மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழா குறித்து ஏடுகள் வெளியிடும் செய்திகள், கடவுள் நம்பிக்கை மோசடிகளுக்கு ஒரு சிறந்த உதாரணம்.
இந்தத் திருவிழாவுக்காக மட்டுமே வைகை ஆற்றில் தண்ணீர் 2 நாள் மட்டும் திறந்து விடப்படு கிறது. அதிகாலையில் கள்ளழகர் ‘திருமஞ்சனம்’, அதாவது திருமணம் செய்து கொள்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த கூத்து. அழகர் தங்கப் பல்லக்கில் வந்தார்; பிறகு தங்கக் குதிரைக்கு தாவினார்; தனது பக்தை ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை சூடிக் கொண்டார்; பிறகு பச்சைப் பட்டாடை உடுத்திக் கொண்டார்; அதன் பிறகு ஆற்றில் இறங்கினார் - இப்படி ஏடுகள் செய்தி வெளியிடுகின்றன. பக்தர்கள் எல்லாவற்றையும் நேரில் பார்த்துக் கொண்டுதான் இருக் கிறார்கள்.
உண்மையிலேயே அழகர் தானாக பல்லக்கில் அமர்ந்தாரா? தானாக குதிரைக்குத் தாவினாரா? தானாக பச்சை பட்டாடை உடுத்திக் கொண்டாரா? அனைத்தையும் செய்வது அர்ச்சகப் பார்ப்பனர்கள்தான்! ஆனாலும் இப்படி ஒரு கற்பனையை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
அழகர் ஆற்றில் இறங்கும்போது எந்த வண்ணத்தில் ஆடையை தேர்ந்தெடுப்பார் என்று பக்தர்கள் ஆர்வத்தோடு பார்ப்பார்களாம்! பச்சைப் பட்டு உடுத்தி விட்டால் மழை பொழியுமாம்; வெண்பட்டு உடுத்தியிருந்தால் பயிர் விளைச்சல் அமோகமாம்; சிவப்புப் பட்டு உடுத்தியிருந்தால் மிளகாய் விளைச்சல் அதிகரிக்குமாம்.
நாட்டில் இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு, ஜாதி வெறியை புதைப்பதற்கு - குறைந்தபட்சம் வைகை ஆற்றில் எல்லா காலத் திலும் தண்ணீர் ஓடுவதற்கு ஏதேனும் ஒரு வண்ணப் பட்டாடையை கள்ளழகர் தேர்ந் தெடுக்கக் கூடாதா?
தல்லாகுளம் பெருமாள் கோயில் பார்ப்பன அர்ச்சகர் ஒருவர் (பட்டர்) உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
“அழகரை அலங்கரிப்பது நாங்கள்தான். அழகருக்கு ஆண்டு தோறும் நாங்கள் உடுத்துவது பச்சைப் பட்டாடைதான். கோயில் நிர்வாகம்தான் ஆடைகளை வாங்கித் தருகிறது. அழகர் அவ்வப்போது ஆடை யின் வண்ணத்தை மாற்றிக் கொள்வார் என்பது வெறும் கதை தான். எத்தனையோ கதைகளில் இதுவும் ஒன்றாக இருந்து விட்டுப் போகட்டுமே” என்று கூறியிருக்கிறார், இந்த பட்டர்.
விழாக்களும் - கொண்டாட்டங் களும் தேவைதான். அதற்காக இப்படி மோசடிகளை நம்பிக்கையாக்கும் மடமை விழாக்கள் தேவை தானா?