பிள்ளையாருக்கு ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாள் கொண்டாடும்போதும், பொது மக்களைவிட காவல்துறையினரே பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். காரணம் வழக்கமான தொழிற்முறை ரவுடிகளையும், பொறுக்கிகளையும், சமூக விரோதிகளையும் எப்படி கையாள்வது என பயிற்சி எடுத்த காவல்துறைக்கு, பிள்ளையார் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கொண்டாட்டத்திற்காகவே உருவெடுக்கும் தற்காலிக திடீர் பொறுக்கிகளை எப்படி கையாள்வது எனத் தெரியவில்லை. நன்கு படித்த, நல்ல வேலையில் இருக்கும், சமூகத்தில் கவுரவமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் பல இளைஞர்களை இந்தப் பிள்ளையார் ஒவ்வொரு ஆண்டும் நான்காம்தர பொறுக்கிகளைப் போல அடவாடித்தனமான செயல்களில் ஈடுபட அருள் பாலித்துக் கொண்டு இருக்கின்றார்.

ganesha rally policeதமிழ்நாட்டில் பல்வேறு பார்ப்பன திருவிழாக்கள் கொண்டாடப்பட்டுக் கொண்டு இருந்தாலும் எந்த ஒரு திருவிழாவிலும் இது போன்ற காலித்தனங்கள் நடப்பதில்லை. காரணம், அவை எல்லாம் சங்கிகளால் ஒருங்கிணைக்கப் படுவதில்லை. ஆனால் இந்தப் பிள்ளையார் ஊர்வலங்கள் மட்டும் பெரும்பாலான இடங்களில் பல்வேறு சங்கி கும்பலால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. பிள்ளையார் வழிபாடு என்பது மிக எளிமையாக தமிழ்நாடு முழுவதும் அது நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி, பல ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது. சாமானிய மக்கள் பிள்ளையாரை வினை தீர்ப்பவராகவே பார்த்து வந்தார்கள். ஆனால் அதில் எப்போது சங்கி கும்பல்கள் உள்ளே நுழைய ஆரம்பித்ததோ, அப்போதில் இருந்து அது வினையை உண்டாக்கும் பிள்ளையாராக மாற்றப்பட்டிருக்கின்றார்.

அரச மரத்தடி பிள்ளையாரை அரசியல் பிள்ளையாராக மாற்றி, அதன் மூலம் பெரும்பாலான தமிழக இளைஞர்களின் மனதில் பார்ப்பனிய நச்சை சங்கி கும்பல் இதன் மூலம் விதைத்து வருகின்றது. நேற்றுவரை சிறுபான்மையின மக்களை சகோதரர்களாகப் பார்த்து வந்த மக்களை, சங்கி கும்பல் மூளைச் சலவை செய்து, அவர்கள் எல்லாம் ஏதோ இந்து மதத்திற்கு எதிராக சதி செய்வது போன்ற எண்ணத்தை உண்டாக்கி, இன்று பிள்ளையாரை இஸ்லாமியர் வாழும் பகுதிகள் வழியாக எடுத்துச் சென்றுதான் அடக்கம் செய்வோம் என அடம் பிடிக்கும் அளவிற்கு கொம்பு சீவி விட்டிருக்கின்றார்கள். சங்கி கும்பலின் திட்டம் என்ன என்று தெரியாமல், அவர்களின் உண்மை முகம் என்ன என்று அறியாமல், பெரும்பாலான அரசியலற்ற இளைஞர்கள்தான் தங்கள் பகுதிக்குள் இந்தக் கொலைகாரக் கும்பலை அனுமதித்து விடுகின்றார்கள்.

சாமி சிலைகளை தேர்களில் வைத்து உலா வருதல், சப்பரத்தில் வைத்து உலா வருதல் எல்லாம் ஏற்கெனவே பார்ப்பன மற்றும் நாட்டார் கோயில்களில் இருந்து வரும் வழக்கம்தான். அது போன்ற நிகழ்வுகளில் மூலக் கடவுளுக்கு மந்திரங்கள் உச்சரிக்கப்படுதல், அது சம்மந்தமான வழிபாட்டு முறைகள் மட்டுமே பின்பற்றப்படும். நிகழ்ச்சி முடிந்த உடன் மீண்டும் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்படும். ஆனால் பிள்ளையார் விஸர்ஜன ஊர்வலங்களில் மட்டுமே இஸ்லாமிய எதிர்ப்பு முழக்கங்கள் திட்டமிட்டு முழங்கப்படுகின்றன. அதற்கு ஏற்றவாறு ஊர்வலங்கள் திட்டமிட்டு, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகள் வழியாகவும், பள்ளிவாசல் இருக்கும் பகுதிகள் வழியாகவும் திட்டமிடப்படுகின்றன. இந்த வழித்தடங்களை திட்டமிடுவதில் இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத் போன்ற சங்கி கும்பலே பெரும்பங்காற்றுகின்றன.

 

இது போன்ற சங்கி கும்பலுக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் ஆதரவு - அது அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி - என்பது எப்போதுமே உள்ளது. அதுமட்டும் இல்லாமல் பல சூத்திர முதலாளிகளின் ஆசியும் உள்ளது. இதனால் காவல்துறையை மிரட்டிக் கூட சர்ச்சைக்குரிய பல இடங்களில் சிலை வைப்பதற்கும், அதை சிறுபான்மையினர் வாழும் பகுதிகள் வழியாக எடுத்துச் செல்லவும் அனுமதி வாங்கி விடுகின்றனர். மாவட்டத்திற்கு பத்துப் பேர், இருபது பேர் கூட இல்லாத சங்கி கும்பலால் இத்தனை ஆயிரம் பிள்ளையார் ஊர்வலங்களை நடத்த முடிவதற்கான மர்மம் இதுதான்.

