டெல்லி அரசு தனது அதிகாரத்தை தமிழகம் உள்ளிட்ட எல்லா தேசிய இன மக்கள் மீதும் அவர்களது விருப்பத்திற்கு எதிராக செலுத்தி வருகிறது. டெல்லி அரசின் இந்த ஆதிக்கப் போக்கிற்கு சில எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
1) ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி தமிழக அரசு முடிவு செய்த பின்னும் அனில் அகர்வால் டெல்லியின் உதவியோடு மூட மறுக்கிறான்.
2) கெயில் எனும் மத்திய அரசின் நிறுவனம் தமிழத்தின் விவசாய விளைநிலங்களை சேதப்படுத்தி குழாய்கள் பதிக்கக் கூடாது, போட்ட குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக சட்டமன்றம் ஒருமனதாக முடிவு செய்து ஆணையிட்ட பின்னும் அந்த முடிவை மத்திய அரசின் கெயில் ஏற்கவில்லை.
3) நெல் களஞ்சியமான காவிரிப் படுகையை தமிழக அரசிடம் தெரிவிக்காமலே டெல்லி அரசு வேதந்தா நிறுவனத்திற்கு தாரை வார்த்து விட்டது.
4) ஏழு தமிழர்களின் விடுதலைக்கான தீர்மானத்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 161 வழங்கியுள்ள கட்டற்ற அதிகாரத்தின் கீழ் தமிழக அமைச்சரவை கடந்த மாதம் 09/09/2018 அன்று முடிவு செய்தும், அதை செயல்படுத்த டெல்லி அரசு தனது ஏஜண்டான ஆளுநர் மூலம் தடை செய்து நிறுத்தி வைத்துள்ளது.
அடுத்து நீட், வேளாண் விளைபொருள் விலை நிர்ணயம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இங்கு தான் நாம் சொல்கிறோம், இந்தியா என்பது ஒரு புனிதமான தேசம் அல்ல!
மாறாக அனைத்து தேசிய இன மக்களையும் வர்க்க அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் இன அடிப்படையிலும் ஒடுக்கி உயிர் வாழும் பார்பன, பனியா, மார்வாடி முதலாளிகள் மற்றும் பார்ப்பனிய ஒட்டுண்ணிகளின் ஏகாதிபத்தியம்.
உலகம் ஒப்புக் கொண்டிருக்கிற ஒரு தேசிய அரசுக்கான எந்த வரையறையும் இந்தப் 'புனித' இந்திய தேசத்திற்கு இல்லை.
ஐ.நா.விதிகளின்படி ஒரு தேசம் எனில் அந்த மக்கள் அனைவரும் ஒரு பொதுமொழியைப் பேசுவார்கள், இயற்கையாகவோ அல்லது ஜனநாயக வழியிலோ உருவான புவிப்பரப்பில் வாழ்ந்து வருவார்கள், ஒத்த பண்பாடு கொண்டிருப்பார்கள்.
இப்பொழுது கேட்கிறோம், இந்தியா என்பது எப்போது உருவானது?
இந்தியாவின் பொது மொழி எது? இந்தியா மக்களின் பொதுப் பண்பாடு எது?
1880க்கு முன் இந்தியா என்ற ஒரு அரசு இருந்ததே இல்லை. பிரிட்டிசார் தனது அதிகாரத்தை "பிரிட்டிஷ் இந்தியா "என்ற பெயரில் கட்டமைத்து அடக்கி ஆண்டனர். அதற்கு முன் இந்தியா என்ற பெயரில் யாரும் அரசாட்சி செய்தது இல்லை. அந்த வெள்ளையன் உருவாக்கிய இந்தியாவில் இன்றைய பாகிஸ்தானும், வங்காள தேசமும், பர்மாவின் சில பகுதிகளும் இருந்தது.
தேசம் என்றால் என்ன?
