தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனத் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் கடந்த 5-ம் தேதி இரவு நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “டெல்டா பகுதியில் சாதியக் கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. ராஜராஜ சோழன் காலம்தான் பொற்காலம் என்பார்கள். ஆனால், ராஜராஜ சோழன் ஆண்ட காலம்தான் இருண்ட காலம் என இந்த மண்ணிலிருந்து சொல்கிறேன். ராஜராஜ சோழன் என்னுடயை சாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகப் பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலம் பறிக்கப்பட்டது அவரது ஆட்சிக் காலத்தில்தான். சாதி ரீதியாக மிகப் பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது அவருடைய ஆட்சிக் காலத்தில்தான். 400 பெண்களை விலைமாதர்களாக மாற்றியது அவரது ஆட்சிக் காலத்தில்தான்” என்று கூறியிருந்தார். இதற்காக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பல காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
தமிழ்நாட்டில் பல பேரின் உதட்டுக்கு மேலே வெட்டியாக கேட்பாரற்று தொங்கிக் கொண்டு இருந்த மயிருக்கு எல்லாம் வேலை கொடுத்திருக்கின்றார் பா.ரஞ்சித். இதுவரை தமிழ் மக்கள் சார்ந்த எந்தப் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்காத, மூன்று வேலையும் தின்று கொழுத்த, ஊரை அடித்து உலையில் போட்டு சொத்து சேர்த்த கந்து வட்டிப் பேர்வழிகளும், தமிழ்த் தேசியவாதி என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் சாதிவெறியர்களும் வீடியோ வெளியிட்டு வெளிப்படையாக பா.ரஞ்சித்தை மிரட்டி வருகின்றார்கள்.
எப்படி ரஞ்சித் அப்படி பேசலாம், அவர் பேசியதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது என்று கூப்பாடு போடுகின்றார்கள். ஆனால் ரஞ்சித்தை வரலாற்று அறிவற்றுப் பேசுகின்றார் என்று மிரட்டும் கும்பல்கள் யாரும், இதுவரை அவர்கள் பேசியதற்கு எந்தச் சான்றையும் முன்வைக்கவில்லை. காரணம் ஆண்ட பரம்பரைக் கதை பேசும் பல பேர் எழுத்துக் கூட்டி கூட படிக்கத் தெரியாத தற்குறிகள் என்பதுதான்.
படிக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை குறைந்த பட்சம் தன்மானம் உள்ளவர்களாகவாவது இவர்கள் இருக்கின்றார்களா என்று பார்த்தால் அதுவும் இவர்களிடம் இல்லை. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த பல பேர் தற்போது ராஜராஜனுக்கு சொந்தம் கொண்டாடும் நிலையைப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகின்றது. பத்து வெவ்வேறு ஆண்ட பரம்பரை சாதியைச் சார்ந்த பிள்ளைகள் ஒரே அப்பனுக்கு உரிமை கொண்டாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றது. ரஞ்சித், தான் ராஜராஜனுக்கு உரிமை கொண்டாடவில்லை என்று சொல்லிவிட்டார். எனவே ராஜராஜனை உரிமை கொண்டாடும் ஆண்ட பரம்பரை மீசை முறுக்கிகள் ராஜராஜனுக்கும் தங்களுக்கும் உள்ள ரத்த உறவை பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். அரண்மனை படத்தில் வரும் சந்தானத்தைப் போல ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த அவர்களின் பாட்டிமார்களுக்கும் ராஜராஜனுக்கும் உள்ள ரத்த உறவை நிரூபிப்பதற்கான ஏதாவது ஆதாரம் இருந்தால் அதையும் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிடும் போது காட்டி தங்கள் ஆண்ட பரம்பரையின் பெருமையை உலகறியச் செய்யலாம்.
