெற்று உள்ளன. எனினும், பெரும் எண்ணிக்கையிலான இந்த ஆங்கில முழு ஆக்கத் திரட்டும் கூட மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுத்துகள் முழுவதையும் - குறிப்பாக மார்க்சின் இறுதிக் காலக் கையெழுத்துப் படிகளைக் - கொண்டிருக்கவில்லை. இக்கையெழுத்துப்படிகளின் முக்கியத்துவத்தை அண்மை ஆண்டுகளில் பல மார்க்ஸிய ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

தமிழில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் படைப்புகள்

1931 அக்டோபர் மாதம் பெரியாரின் ‘குடி அரசு’ இதழில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் ஒரு பகுதியை மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டதிலிருந்தே, தமிழில் மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துப் பதிப்பின் வரலாறு தொடங்குகிறது எனலாம். 1948ஆம் ஆண்டு முதல் தமிழில் மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்கள் வெளிவரத் தொடங்கின. 1960ஆம் ஆண்டிற்குள் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, ‘கூலி உழைப்பும் மூலதனமும்’, ‘விஞ்ஞான சோசலிசமும் கற்பனாவாத சோசலிசமும்’, ‘தத்துவத்தின் வறுமை’ முதலான நூல்களை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டது. பின்னர் ‘கூலி விலை லாபம்’, ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’, ‘இயற்கையின் இயக்க இயல்’, ‘டூரிங்குக்கு மறுப்பு’, ’மெய்யறிவின் வறுமை’, ‘அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை’, ‘பாரிஸ் கம்யூன்’ முதலான நூல்களை சோவியத் பதிப்பகங்கள் வெளியிட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு அவற்றின் விற்பனை உரிமையை முழுமையாக வழங்கின. இதே காலத்தில் ‘கோத்தா வேலைத் திட்டத்தின் மீதான விமர்சனம்’, ‘இந்திய வரலாறு பற்றிய குறிப்புகள்’, ‘இந்தியாவைப் பற்றி’, ‘சீனாவைப் பற்றி’, ‘அடிமை நாடுகள் பற்றி’, ‘எங்கெல்ஸின் இளமைக்காலக் கடிதங்கள்’ முதலான நூல்களை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் வெளியிட்டது. பல கால உழைப்பினால் ஆன ‘மூலதனம்’ நூலின் மூன்று பாகங்களின் தமிழாக்கத்தை 2003ஆம் ஆண்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டது.

தமிழில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் தேர்வுநூல்களை பன்னிரண்டு தொகுதிகளாக 1983 முதல் 1989 வரை மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டு அவற்றின் விற்பனை உரிமையை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துக்கு வழங்கியது. இத்தொகுதிகளில் முன்பு வெளிவராத மார்க்ஸ் எங்கெல்சின் பல எழுத்துகள் இடம்பெற்றன என்றாலும், முன்பு வெளிவந்த ‘மெய்யறிவின் வறுமை’, ‘அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை’, ‘இயற்கையின் இயக்க இயல்’, ‘டூரிங்குக்கு மறுப்பு’ போன்ற பல நூல்கள் இடம் பெறவில்லை.

மார்க்ஸ்-எங்கெல்ஸ் இருபது தொகுதி தேர்வுநூல்கள்

 கார்ல் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளைக் (மே 5, 2018)கொண்டாடும் விதமாக வெளியிடப் பெறும் மார்க்ஸ்-எங்கெல்ஸ் இருபது தொகுதி தேர்வு நூல்கள் இதுவரை தமிழில் வெளிவந்த அவர்களது அனைத்து எழுத்து களையும் கொண்டுள்ளது. அத்துடன் மார்க்ஸ், எங்கெல்ஸ் வாழ்க்கை வரலாறுகளையும் கொண்டுள்ளது; இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அவர்களது கடிதங்கள் அனைத்தும் கால வரிசையில் தொகுக்கப்பட்டு, தனித் தொகுதியாக வெளிவருகின்றது.

முதலாவது தொகுதியில் ‘மார்க்ஸின் முனைவர் பட்ட ஆய்வேட்டிற்கான முன்னுரை’, ‘கோல்நிஷே ஜேட்டுங் 179ஆம் இதழின் தலையங்கம் பற்றி’, ‘உரிமை பற்றிய ஹெகலுடைய தத்துவ விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்புக்கு அறிமுகம்’, ‘பிரெஞ்சுப் பொருள்முதல் வாதத்திற்கெதிரான போர்’, ‘புனிதக் குடும்பம்’ நூலின் ஆறாம் இயலின் ஒரு பகுதி, பொருளாதார, தத்துவக் ‘கையெழுத்துப் படிகளின் ஒரு பகுதியன அந்நியமான உழைப்பு’, ‘பாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்’ ‘ஜெர்மன் கருத்துநிலை’யில் உள்ள ‘பாயர்பாக் : பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்திற்கும் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திற்கும் எதிர்ப்பு’ என்னும் இயல், ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’, ‘கூலிஉழைப்பும் மூலதனமும்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, ‘முதலாளித்துவ வர்க்கமும் எதிர்ப்புரட்சியும்’, ‘கம்யூனிஸ்ட் கழக மையக் குழுவின் வேண்டுகோள்’, ‘டாமெரின் புதிய யுகத்தின் மதம் நூலுக்கு எழுதிய விமர்சனம்’, ‘கொலோனில் சமீபத்தில் நடந்த வழக்குகள்’ முதலான எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது தொகுதியில் ‘மெய்யறிவின் வறுமை’ நூலும் மூன்றாவது தொகுதியில் ‘பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள்’, ‘ஜெர்மனில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும்’, ‘லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்’ ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.

