இந்தியாவிலுள்ள தேசிய இனங்கள் அனைத்துக்கும் விடுதலை கொடுக்கப்பட்டு, அவை முழு இறையாண்மை உள்ள தேசங்களாக மலரவேண்டும். அவை ஒவ்வொன்றும் பாதுகாப்புப் படையும் வைத்திருக்கும். புதிதாகப் பிறக்கும் இந்திய தேசங்களுடன், பாகிஸ்தான், பாங்ளா தேஷ், நேப்பால், பூட்டான், ஈழம் (இந்தியா, பல தேசங்களாக மலரும்போது ஈழம் பிறப்பதில் ஒரு சிக்கலும் இராது), லங்கா, மொரீஷியஸ் போன்ற தேசங்கள் சேர்ந்து, ஐரோப்பிய யூனியனை ஒத்த, இந்திய யூனியன் ஒன்றை உருவாக்கலாம். இந்த தேசங்களுக்கிடையே தங்கு தடையற்ற வணிக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இந்த தேசங்களுக்கு ஒரே நாணயமாக ரூபாயை தெரிவு செய்யலாம். (இந்திய யூனியனுக்கு ஒரே விசா கொடுக்கப்பட்டு யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சென்று பணி செய்யலாம் என்ற முறையை செயல்படுத்துவது கூட நலமாயிருக்கலாம். ஆனால், இப்போதுள்ள பயங்கரவாத செயல்களால் அதை தவிர்ப்பது நல்லது. அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க என்பதே சரியான கொள்கை).

இந்திய ஒன்றியத்திலுள்ள தேசங்கள் தங்களுக்குள்ள சிக்கல்களைப் பேச்சு வார்த்தை மூலமாகவே தீர்த்துக் கொள்ளலாம் என்று ஒன்றியத்தின் ஒப்பந்தமாக ஏற்கலாம். இதனால், ஒன்றிய தேசங்களுக்குள் மோதல்களைத் தவிர்க்க முடியும். இன்று எல்லா தேசங்களிலும் மாற்று தேசத்தவர் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருவதால், சிறுபாண்மையினரின் பாதுகப்புக்கு ஒப்பந்தத்தில் வழி செய்து கொள்ளலாம். இதனால், பார்ப்பனர்கள் அச்சமுற வேண்டியதில்லை. சிறுபாண்மை சமூகம் பார்ப்னர் மட்டுமல்லவே! ஆக, பார்ப்பனர்களின் தேவையில்லாத அச்சம் இதனால் நீங்கும். இந்த தேசங்களுக் கிடையிலான தொடர்பு மொழியாக, உலக தொடர்பு மொழியாம் ஆங்கிலத்தையே ஏற்கலாம்.

இந்த ஒன்றிய தேசங்கள் கூட்டு ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இந்த தேசங்களில் ஒன்றின்மீதோ, பலவற்றின் மீதோ ஒன்றியத்திலில்லாத வேற்று நாடு போர் தொடுத்தால், இந்திய ஒன்றிய தேசங்கள் அனைத்தும் சேர்ந்து எதிர் தாக்குதல் கொடுக்கும். அதாவது, NATO போன்று Indian Ocean Treaty Organisation (IOTO), ஏற்படுத்திக் கொள்ளலாம். வாணாராய்ச்சிக் கழகத்தை (ISRO) அனைத்து தேசங்களுக்குமான பொதுக் கழகமாக ஏற்கலாம். பாகிஸ்தான், பாங்ளாதேஷ், நேப்பாள், ஈழம், லங்கா போன்ற நாடுகளும் சேர்வதால் வாணாராய்ச்சிக்கான செலவுகள் பகிரப்படும். மேலும் சேட்டிலைட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம், வீண் செலவுகள் மிச்சமாகும்.