தமிழ்நாட்டு பாடநூல் கழகத்திற்காக டாக்டர் கே.கே பிள்ளை அவர்களால் எழுதப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருக்கும் “தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்” என்ற நூலில் “இசையிலும் கூத்திலும் வல்லுநரான பெண்கள் பலர் கோயில் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கல்வெட்டுகளில் இவர் தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். தேவரடியார்களுக்குத் தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், கோயில் பிணாக்கள் என்றும் பெயர்கள் வழங்கின…..”, “……தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருத்தொண்டுக்காக இராசராசன் நானூறு தேவரடியார்களை அமர்த்தினான் என்றும் அவர்கள் அனைவருக்கும் தனித்தனி வீதிகள் வகுத்து, அவற்றில் வரிசை வரிசையாக வீடுகள் அமைத்துக் கொடுத்தான் என்றும் தஞ்சாவூர்க் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது” என்று இவர்களைப் பற்றி பெருமையாகத்தான் கூறுகின்றார். ஆனால் சோழர் காலத்தில் நிலவிய அடிமை முறையைப் பற்றி சொல்ல வரும்போது “… சில சமயம் குடிமக்கள் தம்மைத் தாமே கோயில்களுக்கு அடிமைகளாக விற்றுக் கொண்டுள்ளனர். அரசாங்கம் ஒருவனுடைய நிலங்களைப் பறிமுதல் செய்யும்போது அவனுடைய பணியாள்களையும் பறிமுதல் செய்ததாக ஒரு கல்வெட்டு கூறுகின்றது. கோயில் பணி செய்வதற்காகச் சில பெண்கள் அவர்களுடைய குடும்பத்துடன் விற்கப்பட்டுள்ளனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்து வரவும் பெண்கள் விற்கப்பட்டுள்ளனர்.”
“…..அரையன் பெருங்காதி என்ற ஒரு பெண் தன் கணவனைத் தன் முதுகணாகக்கொண்டு தன்னையும், தன்னோடு எழுவரையும் முப்பது காசுக்கு விற்றுக் கொண்டாள். நம்ப நம்பி காடுகள் என்ற நங்கை என்ற மற்றொருத்தி வேளாள குலத்தினள் தான், தன்மகள், பேரன், பேத்திகள் ஆகிய பதினைவரை முப்பது காசுக்கு விற்றுக் கொண்டாள்.” “….வயலூர்க் கோயிலுக்குத் திருப்பதியம் பாடவும் தொண்டு செய்யவும் கவரிப்பிணாக்களாக மூன்று பெண்கள் தானமாக அளிக்கப்பட்டனர். இரண்டாம் இராசராசன் காலத்தில் திருவாலங்காடுடைய நாயனார் கோயிலுக்கு எழுநூறு காசுக்கு நான்கு பெண்கள் தேவரடியார்களாக விற்கப்பட்டுள்ளனர். தேவரடியார்கள் பாதங்களில் சூலக்குறியிடுவது வழக்கம். ஆனால் அதற்குச் சூட்டுக்கோலைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை” என்கின்றார்.
தேவரடியார் வேலை மிகப் புனிதமானது என்று வைத்துக் கொண்டால் நிச்சயம் அது போன்ற வேலைகளுக்கு பெண்கள் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. அந்தக் காலப்பகுதியில் நிலவிய கொடிய வறுமையே கோயிலில் தேவரடியாராக தங்களை விற்றுக்கொள்ள பெண்களை நிர்பந்தித்தது என்பதை இதன் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆனால் ஆண்ட பரம்பரையின் வாரிசுகள் என்று தாங்களை சொல்லிக் கொள்ளும் சிலர் தேவரடியார்கள் வேறு, தேவதாசிகள் வேறு என்று சொல்லி அதையே வரலாற்று உண்மை என்று நம்பச் சொல்கின்றார்கள். ஆனால் நாம் இரண்டையும் ஒன்றே என்கின்றோம். அடிமை, அடியார், தாசி, தாசன் என்ற சொற்கள் அனைத்தும் ஒரே பொருளைத்தான் தருகின்றது. அது கடவுளுக்கோ தான் மதிக்கும், விரும்பும் போற்றும் நபருக்கோ அடிமை என்ற பொருள்தான் அது. ஆனால் சிலர் அடியார் என்பது மேன்மையான சொல் என்றும், தாசி என்பதுதான் கேவலமான சொல் என்றும், அந்தச் சொல் விலைமகளிரைத்தான் குறிக்கின்றது என்றும் சொல்கின்றார்கள்.
