`சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி' `நலிந்த பிரிவினரை சமூகப் பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு வர உதவும் இயைந்த சரிசமமான வளர்ச்சி' `போதிய கல்வி வேலைவாய்ப்புகளை வழங்கி மக்களுடைய வாழ்வை மேம்படுத்துவது' `அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கி நகர்புற ஊரக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது' `வறுமையை ஒழிக்க உறுதி' `வேளாண்மைக்கு முன்னுரிமை' இப்படி வரிசையாக சொல்லுகிறபோது அடடா! இப்படி நமது அரசின் செயல்பாடு அமைந்துவிட்டால் மக்களுக்கு இனி என்ன குறை இருக்கும் என்று எண்ணத் தோன்றும். ஆனால் மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு வரியும் தமிழக மாநிலத் திட்டக்குழு வெளியிட்டிருக்கிற 11வது ஐந்தாண்டு திட்ட அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் ஆனால் அதுதான் உண்மை.

"ஒவ்வொரு ஊராட்சியிலும்: மின்சார வசதியுடன் கூடிய ஒரு பள்ளி கட்டடம், புத்தகங்கள் நிறைந்த ஒரு நூலகம், விளையாட்டு கருவிகள், திடலுடன் கூடிய ஒரு கிராம விளையாட்டு மையம், முதன்மைச் சாலையுடன் இணைக்கும் இணைப்புச் சாலை, ஊராட்சிக்கு தனியான குடிநீர் ஆதாரம், தெரு மின் விளக்குகள், இணைய தள வசதிகள்" - இதையெல்லாம் கேட்பதற்கே இனிக்கிறது. உண்மையில் நடந்துவிட்டால் கிராமத்தின் முகத்தோற்றமே மாறிவிடும் அல்லவா? 11வது ஐந்தாண்டு திட்ட அறிக்கையில்தான் இந்த கனவு விதைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, மேலும் நீளுகிறது. "வளர்ச்சியின் முக்கிய குறிக்கோள் வேலைவாய்ப்பினை பெருக்குவதில்தான் நிறைவுற வேண்டும். வேலைவாய்ப்பினை வழங்கி மனித வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதால் வறுமையை ஒழித்து வளர்ச்சியை காண முடியும். வேலைவாய்ப்பை பெருக்கும் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு முன் உரிமை வழங்கப்படும்." "வேளாண்மை அதன் துணைத் துறைகள், தரிசு நில மேம்பாடு, சிறு தொழில்கள், குடிசை தொழில்கள், வீட்டுவசதி, கட்டுமானம், பணிகள், ஊரக உள் கட்டமைப்பு ஆகிய அதிக வேலைவாய்ப்பு வழங்கும் திறன் கொண்ட துறைகள் தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டும்." இவையெல்லாம் கூட திட்ட கமிஷன் கூறியவை என்று அறியும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால் அதை நோக்கிய பயணம் அரசியல் உறுதியோடும், அரசு சொந்தகாலில் நின்றும் நடத்தப்படுகிறதா என்ற கேள்வி நம் முன் விஸ்வரூபம் எடுக்கிறது.

"பொருளாதார திட்டமிடல் என்பது பல ஆதாரங்களையும், நிதி ஆதாரங்களையும் தேவைக்கு ஏற்ற முறையில் பயன்படுத்துவதாகவும். மனித முயற்சி, இயற்கை கூறுகள், நிதி ஒதுக்கீடு ஆகியன சீராக அமையுமானால் திட்டமிட்ட பொருளதார வளர்ச்சி இலக்குகளை தடையின்றி அடைய முடியும். சமத்துவத்தோடு கூடிய வளர்ச்சியைத்தான் இந்தியா போன்ற சமூகப் பொருளாதார ஏற்ற தாழ்வுடைய நாடுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் 57 ஆண்டுகளாக சமூக நீதியையும், வளர்ச்சியையும் இணைத்து பெருமளவில் வெற்றி பெற்ற எடுத்துக்காட்டான மாநிலமாகத் திகழ்கிறது." இப்படி இந்தத் திட்ட அறிக்கை தமக்கு தாமே சான்று வழங்கியிருக்கிறது. மக்களின் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் இதற்கு நேர் எதிராக இருப்பதை எடுத்துக்காட்ட உதாரணங்கள் தேவையில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் நிறையவே உண்டு.