இந்தப் புதிய அமைப்பால், இந்த தேசங்களுக்கிடையே அமைதி நிலவும். இதனால், பாதுகாப்பிற்காக ஒவ்வொரு தேசமும் செலவிடும் நிதி கணிசமாகக் குறையும். அந்த நிதியை வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட முடியும். ஏழ்மையை விரட்ட முடியும். அனைத்து தேசங்களின் போர்ப்படைகள் சேர்வதால், யாரிடமிருந்தும் இந்த தேசங்களுக்கு அச்சுறுத்தல் இராது. அமைதி நிகழ்வதாலும், வணிக ஒப்பந்தத்தாலும் இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரம் மேன்மை அடையும். இந்த தேசங்களில் மதவழி அரசியலுக் கெதிரான கூட்டு ஒப்பந்தமும் செய்துகொள்ளலாம். இதனால், பயங்கரவாதமும் இல்லாமல் போகும். மேலை நாடுகளின் மிரட்டல்களையும், தேவையற்ற நிபந்தனைகளையும் நாம் ஏற்க வேண்டியதில்லை. இந்தப் பகுதிகளில் அவை படைமுகாம்கள் அமைப்பதையும் இயல்பாகவே தவிர்க்கலாம். உலகமயத்தையும் தவிர்த்து, ஒன்றியம் சார்ந்த பொருளாதாரத்தைக் கட்டியமைக்கலாம். அது நிலையான பொருளாதாரமாக இருக்கும். அதே நேரம், மற்ற நாடுகளுடனான வணிக, மற்றும் இதர தொடர்புகளை இயல்பாக ஒவ்வொரு தேசமும் மேற்கொள்ளலாம்.

இப்போதே தீர்க்கப்படாத, மாநிலங்களிடையான சிக்கல்கள், தேசங்களாக பிரிந்தபின் தீருமா என்று கேட்கலாம். இப்போதுள்ள அமைப்பால் தான் சிக்கல்கள் தீருவதில்லை. நடுவத்தில் ஆளும் கட்சிகள், மாநிலங்களில் நியாயத்தை நிலைநாட்டினால், தமது அரசியல் வாய்ப்புகளுக்கு இடையூறு நேரலாம் என்பதால், அவை சிக்கல்களைத் தீர்ப்பதே இல்லை. இந்தியா இப்படியே நீடிக்கும் வரை இந்த சிக்கல்கள் தீாராமல் இப்படியே நீடிக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஆனால், இந்த மாநிலங்கள் இறையாண்மையுள்ள தேசங்களாகும் போது, இவற்றுக்கிடையே உள்ள சிக்கல்கள் புதிய கோணத்தில் பார்க்கப்பட வேண்டிய தேவையால், தீர்வுகள் எட்டப்படும். அனைத்து தேசங்களிலும் ஆதாயம் தேடும் அரசியலுக்கு வாய்ப்பில்லாததால், இப்போதுள்ள பல சிக்கல்கள் இல்லாமல் போகும்.

இந்திய ஒன்றியத்திலுள்ள தேசங்களுக்கிடையே உள்ள சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள, ஆணையம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். அது ஒரு நீதீமன்றம் போல செயல்படும். இங்கு தேசங்களுக்கிடையேயான பல்வேறு சிக்கல்கள் மட்டும் விவாதிக்கப்பட்டு தீர்க்கப்படும். இங்கு தீர்க்க இயலாத சிக்கல்கள் மட்டும் ஐ.நா அவையிடம் முறையிட்டு தீர்த்துக் கொள்ள முடியும். இயற்கைப்பேரிடர் கூட்டுநிதியம் (வருடாந்திர சந்தா) ஒன்றை உருவாக்கி, பாதிக்கப்பட்ட தேசங்களுக்கு தேவைப்பட்டபோது வழங்கலாம். ஒன்றிய வங்கி ஒன்றை உருவாக்கி, உருப்பினர் தேசங்களுக்கு மலிவான வட்டியில், வளர்ச்சி நிதிகள் வழங்கலாம். இதனால் IMF ன் சதி வலையிலிருந்நு தப்பிக்கலாம். நாமெல்லோரும் ஓர் மக்களே என்ற உணர்வில், அனைத்து தேசங்களுக்குமான சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் செயல்படலாம். இதனால், இந்தியா என்ற ஒற்றை தேசத்தினால் ஏற்படும் நன்மைகளைவிட, ஒன்றியத்தால் மிகையான நன்மைகளே விளையும்; தற்போதய தீமைகளும் குறையும், அல்லது இல்லாமல் போகும்.