தேச பக்தி என்கிறார்கள், தேசப் பற்று என்கிறார்கள், தேசவிரோதி என்கிறார்கள். முதலில் தேசம் என்றால் அது எதைக் குறிக்கும் எனப் பார்ப்போம். வரலாற்று வழியில் ஒரு மொழி பேசும் மக்கள் ஒரு பிரதேசத்தில் நிலையான மக்கள் சமூகமாக வாழத் தொடங்கியபோது அவர்கள் ஒரு தேசிய இனமாக அறியப்பட்டனர். வர்க்க சமுதாயத்தின் தோற்றமே புராதன தேசிய இனத்தின் தோற்றமாகும்.
தேசிய இனமாக வாழும் மக்கள் எப்பொழுது தேசமாக அமைந்தனர்?
இது ஒரு கவனம் கொள்ளவேண்டிய வளர்நிலையாகும். அதாவது நாடோடி நிலையிலிருந்து நிலையான மக்கள் சமூகமாக உற்பத்தியில் ஈடுபடும்போது வாழத் தொடங்குகின்றனர். அந்த உற்பத்தியானது கால்நடை வளர்ப்பும், வேளாண்மையும் இணைந்து வளர்நிலை பெற்ற கட்டமாகும். இப்பொழுது திட்டவட்டமான ஒரு பிரதேசப் பகுதியோடும் ஒரு பொது மொழி பேசுகிற மக்களாகவும் இருப்பதையே தேசிய இனம் என்கிறோம்.
தேசிய இனம் என்பது நிலப்பிரபுத்துவக் காலகட்டத்திலும் அதற்கு முந்தைய அடிமைச் சமூக அமைப்பிலும் இருந்து வரும் ஒரு வகையினமாகும். நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி முதலாளிய உற்பத்திமுறை நிறுவப்படுகிறபொழுது ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான ஒரு தேசிய அரசையும் அமைத்துக் கொண்டன. தேசத்தின் தோற்றம் இதுவரை துண்டுதுண்டாகச் சிதறிக் கிடந்த மக்களின் பொருளாதார வாழ்க்கையை ஒரு பொது மொழி பிரதேசத்திற்குள் ஒருங்கிணைந்ததாக மாற்றுகிறது.
இவ்வாறு ஒரு தேசிய இனமாக இருந்த மக்கள் முதலாளிய வளர்ச்சியால் ஒரு பொதுவான பொருளாதார வாழ்க்கையைப் பெறுகிற போது அவர்கள் தேசமாக அமைகிறார்கள்.
மேலே கூறியவற்றில் வரலாற்றுவழியில் மக்கள் சமூகங்கள் தேசிய இனமாகவும், பின்னர் அது தேசமாகவும், அதாவது ஒரு தேசிய சமூகமாகவும் எப்படி அமைகிறார்கள் எனக் கோடிட்டு காட்டியுள்ளோம்.
தேசிய அரசுகள் முதலில் எங்கு உருவானது? ஏன் உருவானது?
அனைவரின் கவனத்திற்குரிய மிக முக்கியமான பிரச்சனை இந்த தேசிய அரசுகள் என்று சொல்கிறோமே, இது உலகில் முதலில் எங்கு அமைந்தன என்பதாகும். இந்தக் கேள்வி எல்லோருக்குமான பொதுக் கேள்வியாக இருக்கும் போதே கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்களுக்கான தனிச்சிறப்பான கேள்வியாகவும் இதை தெளிவுபடுத்த வேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பொறுப்பாகவும் உள்ளது.
1780களில் பிரஞ்சுப் புரட்சி நடந்ததை நாம் அறிவோம். இந்த பிரஞ்சுப் புரட்சி சமூக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது. நிலப்பிரபுத்துவ அடிமைத்தளைகளால் கண்டுண்டு கிடந்த மக்களை "சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம்" என்ற முழக்கத்தின் கீழ் தட்டி எழுப்பியது. ஜனநாயகம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி என்பதை மன்னர் ஆட்சி இருந்த இடத்தில் கொண்டு வந்தது.
