“செம்மறி ஆட்டிலிருந்து அதன் நகலான இன்னொரு செம்மறி ஆடு உருவாக்கப்படுகிறது. பெற்றோர் இல்லாமலேயே நகல் மனிதர்களை உருவாக்கும் வேண்டாத வேலையிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் இதே விஞ்ஞானிகளுக்கு, அலிகள் ஏன் இப்படி உருவாகுகிறார்கள் என்று ஆழமாக ஆய்வு செய்ய நேரமில்லை... கேட்டால் “குரோமோசோம் கோளாறு” என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடுவார்கள். இன்றைய விஞ்ஞான பொற்காலத்தில் இந்தக் கோளாறுகளைச் சரிப்படுத்த வேண்டுமென்ற மனிதாபிமானம் எவருக்கும் ஏற்படவில்லை. இதுதான் இன்றைய நடைமுறை”. - சு.சமுத்திரம், (வாடாமல்லி நாவல் முன்னுரையிலிருந்து)
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நடனக்குழுவில் பலகுரல் மேடைக் கலைஞனாய் இருந்த எனக்கு கொடைக்கானலுக்கு ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிய அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாதது. சுவர் எழுப்பப்படாத வளைந்த பாதையில் மலை உச்சியிலிருந்து பள்ளத்தாக்கை பார்க்கும்போது ஏற்படும் பயம் கலந்த திகில் அனுபவத்தை விட ஒருபடி மேலானது எனக்கு கிடைத்த அனுபவம்.
காவல்துறையின் அட்டூழியம்
கொடைக்கானல் நிகழ்ச்சிக்கு நடனமாட எங்கள் குழுவில் வந்திருந்த இரு பெண்களில் ஒருவர் அரவாணி. காரைக்குடியைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் பாலினத் திரிபால் வீட்டை விட்டு துரத்தப்பட்டு திருப்பரங்குன்றத்திலிருந்த நடனப்பள்ளியில் ஸ்டெல்லாவாக சேர்ந்தார். அவர்தான் அன்று எங்களுடன் வந்திருந்தார். இரவு நடைபெறும் கோவில் விழா நிகழ்ச்சிக்காக கொடைக்கானலுக்கு பகலிலே சுற்றிப்பார்க்க வேண்டுமென்ற உந்துதல் காரணமாக காலையிலேயே சென்று விட்டோம். குழுவைச் சேர்ந்தவர்கள் பலபகுதிகளாய் பிரிந்து சுற்றிப்பார்க்கச் சென்றுவிட்டார்கள். ரவி என்ற கலைஞனோடு சென்ற ஸ்டெல்லாவை ஏரிக்கரைப் பகுதியிலிருந்த போலீஸார் சுற்றி வளைத்தனர். “பொம்பளைங்கள தான் தள்ளிட்டு வாராங்கே.. நீ என்னடா பொட்டைய தள்ளிட்டு வந்திருக்க” என்றவாறு ரவியை அடித்து தள்ளிவிட்டு ஸ்டெல்லாவை இழுத்துச் சென்றுவிட்டனர். எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் பெரும்பாடுபட்டு போலீஸாரிடமிருந்து ஸ்டெல்லாவை மீட்டு வந்தனர். அன்று முழுவதும் அழுது கொண்டிருந்த ஸ்டெல்லா அவமானத்தால் மேடையேற மறுத்துவிட்டார். போலீஸார் லத்தியால் அவரை தாக்கியதில் முதுகு முழுவதும் காயம்.
சினிமாவில் அரவாணிகள்
அவதாரம் எடுக்க ஆண்டவன் ஆணிலிருந்து பெண்ணாக மாறினான் என இதிகாசங்களும், இட்டுக்கட்டப்பட்ட புனைக்கதைகளும் கேட்டு தெய்வமென தொழுபவர்கள் மத்தியில் அரவாணிகள் வெறுக்கப்பட்ட ஜென்மமாகவே கருதுகிறது. தமிழ சினிமாக்கள் பெரும்பாலும். “ராஜாதி ராஜன் வாராண்டி முன்னே.. பொழுதோட கோழி கூவுது முன்னே” என கும்மியடித்து ஆடும் ஆண்களின் மார்பில் சேலையைச் சுற்றி அரவாணிகள் என இன்னும் சிறுமைப் படுத்திவருகிறது.
பாலியல் தொழில் செய்பவர்கள் கடை கடையாகச் சென்று கும்மியடித்து காசு கேட்பவர்களை அரவாணிகள் ஒதுக்கித் தள்ளும் சமூகத்தில் தாங்களும் சாதிக்க முடிமென பலர் பல்வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்து சிறப்பாகவே பணியாற்றி வருகின்றனர்.
சொத்துரிமையில் பங்கு
சாதி, மதம், இனம் கடந்து இந்தியாவிலேயே சிறந்த சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு அரவாணிகள்தான் என்று கூறும் ஆஷா பாரதி சென்னையில் தமிழ்நாடு அரவாணிகள் அமைப்பை நடத்தி வருகிறார். அரவாணிகள் “பாலியல் திரிந்தவர்கள்” என்றே அழைக்க வேண்டும் என்கிறார்.
தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் வழங்கப்படும் சலுகைகளைப் போல பாலியல் சிறுபான்மையினரான அரவாணிகளுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும். பெற்றோர்கள் அரவாணிகளாய் மாறியவர்களை புறக்கணிப்பதால் அவர்களுக்கு சொத்துரிமையில் பங்களிக்க வேண்டும் என்று தென்னிந்திய எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைபின் தலைவி எஸ்.நூரி வேண்டுகோள் விடுக்கிறார். எங்களைப் போன்றோருக்கு அரசு ஏதாவது வேலை கொடுத்தால் பாலியல் தொழிலுக்கு ஏன் போகப்போகிறோம் என்ற வினாவையும் எழுப்புகிறார்.
நியமன உறுப்பினர் பதவி
திருச்சியைச் சேர்ந்த பிரியா பாபு டிப்ளமோ இன் ஏர்கண்டீசன் படித்தவர். குடும்பத்தாரால் விரட்டப்பட்டு, மும்பை விபசாரக் கும்பலிடம் விற்கப்பட்டு அங்கிருந்து தப்பிவந்தவர். தற்போது அரவாணிகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொண்டு வரும் இதழியலாளர் ஆவார் இவர். “கண்ணாடி” என்ற கலைக்குழு மூலம் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தங்களுக்கும் வாக்குரிமை வேண்டுமென உயர்நீதிமன்றம் வரை சென்று போராடி அதில் வெற்றி பெற்றவர் ஆவார். தமிழகத்தில் மிகக்குறைந்த அளவே எண்ணிக்கை உள்ள ஆங்கிலோ-இந்தியர்களுக்கு சட்டமன்றத்தில் நியமன உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் சுமார் 85 ஆயிரம் பேருக்கு மேல் உள்ள அரவாணிகளுக்கும் ஏன் இப்பதவி வழங்கக் கூடாது என வினா எழுப்பும் பிரியா பாபு முக்கியமான ஒரு பிரச்சனையை முன்வைக்கிறார்.
உடல் ரீதியாக ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து பெண்களாக மாறவிரும்பும் அரவாணிகளுக்கு பால் மாற்று அறுவை சிகிச்சைக்கு சட்டரீதியான அங்கீகாரம் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாலந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்படுவதுடன் அவர்களை பெண்கள் என அங்கீகரித்து அதற்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது.
அத்துடன் மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவியையும் வழங்குகிறது. இந்தியாவில் அத்தகைய அனுமதியை அரசு வழங்க வேண்டும். ஏற்கனவே தமிழக மருத்துவதுறைச் செயலாளராக இருநத ஷீலா ராணி சுங்கத்திடம் மனுக்கொடுத்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை என பிரியா பாபு கூறுகிறார்.
பின் தங்கியதற்கு காரணம் கல்வி
அரவாணிகள் மிகவும் பின் தங்கியிருப்பதற்கு முக்கியக் காரணம் அவர்களது கல்வி அறிவின்மை தான் காரணம் எனக் கூறுகிறார் தேனியைச் சேர்ந்த அரவாணி தனது பெயரை குறிப்பிட வேண்டாம் என்ற அவர், பாலின மாறுதலுக்கான சான்றிதழ் அரவாணிகளுக்கு தேவையில்லை என கூறும் அவர், ஒரு ஆண் நினைத்தால் பெண்ணாகவோ, ஒரு பெண் நினைத்தால் ஆணாகவோ மாறமுடியாது. ஆனால் ஒரு அரவாணி நினைத்தால் ஆணாகவும் முடியும், பெண்ணாகவும் முடியும் என்பவர், அரவாணிகளுக்கு கல்வி தேவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறார். படிக்கும் காலத்தில் அரவாணி எனத் தெரிந்தால் வீட்டாராலும். சமூகத்தாலும் விரட்டியடிக்கப்படும் அரவாணிகளுக்கு கல்வி கற்க வயது ஒரு தடையாக இருக்கக்கூடாது என்கிறார். அரவாணிகளுக்கு சமாதானம் அடையும் குணம் நிறைய வேண்டும். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வசதி பெறும் அரவாணிகள் தங்களை மிகுதியாக அலங்கரிப்பதைக் கண்டு. தாங்களும் அது போல வாழ நினைத்து பாலியல் தொழிலில் வீழந்து விடுகிறார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு அரசு கைத்தொழில் பயிற்சிகளை அளிக்க முன்வரவேண்டும் என்கிறார்.
தமிழக நிதி நிலை அறிக்கையில் அரவாணிகளுக்கு குடும்ப கார்டு மற்றும் சுயஉதவிக் குழுக்கள் அமைக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது முதல் முறையாக அரவாணிகள் மீது பார்வையை தமிழக அரசு திருப்பியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அரவாணிகளை அரசு அங்கீகரிப்பதற்கு முன் சமூகம் அங்கீகரிக்க வேண்டும். ஏனெனில் சமூகத்தில் சரிபாதி அந்தஸ்து அவர்களுக்கும் உண்டு.
(நன்றி: DYFI இளைஞர் முழக்கம்)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
மூன்றாவது பாலினம் நான்காம் தரமா?
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: கட்டுரைகள்