பிள்ளையார் சிலை கரைக்கப்படுவதற்காக வாகனங்களில் கொண்டு செல்லப்படும்போது, அதில் கலந்து கொள்ளும் பல இளைஞர்கள் சுயநினைவுகளிலே இருப்பதில்லை என்பதுதான் உண்மை. வயிறு முட்ட மதுவைக் குடித்துவிட்டு சாலையில் வருவோர், போவோரை எல்லாம் பார்த்து நாய்கள் போல கத்துவதையும், அவர்கள் மீது வண்ணப் பொடிகளைத் தூவுவதையும், எதிர்ப்போரை கும்பலாக சேர்ந்து தாக்குவதையும், மிரட்டுவதையும் செய்கின்றார்கள். இது போன்ற காலித்தனங்களுக்கு பெரும்பாலும் இலக்காவது சாமானிய பொது மக்கள் தான்.

dvk rally against vinayakaபிள்ளையார் சிலைக் கரைப்பு ஊர்வலங்கள் என்பது தெருப் பொறுக்கிகளின் ஊர்வலங்கள் போன்றே நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. பொது அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சிகளில் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கலந்து கொள்ளாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் உள்ளது. பக்தி என்பது ஒழுக்கத்தைத் தரும் என்றுதான் ஆன்மீகவாதிகள் சொல்கின்றார்கள். ஆனால் பிள்ளையார் ஊர்வலங்களைப் பார்த்தால் எப்படிப்பட்ட யோக்கியனும் காறித் துப்பும் அளவிற்குத்தான் உள்ளது. சங்கி கும்பல் எங்கெல்லாம் நுழைகின்றதோ, அங்கெல்லாம் இயல்பாகவே ஒழுக்கம் கெட்டத்தனமும், விபச்சாரக் குணமும், குடிகெடுக்கும் குணமும் நுழைந்து விடுகின்றது. நல்ல இளைஞர்களைக் கூட இந்த சங்கி கும்பல் தன்னுடைய விஷப் பேச்சுக்களால் நான்காம் தர பொறுக்கிகளாக மாற்றி விடுவார்கள் என்பதற்கு பிள்ளையார் சிலைக் கரைப்பு ஊர்வலங்களே சாட்சியாய் உள்ளது.

ஆனால் இதை எல்லாம் தடுக்க வேண்டிய அரசோ, இளைஞர்கள் இப்படி நாசமாய் அழிந்து போவதையே விரும்புகின்றது. இப்படி இளைஞர்கள் குடிகாரர்களாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும் இருந்தால்தான் தன்னால் தொடர்ந்து தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கவும், ஊழல், அதிகார முறைகேடுகளில் ஈடுபடவும் முடியும் என்பதால் அரசே திட்டமிட்டு இதை ஊக்குவிக்கின்றது. மதம் என்பது வரலாற்றில் எப்போதுமே ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியாகவே செயல்படும் என்று மார்க்சியம் சொல்கின்றது. சங்கி கும்பலின் பணியும் அதுதான். வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, கடுமையான பொருளாதார நெருக்கடி, ஆளும் வர்க்கத்தின் அதிகார ஊழல் முறைகேடுகள், கையாலாகாத்தனம் இவற்றில் இருந்தெல்லாம் இளைஞர்களின் சிந்தனையை திசை திருப்பவும், அவர்களை சிந்திக்கத் திராணியற்ற குடிகாரர்களாகவும், காலிகளாகவும் மாற்றவுமே ஆளும் வர்க்கத்திடம் இருந்து எலும்புத் துண்டுகளை வாங்கிக் கொண்டு இது போன்ற அயோக்கியத்தனமான செயல்களை செய்து வருகின்றது.

tpdk rally against vinayakaஇப்படி தமிழக இளைஞர்களை பண்பாட்டுச் சீரழிவுக்கும், ஒழுக்கம் கெட்டத்தனத்திற்கும் உள்ளாக்கிக் கொண்டு இருக்கும் இந்தப் பிள்ளையார் பிறந்த நாள் விழாவிற்கு எதிராக உண்மையில் களத்தில் இறங்கி அதை அப்புறப்படுத்த வேண்டிய பொறுப்பு இங்கிருக்கும் அனைத்து முற்போக்கு அமைப்புகளுக்குமே இருக்கின்றது. திராவிடர் விடுதலைக் கழகம் புத்தர் சிலை ஊர்வலத்தையும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பெரியார் சிலை பேரணியையும் அறிவித்திருப்பது உண்மையில் காலத்தின் தேவையாகும். முடிந்தால் இது போன்று வள்ளுவர் சிலை ஊர்வலத்தையும் நடத்தலாம். இதை எல்லாம் தமிழ்த் தேசியவாதிகள் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனியத்தை நக்கிப் பிழைக்கவே நேரம் போதாதவர்களுக்கு இளைஞர்களின் நலனில் எப்படி அக்கறை வரும்?

எனவே தமிழக இளைஞர்களை ஒழுக்கம் கெட்டவர்களாக மாற்றிக் கொண்டு இருக்கும் பிள்ளையார் பிறந்தநாள் விழாவிற்கு மாற்றாக ஒழுக்கத்தையும், சமூகப் பொறுப்பையும் விதைக்கும் மாற்றைத் தருவதன் மூலம் அவர்களை பண்பாட்டுச் சீரழிவில் இருந்தும், பார்ப்பன அடிமைத்தனத்தில் இருந்தும் மீட்டெடுக்க முற்படுவோம். அந்தப் பணியை யார் செய்தாலும் அவர்களோடு கரம் கோர்த்து களம் காண்போம்.

- செ.கார்கி

Pin It