இந்தப் புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள் முதலாளிய வர்க்கத்தினர். இந்த முதலாளிகள் தம்மோடு அடிமைப்பட்டுக் கிடந்த விவசாயிகளை இணைத்துக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றினர். இந்த முதலாளி வர்க்கத்தின் நோக்கம் ஒரு சுதந்திரமான தொழில் உற்பத்தியைக் கட்டமைப்பது.
விரிவான, சுதந்திரமான தொழில்வளர்ச்சிக்கு முதலில் தேவை நிலப்பிரபுத்துவ சங்கிலியிலிருந்து விடுதலை பெற்ற சுதந்திர உழைப்பாளிகள். அடுத்து தங்கு தடையின்றி தொழில் உற்பத்திக்குத் தேவையான அனைத்துக் கட்டுமானங்களையும் உருவாக்கிக் கொடுக்கும் அரசு.
இந்த அரசானது இயல்பிலேயே ஜனநாயகத் தன்மை கொண்டதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சபைகளைக் கொண்டதாகவும் (நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள்) இருப்பது அவசியமானது. இதோடு அது தேசிய இன ஒருமைப்பாடு கொண்டதாகவும் இருப்பது அவசியமானது.
மொழியின் வளர்ச்சியின்றி மக்கள் தொழில் உற்பத்திக்குத் தேவையான நவீனக் கல்வியைப் பெறுவது சாத்தியமே இல்லை. எனவே அச்சு இலக்கியங்கள் பெருமளவு வெளிக் கொண்டு வரப்பட்டது. தாய்மொழி வழியிலான அறிவியல் கல்விமுறை கொண்டு வரப்பட்டது.
இந்த புதிய நிலைமைகள்தான் தவிர்க்க முடியாமல் ஒரு பொது மொழி பேசுகிற தேசிய இன மக்களை ஒன்றுபடுத்தி ஒரு தேசிய அரசை நிறுவக் காரணமானது.
இதைப் பற்றி லெனின் கூறுவதாவது:
"ஒவ்வொரு தேசிய இயக்கத்தின் போக்கும் நவீன முதலாளித்துவத்தின் தேவைகள் மிக நன்றாகப் பூர்த்தி செய்யப்பட வாய்ப்புள்ள தேசிய அரசுகள் அமைப்பதற்கான வழியிலானது. மிக மிகத் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் இந்த இலக்கை நோக்கி இட்டுச் செல்கின்றன. " ( பா.வ.தே.கொ பக்கம்13).
உலகம் முழுவதும் முதன் முதலாக அய்ரோப்பாவில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான தேசிய இயக்கங்கள் வெடித்து பிரிட்டன், பிரெஞ்சு, செர்மன், இத்தாலி போன்ற மேற்கு அய்ரோப்பிய நாடுகளில் தேசிய அரசுகள் அமைந்தன.
மேற்காண் தொகுப்பில் தேசிய அரசுகள் எப்பொழுது எங்கு தோன்றியது என மிகச் சுருக்கமாக முன்வைத்துள்ளேன். விரிவான புரிதலுக்கு பாட்டாளி வர்க்கத்தின் தேசியக் கொள்கை எனும் கார்முகில் அவர்களின் ஆய்வுரையோடு அதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள லெனின், ஸ்டாலின் நூல்களை வாசிக்கவும்.
இந்தியா என்பது ஒரு தேசமா?
இக்கேள்வி பலருக்கு எரிச்சலைக் கூட உருவாக்கும். ஆனால் சமூக அறிவியலான மார்க்சிய, லெனினியக் கோட்பாடுகளை ஏற்று சமூத்தை அதன்படி புரிந்துகொள்ள முயற்சி செய்வோர் இது குறித்து சிந்திப்பர்.
