"Glitch" ன்னு ஒரு வெப் சீரிஸ் நெட் ஃப்ளிக்ஸ்ல இருக்கு. நேரம் இருந்தா பாருங்க.
இறப்புக்கும் வாழ்வுக்கும் இடையே நடக்கும் உணர்வுகள். நீங்க இறந்து போய், மறுபடியும் வாழ வந்திருப்பதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
இறந்து போனவர்கள் மீண்டும் உங்கள் வாழ்க்கையில் வந்தால் என்ன நடக்கும்?
ஆஸ்திரேலியா யுரோனா [Yoorana] என்ற டவுனில், நீண்ட வருடங்களுக்கு முன்பு இறந்து போனவர்கள், அவர்களின் செல்கள் தானாக புதுப்பிக்கப்பட்டு, மண்ணறையில் இருந்து வெளியே உயிரோடு தாங்கள் வாழ்ந்த பகுதிக்குத் திரும்புகின்றார்கள்.
மேயர் ஒருவர் அப்படி உயிரோடு வருகின்றார். நாட்டின் மேயராகத் தலையில தூக்கி வச்சி கொண்டாடினவங்க, இறந்த பிறகு சிலையா வச்சிருக்காங்க... யாருக்குமே அவரை ஞாபகத்தில் இல்லை. அந்தப் பகுதி மக்களின் பசியைப் போக்க திட்டமெல்லாம் வகுத்துக் கொடுத்தவர், பசியால் சூப்பர் மார்க்கெட்டில் சென்று திருடித் தின்கிறார். அவரைத் திருடன் போல துரத்துகின்றார்கள்.
அந்த சிலையால் யாருக்கு என்ன பயன்..? வெயிலிலும் மழையிலும் நனைந்து கொண்டிருக்கும் வெறும் கல்லாக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள்.
அப்படி மீண்டு வந்த இன்னொரு பெண், தன்னை இழந்து வாடும் பெற்றோர்கள் உறவினர்களைப் பாசத்தோடு தேடிச் செல்லும்போது, இவள் திரும்பி வந்ததை நம்ப முடியாமல், பெற்றோர்களும் உறவினர்களும், இவளைக் கொல்ல நினைக்கின்றார்கள். இவள் திகைப்பில் இருக்கிறாள். நம்மை எவ்வளவு பாசமாகக் கொஞ்சியவர்கள் ,அன்பு காட்டியவர்கள் இப்படி மாறிவிட்டார்களே என்று.
நீ இல்லாமல் நானில்லை, நான் இல்லாமல் நீ இல்லை - நீதான் என்னுடைய உயிர். நீ இறந்தால் நான் இறப்பேன் - என்று வசனம் பேசிய கணவன், மனைவி இறந்தவுடன் உடனே தனக்கொரு துணை தேடி புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கின்றான்.
திரும்பி வந்த மனைவிக்கு நம்பவே முடியவில்லை. என்னை அவ்வளவு காதலித்தவன், தான் இல்லாமல் வாழமுடியாது என்றவன், இப்படி எல்லாம் மறந்து வாழ்கிறானே என்று அவளுக்குக் கோபமாய் இருக்கிறது
அதற்காக ஒருவர் இறந்துவிட்டால் அவரது நினைவுகளுடனையே இறுதிவரை வாழ வேண்டுமா என்ன? நிச்சயமாகக் கிடையாது. ஆனால் நாம், நம்மைச் சுற்றி உள்ளவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். யார் இறந்தாலும் வழக்கம்போல இந்த உலகம் சுற்றத்தான் போகிறது.
ஒருவேளை நீங்கள்தான் பொருளீட்டும் பொறுப்பில் இருக்கின்றீர்கள் என்றால், அந்த குடும்பத்திற்கு மீண்டும் எழுந்து வர கொஞ்சம் காலம் பிடிக்கலாம். ஆனால் அவர்களின் உலகம் நின்று விடப் போவதில்லை; இயங்கத்தான் போகிறது.
