தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா இருவரும் முன்னின்று நடத்திய திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகுதான், தமிழ்நாட்டிலே அதுவரையில் திருக்குறளைப் பற்றியே கேள்விப்படாத பாமரன்கூட அது என்ன திருக்குறள் – அவர் யார் திருவள்ளுவர் என்று அறிந்து கொள்ள விரும்பினான். அவனுக்குத் திருவள்ளுவரை அறிமுகப்படுத்தத் திராவிட இயக்கம் அன்றைக்கு முன்வந்தது.
- கலைஞர் கருணாநிதி (முரசொலி 17.02.2008)

வளர்ந்து நிற்கும் பார்ப்பன வல்லாதிக்கப் பேராபத்து, தமிழ்ச் சமூகத்தினைப் பெருங்கேடாய்ச் சூழ்ந்து நிற்கும் வேளையில், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்ப்பதற்குத் திருக்குறளை ஆயுதமாய் முன்னிறுத்தி நடந்து முடிந்துள்ளது, 12.08.2019 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் நடத்திய திருக்குறள் மாநாடு.

thirukural meet at chennaiபார்ப்பன ஆதிக்கத்திலிருந்து தமிழர்களை விடுவிக்கும் போராட்டத்தில், சமுதாயத் துறையில் மட்டுமல்லாது பண்பாட்டுத் துறையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தவர் தந்தை பெரியார். அதற்கான பண்பாட்டுத் தளத்தின் முக்கிய கூறுகளுள் திருக்குறளும் ஒன்று.

திருக்குறள் இந்து சனாதன நூல் என்ற ஒரு பொய்யான பரப்புரை, காவிகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், திருக்குறள் மாநாடு அக்கூற்றுக்குத் தெளிவான மறுப்புரையைத் தந்துள்ளது. “ஆரியம்போல் உலகவழக்கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே” என்ற வரிகளோடு மாநாட்டின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், எதிர்க்கப்பட வேண்டிய ஆதிக்கத்தைக் குறிப்பாக உணர்த்திக் காட்டியது சிறப்பு. திருக்குறள், பார்ப்பனியத்திற்கு – மனுதர்மத்திற்கு – சனாதனத்திற்கு எதிரானதே என்பதை மாநாட்டு அரங்கில் பேசியவர்களின் உரைகள் எதிரொலித்தன. ஒரே தேசம் – ஒற்றைக் கலாச்சாரம், இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட ஆதிக்கப் போக்குகளனைத்தையும் விமர்சிக்கும் தளத்தினை இம்மாநாடு ஏற்படுத்திக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், திருக்குறளைப் புனிதப்படுத்தாமல், திருக்குறளில் உள்ள பெண்ணியம் சார்ந்த பிற்போக்கான கருத்துகளையும் மேடையில் விவாதித்தது, பெரியாரியப் பார்வைக்குச் சான்றாய் அமைந்தது.

திருக்குறள் வளர்ச்சிக்குப் பெரும்பங்களிப்பினை ஆற்றிய கலைஞரின் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தாதது, மாநாட்டிற்குப் பொலிவைச் சேர்க்கவில்லை. மாநாட்டின் தொடக்கத்தில் அறச்சுடர் ஏற்றிய நிகழ்வு பெரியாரியத்துக்கு உகந்ததா என்ற கேள்வியும் நம்மிடம் எழாமல் இல்லை.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திருக்குறளை மக்களிடையே கொண்டுசெல்வதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய முயற்சிகளைச் சுட்டிக்காட்டியது. திருக்குறளையோ, திருவள்ளுவரையோ ஒரு சாதி அல்லது ஒரு மதத்துக்குள் வரையறுக்க முற்படுவது, குறள் நெறியை வலுவிழக்கச் செய்வதாகும். அத்தகைய முயற்சிகளை முறியடிக்கும் நோக்குடன் இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்படுவது, காலத்தின் தேவையாகும்.

திருக்குறள் மாநாட்டுத் தீர்மானங்கள்

1. திருக்குறளை இயக்கப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும்.

2. தமிழ்நாட்டின் தேசிய நூலாகத் திருக்குறளைத் தமிழ்நாடு அரசு அறிவித்திட வேண்டும்.

3. சாதி சமயமற்ற சமுதாயத்தை நல்வழிப்படுத்திட, திருவள்ளுவரை உள்ளடக்கித் தமிழ்நாட்டின் இலச்சினையை மாற்றியமைக்க வேண்டும்.

4. திருக்குறள் விழாவைப் பண்பாட்டு நிகழ்வாக தமிழர்கள் முன்னெடுத்துக் கொண்டாட வேண்டும்.

5. தமிழர்களின் குடும்ப நடைமுறைகளைத் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு அமைத்துக் கொள்ளவேண்டும்.

6. வழிபாட்டிடங்கள் அனைத்திலும் திருக்குறள் அறிவகம் என்கிற பெயரில் நூலகம் அமைத்திட வேண்டும்.

7. வள்ளுவர் கோட்டம் , கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, நம்பியூர் - குறள் மலை முதலானவற்றைப் பாதுகாக்கவும் சீரமைக்கவும் வேண்டும்.

8. உலகத் திருக்குறள் மாநாட்டைத் தமிழக அரசே நடத்திட வேண்டும்.

9. திருக்குறளைப் பார்ப்பனிய இந்து சனாதனத்தன்மையோடு அடையாளப்படுத்தும் சிலரின் போக்குகளை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

Pin It