தாசி என்ற சொல்லை பெரும்பாலும் பெண்கள் பயன்படுத்துவது கிடையாது ஆனால் தமிழ்ச் சூழலில் அதற்கான ஆண்பால் சொல்லான தாசன் என்பதைப் பல பேர் பயன்படுத்தி இருக்கின்றார்கள். புகழ் பெற்ற கவிஞர்களான பாரதி’தாசன்’, கண்ண’தாசன்’ போன்றவர்கள் இதற்குச் சிறந்த உதாரணம். தாசி என்ற வார்த்தை பெண்களில் விலைமகளிரைக் குறிக்கின்றது என்று சொல்பவர்கள் தாசன் என்பதை அதற்கு நிகராக ஆண்களில் விலைமகன்களைக் குறிக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டு தமிழில் தன்னுடைய பெயருக்குப் பின்னால் தாசன் என்ற சொல்லை சேர்ந்துக் கொண்டவர்களை விலைமகன்கள் என்று சொல்ல இவர்கள் தயாராக இருக்கின்றார்களா?
இதைப் பற்றி வரலாற்று ஆய்வாளர் தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் தன்னுடைய ‘தமிழகத்தின் அடிமை முறை’ என்ற நூலில் “…..தேவர்களுக்கு அடியாள் என்ற பொருளில் தேவரடியார் என்ற புனித முலாம் பூசப்பட்ட பெயருக்கு உரியவர்கள், விற்பனையின் வாயிலாகவே இப்பணிக்கு வந்துள்ளனர் என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. விண்ணுலகத்தில் தங்களுக்கு இடத்தை உறுதி செய்துகொள்ள விரும்பியவர்கள் இவ்வுலகில் இவர்களது வாழ்வைப் பறித்துள்ளனர்” என்றும், “…பொட்டுக்கட்டுதல் என்பது சமயம் சார்ந்த கோவில் சடங்கு. இச்சடங்கின் வாயிலாக ஒரு சிறுமி அல்லது இளம்பெண் அக்கோயிலில் தேவரடியராக மாறுகிறார். ’பதியிலார்’, ‘நித்திய சுமங்கலி’, ‘தேவடிமை’ என பல திருநாமங்கள் பொட்டுக் கட்டிய பெண்ணுக்குச் சூட்டப்படுகின்றன. மேட்டிமையோர் தன் மேலாண்மையை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பின்றித் தம் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளவும் செய்யும் வழிமுறைகளுள் ஒன்றுதான் சமயச் சடங்கு. பாலியல், சாதி, பொருளியல் என்ற தன்மைகளால் அடித்தளத்திலிருக்கும் பெண்ணைப் பொதுமகளாக மாற்றும் புனிதச் சடங்கே பொட்டுக் கட்டுதல். சமய முத்திரையின் வாயிலாக வரைமுறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது. தேவடிமையின் வாழ்வியல் தேவைகளான உணவு, இருப்பிடம் ஆகியன கோவிலால் உறுதி செய்யப்பட்டுவிட, மேட்டிமையோரின் குறிப்பாக புரோகித, நிலவுடமையாளர்களின் பாலியல் தேவைகளை நிறைவடையச் செய்வது அவளது பணியாகி விடுகின்றது”
“கோவில் வழிபாடு, திருவிழா போன்ற நிகழ்வுகளில் நடனமாடுதல், பாடுதல், கோலமிடுதல், பூக்கட்டுதல் இன்னபிற செயல்கள் அவர்களது அவல வாழ்வை மறைக்கும் புனிதத் திரைகளாக மட்டுமே அமைந்தன. ஒரு நிறுவனமாக உருப்பெற்று வளர்ந்த தேவரடியார்முறை அடிமை முறையின் மற்றொரு வடிவமே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவர்கள் சொத்துரிமை உடையவர்களாகத் திகழ்ந்தார்கள், திருமணம் செய்து கொண்டார்கள், கோயில்களுக்குத் தானம் வழங்கினார்கள் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன என்பது உண்மைதான். இதனடிப்படையில் மட்டும் இவர்கள் அனைவரும் சுயேச்சையானவர்கள் என்று கூறிவிட முடியாது. இவர்களில் சிலர் விலைபடுபொருளாகவும், தானப்பொருளாகவும் இருந்தமை, உடம்பில் சூலச்சின்னம் பொறிக்கப்பட்டமை, இவர்கள் மட்டுமின்றி இவர்கள் பரம்பரையினரும் தேவடிமைகளாக விளங்க வேண்டுமென்ற விதிமுறை ஆகியனவும் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன என்பதை எளிதில் புறக்கணித்துவிட முடியாது” என்றும் கூறுகின்றார்.