கடந்த மாதம் சவுதி நஜ்ரான் (Najran) பகுதியில் ஒரு அரபியின் வீட்டில் வேலை செய்து வந்த கந்தசாமி என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக, தாயகம் திரும்புவதற்காக அபாஹா (Abaha) விமான நிலையத்திற்கு வந்தபோது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
அவரது உடலை, இந்திய சோசியல் ஃபோரம் மூலமாக ஊருக்கு அனுப்புவதற்காக முயற்சி செய்த பொழுது, அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து விட்டனர்.
வழக்கு தொடர்ந்தால் 30 லட்சம் இந்திய ரூபாய் கிடைக்கும் என்று குடும்பத்தினரை யாரோ ஏமாற்ற, அவர்களும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு 21 மாதங்களாக நடந்து, இறுதியில் வேலை பார்த்த வீட்டில் இருந்து 4 லட்சம் குடும்பத்திற்கு அனுப்பி வைத்த பிறகு, "இறந்து போன பிணம் தங்களுக்கு எதற்கு?அங்கே அடக்கிக் கொள்ளுங்கள்" என்று உடலை வாங்க மறுத்துள்ளார்கள்.
தனது குடும்பத்திற்காக நாட்டை விட்டு அயல் தேசம் சென்று சம்பாதித்தவர் - குடும்பத்தின் வறுமையைப் போக்கியவர் - குடும்பத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றவர், குடும்பத்திற்காக உடல் நலத்தை இழந்தவர், வாழ்க்கை முழுவதும் குடும்பத்திற்காக சம்பாதித்து கடன்பட்டு வந்தவருக்கு, இறந்து போனவுடன் அவர் குடும்பத்தினர் செய்த மரியாதையைப் பாருங்கள்!!
இவ்வளவு சுயநலமாக இரக்கமே இல்லாமல் மனிதன் எப்படி மாறிப் போகின்றான்?
பரிணாம வளர்ச்சி என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் ஒரு மாயை தானா? பரிமாண வளர்ச்சி என்பது மனிதத்தின் தேய்மானமா என்று தோன்றுகிறது.
இந்த சவுதி சம்பவம் எனக்கு பத்தேமாரி படத்தைத்தான் ஞாபகப்படுத்தியது.
பத்தேமாரி படத்தில் உடலை உருக்கி, அயல்தேசத்தில் சம்பாதித்து, புதிதாய் வீடு கட்டியவன், ஊருக்குப் பிணமாய் திரும்பி வரும்பொழுது, அவனது பிள்ளைகள் தந்தையின் உடலை வீட்டுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்துவிடும் காட்சியில் எனக்கு அழுகையே வந்தது.
அவ்வளவுதான் வாழ்க்கை. நீங்கள் என்ன பதவியில் இருந்தாலும், என்ன சம்பாதித்தாலும் இறந்தவுடன் பிணம்தான். நீங்கள் மறுபடியும் எழுந்தே வந்தால் கூட, அடித்தே கொன்று விடுவார்கள்.
நாம் இறந்த பிறகு, நம்மையே நினைத்துக் கொண்டு ஏங்குவார்கள், நாம் இல்லாமல் அவர்கள் தவித்துப் போகக் கூடும் என்று நாம் முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் கொஞ்சம் வலி, கொஞ்சம் கண்ணீர்... நாம் இல்லாத வெற்றிடம் நம் பிரியமானவர்களுக்குக் காயத்தை ஏற்படுத்தினாலும், அது அவர்களுக்குப் பழகிப் போய், அல்லது மறந்துபோய் அவரவர்களுக்கான வாழ்க்கை தொடர்ந்து இயங்கத்தான் போகிறது.
அதற்காக நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காக வாழவே கூடாதா என்ன? இல்லை, வாழ வேண்டும். ஆனால் அதற்காக மட்டுமே உங்கள் வாழ்க்கை இல்லை.
வாழ்க்கை முதலில் உங்களுக்கானது. உங்களுக்கானது என்று வரும்போதே, உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும், சார்ந்துள்ளவர்களுக்கும்.
