ஆங்கிலேயர்கள் நம் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் துவங்கும் வரை அரவாணிகளுக்கு என்று ஒரு சமூக அந்தஸ்த்து இருந்தது. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் அரண்மனை அந்தப்புரங்களில் இருந்தனர் அரவாணிகள். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்ததும் அரவாணிகளை வீதிக்கு விரட்டினார்கள். அவர்களை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்தனர். அவர்களுக்கு எந்தச் சொத்துரிமையும், குடி உரிமையும் இல்லை என்றாக்கினர்.

Priya and her husbandஇன்றைக்கு அரவாணிகள், பிச்சை எடுத்தல், நடனம் ஆடிப் பிறரை மகிழ்வித்தல், விபச்சாரம் செய்தல் என்றுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நான் வசதியான வீட்டில் பிறந்தேன். என் தந்தையார் அரசுப்பணியில் ஒரு உயர்ந்த பதவியை வகித்துக்கொண்டிருக்கிறார். அம்மாவும், படித்தவர்கள்தான். எனக்கு ஒரு அண்ணனும். ஒரு அக்காவும் உண்டு. அவர்கள் எல்லாம் நல்ல அந்தஸ்துடன் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நானும் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறேன். கம்யூட்டரை மிக லாகவமாக இயக்குவேன்.

வாலிப வயசு வந்த பிறகுதான் எனக்குள் ஒரு ‘பெண்மை’ இருப்பதை உணர்ந்தேன். அந்த உணர்ச்சியுடன் ஆண் என்ற உருவத்துடன் நான்பட்ட அவஸ்த்தை சொல்லிமாளாது. என் தந்தையார் என்னை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று ஆலோசனை கேட்டார். மருத்துவர்கள் நான் ‘அலி’ என்பதை உறுதி செய்தனர்.

நான் அரவாணியாகிவிட்டால், என் தமக்கையின் திருமணமும், என் தமையனாரின் திருமணமும், தடைபடுமோ என்று நினைத்து நான் பொறுமையுடன் என் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தேன். அவர்கள், இருவருக்கும் திருமணம் நடைபெற்ற பின்னர், நான் எனக்குள்ள எல்லாவிதமான உரிமைகளையும் இழந்து, என் தாயையும், தந்தையையும், சகோதரியையும், சகோதரனையும் பிரிந்து நான் ‘ஒரு பெண்ணாக வேண்டும்’ என்ற வெறியுடன் வீட்டைவிட்டு வெளியேறினேன். நான் வெளியேறும்போது என் கல்விச்சான்றிதழ்களை மட்டும் கைப்பற்றிக்கொண்டேன் அந்தச் சான்றிதழ்கள் என் எதிர்கால வாழ்க்கைக்குப் பயன்பட்டது.

நான் என் வீட்டிலிருந்து வெளியேறி, சென்னையில் உள்ள அரவாணிகளுடன் சேர்ந்துகொண்டேன். அவர்கள் பல்வேறு விதமான சோதனைகளுக்குப் பிறகு என்னை ஏற்றுக்கொண்டனர்.

வீட்டிலிருந்து உறவுகளைப் பிரிந்த எனக்கு அங்கு தாய், தமக்கை, தங்கை என்று புதிய பெண் வழி உறவுகள் கிடைத்தன. கௌரவமான குடும்பத்தில் பிறந்த நான் அரவானியாகப் புதிய பிறப்பெடுத்தேன்.
சென்னையிலிருந்து அவர்கள் என்னை மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எனக்கு அறுவைச் சிகிச்சை செய்து வைத்தார்கள். அந்தக் காலத்தில் இந்த அறுவைச் சிகிச்சை மிக முரட்டுத்தனமாக நடந்திருக்கிறது. அதற்குத் ‘தாயம்மா’ முறை என்று பெயர். அம்முறையில் ஆண் உருவில் இருப்பவனுக்கு உரிய ஆண் உறுப்பை எந்தவித மயக்க மருந்தும் கொடுக்காமல் சவரக்கத்தி கொண்டு ஒரு பெண் மூதாட்டி அறுத்து எடுத்து விடுவாள். அறுபட்ட உறுப்பிலிருந்து சுமார் நான்கு மணி நேரம் உதிரம் வழிந்துகொண்டே இருக்கும். அப்போது வழியும் உதிரத்துடன் அவனின் ஆண்தன்மையும் போய் விடுகிறது என்று அரவாணிகள் நம்புகிறார்கள். இந்தக் கொடூரமான அறுவைச் சிகிச்சையால் சிலர் இறந்து இருக்கின்றனர். அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பிறகு, அவர்களுக்கு கடுங்காப்பியும், நெய்யும் அதிகமாகக் கொடுப்பார்கள். அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பிறகு 40 நாட்கள் விரதம் இருப்பார்கள்.

