திருப்பூர் ஆயத்த ஆடை வர்த்தகம் இப்போதைய நிலவரத்தின் படி 2016-17 ஆம் ஆண்டு வளர்ச்சியை எட்டிப் பிடிக்கவே போராடிக் கொண்டுள்ளதாக செய்திகள் வருகின்றது.
ஆனால் இந்த உண்மையைக் கூறாமல் திருப்பூர் வர்த்தகம் கடந்த ஆண்டைவிட 4.7% வளர்ச்சி பெற்று விட்டதாக சங்கிகளின் ஆதரவாளர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள்.
Free Trade Agreements (FTA) ஒப்பந்தத்தின் படி பன்னாட்டு முதலாளிகளுடன் போட்டி போடும் நிதிநிலைக்கு உயர்த்தப்பட்ட(..? ) திருப்பூர் முதலாளிகள் இன்று ஒப்பந்தத் தரகர்களாக மாறி வருகின்றார்கள். DDB, ROSL போன்ற ஏற்றுமதி சலுகைகளை முற்றிலும் நிறுத்திவிட்ட நிலையில் தற்போது ஏற்றுமதி செய்வதற்காக ஆவணங்களுக்கும் அதிகப்படியான கட்டணங்கள் செலவிடவேண்டியுள்ளது.
2016-17 ல் ₹1,16,508/-கோடி இந்திய ஆடை வர்த்தகம் நடைபெற்ற நிலையில் 2017-18 ல் ₹1,07,679/- கோடியாக சரிந்து தற்போது ₹1,12,715/-கோடியை எட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஆனால் 9 கோடி மக்கள் கொண்ட வியட்நாம் ₹2,20,000/-கோடி வர்த்தகத்தைக் கடந்து சென்று விட்டது..!
15 கோடி மக்களைக் கொண்ட பங்களாதேஷ்-ம் நம்மைப் பார்த்து சிரிக்கிறது.
திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகமாக 2016-17 ₹26,000/- கோடி, 2017-18 ல் ₹24,000/- கோடி தற்போது மீண்டும் 26,000/- கோடியை எட்ட ஆடைத் துறையினர் திணறிக் கொண்டுள்ளார்கள். (இலக்கு ₹30,000 கோடி. ) இது உண்மையான வளர்ச்சியும் அல்ல, டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் கிடைத்தது.
கடந்த 2018 இதே அக்டோபர் 2 ஆம் தேதிப்படி பனியன் தயாரிக்க பெரும்பாலும் பயன்படுத்தும் பருத்தி நூலான 30 ஆம் நம்பர் நூல் கிலோ ₹231-242/. அக்டோபர் 2-2019 அன்று அதே நூல் கிலோ ₹209-220/-. இடைப்பட்ட மாதங்களிலும் நூல் விலை குறைந்து கொண்டு வந்தும், திருவாளர் மோடிஜீ-யால் கொண்டு வரப்பட்ட 500/1000 பணம் செல்லாது என்ற நடவடிக்கையும், பின்பு கொண்டுவந்த வரைமுறையற்ற வரிமுறையான GST-ம் திருப்பூரை போண்டி ஆக்கியுள்ளது.
திரும்பவும் வளர்ச்சிப் பாதை நோக்கி முன்னேறக் காரணம் பனியன் நிறுவனத்தினரின் விடாமுயற்சியும் (லாப வெட்டு / சமரசம்), தொழிலாளிகளின் 12-16மணி நேர உழைப்பும் மட்டுமே காரணம் (வேறு வழியும், பொழப்பும் இல்லை). திருப்பூரின் வளர்ச்சிக்கு எந்த ஜீ-க்களும் உரிமை கொண்டாட முடியாது - கூடாது.
வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அட்டைகளை கட்டிடம் வாடகைக்கு உள்ளது என்ற அட்டைகள் மறைத்து வருகின்றது. இதுவே திருப்பூரின் தொழில் வீழ்ச்சியின் அடையாளம்.
சுமார்ட் சிட்டி என்று இனி அனேகமாக கம்பியும், கான்கிரீட் கட்டிடங்களாகவே திருப்பூர் காட்சியளிக்கப் போகின்றது.
MAKE IN INDIA, MADE IN INDIA என்ற வெற்றுக் கோசங்கள் எதற்கும் பயன்படாது. முகமூடி, கையுறை, முழுநீள வெள்ளை ஆடை, சூ, 6அடி நீள துடைப்பம் கொண்டு தூய்மை இந்தியா திட்டத்திற்குப் போஸ் கொடுப்பவர்களால் இனி எந்தத் துறையும் வளர்ச்சியை நோக்கி வளர முடியாது - விடமாட்டார்கள் இந்த 'பகவத் கீதை' பார்ட்டிகள் என்பதை மக்கள் உணரத் துவங்கி விட்டார்கள் .
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் படைப்பின் சாரமாகும்.
எங்கிருந்து எடுத்தாயோ அங்கேயே திருப்பிக் கொடு என்ற முழக்கம் கார்ப்பரேட் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகளை நோக்கி இனி தொழிலாளிகளின் - சிறுமுதலாளிகளின் குரலாக ஒலிக்கும்.
- தருமர், திருப்பூர்