annamalai joins bjpதமிழ்நாட்டு மீம்ஸ் கிரேட்டர்களுக்கு எப்படி வடிவேலு கடவுளோ, அதே போல அவர்களுக்கு வேலை கொடுக்கும் மற்றொரு கடவுள் பிஜேபி. எப்படியும் பிஜேபியைச் சேர்ந்த யாராவது தினமும் கண்டென்ட் கொடுத்து விடுவார்கள். அப்படி மீம்ஸ் கிரேட்டர்களிடம் மாட்டிக் கொண்ட பிஜேபியினருக்கு அவர்கள் கொடுக்கும் அடி, உன்வீட்டு அடி என் விட்டு அடி அல்ல; மூச்திரச் சந்தில் வைத்து மூச்சு திணற திணற கொடுக்கும் அடி.

மெய் உலகத்தில் தங்களைப் பெரிய ஜாம்பவான்களாக நினைத்துக் கொண்டிருந்த பிஜேபியினர் பல பேரை  மெய்நிகர் உலகில் தங்களது மீம்ஸ்களால் பீதியாக்கி பேதி போக வைத்தவர்கள் நம்மூர்க்காரர்கள். அதனாலேயே தமிழ்நாட்டில் பிஜேபியினர் என்றாலே காமெடி பீஷ்கள் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.

இனி கட்சியில் வேட்டி உருவப்படாத ஆட்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டதால் தற்போது புதிதாக ஒரு பிள்ளைப் பூச்சியை களம் இறக்கி விட்டிருக்கின்றார்கள். ‘அய்யோ பாவம் யார் வீட்டுப் பிள்ளையோ’ என்று இரக்கப்படும் அளவிற்கு வரலாறு காணாத வகையில் வறுதெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார் அந்த நபர். இத்தனைக்கும் அந்த நபர் ஒரு முன்னால் ஐபிஎஸ். கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய கரூரைச் சேர்ந்த அண்ணாமலைதான் அந்தப் பிள்ளை பூச்சி. மிஸ்டு கால் கொடுத்தாலே கட்சியில் சேர்ந்துவிட முடியும் என்ற நிலையில் இருக்கும் ஒரு அனாமத்துக் கட்சியில் சேர அனாவசியமாக பா.ஜ.க-வின் டெல்லி தலைமையகத்திற்கே சென்று அந்தக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் முரளிதர ராவைச் சந்தித்து அவரது முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.

ஏற்கெனவே நோட்டாவுக்கும் பிஜேபிக்கும் வாழ்வா சாவா போராட்டம் நடந்து வரும் இந்த உக்கிரமான காலத்தில் கைப்பிள்ளை அண்ணாமலையை பிஜேபி துணிந்து களமாட விட்டிருக்கின்றது என்றால், அவர்களின் துர்பாக்கிய நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எப்படியாவது ரஜினியை வைத்து தமிழ்நாட்டில் களமிறங்கத் திட்டமிட்டிருந்த பிஜேபி தங்களைவிட பெரிய டுபாக்கூர் ரஜினி என்பதை இப்போது புரிந்து கொண்டதன் விளைவுதான் அண்ணாமலை.

பிஜேபி ஒருவரை முன்னிறுத்துகின்றது என்றால் நாம் கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம், அவன் ஒரு சங்கி என்று. சங்கிகளிடம் என்ன சிறப்பு என்றால், அவர்கள் தங்களைத் தாங்களே கடைந்தெடுத்த பிற்போக்குவாதி என்பதை நிரூபித்துக் கொள்வார்கள். சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினி ஒரு பாசிஸ்டாக, முட்டாளாக தமிழக மக்கள்முன் அம்பலப்பட்டது இப்படித்தான்.

தமிழ்நாட்டின் கள எதார்த்தம் என்ன என்பது இன்னும் கூட சங்கிக் கும்பலுக்கு விளங்கவில்லை. ஒரு மாரிதாஸையோ, அண்ணாமலையையோ களத்தில் இறக்கி விடுவதன் மூலம் தமிழக மக்களின் சிந்தனையில் பல நூற்றாண்டுகளாக ஊறிப்போய் கிடக்கும் பார்ப்பன எதிர்ப்பு அரசியலை அப்புறப்படுத்திவிட முடியும் என அவை இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றது. பார்ப்பனிய சாதியக் கட்டமைப்பை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டது போல பார்ப்பனியத்தால் திணிக்கப்படும் அனைத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் என்று பிஜேபி நினைக்கின்றது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரிந்த மூளைக்குள் வெறும் சனாதனம் மட்டுமே புரையோடிக் கிடப்பதால் அதனால் வேறு எப்படியும் யோசிக்க முடியாது. களத்தில் இறங்கி வேலை செய்யாமல், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்காமல் தமிழகத்தை அழித்தொழிக்க பல பாசிசத் திட்டங்களை திணித்ததோடு அதை நிறைவேற்ற கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் தமிழின விரோதக் கும்பல், தங்களை நம்பி தமிழக மக்கள் ஓட்டு போடுவார்கள் என சிறுபிள்ளைத்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றது.