ஆனால் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்காக, மற்றவர்களைக் காயப்படுத்தாமல் வாழ வேண்டும். எல்லாருக்கும் ஒரு நியாயமான வாழ்க்கை உண்டு.
வாழுங்கள், சேமியுங்கள்... குழந்தைகளைப் படிக்க வையுங்கள். எதிர்வரும் மருத்துவச் செலவுகளுக்காகத் திட்டமிடுங்கள். எல்லாம் சரிதான், ஆனால் வரம்பு மீறி கடன் வாங்கி, திருமணம் செய்துவிட்டு, பின் அதனை அடைப்பதற்காக காலம் முழுவதும் கஷ்டப்படாதீர்கள். இருப்பதை வைத்து எல்லாம் செய்யுங்கள்.
20 வருடம் கழித்து நமது பிள்ளைகள் கஷ்டப்படுவார்களே என்று, அவர்களுக்காக பெரிய, பெரிய வீடுகளை கடன் வாங்கி, லோன் வாங்கி கட்டாதீர்கள்.
10 அல்லது 20 வருடம் கழித்து வரப்போகும் மருமகனுக்கு கொடுப்பதற்கான வரதட்சணையை இப்பொழுதே திட்டமிடாதீர்கள்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் 20 வருடத்திற்கான வீட்டு லோன் வாங்கியிருக்கிறார். அதனால் அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் படும் அவமானங்களை சகித்துக் கொண்டு, வேலை செய்யவும் முடியாமல், விலகவும் முடியாமல், வேலையைத் தொடர்ந்தால் நிறுவனத்தின் பணிச்சுமை, அவமானம்... வேலையை விட்டால் பேங்க் ஆட்களிடமிருந்து அவமானம்...
எப்பொழுது ஹார்ட் அட்டாக வருமோ என்கிற நூலிழையில் இருக்கிறார். கடுமையான மனஅழுத்தத்தில் இருக்கிறார். சாகும்வரையிலும் அவர் இந்த மன அழுத்தத்தில்தான் இருக்க வேண்டும்.
உங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கொடுப்பது அவசியமானது. ஆனால் அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை வரும், அவர்களுடைய குழந்தைகளுக்கென்று ஒரு வாழ்க்கைக்காக, நீங்கள் கடன் வாங்கி, உடல் நலம் இழந்து உழைக்க வேண்டுமா?
வாழ்ந்து இறப்போம். இறந்து வாழ வேண்டாம்.
உங்களுக்குண்டான கடமை உங்கள் குழந்தைகள். உங்கள் குழந்தைகளுக்குண்டான கடமை அவர்கள் தலைமுறைக்கானது.
ஒவ்வொருவருக்கும் அழகிய அல்லது கடினமான அல்லது சமநிலையான ஒரு வாழ்க்கை உண்டு. அந்த வாழ்க்கையை அவர்கள் அனுபவித்தே தீரவேண்டும். வாழ்க்கை ஒரு முறைதான். இந்த 60 வருடம் என்பது கண்மூடித் திறப்பதற்குள் கடந்து விடுகிறது.
எனக்கெல்லாம் இப்பொழுதுதான் பம்பரத்தில் ஓட்டை போட்ட மன்சூரின் வீட்டு முன், மண்ணை அள்ளி வீசிய பால்ய பருவம் முடிந்தது போல் இருக்கிறது. அதற்குள் 2 குழந்தைகளுக்கு அப்பாவாய்... காலம் அவ்வளவு வேகமாய் கடந்து போயிருக்கிறது.
ஆகவே வாழுங்கள். மரணம், இதோ கண்ணுக்கெட்டும் தொலைவில்தான்.
மரணத்தை நினைத்துக் கொண்டே பயந்து வாழ வேண்டாம், மரணம் இருக்கிறது என்று தெரிந்து வாழுங்கள். வாழ்வு நம்பிக்கையாகும். வாழ்வு அழகாகும். அழகாய் வாழுங்கள்.
உலகம் அழியும் நாட்களைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அவரவர்களின் உலகம் அழிகின்றது, அவரவர்கள் இறந்தவுடன்.
- ரசிகவ் ஞானியார்