ஜல்லிக்கட்டு விளையாட்டு நிரந்தரமாக நடைபெற வழிவகை செய்ய வேண்டும், காட்சிப் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ் நாட்டு மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் எவ்வித அரசியல் கட்சிகளின் தொடர்பும் இல்லாமல், அறவழியில் போராட்டங்களை முன்னெடுத்தது அனைவரது ஆதரவினையும், பாராட்டுக்களையும் பெற்றது.

தமிழக வரலாற்றிலே அண்மைக்காலத்தில் கண்டிராத அளவுக்கு, பல இலட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரபு வசந்தம், வால்ஸ்டீரீட்டைக் கைப்பற்றுவோம் போன்ற சமகாலப் போராட்டங்களைப் போல, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சிவில் சமூகம் பெருமளவு பங்கேற்றதை பியூசிஎல் வரவேற்றுப் பாராட்டுகிறது. ஏறக்குறைய கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த போராட்டம் தந்த அழுத்தத்தின் விளைவாக, மைய அரசின் உதவியோடு தமிழக அரசு ஜனவரி 23 ஆம் நாளன்று ஓர் அவசரச் சட்டத்தைத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற உள்ளதாக அறிவித்ததோடு, போராட்டத்தைக் கைவிட வேண்டும் என ஜனவரி 22ஆம் நாளன்றே தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் கடந்த காலத்தில் இதைப் போன்ற வாக்குறுதிகள் பல வழங்கப்பட்டு, அவை நிறைவேற்றப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசு அறிவிப்பு மீது நம்பிக்கை ஏற்படவில்லை. மீண்டும் ஒரு ஏமாற்றம், தோல்வி ஏற்பட்டு விடும் என்ற நியாயமான கலக்கம் அவர்களுக்கு ஏற்பட்டது. அரசு அங்கீகாரம் பெற்ற குழு ஒன்று, தமிழக அரசின் அவசரச் சட்டத்தின் கூறுகளை, போராட்டக்காரர்களிடம் எடுத்துக் கூறி, ஜல்லிக்கட்டிற்கு நிரந்தரமான பாதுகாப்பு எவ்வாறு இதன் மூலம் கிடைக்கும் என்பதையும் விளக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், காவல் துறை மூலம் தமிழக அரசு வன்முறையைத் திடீரெனக் கட்டவிழ்த்து விட்டது. எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இதுநாள் வரை அறவழியில் போராடியவர்கள் மீது, காவல்துறை தடியடி நடத்தியது மனித உரிமை மீறலாகும்.

போராடுபவர்கள் அவசரச் சட்டத்தைப் பற்றிய விளக்கத்தைத் தங்களது வழக்கறிஞர்களிடம் இறுதியாகக் கலந்தாலோசிக்க நான்கு மணி நேரம் மட்டுமே அவகாசம் கோரினர். ஆனால் இந்தச் சிறு சனநாயகக் கோரிக்கையைக் கூட ஏற்காமல், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தமிழக அரசு வன்முறையை ஏவியதையும், அறவழியில் போராடியவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அகற்றியதையும் பியூசிஎல் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசியல் சட்டம் கூட்டம் கூடும் உரிமையைத் தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் அதை மதிக்காமல் தமிழக அரசு எடுத்த தன்னிச்சையான நடவடிக்கைகள் ஏற்கத்தக்கதல்ல.

எனவே இப்போராட்டத்தில் கைது செய்த அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பியூசிஎல் தமிழக அரசைக் கோருகிறது. மேலும் ஐல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறத்தக்க வகையில், சட்டப்பூர்வமான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். தவிரவும், மக்களின் பண்பாட்டு உரிமையைப் பாதுகாக்க அரசு துணை நிற்கவேண்டும் எனவும் பியூசிஎல் கோருகிறது.

- கண.குறிஞ்சி, தலைவர், பியூசிஎல்

Pin It