வயது வந்த, இரு நபர்களுக்கிடையான, இசைவுடன் கூடிய தன்பாலின உறவு தண்டனைக்குரிய குற்றம் எனும் 377 சட்டப்பிரிவைத் திருத்தி உச்ச நீதிமன்றம் கடந்த செப் 6, அன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒருமித்த தீர்ப்பை வழங்கியது.

lgbt 320ஒட்டு மொத்த ஆங்கில ஊடகமும் கொண்டாடி மகிழ்ந்த இத் தீர்ப்பை, தமிழ்நாடு ஏனோ சலனம் இன்றிக் கடந்து சென்றது. ஒரு சில ஊடகங்களும், கனிமொழி போன்ற வெகு சில தலைவர்களுமே இதை வரவேற்றுள்ளனர். பெரும்பாலான தலைவர்கள் எதிர்மறைக் கருத்துக்களையே பதிவு செய்திருக்கின்றனர்.

தலைமை நீதிபதி உட்பட ஐந்து பேர் கொண்ட அமர்வு தெரிவித்த கருத்துக்கள், இத்தீர்ப்பின் அவசியத்தையும் திராவிட அரசியலுக்கும் 377க்கு எதிரான போராட்டத்திற்கும் உள்ள ஒற்றுமையையும் உணர்த்தும் படியாக இருந்தது. பெரும்பான்மை கருத்துக்கள் அரசியல் சட்டமாக முடியாது என்று தலைமை நீதிபதி சொன்ன கருத்து பாலியல் சிறுபான்மையினரான (LGBT) மக்களை மட்டுமில்லாமல் இந்துத்துவா கொள்கையினால் ஒடுக்கப்படும் எல்லா சிறுபான்மையினருக்குமானதாக இருந்தது.

நீதிபதி நரிமன், நவீன உளவியல், மருத்துவம் மற்றும் சட்டம் தற்பால் ஈர்ப்புடையர்களையும், திருநங்கைகளையும் மனநோயாளிகள் இல்லை என்று அங்கீகரிக்கிறது என்றார். இது மத அடிப்படைவாதிகளின் தொடர் பொய்ப் பிரச்சாரத்திற்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.

அமர்விலிருந்த ஒரே பெண் நீதியரசர் இந்து மல்ஹோத்ரா, வரலாறு இச்சமூக மக்களிடமும் அவர்கள் குடும்பத்தினரிடமும் மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கின்றது என்றார். தற்பாலீர்ப்பு அயல்நாட்டு மோகம் என்று சொல்லும் அதி மேதாவிகளுக்கு இது அதிர்ச்சியளித்திருக்கும்.

இத்தீர்ப்பின் முத்தாய்ப்பாக ,நீதியரசர் சந்திரசூட் தெரிவித்த கருத்து கவனிக்கப்பட வேண்டியது. 377 குறிப்பிடும் "இயற்கைக்கு முரணான" என்ற பதம் இனவிருத்தியை நோக்காகக் கொள்ளாத உடலுறவை மட்டுமே குறிப்பதாகக் கருத முடியாது, மாறாக சமூகம் விரும்பாத எல்லா வகையான நெருக்கத்தையுமே அது குறிக்கிறது. சாதி, மதக் கலப்புகளும் இதில் அடங்கும். தன்பாலீர்ப்பு தம்பதிகளும் , மாற்றுச் சாதி, மதங்களில் இணையும் தம்பதிகளும் சந்திக்கும் புள்ளியானது காதலுக்காக அவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களில் உள்ளது என்ற அவரது கருத்து பாலியல் சிறுபான்மையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இங்கு புரிந்துகொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கிய அம்சம், குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கெதிரான பாலியல் குற்றங்களையோ, விலங்குகளுடனான பாலியல் சில்மிசங்களையோ இத்தீர்ப்பு அங்கீகரிக்கவில்லை. பதினெட்டு வயது நிரம்பிய இருவருக்கிடையே முழுசம்மதத்துடன் நடக்கும் உறவை மட்டுமே அங்கீகரிக்கிறது.

வரலாறு நெடுக அநீதி இழைக்கப்பெற்ற, இன்றளவும் சினிமாக்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் கேலிப்பொருளாகவே சித்தரிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் முதல் வெற்றி இத்தீர்ப்பு என்றால் அது மிகையாகாது. இந்த தீர்ப்பின் மூலம் பாலின சிறுபான்மையினருக்குக் கிடைத்திருக்கும் சட்டப் பாதுகாப்பு, அச்சமூகத்திற்குத் தேவையான அடுத்த கட்ட உரிமைகளுக்கு வழிவகுக்குமென்று நம்பப்படுகிறது. குடும்ப அமைப்பில் புறக்கணிக்கப்படுதல், கட்டாயத் திருமணம், வேலை வாய்ப்பில் இடம் ஒதுக்கப்படுதல் போன்ற பல பிரச்சனைகளைப் பேச இத்தீர்ப்பு தொடக்கப்புள்ளியாய் அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது

முற்போக்கு அரசியல் களமான தமிழகத்தில் கலாச்சாரத்தைக் காரணம் காட்டி இத்தீர்ப்பைப் புறக்கணிப்பது பாலியல் சிறுபான்மையினர் மத்தியில் பெரும் ஏமாற்றமாகவே பார்க்கப்படுகிறது. பாலியல் சுதந்திரத்தையும், தன்பாலீர்ப்பு பற்றிய விவாதங்களையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் கடமை பெரியாரிய , திராவிட இயக்கங்களுக்கு உண்டு என்பது தான் முற்போக்காளர்களின் கருத்தாக இருக்க முடியும். சட்டம் அங்கீகரித்த உரிமையை சமூகமும் அங்கீகரிக்கும் பொழுதுதான் அது முழுமை பெறும். பாலியல் சுதந்திரம் தனி மனித சுதந்திரத்தின் ஓர் அங்கம் என்றும், தனி மனித சுதந்திரம் தான் மானுட மாண்பு என்றும், பொது சமூகம் உணரும் பொழுதே நாம் பெரியார் சொன்ன சமத்துவ சமுதாயத்தை அடைய முடியும். சமத்துவ சமுதாயத்திற்கான பெரும் பயணத்தில், இத்தீர்ப்பு மற்றுமொரு வெற்றிப்படியே.

(கட்டுரையாளர் -பெரியாரியவாதி, திருநங்கையரின் ‘ஓரினம்’ அமைப்பின் உறுப்பினர்)

Pin It