ரவுடிகள், கொலைகாரர்கள், பாலியல் குற்றவாளிகள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் போன்றவர்கள் பிஜேபியில் அடைக்கலம் தேடி வருவதைப் போன்றதுதான் அண்ணாமலையின் பிஜேபி தேர்வும். அண்ணாமலை தான் ஐபிஎஸ் ஆக வருவதற்கு இரண்டு காரணங்கள் ஆதர்சமாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். அந்த இரண்டு காரணத்தின் பின்னுள்ள அரசியலை நாம் தெரிந்துகொள்ளும் போது, அண்ணாமலையும் ஒரு கடைந்தெடுத்த பிற்போக்குவாதி என்பதைத் தெரிந்து கொள்வதோடு அவரின் பாசிஸ குணத்தையும் அறிந்து கொள்ளலாம்.

அண்ணாமலை தான் ஐபிஎஸ் ஆவதற்கு காரணமாக குறிப்பிடும் அந்த இரண்டு நிகழ்வுகளில் ஒன்று, 2008 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்; மற்றொன்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார்.

அண்ணாமலை குறிப்பிடும் முதல் நிகழ்வு  26/11 அன்று மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலாகும். இந்த நிகழ்வின் போதுதான் மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே மர்மமாக படுகொலை செய்யப்பட்டார். இவர்தான் மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக பிரக்கியா சிங் தாக்கூரை கைது செய்து இந்து தீவிரவாததை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். பாரதிய ஜனதாக் கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரீஷத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரான பிரக்கியா சிங் தாகூர் மாலேகான் குண்டுவெடிப்பு மட்டும் அல்லாமல், 2007 ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு போன்றவற்றிலும் நேரடியாக தொடர்புள்ளவராக குற்றம்சாட்டப்பட்டவர். “தன்னை மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்த ஹேமந்த் கர்கரே அழிந்து போவார் என்று நான் அப்பொழுது சாபமிட்டேன். அவரும் அடுத்த இரண்டு மாதங்களில் அழிந்து போனார்” என்று ஊடகத்தில் பேட்டியும் கொடுத்து, நேர்மையான காவல்துறை அதிகாரியான ஹேமந்த கர்கரே எப்படி மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்பதை அவரது வாயாலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இப்படிப்பட்ட தேசபக்தையைத்தான் பிஜேபி போபால் தொகுதியில் திக்விஜய் சிங்குக்கு எதிராக களமிறக்கி வெற்றி பெற வைத்து கெளரவப்படுத்தியது.

அடுத்து அண்ணாமலை, ஐபிஎஸ் அண்ணாமலையாக மாறக் காரணமாக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ் எப்படிப்பட்டவர்? இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனராக இருந்தபோதுதான் 15-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2003-ம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க கமாண்டோ படையின் தலைவர் ஆக்கப்பட்டார். வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பாக இன்றுவரை சர்ச்சை நீடித்து வரும் நிலையில் இந்த மாவீரன் எப்படி வீரப்பனைக் கொன்றார் என்றால், சோசியம் பார்த்து! வீரப்பன் தொடர்பாக அவர் எழுதிய 'வீரப்பன் சேசிங் தி பிரிகண்ட்’ என்ற புத்தகத்தை வெளியிட்டுப் பேசும் போது “வீரப்பனை வேட்டையாட அக்டோபர் 18 தான் நல்ல நாள் என்று சோதிடர் கூறினார். வீரப்பனைப் பிடிக்க நாங்கள் எந்த நல்ல தகவலையும் தவற விடத் தயாராக இல்லை, அதேபோல 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ல் வீரப்பனை தாங்கள் சுட்டுக் கொன்றதாகக்” கூறினார்.

இதுதான் விஜயகுமாரின் யோக்கியதை. இந்த யோக்கியதையை பார்த்துதான் மத்திய உள்துறை அமைச்சகம் காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கவும் மற்றும் பசுமை வேட்டை என்ற பெயரில் பழங்குடியின மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கரவாத நடவடிக்கைக்கும் சிறப்பு பாதுகாப்பு ஆலோசகராக இவரை நியமனம் செய்தது.

அண்ணாமலை ஐபிஎஸ் ஆவதற்குக் காரணமாக சொன்ன இரண்டுமே எதிர் எதிர் நிலைபாடு கொண்டது. முதல் நிகழ்வில் காவி பயங்கரவாதத்தை அம்பலப்படுத்திய ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றார். இரண்டாவது நிகழ்வில் தன்னுடை வளர்ச்சிக்காக பல பேரை அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றதோடு காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும், பழங்குடியின மக்களுக்கு எதிராகவும் ஆளும் வர்க்கம் நடத்திக் கொண்டிருக்கும் போருக்கு கங்காணி வேலை பார்க்கும் ஒரு பாசிச போலீஸ் அதிகாரியை தனது ஆதர்சமாகக் காட்டுகின்றார்.

அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை போன்ற வெளங்காத வெங்காயப் பேச்சுக்களை எல்லாம் மக்கள் ஒரு போதும் விரும்புவதில்லை. தமிழர் நலன் சார்ந்த ஒவ்வொரு பிரச்சினையிலும் கோட்பாட்டு ரீதியாக அரசியல் கட்சிகள் எடுக்கும் நிலைப்பாட்டை மக்கள் கூர்ந்து கவனிக்கின்றார்கள். நீட் தேர்வாக இருக்கட்டும், இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையாக இருக்கட்டும், இந்தி திணிப்பாக இருக்கட்டும் - இதை எல்லாம் ஆதரித்துவிட்டு தமிழ்நாட்டில் யார் ஒருவரும் அரசியல் செய்துவிட முடியாது என்ற அடிப்படை உண்மை சங்கிக் கும்பலுக்கு இன்னும் தெரியவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் அதன் அடிநாதமாக இருக்கும் பார்ப்பனியம் ஒரு போதும் சமூக சமத்துவத்தை அங்கீகரிக்க இடம் கொடுக்காது.

சமூக சமத்துவத்தை அங்கீகரிக்காத, கார்ப்ரேட் கைக்கூலிகளை ஒருவன் அங்கீகரிக்கின்றான் என்றால் அவன் அடிப்படையில் அயோக்கியனாகவே இருப்பான். அதற்காக இன்று தமிழக பிஜேபியின் துணைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அண்ணாமலையை நாம் அயோக்கியன் என்றோ, கேடுகெட்ட புல்லுருவி என்றோ, உத்தமன் வேடம் போடும் உலுத்துப் போனவன் என்றோ சொல்லவில்லை. ஆனால் 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட 6 படுகொலைகள் உள்ளிட்ட 35 வழக்குகள் உள்ள வட சென்னையைச் சேர்ந்த கல்வெட்டு ரவியும், செங்குன்றம் சூர்யாவும், அபின் கடத்தல் மாஃபியா பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க OBC அணி மாநில செயற்குழு உறுப்பினர் லுவாங்கோ அடைக்கலராஜூம், ஏராளமான கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி முரளியும் உள்ள ஒரு கட்சியில் வான்ட்டேடாக போய் சேர்ந்ததோடு இப்படிப்பட்ட காலிகளை வைத்துக் கொண்டு நாட்டிற்கு நல்லது செய்வேன் என்று சொல்வதால் மேற்கூறியது போல சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

அண்ணாமலை ஒரு சங்கி என்பதும், அரைவேக்காடு என்பதும் அவரது பல பேட்டிகளைப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடிகின்றது. தெற்கு பெங்களூரு துணை ஆணையராக இருந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ததற்கு சொன்ன காரணம் “கடந்த வருடம் நான் கைலாஷ் மானசரோவர் சென்றிருந்தேன். அங்கு வாழ்க்கையின் முக்கியவத்துவம் குறித்து கண் திறந்து கொண்டது. அத்துடன் அதிகாரி முதுகார் ஷெட்டியின் மரணம் என் வாழ்வை என்னவென்று உணர்த்தியுள்ளது” என்பதுதான். கைலாஷ் மானசரோவர் சென்றால் ரஜினி, அண்ணாமலை போன்றவர்களுக்கு மட்டும் எப்படித்தான் ஞானக்கண் திறந்து கொள்கின்றது என்பதும், ஞானக்கண் திறந்து கொண்டவன் எல்லாம் சொல்லிவைத்தார் போல மோடி பஜனை பாடுபவர்களாகவும், மக்கள் விரோதிகளாகவும் மாறி விடுகின்றார்கள் என்பதும் பெரும் ஆய்வுக்கு உரியதாகும்.

அதனால் அண்ணாமலை போன்றவர்கள் உண்மை, நேர்மை, நாணயம் போன்ற அரதப்பழசான ஊசிப் போன வடைகளை தூக்கி வந்து தமிழ் மக்களை கடுபேத்தாமல் இருக்க வேண்டும். ஏற்கெனவே நோட்டாவோடு போட்டி போடும் பல கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அதிலே கடைசியில் உட்கார்ந்திருக்கும் கட்சிதான் பிஜேபி. பூத்தில் உட்காருவதற்குக் கூட ஆளில்லாத ஒரு கட்சியில் தன்னை இரண்டறக் கலந்து கொண்ட அண்ணாமலையின் தியாகம் அளப்பரியது. ஆனால் சாக்கடைகள் கூவத்தில் கலப்பது இயற்கையின் நியதி என்பதால் அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையிலை.

- செ.கார்கி

Pin It