தமிழ்நாட்டில் தேவதாசி முறை தான் ஒழிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசியவாதிகளின் கருத்துப்படி தேவரடியார் முறை ஒழிக்கப்படவில்லை. ஆனால் நமக்குத் தெரிந்து தமிழ்நாட்டுக் கோயில்களில் எந்தத் தேவரடியாரும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று பா.ரஞ்சித்தை கடித்துக் குதறுபவர்களில் தமிழ்த் தேசியவாதிகளுடன் முன்னணியில் நிற்பவர்கள் பார்ப்பனர்களும் தான். தேவதாசி முறை கேவலமானது என்று இன்று சொல்பவர்கள் அன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னபோது அதை ஏன் எதிர்த்தார்கள்? குறிப்பாக தேவதாசிகள் புனிதமானவர்கள் அவர்கள் கடவுளுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள், அவர்கள் அடுத்த பிறவியில் சொர்க்கத்தில் பிறப்பார்கள் என்று சத்தியமூர்த்தி அய்யர் ஏன் சொன்னார்? அப்படி என்றால் தேவதாசியை பார்ப்பனர்கள் புனிதமானதாகக் கருதினார்கள் என்றுதானே பொருள்.
ஆனால் இன்று அதே குரல்கள் தேவதாசி என்பதைக் கேவலமானதாகவும், தேவரடியார் என்பதை உயர்வானதாகவும் சொல்கின்றது. ஆண்ட பரம்பரைப் பட்டம் வாங்குவதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கின்றது என்று பாருங்கள்! சரி இருந்துவிட்டுப் போகட்டும். தேவதாசி என்பது கேவலமானது, அது தற்போது ஒழிக்கப்பட்டு விட்டது. அதாவது திராவிட தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் தமிழ் தேவரடியார் முறைதான் ஒழிக்கப்படவில்லையே, எனவே அதைப் புனிதமானதாக சொல்லும் தமிழ்த் தேசியவாதிகள் தங்கள் வீட்டுப் பெண்களை இனி தேவரடியாராக மாற்றி தமிழரின் பெருமைமிகு கலைகளையும், பண்பாட்டையும் காப்பதற்கு முயற்சி செய்யலாம். மீசை முறுக்கிக் கொண்டு வீடியோ வெளியிட்டவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அவர்கள் கூடிய விரைவில் தஞ்சைப் பெரிய கோயிலிலோ இல்லை தமிழ்நாட்டில் தேவரடியார் முறை சிறப்புற்று விளங்கிய மற்ற கோயில்களிலோ இந்தப் புனிதப் பணிக்கு சேர்த்து விடுவார்கள் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். தமிழ்ப் பண்பாட்டிற்காக இதைக் கூட அவர்கள் செய்ய மாட்டார்களா, என்ன?
ஆனால் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் நமக்கு காஞ்சிபுரம் தேவநாதனும், ஜெயேந்திர சங்கராச்சாரியும் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகின்றார்கள். வெளியில் இருந்து கோயிலுக்கு வரும் பெண்களிடமே ‘ஆன்மீக ஆராய்ச்சி’ செய்த இவர்கள் பெண்களை கோயிலிலேயே அடிமைகளாக அதாவது தேவரடியார்களாக சேர்த்து விட்டால் என்ன செய்வார்கள்? அவர்கள் என்ன செய்வார்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால் தமிழ்த் தேசியத்தை பரப்புவார்கள் என்று நாம் இப்போதைக்கு நம்புவோம்!
- செ.கார்கி