இப்போதெல்லாம் ‘ஹேஸ்டேசன்’ என்ற முறையில் மருத்துவர்களே அறுவைச் சிகிச்சை செய்து ஆண் உறுப்பை நீக்கிவிடுகிறார்கள். இந்த நவீன முறை அறுவைச் சிகிச்சைக்கு கொஞ்சம் கூடுதலாக பணம் செலவாகிறது.

அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு நான் பெண்ணாகிவிட்ட பிறகு என்னை மும்பையில் உள்ள ஒரு சிவப்புவிளக்குப் பகுதியில் கொண்டு போய்விட்டு விட்டார்கள். வசதி வாய்ப்பான குடும்பத்தில் பிறந்து மிகச் செல்லமாக வளர்ந்த நான் பெண்ணாக ஆசைப்பட்டதால், சிவப்பு விளக்குப் பகுதியில்பட்ட கஸ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

ஒரு நண்பரின் உதவியுடன் இரண்டு வருடத்திறகுப் பிறகு, நான் அங்கிருந்து தப்பித்தேன். மீண்டும் அரவாணிகளின் முகாமிற்குத்தான் வந்தேன். அங்கே சில பணக்காரர்களை மகிழ்விக்க நடனம் ஆடினேன். நானே தெருத் தெருவாகச் சென்று, பிச்சையும் எடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் வசதியாக வாழ்ந்த வாழ்க்கையை ஒரு முறை நினைத்துப் பார்த்துக்கொள்வேன்.

என்னிடம் படிப்பும், சான்றிதழும் இருந்ததால், சில நண்பர்களின் உதவியுடன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்ய ஆரம்பித்தேன். ‘நம்மாலும் சுயமாக உழைத்துச் சம்பாதிக்க முடியும்’ என்ற நம்பிக்கை அப்போதுதான் எனக்கு வந்தது.

அப்போது தினபூமி பத்திரிக்கையின் மும்பை நிருபர் ஒருவரின் உதவியுடன் அரவானிகள் சமூக நிலைகள் குறித்து கட்டுரைகள் எழுதினேன்.

எனக்கும் காதல் ஏற்பட்டது. கேரள மாநிலத்தில் பிறந்து இப்போது மும்பையில் குடியிருக்கும் பாபு என்பவரை நான் காதலித்தேன். அவரும் என்னைக் காதலித்தார். எங்கள் காதலை முதலில் அவரின் பெற்றோர்கள் எதிர்த்தனர். “என்னுடன் ஒரு ஆண் உடல் உறவு கொண்டு மகிழ முடியும் ஆனால் நான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது” என்ற உண்மை எனக்குத் தெரியும். எனவே, என்னை ஒரு நட்புக்காக, ஒரு அடையாளத்திற்காக அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும். பிறகு இன்னொரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் நான் அவரைத் திருமணம் செய்துகொண்டேன். எனக்கும் அவருக்கும் திருமணமாகி ஆறு ஆண்டுகளாகிறது. ஆனால் இன்னும் அவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவில்லை.

நான் இப்போது ‘கண்ணாடி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் அரவாணிகளுக்கு ஏற்படும் இழிவுகளையும், அவலங்களையும் நீக்கப் பாடுபட்டு வருகிறேன்.

