தன்னையே உற்று நோக்குகிறவனுக்கு ஒரு பயம் வரும். அதற்கு பேய், பூதம், பிசாசு என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்.

நாஸ்டாலஜியா - எட்டு

எல்லா ஊரிலும் ஒரு பேய் வீடு கண்டிப்பாக இருக்கும். ஊருக்கு ஒதுக்குப் புறமாகவோ... வீதியில் கடைசி வீடாகவோ... கைவிடப்பட்ட ஒரு மாளிகையாகவோ... இன்னும் சொல்லப் போனால் மக்கள் நிறைந்திருக்கும் இடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக உள்ளொடுங்கிய வீடாகவோ... எப்படியும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு வீடு பேய்களால் நம்பப்பட்டிருக்கும். அது காலத்துக்கும் பேய் வீடாகவே இருக்கும். அப்படி என் ஊரில் நான் கண்ட ஒரு வீடு இன்னமும் என்னை அச்சுறுத்துகிறது.

ghost houseபத்மாக்கா வீட்டுக்கு ரவியண்ணனைத் தேடி நான் போவது வழக்கம். அது ஒரு சனிக்கிழமை என்று நினைக்கிறேன். வழக்கம் போல... காலை 10 மணி இருக்கும். எப்போதுமே என் வீட்டில் இருந்து ஓடிச் சென்று தான் மூன்று வீடு தள்ளி இருக்கும் ரவியண்ணன் வீட்டில் நிற்பது பழக்கம். அன்றும் ஓடி.... ஓலைக் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே காற்றைப் போல நுழைந்தேன். நான் அத்தனை வேகத்தில் உள்ளே சென்றதையும் கவனிக்காமல் பத்மாக்கா வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு உள்ளே வீட்டைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தது.

"என்ன வேணும்னாவது சொல்லித் தொல. சும்மா வர்றது....லொட்டு லொட்டுன்னு சத்தம் போடறது... படக் படக்குன்னு மூச்சு விடறது.. இதெல்லாம் வேணாம். நீ யாரு என்ன.... எதுக்கு வந்திருக்க.... அல்லாம் தெரியும். அதெல்லாம் இங்க நடக்காது.."

வேகமாய் உள்ளே நுழைந்தவன் சட்டென நின்று விட்டேன். கலைந்த தலையைக் கோதி விட்டுக் கொண்டே மெல்ல எட்டிப் பார்த்தேன். ரவியண்ணனிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறது என்று முதலில் நம்பினேன். பிறகு அப்படியே..... யோசனையோடே மெல்ல அனிச்சையாக நடந்து அந்த அக்கா அருகினில் சென்று விட்டிருந்தேன்.

"என்னடா.. விஜியா.... காலலயே ஸ்நேகிதக்காரன தேடிட்டு வந்துட்டியா.... அவன் இப்பதான் எங்கயோ போனானே.... பாக்கலியா...?" என்றது.

அப்படி என்றால் ரவியண்ணனோடு பேசவில்லை. பிறகு யாரிடம்....? மண்டைக்குள் எதுவோ லொட் லொட்டென விழுந்தது.

"சரசக்கா வேலைக்கு போகலயா..?" என்றேன்.

"அவ போய்ட்டாளே.." என்றது.

"அப்போ உள்ள யாரு..." என்று அந்த அக்காவைத் தாண்டி எட்டிப் பார்த்தேன்.

ஒரே அறை இருக்கும் அந்த நான்கு சுவருக்குள் யாருமே இல்லை. வெறும் பகலிருட்டு தான் அடர்ந்திருந்தது.

"இன்னைக்கு பூரா அவுத்துட்ட கழுதைங்க மாறி சுத்துவீங்க.. இல்லையா...! விஜியா..?" என்றபடியே என்னைத் தவிர்த்து பட்டென்று வீட்டுக்குள் பார்த்து, "பையன் பயந்துக்கப் போறான்.. நீ போ... சும்மா தட்டிகிட்டே இருக்காத" என்று வேகமாக கத்தியது.

எனக்கு கண்கள் தானாக சுழன்றது. கேட்டே விட்டேன்.

"யார்ட்டக்க்கா பேசிட்டு இருக்க...?" என்றேன்.

என்னையே உற்றுப் பார்த்து விட்டு மீண்டும் வீட்டுக்குள் பார்வையை விட்டது பத்மாக்கா.

"சரி நீ போய் விளையாடு" என்றது பார்வையைத் திருப்பாமல்.

"சரிக்கா" என்று வாய் சொன்னாலும் வழி மறந்தவனைப் போல அங்கேயே நின்றேன்.

"சொன்னா கேக்க மாட்ட.... செத்துட்டா கிளம்பிடனும்.. இங்கயே சுத்திட்டுருக்கக் கூடாது.... போன்னா போக மாட்டியா.....? செருப்பாலேயே அடிப்பேன்.. நானும் பார்த்துட்டுருக்கேன்.... இல்ல விஜியா..... இது யார்னு எனக்குத் தெரியும்டா... பேய் புத்திய காட்றானா....? ரொம்ப நாளா இந்தூட்டுக்குள்ளதான்டா இருக்கான்" என்று கையில் கிடைத்த பாத்திரத்தை எடுத்து வீட்டுக்குள் வீசி எறிந்தது.

நான் மூச்சிரைக்க மார்க் வீட்டு திண்ணைக்குப் பறந்திருந்தேன். வீதி வந்தும் உள்ளே படபடத்தது.

"அப்டீனா.... அந்த வீட்டுக்குள்ள பேய் இருக்கா.... விஜியான்னு என் பேர வேற சொல்லிருச்சே....." உள்ள திகுதிகுத்தது.

"எத்தனை தடவ தீப்பெட்டி எடுக்க அந்த வீட்டுக்குள்ள தனியா போயிருக்கேன்..! ஒரு நாள் உள்ள படுத்து கூட ரவியண்ணன் கூட தூங்கியிருக்கேன்... அப்போ வந்த அந்த தக் தக் சத்தம்.... பேய் போட்ட சத்தமா...!"

பிறகு இரண்டு நாள் காய்ச்சலில் கிடந்தது கிளைக் கதை.. அதன் பிறகு 18 வருடங்களுக்குப் பின் கடந்த முறை ஊருக்குச் சென்ற போது அந்த வீட்டுக்குள் சென்றேன். ரவியண்ணனும் நானும் நிறைய பேசினோம். பேசிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன். மனதுள் ஏதோ தேடல்.

எத்தனை தேடியும் அங்கே பேயும் கிடைக்கவில்லை. பத்மாக்காவும் கிடைக்கவில்லை...(பத்மாக்கா திருப்பூரில் இருப்பதாக ரவியண்ணன் சொன்னார்)

நினைவுகளின் வழியே பேய்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பேய்கள் ரசனைக்குரியவைகள். அவைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்க விடாது நம் கடவுள்தனம்.

பால்ய நினைவுகளில் பேய் வீடுகளும், பேய்க் கதைகளும் பேசிய சம்பவங்களும்.....எப்போதும் சொற்கள் நீண்டு பிராண்டுபவை. சில பிராண்டல்கள் மனதுக்கு நெருக்கமானவை.

பேய்கள் இருக்கிறதோ இல்லையோ... பேய் வீடுகள் எல்லா ஊரிலும் இருக்கின்றன.

- கவிஜி

Pin It