ஆடை அணிந்த பிறகு தான் மனித தோற்றம் மானுடத்துக்கு.

எல்லாருக்கும் ஒவ்வொரு ஆடை பிடித்தமானதாக இருக்கும். ஆனால் எல்லாருக்கும் பிடித்தமான ஆடை அவரவர் பள்ளிச் சீருடை தான் என்பது என் எண்ணம்.

school kidsஇந்த சீருடை என்பதே ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்குமான குறியீடு தான். ஏழை - பணக்காரன், இருப்பவன் - இல்லாதவன் என்று பாகுபாடு இருக்கக் கூடாது என்ற உயரிய சிந்தனையில் உதித்தவைதான் சீருடைக் கலாச்சாரம். வளரும் குழந்தைக்கு எதிர்கால சிந்தனையில் ஒற்றுமையும் வலிமையும் கூடுவதற்கு இச்சீருடை முக்கியமான தோற்றம். சீருடையின் சிறப்பம்சமே அதன் தனித்த அடையாளம் தான். பரவசம் நிறைந்த காட்சிகள் அவைகள். எனக்கு மிக நெருக்கமான ஆடை என்பதும் எனது சீருடைகள் தான். ஒன்றாவதில் இருந்து ஐந்தாவது வரை படிக்கையில் எனது சீருடையின் நிறம் வெள்ளை சட்டை......நீல ட்ரவுச‌ர்.

என் நண்பர்கள் பலர் முட்டி வரை ட்ரவுச‌ர் போட்டு வருகையில்... நான் கொஞ்சம் டைட்டாக முட்டிக்கு சற்று மேலே ஒட்டினாற் போல போட்டுச் செல்வேன். எனக்கு தொள தொளவென்று ஆடை அணிவது பிடிக்காது (இன்றுவரை)

எனது டெய்லர்( அப்போதே எனக்கு இப்படி வேண்டும் அப்படி வேண்டும் என்று பிராண்டி எடுத்து விடுவேன்) அவர் பெயர் கூட "புத்து" என்று நினைக்கிறேன். எனக்கு துணியால் ஆன பெல்ட் கூட அவர் தைத்துக் கொடுத்திருக்கிறார். வெள்ளை சட்டையும் நீல ட்ரவுசமாக அந்த சூட மரக் காட்டு வழியே ஒரு முயலைப் போல துள்ளி ஓடியதெல்லாம் காலம் பதிந்து வைத்திருக்கும் காட்சிகள். பச்சையும் பசுமையும் பொங்க நான் நடுவில் நடந்து செல்வதே கவிதைக்குரிய அட்டைப்படங்கள். உள்ளிருக்கும் சுவாசம் எல்லாம் மலையும் அதன் சாரலும்தான். அதற்கு நிறம் வெள்ளையும் நீலமும் தான்.

அதன் பிறகு 6வதற்கு வெள்ளைச் சட்டையும் காக்கி ட்ரவுசரும்.

அதுவும் அதே போல தான். ஆனால் எட்டாவது படிக்கையில் ட்ரவுசர் போட்டுச் செல்வது ஏதோ நம்மில் குறைவதாக உறுத்தியது. சக தோழிகள் முன்னால் ட்ரவுசரோடு நிற்க வெட்கம் பிடுங்கித் தின்றது. முன்னொரு நாளில் இலந்தைப்பழம் பிடுங்கித் தின்னவளெல்லாம் திடீரென்று வளர்ந்து என்னமோ மாதிரி பார்க்க என்னென்னமோ ஆனது அந்த ட்ரவுசர் கலாச்சாரம். 9 வதில் அதே காக்கி வண்ணத்தில் பேண்ட்டுக்கு மாறுகையில் அப்பாடா என்றிருந்தது. (பிஜு டெய்லருக்கு நன்றி சொல்ல வேண்டும்.) கூட இரண்டு சிறகுகள் முளைத்து விட்டதாக நம்பினேன். நடப்பதே பறப்பது போல தான். அதுவும் 10 வது படிக்கையில் எல்லாம் கொம்பு கூட நாலைந்து முளைத்திருந்தன.

சீருடை எப்போது எதிரியாகும் என்றால் பள்ளிக்கு கட் போட்டு விட்டு "சீதாலட்சுமி" தியேட்டருக்கு சினிமாவுக்கு செல்கையில் தான். பூதாகரமான அது போன்ற சமயங்களில் ஒளிந்து நெளிந்து சில நேரம் மண்ணில் புரண்டு அழுக்காக்கிக் கூட சென்றதுண்டு. 11 வதுக்கு செல்கையில் கிரீம் வண்ண சட்டையும் பச்சை நிற பேண்ட்டும். பேண்ட்டிலும் கீழே மடித்து தைத்திருப்பேன். அரைக்கை சட்டையிலும் கொஞ்சம் டைட்டாக மடித்து தைத்திருப்பேன் (உபயம் உதயகுமார் டெய்லர்)

பார்க்கவே அத்தனை கெத்தாக இருக்கும். நடையே மாறி விடும் சந்தர்ப்பத்தில் நன்றாக இருக்கும் சட்டையைக் கூட இழுத்து இழுத்து சரி செய்து கொண்டே காலரை அப்படி இப்படி என்று தூக்கி விட்டுக் கொண்டதெல்லாம் சீருடைகளின் நூலிடையில் நடக்கும் சம்பவங்கள். வெள்ளை சட்டை, காக்கி ட்ரவுசர் பேண்ட் என்னானது என்று மறந்து விட்டேன். ஆனால் பச்சை பேண்ட்டும் கிரீம் சட்டையும் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அதுவும் அந்த 17 வயதுக்காரனை பத்திரமாக வைத்திருக்கிறது. எங்கோ ஓரிடத்தில் நாம் இருக்கிறோம் என்று தானே காலத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

என்ற மல்லிகா (பெயர் மாற்றப் பட்டிருக்கிறது) இன்னமும் என் பீரோவுக்குள் அந்த யூனிபார்ம்க்குள் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறாள். எப்போதாவது அந்த யூனிபார்மை எடுத்து போட்டுப் பார்க்க முயற்சி செய்வேன். கைக்கு தாண்டாது சட்டை. தொடைக்கு தாண்டாது பேண்ட். பள்ளி நாட்களை முழுக்க அந்த சீருடைக்குள் மடக்கி வைத்திருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறேன். அவரவர்க்கு அவரவர் நம்பிக்கை. "விஜி உன்ன நம்ம யூனிபார்மில ரெம்ப பிடிக்கும்"

சீருடையில் பள்ளி மாணவனாக சுற்றுகையில் இருந்த சுதந்திரம் இன்று அலுவலக சீருடையில் இல்லவே இல்லை. 

தொடரும்...

- கவிஜி

Pin It