yes bank collapseமுதலாளித்துவ பொருளியல் அமைப்பு ஒரு வலைப்பின்னல் போன்றது.

வரிசையாக அடுக்கி வைத்திருக்கும் சீட்டுக் கட்டில் ஒரு சீட்டை உருவினால் ஒட்டுமொத்த கட்டுமே கலையுமே, அதைப் போன்றது முதலாளித்துவ பொருளியல் கட்டுமானம்.

2007-09 உலகப் பொருளாதாரப் பெருமந்தத்தில் இதுதான் நடந்தது. லெஹ்மன் பிரதர்ஸ் நிறுவனம் வீழ்ந்தது, அதனைத் தொடர்ந்து லெஹ்மன் பிரதர்ஸோடு வணிகத் தொடர்பு வைந்திருந்த AIG வீழ்ந்தது. இப்படி ஒவ்வொன்றாக ஒட்டுமொத்த சீட்டுக் கட்டும் குலைந்து உலகமே ஆடியது. அமெரிக்காவில் இடி இடித்தால் உலகெங்கும் அதிர்வலைகள் எழும் எனலாம்.

முதலீட்டு வலைப் பின்னல் தான் இதற்கு அடிப்படைக் காரணம்.

இப்படியான வலைப் பின்னல் பற்றி காரல் மார்க்ஸ்ம் ஏங்கல்ஸ்ம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் "தேசங்களும் வட்டாரங்களும் தனித்தொதுங்கி நின்றும், தன்னிறைவு கண்டும் இருந்த நிலை மாறி, ஒவ்வொரு திசையிலும் பரஸ்பரப் பிணைப்பும், தேசங்களுக்கிடையே ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் உலகளாவிய சார்புத் தன்மையும் நிலவக் காண்கிறோம்... தமக்கென தனியான நலன்கள், சட்டங்கள், அரசாங்கங்கள், வரிவிதிப்பு முறைகளைக் கொண்ட, சுயேச்சையான அல்லது தளர்ந்த இணைப்புக் கொண்டிருந்த மாநிலங்கள், ஒரே அரசாங்கம், ஒரே சட்டத் தொகுப்பு, ஒரே தேசிய வர்க்க நலன், ஒரே தேச எல்லை, ஒரே சுங்கவரி முறை கொண்ட ஒரே தேசமாக ஒன்றிணைந்து விட்டன" என்று விவரித்தனர்.

தற்போது Yes Bank இல் நடந்திருப்பதும் அதுவே. அனில் அம்பானியின் நிறுவனம், நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தற்கொலை செய்து செத்துப் போன சித்தார்த்தாவின் Coffee Day, தத்தளித்துக் கொண்டிருக்கும் Vodafone போன்ற முதலாளித்துவ பெரு நிறுவனங்கள் Yes வங்கியிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதது அவ்வங்கியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

Jet Airways, Coffee day, Reliability Groups போன்ற நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள் அல்ல. எனவே அவை திவாலான போது அரசு தலையிட வில்லை. Yes வங்கி அப்படியல்ல. மக்கள் பணத்தை டெபாசிட்டாக வசூலித்து அதன் மூலம் தொழில் செய்த வங்கி. Yes வங்கி வீழ்ந்தால் எண்ணற்ற சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அரசும் ரிசர்வ் வங்கியும் தற்போது தலையிட்டு இருக்கின்றன.

தலையிடாவிட்டால் வலைப் பின்னல் தொடரும். Yes வங்கியோடு வணிகத் தொடர்பு வைத்திருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த பாதிப்பு வலைப் பின்னல் போன்று நீண்டு கொண்டே இருக்கும். இறுதிப் பாதிப்பு சாதாரண மக்களுக்கே இருக்கும்.

அம்பானியும் நரேஷ் கோயலும் வாங்கிய கடனுக்கு பொறுப்பேற்க வேண்டிய நெருக்கடிக்குள் சாதாரண மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுவே அரசு நிறுவனமாக இருந்திருந்தால் வேலை இழப்பு, ஓய்வுதிய வெட்டு போன்ற 'சிக்கன நடவடிக்கைகள்' நடந்திருக்கும், BSNL இல் நடந்தது போல. இது தான் முதலாளித்துவத்தின் பொது விதி.

இலாபமே தன் இறுதி லட்சியம், குறிக்கோள் என இயங்கும் முதலாளித்துவ கொடுங்கோன்மை எந்த அளவுக்கு வெளிப்படையாகப் பிரகடனம் செய்கிறதோ, அந்த அளவுக்கு அற்பமானதாகவும், வெறுக்கத் தக்கதாகவும் கசப்பூட்டுவதாகவும் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அந்த கசப்பு மருந்தை (விஷத்தை) உட்கொள்ள வேண்டிய நெருக்கடியை சாதாரண மக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

- சு.விஜயபாஸ்கர்

Pin It