எங்களுக்கு என்று ஒரு ஆன்மீகப் பின்னணியும் உள்ளது. மகாபாரதத்தில் அரவாணைப் பலியிடுவது குறித்தும், ராமாயணத்தில் இராமர் வனவாசம் செல்லும் போது, காத்திருந்த மக்களை நோக்கி, “ஆண்களும், பெண்களும் நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று சொல்ல ஆண்களும், பெண்களும் காட்டிலிருந்து நாட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். ஆனால் அலிகள் மட்டும் நாடு திரும்பாமல் 14 ஆண்டு காலம் காட்டில் அந்த இடத்திலேயே தங்கி இருந்தனர். 14 ஆண்டு காலம் கழித்து இராமர் அயோத்தி திரும்பிய போது அங்கு, தங்கி அரவாணிகளையும் நாட்டிற்குள் அழைத்து வந்ததாகவும் கதைகள் உள்ளன.

பைபிளிலும் அலிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உலகமெங்கும் அலிகள் பற்றிய பிரச்சினைகள் உள்ளன. தமிழ்நாட்டில் தென் பகுதியில்தான் அரவாணிகள் அதிகம் பேர் உள்ளனர். புதன், சனி என்ற கிரகங்களை அலிகிரகம் என்று கூறுகின்றனர்.

இந்தியாவிலேயே அரவாணிகளுக்கான கூத்தாண்டவர் கோயில் தமிழ்நாட்டில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் கூத்தாண்டவர் கோயில்கள் உள்ளன. அவை கூத்தாண்டவர் கோயில்கள்தான் என்ற விபரமே தெரியாமல் மக்கள் அக்கோயில்களில் வழிபாடுகள் செய்துகொண்டு வருகிறார்கள்.

எங்களுக்கு என்று இந்தியா முழுவதும் ஒரு தனி மொழி உள்ளது. அம் மொழியால் நாங்கள் எங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வோம். எங்களுக்கு என்று ஒரு நடன முறை இருக்கிறது. எங்களுக்கு என்று ஒரு உரையாடலும் உள்ளது. எங்களின் கலாச்சார பண்பாட்டுக் கூறுகள் தனித்தன்மை வாய்ந்தவை. எங்கள் பாடல்களும், எங்கள் கதைகளும் தனித்த அடையாளங்களைக் கொண்டது. அவைகளை எல்லாம் தொகுத்து மானுடவியல் ஆய்வாளர்கள், ஆய்வுகளை நிகழ்த்த முன் வரவேண்டும்.

நாங்கள் படும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, மாணவப் பருவத்தில், சகமாணவர்களாலும், ஏன் ஆசிரியர்களாலும் கூட நாங்கள் பாலியல் சில்மிஷங்களுக்கு ஆளோனோம். ஆணாக சில ஆண்டுகளாகவும், பெண்ணாகச் சில ஆண்டுகளாகவும் வாழ்கின்ற இந்த இரட்டை வாழ்க்கையில் மனம் படும் ரணம் கொடுமையானது. எங்களுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை, எங்களுக்கு உடன்பிறந்தவர்களும் இல்லை. உரிமையாய் எங்களுக்குக் குடும்பத்தில் கிடைக்கவேண்டிய சொத்துக்களும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. எங்களை எவரேனும் அடித்தாலும் ஏன் என்று கேட்கவும் நாதி இல்லை.

நாங்கள் காவல் நிலையம் சென்றால் அங்கும் எங்களைக் கேலிதான் செய்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாலும் நீதிபதிகளுக்கே, எங்கள் நிலைமை புரிவதில்லை. சான்றிதழில் ஆணாக எங்கள் பெயர் இருந்து, இப்போது நாங்கள் பெண்ணாக இருப்பதினால், நாங்கள் அடையாள அட்டை, ரேசன் கார்டு முதலியவைகளைப் பெறுவதிலும் சிக்கல் உள்ளது. எங்களுக்கான குடியுரிமைக்குக்கூட இந்த நாட்டில் எந்த அத்தாட்சியும் இல்லை. எங்களில் பலருக்கு ஓட்டுரிமையும் இல்லை!