உலகம் தட்டையானது என கிறித்துவம் ஒரு கருத்தை மக்களின் ஆழ்மனதில் பதிய வைத்திருந்தது. ஆனால் பிறப்பால் கிறித்துவரான கோபார் நிக்கஸ் எனும் அறிவியலாளர் தனது ஆய்வின் மூலம் உலகம் அல்லது இப் புவிப்பந்து தட்டையானது அல்ல, மாறாக கோள வடிவிலானது என நிறுவினார். அதிர்ந்து போன வாடிகன் மடலாயம் கோபர்நிக்கஸுக்கு கொடுந்தண்டனை கொடுத்தது. எனது உயிரைக் கொடுத்தாலும் இந்த உண்மையைக் கூறாமல் நிற்க மாட்டேன் என உறுதிபட நின்றார்.
அது போலவே இந்தியா என்பது ஒரு தேசமல்ல என்பது சமூக அறிவியல் கூறும் உண்மை. 'இந்தியா என்பது ஒரு தேசம் அல்ல!' என இந்திய வரலாற்றில் அறுதியிட்டுச் சொன்ன பெருந்தலைவர் பெரியார் மட்டுமே.
மேற்கு அய்ரோப்பா முழுவதும் பல பொதுமொழி கொண்ட தேசிய அரசுகள் உருவானது எனப் பார்த்தோம். உலகம் முழுவதும் இதே போக்கு நீடிக்கவில்லை. வளர்ச்சி அடைந்த தேசிய இனங்களோ, அல்லது ஒரு ஏகாதிபத்தியமோ தொழில் வளர்ச்சியில் பின் தங்கி இருந்த தேசிய இனங்களை அடக்கி தமது அரசாட்சியின் கீழ் கொண்டு வந்தன. இதைப் பல்தேசிய அரசுகள் என சமூகவியலார்கள் குறிக்கின்றனர்.
கிழக்கு அய்ரோப்பாவில் மா-ருசியர்கள் தமது ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ பலத்தைக் கொண்டு பல்வேறு தேசிய இனங்களை அடக்கி, ஜார் அதிகாரத்தின் கீழ் ஒரு பல்தேசிய அரசை நிறுவினர். ஹங்கேரியை மேக்யர்கள் தமது அதிகார பலத்தால் பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கி ஹங்கேரியை உருவாக்கினார்.
இங்கு இந்தியா என்ற ஒரு நாடு ஏகாதிபத்தியம் நுழைவதற்கு முன் இருக்கவில்லை. பிரிட்டிசார் சென்னை, கல்கத்தா, பம்பாய் ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டே தமது அரசுகளை நிறுவினர். அதே போல பிரான்சு, டச்சு ஏகாதிபத்தியங்களும் புதுச்சேரி,கோவா பகுதிகளை தலைமையிடமாகக் கொண்டு தமது அரசுகளை நிறுவி இருந்தனர்.
பிரிட்டிசார் தமது மூன்று (பம்பாய், சென்னை, கல்கத்தா) ராஜ்தானிகளை இணைத்து டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு "பிரிட்டிஷ் இந்தியா" என்ற பெயரில் ஓர் அரசு கட்டமைப்பை நிறுவினார். அதில் தற்போதைய தெலிங்கானா, திருவாங்கூர் போன்ற பல சமஸ்தானங்கள் இணையவில்லை. அதே வேளையில் பாகிஸ்தான், வங்காளதேசம், பர்மா உள்ளிட்ட பகுதிகள் இணைந்திருந்தன.
ஆக 1947க்கு முன்னும், அதற்குப் பின்னும் இந்தியா என்பது ஒரு தேசிய இனமக்களை இணைத்த அரசாக இருக்கவில்லை.
இந்தியர் என்பது தேசிய இனமா?
(தொடர்ந்து விவாதிப்போம்)
- கி.வே.பொன்னையன்