நான்காவது தொகுதியில் ‘அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு’ நூல் இடம் பெற்றுள்ளது. ஐந்தாம் தொகுதியில் ‘நியூயார்க் ட்ரிப்யூன்’ இதழில் வெளியான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆறாம் தொகுதியில் ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் தொடக்க அறிக்கை’, ‘விதிமுறைகள்’, ‘மதிப்பு விலை லாபம்’, ‘தற்காலிக மத்தியக் கவுன்சிலின் பிரதிநிதிகளுக்குச் சில பிரச்சினைகள் குறித்த ஆணைகள்’, ‘அகிலத்தில் கற்பனையான பிளவுகள்’, ‘அமெரிக்க ஐக்கிய நாட்டின் தேசியத் தொழிலாளர் சங்கத்துக்கு வேண்டுகோள்’ முதலான முதலாம் அகிலம் தொடர்பான எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. ஏழாம் தொகுதியில் ‘பிரான்சில் உள்நாட்டுப் போர் நூல்’ முதலான பாரிஸ் கம்யூன் தொடர்பான எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

எட்டாம் தொகுதியில் கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ முதல் தொகுதிக்கான மதிப்புரைகள், ‘மூலதனம்’ நூலின் முதல் பாகத்தின் சுருக்கம், ‘மூலதனம்’ நூலில் இந்தியாவைப் பற்றிய குறிப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒன்பதாவது தொகுதியில் ‘குடி யிருப்பு பிரச்சினை’, ‘கோதா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனம்’ முதலானவை இடம்பெற்றுள்ளன.

பத்தாவது தொகுதியில் ‘டூரிங்குக்கு மறுப்பு’ நூல் இடம்பெற்றுள்ளது. பதினோராவது தொகுதியில் ‘கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்’, ‘மார்க்சும் புதிய ரைலாந்து இதழும்’, ‘கம்யூனிஸ்ட் சங்கத்தின் வரலாறு குறித்து’ முதலான எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. பன்னிரண்டாம் தொகுதியில் ‘குடும்பம், தனிசொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூல் இடம்பெற்றுள்ளது. பதிமூன்றாம் தொகுதியில்’ ‘இயற்கையின் இயக்கவியல்’ என்னும் எங்கெல்ஸ§டைய பெருநூலின் கையெழுத்துப் படி இடம்பெற்றுள்ளது.

பதினான்காவது தொகுதியில் ‘லூத்விக் பாயர் பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்’ என்ற நூலும் கிறிஸ்தவ சமயம் பற்றிய எங்கெல்சின் ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்று உள்ளன.

பதினைந்தாவது தொகுதியில் ‘வரலாற்றில் வன்முறையின் பாத்திரம்’, ‘கூலிமுறை’ [லேபர் ஸ்டேண்டர்ட் இதழில் எங்கெல்ஸ் எழுதிய கட்டுரைகள்], ‘சமூக-ஜனநாயக வேலைத்திட்ட நகலைப் பற்றிய விமர்சனம்’, ‘எதிர்கால இத்தாலியப் புரட்சியும் சோசலிஸ்ட் கட்சியும்’, ‘பிரான்சிலும் ஜெர்மனியிலும் உழவர் பிரச்சினை’ முதலானவை இடம்பெற்றுள்ளன.

பதினாறாவது தொகுதியில் ‘இந்திய வரலாறு பற்றிய கார்ல் மார்க்ஸின் குறிப்புப் புத்தகம்’ இடம் பெற்றுள்ளது. பதினேழாவது தொகுதியில் எங்கெல்சின் ‘இளமைக்காலக் கடிதங்களும்’ மார்க்ஸ் - எங்கெல்ஸ் எழுதிய கடிதங்களும் இடம்பெற்றுள்ளன.

பதினெட்டாம், பத்தொன்பதாம் தொகுதியில் சோவியத் அறிஞர் குழு எழுதிய ‘கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு’ம் இருபதாம் தொகுதியில் ‘எங்கெல்ஸ் வாழ்க்கை வரலாறும்’ இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொகுதிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் மார்க்சிய மெய்யியல் அறிஞர் ந.முத்துமோகன் எழுதியுள்ள அறிமுகவுரைகள் மிகவும் குறிப்பிடத்தக்கன. அவை, ஒவ்வொரு தொகுதியிலும் இடம்பெற்றுள்ள மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுத்துகளுடைய அறிவு, தத்துவ, அரசியல் பின்புலத்தைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் இவ்வெழுத்துகளின் இன்றைய பொருத்தப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.

மார்க்ஸ்-எங்கெல்ஸ் தேர்வுநூல்கள் இருபது தொகுதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களும், புதிய சேர்க்கைகளும் தமிழ் வாசகர்களுக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துகளை இன்னும் அணுக்கமாக நெருங்கிச் செல்வதற்கு மிகச் சிறந்த கருவிகளாகப் பயன்படும்.

Pin It