ஊடகங்கள் யாவும் எங்களைக் ‘கேலி’யுடனே அணுகுகின்றன. திரைப்படப்பாடல்கள், எங்களை ஒரு மனுஷ ஜன்மமாகக் காட்ட முன்வராமல், அலி, ஒன்பது, பொட்டை, கீரவடை என்றே அடையாளப்படுத்துகின்றன. நாங்கள் கௌரவமாக வாழ நினைக்கிறோம். எங்களைப் பற்றிக் கவலைப்பட எங்களுக்கு பிள்ளை இல்லை. புதிய தாயுடன், புதிய உறவுடன், புதிய மொழியுடன், புதிய உருவத்துடன் புதிய தொழிலுடன் புலம் பெயர்ந்து வாழ நேர்கிற வாழ்க்கையின் சோகத்தை மக்களுக்கு புரிய வைக்க விரும்புகிறேன். தமிழ் எழுத்தாளர்களில் சிலர் தங்கள் நாவல்களில், சிறுகதைகளில், கவிதைகளில் எங்களின் கஷ்டங்களைக் கண்ணீர்த் துளிகளைக், காயங்களைப் பதிவு செய்திருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் நாங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

திரைப்பட இயக்குனர்களில் மணிரத்னம் மட்டும் அரவாணிப் பெண்ணை விபத்தில் பலியாக இருக்கும் ஒரு குழந்தையைக் காப்பாற்றும் குணச்சித்திரத்தில் காட்டியுள்ளார். எங்களின் வலியை நாங்களே பதிவு செய்ய எண்ணுகிறோம். அரவாணி பற்றித் தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்திற்கு எங்கள் வாழ்க்கையைத் திறந்து காட்டியுள்ளோம். கதை விவாதத்தில் அவர்களுடன் உட்கார்ந்து பேச உள்ளோம்.

என்னுடைய கதையை நானே, ஒரு நாவலாக எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் தமிழ் நாவல் உலகின் ஒரு புதிய குரலாக அந்நாவல் வெளிவர உள்ளது. வடநாட்டில் உள்ள சேட்டுகள் தனது கடையின் முதல் “போணி” யை அரவாணிகள் செய்தால் நல்லது என்றும், தனது புதுவீட்டில் அரவாணிகள் நுழைந்தால் நல்லது என்றும் நம்புகிறார்கள். தமிழ்நாட்டில் அத்தகைய நம்பிக்கைகள் கூடக் கிடையாது. எங்களின் கண்ணீரை, எங்களின் காயங்களைக் கலை வடிவத்தின் மூலம் மக்கள் முன் வைக்க நினைத்தோம். அதற்கு நாடகவியல் துறை பேராசிரியை அ. மங்கை, மீனா சுவாமிநாதன் போன்றோர்களும் இன்குலாப். ஏ.கே. செல்லத்துரை போன்ற பேராசிரியர்களும் பெரிதும் உதவினார்கள். சென்னையில் உள்ள ‘மௌனக்குரல்’என்ற நிறுவனமும், எங்கள் கலை நிகழ்ச்சிகளின் தயாரிப்பில் பெரிதும் உதவின.

பல தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் “எயிட்ஸ் தடுப்பு” என்ற பெயரில் பணத்தை எங்களைக்காட்டியே சுருட்டிக் கொள்கின்றன. எனவேதான் எங்களுக்கான உரிமைகளுக்குப் போராட நாங்களே, ‘சுடர்’ என்ற அமைப்பையும் ‘கண்ணாடி’ என்ற அமைப்பையும் ஏற்படுத்தி நடத்திக்கொண்டு வருகிறோம். எங்கள் அமைப்பின் சார்பில் முதலில், அரவாணிகள் பற்றிய கணக்கெடுப்பைத் துவங்கியுள்ளோம். நான் ஒரு பெண்ணாகவே என்னை முன்னிறுத்திக்கொள்ள விரும்புகிறேன். சமூகத்தோடு கலந்து, குடும்பத்தோடு இருந்து அதே சமயம் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்று எண்ணுகிறேன். இந்த இலக்கை நோக்கிப் போராடுவதே எனது இலட்சியம்.

(கண்ணாடிகள் என்ற அரவாணிகள் அமைப்பின்தலைவி திருமிகு.பிரியாபாபு அவர்கள் சொல்லக்கேட்டு பதிவு செய்யப்பட்டது)

நன்றி: கதைசொல்லி

-வயலோன்