school students 334அரசியல் நமக்கு எதுக்கு என்று ஒதுங்கி இருந்தவர்கள் கூட இன்று ஒன்றை உணர்ந்திருக்கக் கூடும், அதனால்தான் தங்கள் பிள்ளைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது என்பது. எதிர்க்கட்சிகள் தான்‌ உங்கள் பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கின்றன. நீங்கள் தெருவில் இறங்கிப் போராடும் முன்பே நிலைமையின் விபரீதம் அறிந்த அரசியல் கட்சிகள் தேர்வைத் தள்ளி வைக்கவும் ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்தன. அரசும் பணிந்தது!
 
ஆனால் இதில் நகைமுரண் என்னவென்றால், பத்தாம் வகுப்பு தேர்வுக்குப் பொங்கிய பொதுச் சமூகம் OBC‌ இட ஒதுக்கீடு மோசடிக்கு ஒரு சிறு அசைவும் காட்டவில்லை. அரசியல் உரிமைகள் பற்றி பொதுச் சமூகம் கொண்டுள்ள அறியாமையைத் தான் இது வெளிப்படுத்துகிறது. ஆனால் அதற்கும் எதிர்கட்சிகள் தான் தேவைப்பட்டன. திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து இந்த மோசடியை எதிர்த்து அறிக்கை விடுத்திருந்தார். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் முனைவர் திருமாவளவன் சென்ற ஆண்டு மத்திய மனிதவளத்துறை அமைச்சரிடம் மனு அளித்தது தொடங்கி நேற்று முன் தினம் நடத்திய போராட்டம் வரையில் விசிக OBC இட ஒதுக்கீடு மோசடிக்கு எதிராக முன்னெடுத்தவை எவையும் பெரும்பாலும் பேசப்படவில்லை.
 
இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாத பிற்படுத்தப்பட்ட வகுப்பு தலைமுறை ஒன்று உருவாகி விட்டது. அவர்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பற்றி‌ பாடம் எடுப்பதற்கே கால விரயம் செய்யப்படுகிறது எனில், அவர்கள் எப்போது தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்பு பெற்று அதற்காக போராட முன்வருவார்கள் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. அருகி வரும் அரசுத் துறைகளில் உள்ள இடங்களை காப்பாற்றிக் கொள்ளக் கூட திராணி இல்லாமல் சிந்தனை முடங்கிக் கிடக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பலவீனம் அறிந்து தான் ஆளும் வர்க்கம் அவசர அவசரமாக முழுத் தனியார்மயத்தை நோக்கி நகர்கிறது.
 
தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கி விட்டன. ஆனால் அதுவும் அரசியல் கட்சிகளால் - சமூகநீதிப் பார்வை கொண்ட கட்சிகள் - மட்டுமே முன்வைக்கப்படுகிறது. இந்தியாவின் பெரும்பான்மை குழுவான பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கல்வி பெற்ற தலைமுறை இதுகுறித்து என்ன பார்வை கொண்டிருக்கிறது என்பதை நோக்கும்போது ஏமாற்றமே மிஞ்சும்.
 
இன்று குறைந்த அளவேனும் அரசுத் துறைகளில் பார்ப்பனிய ஆதிக்கம் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது என்றால், அது இட ஒதுக்கீடு என்னும் அரசியல் ஏற்பாட்டின் மூலம் தான். அதற்கான முதல் போராட்டம் (தந்தை பெரியார் முன்னெடுத்த போராட்டம்) இந்திய அரசையே பணிய வைத்தது என்பதை இன்றைய தலைமுறை அறிந்திருக்கவில்லை. உரிமைப் போராட்டங்களின் விளைச்சலில் பெற்ற உரிமைகளை, அதன் வரலாற்றுப் பின்னணியை இவர்களுக்கு பாடத் திட்டத்தின் வழியோ வகுப்பறையின் வழியோ கொண்டு சேர்க்கப்படாதது தான் இதற்கு முதன்மையான காரணம்.
 
இட ஒதுக்கீடு என்பதை ஓர் இயக்கம் மட்டுமே வென்றெடுக்க முடியாது. அதற்கு இனவுணர்வு பெற்ற கூட்டம் தேவை. இன, மொழி உணர்வற்ற ஒரு மலட்டுத் தலைமுறையினரை வைத்துக் கொண்டு நாம் பார்ப்பனியத்திடம் நீண்ட காலம் போர் செய்ய முடியாது. இந்தியாவின் ஜாதி அமைப்பு இந்துக்களை அந்நியர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யவும் முடியாமல் முடக்கி விட்டது என்பார் புரட்சியாளர் அம்பேத்கர். ஆனால் பார்ப்பனர்களின் உண்மையான நோக்கம் தங்களுக்கும், தங்களது செல்வாக்குக்கும் எதிராக யாரும் கிளர்ந்தெழுந்துவிடக் கூடாது என்பதே என்றும் அம்பேத்கர் விளக்கியிருப்பார். இன்று பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் எதிராக முஷ்டியைத் தட்டும் மூடர் கூட்டம் பறிபோகிக் கொண்டிருக்கும் தங்களின் அரசியல் உரிமைகள் பற்றிய அறிவற்றுக் கிடக்கிறது. அதாவது பார்ப்பனியத்தின் உண்மையான நோக்கமே தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டிருக்கிறது எனலாம்.
 
இட ஒதுக்கீடே என்னவென்று தெரியாத கூட்டத்தை நாம் எவ்வளவு இடித்துரைத்தாலும் அவர்களுக்கு உரைக்கப் போவதில்லை. ஏனென்றால் அவர்களின் அறிவு ஜாதிப் பெருமிதத்தால் முடக்கப்பட்டுள்ளது.‌ அறிவு முடங்கிப் போன கூட்டத்திடம் நாம் அரசியல் கிளர்ச்சியை உண்டு பண்ண முடியாது.‌ 49%, 69% என்று நாம் அவர்களுக்கு பக்கம் பக்கமாகப் பாடமெடுத்தாலும் விழலுக்கு இறைத்த பயனையே அது தரும். வகுப்பறையிலேயே நாம் அவர்களுக்கு அறிவைப் புகட்ட வேண்டும். இட ஒதுக்கீடு தான் அடிப்படை உரிமை என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வழி செய்ய வேண்டும். இனிவரும் எந்தவொரு தலைமுறையையும் நாம் தவறவிடக் கூடாது. அதுவே நம் பயணத்தை விரைவுபடுத்தும்.
 
- சரவணன் பெருமாள்
Pin It