2012ம் ஆண்டில் வறுமையே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்ட வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. தற்போது வறுமை கோட்டின் கீழ் வாழ்வோர் எண்ணிக்கை 22.5 சதவீதமாக குறைந்துவிட்டதாக அறிக்கை விவரிக்கிறது. ஆனால் வறுமை ஒழிப்பு குறித்து புள்ளி விவரப் புலிகள் திரட்டுகிற தகவல்களுக்கும் யதார்த்தங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையேயான வேறுபாடு உள்ளது. நடப்பில் வறுமை இன்னும் வீச்சோடும், வேகத்தோடும் கிராமப்புறங்களிலும் நகரப்புறங்களிலும் ஆட்டம் போட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த அறிக்கை கூட ஒரு உண்மையை ஒத்துக் கொள்கிறது. "சிறு குறு விவசாயிகளும் ஏழைகளாகவே இருக்கின்றனர். நிலமற்ற மக்களில் பெரும் பகுதியினர் வேளாண்துறையை நம்பியே உள்ளனர். வேளாண்மை சாராத துறைகளின் வளர்ச்சியினால் தூண்டப்பட்டு ஊர்ப்புற ஏழ்மை குறைந்துள்ளது என்கிற கருத்து உள்ளபோதிலும், வேளாண்மைத்துறையில் ஏற்பட்ட தேக்கமானது சிறு குறு விவசாயிகளையும் வேளாண் தொழிலாளர்களையும் மிகவும் பாதித்துள்ளது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. பயிரிடத்தக்க தரிசு நிலங்களை பண்படுத்தி மீண்டும் அவற்றில் பயிரிடுதல், வறுமை தணிப்பு பணிகளில் ஒன்றாகும். இந்நோக்கம் நிறைவேறிட மாநில அரசு ஏழை விவசாய கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது." இதன் மூலம் இந்த அறிக்கை வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வோர் விகிதம் குறைந்துள்ளதாக தானே முன்பு கூறிய புள்ளி விவரத்தை மறுதலித்துள்ளது. இரண்டு, தரிசு நில விநியோகம் வறுமை குறைப்பிற்கு ஒரு உபாயமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தரிசு நில விநியோகம் குறித்து ஆரம்பத்தில் பேசபட்டதற்கும் நடப்பில் இருப்பதற்கும் நிறைய இடைவெளி இருக்கிறது. தரிசு நிலங்களை, அது தனியாரிடம் இருந்தாலும், கண்டுபிடித்து வழங்குவதை அரசு தற்போது உள்ளதை காட்டிலும் பல மடங்கு வேகத்தில் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதை தமிழக வாழ்க்கை நிலைமை உணர்த்துகிறது. அதுமட்டுமல்ல நில விநியோகத்திலும் பெரும் அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது.

வீட்டு வசதி குறித்து அரசு மிகச் சிறப்பாக பேசுகிறது. "வீடுகளை மட்டும் அளிப்பது அரசின் கொள்கை ஆகாது. வாழிடத்தூய்மை, தூய்மையை பாதுகாத்தல், மின் வசதி வழங்கல், குடிநீர் வழங்கல், சாலைகள் முதலான வீட்டு வசதி தேவைக்கு அடிப்படை வசதிகள் வழங்குவதும் அவசியமாகிறது." என அரசு தெளிவாக திட்ட அறிக்கையில் உரக்கச் சொன்னாலும் வீட்டுமனைக்காக லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக் கிறார்கள் என்பதுதான் சுடும் உண்மை. ஆக அறிக்கைக்கும், நடப்புக்கும் இடைவெளி அதிகம். கல்வி, சுகாதாரம், குடிநீர், மருத்துவம் என ஒவ்வொரு துறையிலும் இந்தத் திட்ட அறிக்கை ஏதாவது ஒரு வகையில் தனியார் முதலீட்டிற்கு வழி செய்திருக்கிறது அல்லது வெளிநாட்டு கடனை சார்ந்து திட்டமிடப்பட்டிருக்கிறது. இவை இரண்டுமே ஆபத்தான போக்குகள்.

தமிழக முதல்வரால் ஜூலை 3ஆம் நாள் வெளியிடப்பட்ட 870 பக்கங்கள் கொண்ட 21 தலைப்புகளிலான `பதினோராவது ஐந்தாண்டு திட்டம் - தமிழ்நாடு' நூலின் முழு விவரத்தையும் ஒரு சிறு கட்டுரையில் ஆய்வு செய்து விட முடியாது. ஒருப் பருந்துப்பார்வையாக சில செய்திகளை இங்கே அலசியிருக்கிறோம். பல்வேறு துறை சார்ந்தவர்களின் கருத்துகளை யும், அனுபவங்களையும் உரசிப்பார்த்து இந்தத் திட்டத்தை விமர்சிப்பதும், திட்ட இலக்கை நிறைவேற்ற மக்களை திரட்டிப்போராடுவதும் மக்கள் நலனில் அக்கறை உள்ளோரின் கடமை.

இந்த திட்ட அறிக்கை முழுவதையும் படித்த பிறகு ஓங்கி சொல்லத் தோன்றுவது என்னவென்றால்: "சொற்களில் இருக்கும் இனிமை வாழ்க்கையில் வந்தால்...............?? நினைக்கவே சுகமாக இருக்கிறது." நடக்குமா?

- சு.பொ.அகத்தியலிங்கம்

Pin It