வேற்று தேசத்தவர் இங்கு நீதிபதியாகவோ, மாவட்ட ஆட்சித் தலைவராகவோ இருக்க வாய்ப்பில்லாததால், தமிழே ஆட்சிமொழி, பயிற்று மொழி என்றாக்கி தமிழைப் பேண எந்த தடையும் இராது. ஆங்கிலத்தை கூடுதல் மொழியாக மட்டும் கற்பிக்கலாம். உலகின் மூத்த மொழியாம் தமிழைப் பேணுதல் ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை. கடமை தவறாதீர்!

மேற்கூறியவற்றை சுருங்கச் சொன்னால்...

1. தேசிய இனங்களுக்கான இறையாண்மையுள்ள தேசங்கள் அமைதல்.
2. இந்த தேசங்களும், அண்டை தேசங்களும் சேர்ந்து ஒன்றியம் அமைதல். பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளோடு தேவையற்ற பிணக்குகள் தீரும். அமைதி நிலவும்.
3. ஒன்றிய தேசங்களுக்கிடையில் தடையற்ற வணிக உடன்பாடு. வணிக மேம்பாடு. பொருளாதார மேம்பாடு.
4. ஒரே நாணயம்
5. ஒன்றிய தேசங்களுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம். பகை தவிர்ப்பு. கூட்டுப் பாதுகாப்பு. செலவு குறைப்பு.
6. தத்தமது தேசத்தின் மொழி, பண்பாடு, தனித்தன்மை பாதுகாப்பு மற்றும் பேணல் இயல்பானதாகும்.
7. ஒவ்வொரு தேசத்தின் சிறுபாண்மை இன பாதுகாப்பு உடன்பாடு.
8. இந்திய தேசங்கள் சொந்த இறையாண்மை பெறும் போது அமையும் புதிய அரசியலமைப்பில், தற்போது கிடைத்த பட்டறிவை வைத்து, ஊழலற்ற அரசமைப்பை உருவாக்க முடியும்.
9. வாணாராய்ச்சி போன்ற மிகையான நிதி தேவைப்படும் நிறுவனங்களை அனைத்து தேசங்களும் பகிர்ந்து செயல் படுத்துதல்.
10. அண்டை தேசங்களில் (தற்போதய மாநிலங்கள) நிகழும் நிகழ்வுகள் நம்மை பாதிக்காது. இதனால் பாதுபாப்பு, பொருளாதாரம் போன்றவை நிலைத்தன்மை கொண்டிருக்கும்.

இன்னும் பல காரணிகள் விடுபட்டிருக்கலாம். இப்போதைக்கு, என்னுடைய கருத்துக்களை முன்வைத்து விட்டேன். வாசகரே, உங்களின் முடிபு என்ன? 'கிட்டப் போனால் எட்டிப் போகும். எட்டிப் போனால் கிட்டே வரும்' என்று ஒரு முது மொழி உண்டு. நாம் தேசங்களாக பிரிந்து நின்று நேசம் பாராட்டினால், அந்த நேசம் வெற்றி பெறும். அன்னன் தம்பிகள், கூட்டுக் குடும்பத்திலே இருந்துகொண்டு நாளும் சண்டை போட்டுக் கொள்வதை விட, தனிக்குடும்பமாக பிரிந்து நேசம் பாராட்டுவதைப் போன்றது.

- முனைவர். வே. பாண்டியன்

Pin It